உங்களில் யார் அடுத்த பிரபு தேவா? – காலத்தச்சன் கவிதை
நவீன கவிதையின் வடிவத்தில் பல சாத்தியங்கள் கண்டிப்பாக இருக்கின்றன. அவற்றைப் பயன்படுத்துவது கவிஞன் எடுத்துக் கொண்ட களனை, கருவைப் பொருத்தது. உயிர்மை அக்டோபர் 2015 இதழில் காலத்தச்சனின் “உங்களில் யார் அடுத்த பிரபு தேவா?” கவிதையின் ஒரு பகுதியைப் பார்ப்போம்.
——————————–
ஹெட் கிளார்க் சீனிவாசன் DOUBLE XL மனிதர்
நேற்றவர்
MOON WALK டான்சைத் தேர்ந்தது முதல் தவறு
இடது காலை மெதுவாக முன் வைத்து
வலது காலை பழத்தோலால் வழுக்கப் பட்டது போல
சரேலெனப் பின் நோக்கி நகர்த்த வேண்டிய
நிலவு நடையில்
ஸ்டெப் ஸ்லிப் ஆனது
தடுமாறிய வேகத்தில் அருகிருந்த
E2 கனகாவின் கொழுத்த கொங்கையை
இறுகப் பற்றி
விழுந்துவிடாமல் பேலன்ஸ் செய்தது
அவரின் இரண்டாம் மாபெரும் தவறு
———————————–
இந்தக் கவிதை ஆழமான ஒன்றல்ல. கதவுக்குப் பின் கதவாகத் திறந்து நாம் ஒரு தரிசனம் பெறும் உள்ளடக்கம் கொண்டதல்ல. இருந்தாலும் இந்தக் கவிதை நவீன கவிதையின் சாத்தியங்கள் பற்றிய ஒரு உதாரணமான கவிதை. எல்லோரும் இதை வாசித்துப் புரிந்து கொள்ள முடியும் என்று கவிஞர் கருதவே இல்லை. தனியார் நிறுவனத்தில் பணிபுரிவோர் மேலிடத்துக்காக எப்படியெல்லாம் ஆடி என்ன கதி ஆகிறார்கள் என்பதை அங்கதமாகக் கூறுகிறது. அரசு நிறுவனங்களில் நிலை இவ்வளவு மோசமில்லை. என்றாலும் ஆளுக்கு ஏற்றபடி நடைமுறைகள், கெடுபிடிகள் மாறுவது சகஜம்.
ஆங்கிலச் சொற்கள் தமிழ் வடிவில் மற்றும் ஆங்கில வடிவிலேயே இதில் வருவது நவீனக் கவிதையின் சாத்தியத்தால் தான்.வைரமுத்து இளசுகளைக் கவருகிறேன் பார் என்று ஆங்கிலச் சொற்களை செயற்கையாகச் சேர்ப்பதற்கும் இயல்பாகவே இந்தக்கவிதையின் களனை ஒட்டி இந்தக் கவிதையில் வருவதற்கும் வித்தியாசம் தெளிவாகத் தெரிவதைக் காணலாம். இந்தக் கவிதை தமிழ் சொற்களை மட்டுமே கொண்டு எழுதப் பட முடியாதது.
ஒரு கவிதையின் உருவம் அது உள்ளடக்கி இருக்கும் கவித்துவப் பார்வையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு வடிவம் பெறுகிறது. இந்தக் கவிதையில் ஆட்டுவிப்பவர்கள் ஆட்டி வைத்தால் என்ன ஆகும் என்பது அங்கதமான உள்ளடக்கம் அவ்வளவே. கவிதை நவீனத்துவத்தின் வீச்சை நிறையவே கொண்டிருக்கிறது.
(image courtesy:cinebuzz.in)