பசுமாமிச அரசியல் – என் மகள் கேட்ட கேள்வி
ஒரு வாரத்துக்கும் மேலாக பலவிதமான சிந்தனைகளும் கேள்விகளும் என்னுள் ஓடிக்கொண்டிருக்கின்றன. ஆழ்ந்த வருத்தமும் அவமான உணர்வும் ஆட்டுவிக்கின்றன. ஆனால் நான் என் வலைத் தளத்தில் எதுவுமே எழுதவில்லை. அவநம்பிக்கையும் சோகமும் வருத்தமுமான நிலையில் எதையும் எழுதுவது ஒத்து வராது. இன்று என் மகள் கிட்டத்தட்ட அரை மணி நேரம் என்னுடன் தொலைபேசியில் பசுமாமிச அரசியல் மற்றும் வன்முறை பற்றி விவாதித்தார். அப்போது அவரே என்னிடம் “நீ ஏன் இதையெல்லாம் எழுதக் கூடாது?” என்றார். அதனால் மட்டுமே இதை எழுதுகிறேன்.
என் மகள் பற்றிய ஒரு சிறிய அறிமுகம் தேவைதான். 1999 அல்லது 2000ல் ஒரு ஞாயிறு மாலை நான் திருவல்லிக்கேணியில் ஜெயமோகன் பங்குபெறும் இலக்கிய நிழ்ச்சிக்காகக் கிளம்பிக் கொண்டிருந்தேன். 12 வயது சிறுமி நானும் வருகிறேன் என்றார். பிச்சமூர்த்தி ஒன்றும் அப்படிக் குறிப்பிடத்தக்க சாதனையைக் கவிதைகளில் நிகழ்த்தவில்லை என்பதாக ஜெயமோகன் முடித்தார். “என்னப்பா இப்பிடிக் கவுத்துட்டாரு?” என்று சுருக்கமாக எதிர்வினை செய்தார். ஜெயமோகனை நான் நேரில் சந்தித்த ஒரே ஒரு தருணமும் அதுவே. என் மகளின் புகழ் பாட இதை எழுதவில்லை. பெண் குழந்தைகளின் மனமுதிர்ச்சி இயல்பாகவே பிள்ளைகளை விட ஆழ்ந்தது. நுட்பமானது.. இப்போது அவர் அமெரிக்காவில் மேற்படிப்பு முடித்து மென்பொருட் துறையில் அமெரிக்க நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.
“ஏம்ம்ப்பா… இவ்வளவு கலாட்டாப் பண்ணறாங்களே… குப்பத் தொட்டியில கிடக்கறதைச் சாப்பிட்டுக்கிட்டுத் திரியற மாடுகளுக்கு இவங்க என்ன பண்ணினாங்க? என்ன பண்ணப் போறாங்க?” . இதைத் தவிர 90களில் வலதுசாரி நண்பர்கள் என்னிடம் நெருங்கிப் பழகினார்கள். அவர்கள் வழி எனக்கு அந்த இயக்கங்களின் பல அமைப்புக்கள் சிந்தனைகள் பற்றிய கருத்துக்கள் என்ன என்பதையும். மிகவும் விரிவாக அவருக்கு பதிலளித்தேன். இந்தக் கட்டுரையில் அரசியல் தொடர்பாக நாங்கள் பேசிய விவரங்களைத் தவிர்க்கிறேன். அரசியல் பற்றி நான் என்ன நினைத்தாலும் யார் என்ன நினைத்தாலும் அவை வீணே. அரசியல் களம் தருக்கம், அறிவு பூர்வ விவாதம், மனிதநேயம் எவற்றின் வீச்சுக்குள்ளும் அடங்காது. அது அதிகார வேட்டையின் அமைப்பு வடிவம். அது நம்மை பாதிப்பதிலிருந்து நாம் தற்காத்துக் கொண்டாலே பெரிய விஷயம். ஓட்டு என்னும் ஆயுதம் தவிர நாம் கையாலாகதவர்கள். அரசியல்வாதிகள் பற்றி நமக்கு இருக்கும் சார்புகள் கசப்புகள் இவை வதந்தியும் பரபரப்பும் மலினமான யூகமுமாய் எழுதும் மட்டமான பத்திரிக்கைகள் விற்பதைத் தவிர வேறு எதற்கும் பயனாகா.
சந்திரசேகர சுவாமிகள் மற்றும் பெரியவர் என்று வணங்கப் படும் காஞ்சிமடத்தின் முந்தையகாலத் துறவி பற்றிக் குறிப்பிட்டேன். அவரை விடப் பசுக்களை நேசித்தவர் யாரும் இருக்க முடியாது. அவர் யாரையும் வன்முறைக்குத் தூண்டவில்லை. பசுமடங்களை நிறுவிப் பராமரிக்க ஏற்பாடு செய்தார். சமயசார்பற்ற ப்ளூ கிராஸ் மற்றும் ஒத்த பல அமைப்புக்களும் பல விலங்குகளைப் பாதுகாக்கின்றன. அவர்களுக்கு பொருளுதவி, உடலுழைப்பில் உதவி செய்வதே ஒரே வழி என்று பதிலளித்தேன்.
