பழிவாங்கும் ஆண் யானை- மலையாளச் சிறுகதை
திசை எட்டும் ஜூலை -செப்டம்பர் 2015 இதழில் அதன் ஆசிரியர் குறிஞ்சிவேலன் மொழிபெயர்ப்பில் “புழக்காட்டிரி குட்டிசங்கர”னின் சிறுகதை “கவளப் பாறைக் கொம்பன்” அபுனைவு வகையைச் சார்ந்தது ஒரு யானை தான் குட்டியாக இருக்கும் போது மனிதர்களால் குழி வைத்துப் பிடிக்கப் பட்டது முதல் தன் மரணம் வரை தனது கதையைத் தானே கூறுகிறது.
ஒரு யானைக் குட்டி முதல் முதலாகப் பிடிபடும் போது தாயை பிரியும் சோகம், தாயின் பாலைக் கடைசியாய்க் குடித்த வருத்தம், பின் மனிதர்கள் தரும் வெல்லம், வாழைப்பழம், இனிப்புகள், பிரசாதங்களுக்குக் பழகிக் கொள்வது, வாழைக்குலைக் கடைக்காரன் கத்தியால் தும்பிக்கையில் குத்தும்போது அந்த ஆண் யானை முதல் கொலையை நிகழ்த்துகிறது. பல்லாண்டுகள் காத்திருந்து யானைப்பாகன் கையில் அங்குசம் அல்லது கத்தி வைத்திருக்காமல் தன்னை அணுகும் போது அவனைப் பழிவாங்குகிறது. முதன் முதலில் அவன் தான் “வாரிக்குழி”யில் இருந்து அவனையும் தாயையும் பிரித்துத் தனித் தனிக் கூண்டுகளில் அடைத்தது. மீட்க வந்த அப்பா யானையை பட்டாசு வெடித்தும் கல்லால் அடித்தும் விரட்டியது அவனும் அவனுடன் சேர்ந்த ஏகப்பட்ட இரண்டுகால் விலங்குகளும் தான்.இடையே எத்தனை பேரைக் கொன்றேன் என்று அந்த ஆண் யானை தானே வியக்குமளவு படிப்படியாக அதன் சமநிலை மாறி விடுகிறது. சங்கிலியில் பிணைக்கப்படுவதும் திருவிழாக்காலங்களில் அதிக வேலைக்கு ஆளாவதும் மலைகளில் சுமை தூக்குவதும் அதன் மனதை ஆழமாகக் காயப் படுத்துகின்றன.
ஒரு யானையின் நிலையில் இருந்து அதன் வலிகளை எழுதுவது எளிதல்ல. குட்டிசங்கரன் இதில் வெற்றி அடைந்திருக்கிறார். யானை மனிதன் வாழுமிடத்தில் அட்டகாசமென்று ஊடகங்கள் செய்தி வெளியிடும் போதெல்லாம் யானையின் இடத்தை நாம் எந்த அளவு ஆக்கிரமித்திருக்கிறோம் என்னும் கசப்பான உண்மை நினைவுக்கு வரும். இருபது வருடங்களுக்கு முன் சுமார் இரண்டு வருடம் அலுவலகப் பணிக்காக திருவனந்தபுரம் அடிக்கடி போய் வருவேன். அப்போது பல தோட்டங்களில் நம்முர் மாடுகளுக்கு இணையாக யானைகள் வேலை பார்ப்பது வியப்புத் தரும்.
பாகனைக் கொன்ற பிறகு கற்கள் மற்றும் சங்கிலிகளால் உண்டான ஆழமான காயங்களுடன் ஏழு மாதங்கள் போராடி அந்த யானை இறந்து விடுகிறது. அது நம் மனதை மிகவும் மிகவும் உறுத்தும்.
(image courtesy: flickr.com)