எக்குத் தப்பாக வெளிப்படும் படைப்பாற்றல்
நேற்று பேருந்துப் பயணத்தின் போது எக்குத் தப்பாக வெளிப்படும் படைப்பாற்றல் ஒருவரிடம் காணக் கிடைத்தது.
இந்தப் புகைப்படத்தில் பின் பக்கமாக ஒருவரும் அவரது கையும் தென்படும். அவர்களுக்கு மேல் முன் இருக்கையின் முதுகுப்புறத்தில் ஒரு சிறுமி “ஃப்ராக்” போட்டிருக்கிறாள். ஒரு பையை உயரமாக ஆட்டுகிறாள். அவள் தலை மீது பெரிய பூத்தொப்பி போலவும் வரைந்தார். நான் பேருந்தில் ஏறிய போது அவர் ஒரு சிறுமியா என்று உற்றுப் பார்க்கும் அளவு வரைந்து வைத்திருந்தார். பிறகு பை பிறகு பெரிய தொப்பி இதெல்லாம்.
தனது வலது கை கட்டை விரல் நகத்தால் இதை அரைமணிக்குள் வரைந்தார் அந்த இளைஞர். அவர் பொதுச் சொத்துக்கு சிறு சேதம் செய்ததை நான் ஏற்கவில்லை. ஆனால் என் கவனம் அதன் மீது இல்லை. பேருந்தில் இளைஞர்கள் கைபேசியில் விளையாட்டில் ஈடுபடுவர். சிலர் பேருந்தே அதிரும்படி கைபேசியில் பேசுவர். பலரின் காது செவிடாகும் படி தன் கைபேசியில் திரைப்பாடல்களை ஒலிக்கச் செய்வோர் உண்டு.
இவர் அமைதியாயிருந்தார். கொஞ்சம் கொஞ்சமாக முயன்று அந்த ஓவியத்தை உருவாக்கினார். அதைக் காணும் போது தான் எனக்கு கலை என்பது யாருக்குள்ளும் பீறிட்டு வெளிப்படக் காத்திருக்கிறது என்பது பிடிபட்டது. அவர் அனேகமாக அதிக வருவாயில்லாத வேலை செய்பவரின் தோற்றத்தையே கொடுத்தார். ஆனால் அவருக்குள் கலையார்வம் இருக்கிறது. அவர் பயிற்சியும் முயற்சியும் எடுக்கும் பட்சத்தில் நல்ல ஓவியராக உயரும் கலை அவருக்குள் கண்டிப்பாக ஒளிந்திருக்கிறது.
வருவாய், வர்க்கம், ஜாதி அடிப்படையில் இல்லை கலையின் இருப்பிடம். அது இது போல ஓடும் பேருந்தில் எக்குத் தப்பாக வெளிப்படுகிறது.
கலையை வருமானம் மற்றும் ஜாதி அடிப்படையில் காணும் பழக்கம் நம்மிடம் பல காலமாகவே இருக்கிறது. நாட்டுப்புறக் கலைகள் நகர்ப்புறத்தாராலும் வருமானம் மிகுந்தவராலும் மேல் ஜாதிக்காரர்களாலும் ரசிக்கப் படுவதே இல்லை. கர்நாடக சங்கீதம் கேட்கப் படாமலேயே போவதால் வறியோருக்கும் எளியோருக்கும் சுவையற்ற தோற்றம் தரும். இசையில் மதம் ஜாதி என்றெல்லாம் எதுவும் கிடையாது.
இசை, ஒவியம், எழுத்து, கைவினைக் கலைகள், பாண்டம் பொம்மை செய்யும் கலை இவை யாருக்கும் கைவருபவையே. முயற்சியும் ஊக்குவிப்பும் சரியான வழிகாட்டுதலும் இருந்தால் அந்தக் கலை முழுமையாய் வெளிப்பட்டு ஒருவரை உய்விக்கும்.
கலை மட்டுமே சமுதாயத்தைத் தன் குறுகிய பிளவுகள், பின்னங்களைத் தாண்டி ஒன்றுபடுத்த முடியும். கலையை, கலைஞர்களைக் கொண்டாடும் சமுதாயச் சூழல், கலையை ஊக்குவிக்கும் சூழல் மட்டுமே மானுடத்தை மேம்படுத்தும்.
கலையைத் தேடுதல் கலாரசனை இவை நாம் சமூகத்துக்குச் செய்யும் ஆகச்சிறந்த தொண்டுப்பணி.
பள்ளிப்பருவத்தில் கலைக்கான படைப்பாற்றலுள்ள குழந்தைகளை அடையாளம் காணும் பணி துவங்கினால் விரைவில் கலையை நேசிக்கும் ஒரு தலைமுறை உருவாகும். உருவாக வேண்டும்.
கலையை வாழ்த்துவோம்