பசுவை மட்டுமல்ல எந்த விலங்கையுமே உண்ணாதே கொல்லாதே என்று விரும்ப பிரச்சாரம் செய்ய கண்டிப்பாக ஒரு இந்தியனுக்கு உரிமையுண்டு. ஆனால் அது சட்டத்துக்கு உட்பட்ட வழிமுறையில் அஹிம்சையில் மட்டுமே இருக்க முடியும். வன்முறை, கொலை, மதக்கலவரத் தூண்டல் என்றெல்லாம் போவது நம் தாய்நாட்டுக்கு நாம் இழைக்கும் மிகப் பெரிய அவமானம். நாம் பண்பட்டவர் அல்ல காட்டுமிராண்டி என்று நிறுவும் மோசமான செயல். ஒருவர் உணவு அவரது தனிப்பட்ட உரிமை. விருப்பம். அதில் மதம் நம்பிக்கை என்றெல்லாம் காரணம் காட்டித் தலையிட யாருக்கும் உரிமையில்லை. அரசியல்வாதிகள் சட்ட மேதைகள் இதைக் கருத்தில் கொண்டே நடைமுறைகளை உருவாக்க வேண்டும்.
மறுபக்கம் இது போன்றவற்றை வசதியான வாய்ப்பாகப் பயன்படுத்தி தனது பிம்பத்தைப் பெரிதாக நிறுவ முயலும் அறிவுஜீவிகளை நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை தனது தலையங்கத்தில் கண்டித்தது. அதற்கான இணைப்பு —————-> இது.
எழுத்தாளர் சிந்தனையாளர் தமது கருத்தை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். சமூகம் சிந்திக்க, விவாதிக்க வேண்டியவற்றை மீண்டும் மீண்டும் அவர்களுடன் பகிரும் உரையாடலைத் தொடர வேண்டும். சமூகத்தின் காவலர் மற்றும் நீதிக்கான போராளி என்றால் வினோபா பாவே, ஜெயபிரகாஷ் நாராயண், அன்னா ஹஸாரே, மேதா பாட்கர் போலக் க ளத்தில் இறங்க வேண்டும். வசதியான வாய்ப்புக் கிடைத்த போது தன்னை பிரம்மாண்டமாக்கிக் கொள்ளும் சந்தர்ப்பவாதத்தில் ஈடுபட்டு மட்டமான தனது அம்சத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தக் கூடாது. சமூகத்துக்காகக் களத்தில் இறங்குவோர் எழுத்தாளர்களை விட உயர்ந்தவர்கள். இதில் குழப்பமே கூடாது. எழுத்து சீரிய பணிதான். ஆனால் சமூகப் பணியே ஆகச் சிறந்தது.
அவரிடம் குறிப்பிடாத ஒரு விஷயத்தை எழுதி இந்தக் கட்டுரையை நிறைவு செய்கிறேன். போதி மரம் என்னும் சரித்திர நாவலை புத்தரின் வாழ்க்கையை என் கற்பனை கலந்து நான் வடிவமைக்கும் போது ஒரு அந்தணரை கோமேத யாகத்தில் பசுவை பலி கொடுப்பதில் இருந்து புத்தர் தடுக்கிறார். இதைப் பதிவு செய்யும் முன் என் ஆசானும் நீண்ட நாள் நண்பருமான எஸ்ஸார்ஸி என்னும் எஸ்.ராமச்சந்திரனைத் தொடர்பு கொண்டு கோமேத யாகத்தில் மாட்டைப் பலி கொடுப்பார்களா என்று கேட்டேன். வேதங்களில் ஆழ்ந்த ஞானம் உள்ளவர் அவர். அவர் அதை உறுதி செய்தார். விலங்குகளை விட்டு விடுங்கள் – புலால் உண்ணாதீர்கள் என்பதெல்லாம் ஷ்ரமண மதங்களான சமணமும் பௌத்தமும் முன்னெடுத்தவையே.
இன்று இந்தியத் தாயை அவளது பிள்ளைகள் அவமானத்துக்கு ஆளாக்கி விட்டார்கள். அவள் தலை நிமிர இனி எதாவது செய்ய முடியுமா என்றே தெரியவில்லை. மௌனமாக இருக்காமல் மதவெறியைக் கண்டிப்பது மத நல்லிணக்கத்தை நினைவுபடுத்துவது மட்டுமே நாம் இப்போதைக்குச் செய்யக் கூடியது.
(image courtesy:youtube)