ப்ரோஹோர்- வங்காள மொழி திரைப்படம்
ப்ரோஹோர் விருதுகளை மனதில் வைத்து எடுக்கப் பட்டுள்ள ஒரு வித்தியாசமான முயற்சி. 2004ல் வெளியான இந்தத் திரைப்படம் சுபாத்ரோ முகர்ஜி என்பவரால் இயக்கப்ப் அட்டது. 11.10.2015 இரவு 8 மணிக்கு டிடி இந்தியா தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
தங்கை மற்றும் நோயாளியான தாய் இருவரையும் அரவணைக்கும் முதிர்கன்னியின் கதை. ஒரு மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றும் அவள் பாலியல் பலாத்காரத்துக்கு ஆட்படுகிறாள். அந்த அதிர்ச்சியில் அவரது தந்தை மரணமடைய குடும்பப் பொறுப்பு முழுவதும் அவர் மீது விழுகிறது. சக ஊழியர் மற்றும் நண்பன் ஒருவனுடன் அவளுக்கு இருக்கும் ஈர்ப்பு காதல் அல்லது திருமணம் அளவு வளர்வதற்குள் அவன் இடமாற்றலால் ஊரை விட்டே போய் விடுகிறான். நதிக்கரையில் உள்ள அவளது வீடு மற்றும் அவள் வடிக்கும் மண்ணாலான சிற்பங்கள் என அவளது வீடு காட்சிப்படுத்தப்படுகிறது. தொட்டியில் உள்ள வண்ண மீன்களைப் படிமமாகப் பயன்படுத்த ஒரு முயற்சி இந்தப் படத்தில் இருக்கிறது. ஆனால் கதையில் சமூகத்தின் பரிமாணத்தைக் காட்டாமலேயே போனதால் அந்தப் பெண்ணோ அவளது குடும்பமோ தனிமைப்படுத்தப்பட்டது சரியாக திரைக்கதையில் இல்லை. அவள் ஒரு முகம் மட்டுமாக முயலும் ஒரு சிற்பம் சிவனா புத்தரா என அவளே வியக்கிறாள். பாலியல் பலாத்காரம் செய்தவனைப் பழிவாங்காமல் விட்டுவிடும் போது அவள் அது புத்தரென்றே அறிகிறாள். தசராவுக்குப் பிறகு அம்மனை நதியில் விடுவது போல அவள் அந்த புத்தரை நதியில் விட்டு விடுகிறாள். இந்த சிற்பம் ஓரளவு கதையில் ஒட்டுகிறது.
படத்தைத் தூக்கி நிறுத்துவது இவளை பாலியல் பலாத்காரம் செய்தவன் ஒரு குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி உயிருக்குப் போராடும் நிலையில் மருத்துவ மனைக்கு வரும் காட்சிகள். அவன் இறந்து விடுவான் என்றும் அவன் செய்யாத குற்றமே இல்லை என்றும் மருத்துவர் மற்றும் சகசெவிலிப் பெண் இருவருமே நினைக்கின்றனர். அவன் மரணத்தை சீக்கிரமாக்க எண்ணி அவனுக்காகன ஆக்ஸிஜன் இணைப்பை அவள் துண்டிக்கிறாள். யதேச்சையாக மருத்துவன் அந்தப் பக்கம் வரவே அந்த முயற்சி தடைப்படுகிறது. அன்று இரவு அவனுக்கு ரத்தம் கிடைப்பது தாமதமாகிறது. ஆனால் அவனுக்கு ரத்தம் கிடைத்து அவன் தன்னைப் பார்த்து மனம் வருந்திய பின் அவனைக்கொல்ல அவள் முடிவு செய்கிறாள். அரியவகை ஓ- ரத்தம் அவளுடையதுமானதால் தானே முன்வந்து தானமளித்து அவன் தன் முகத்தைக் காணும்படி அவனருகே செல்கிறாள். அவனுக்கு அருகே மற்றொரு படுக்கையில் உள்ள சிறுவன் அவனைக் காப்பாற்றியது அந்த நர்ஸ் கொடுத்த ரத்தமே என விளக்க, குற்றவாளி கண்ணீர் சிந்தி கண்கள் நிலைகுத்திக் கிடக்கிறான். மருத்துவர் அவன் மன அதிர்ச்சியால் வந்த மாரடைப்பில் மரணமடைந்ததாக அறிவிக்கிறார். அவனைக்கொல்லும் வாய்ப்பும் இல்லாமல் போய் விடுகிறது. அவள் மனதில் இருந்த பலியான அவமானமும் பழிவாங்கும் நெருப்பும் மறைகின்றன.
வணிகப் படங்களை ஒப்பிட நல்லமுயற்சி. அச்சில் வரும் கதையோ சினிமாவோ, சமூகம் தனிமனிதன் ஒரு நாணயத்தின் இருபக்கம் என்னும் அடிப்படை விதியுடன் கதையைக் கட்டமைத்தால் நாம் இருவர் பற்றியும் மேம்பட்ட புரிதல் அல்லது தரிசனத்துக்கு நகர்வோம்.