ஒரு பெண் படைப்பாளியை எப்படி அணுகிறார்கள்? ஜெயந்தி சங்கர் சிறுகதை
தீராநதி அக்டோபர் 2015 இதழில் வந்துள்ள ஜெயந்தி சங்கரின் சிறுகதை மிகவும் நேரடியானது. ஆனால் நிதானமாக தான விரும்பும் தாக்கம் வரும் வண்ணம் புனைவில் அனுபவத்தை அதாவது புனையத் தெரியும் என்னும் அனுபவத்தை வெளிப்படுத்துவது.
புலியூர் என்னும் ஊரின் கலைஞர்கள் மற்றும் படைப்பாளிகளின் நேர்காணல்களாலமைந்த ஒரு ஆவணப் படம் தயாராகிறது அந்த ஊரின் மூத்த கலைஞர் ஒருவரின் வழிகாட்டுதலில் அவரது வேண்டுகோளைத் தட்ட முடியாமல் ஒரு இளம் பெண் படைப்பாளி அதாவது எழுத்தாளர் ஒரு நேர் காணலுக்கு ஒப்புக் கொள்கிறார். அவருக்கு தமது முந்தைய பேட்டி ஒன்று காணொளி வடிவத்தில் வெட்டி ஒட்டப்பட்டு அவர் கூறியவை துண்டு துண்டாக விபரீதமான அர்த்தம் தரும்படி செய்யப் பட்டதால் மிகுந்த கசப்பும் எச்சரிக்கையும்.அவரை பேட்டி எடுக்க வருபவர் ஒரு ஓவியர். அந்த இளைஞன் தன் வசதிப்பட்ட நேரத்தில் தான் எடுப்பேன் என்பதால் தான் அலுவலகத்தில் அலுவல் தொடங்கும் முன் அவனை சந்தித்து பேட்டி எடுக்க ஒப்புக் கொள்கிறாள். அதற்காகத் தன் சின்னஞ்சிறு குழந்தையை சரிவர கவனிக்காமல் கணவனிடம் ஒப்படைத்து விட்டு அலுவலகத்துக்கு சீக்கிரமே வந்து சேருகிறாள். மாதவிலக்கால் அவதிப்பட்டாலும் கலைஞர்கள் விரும்பிய பேட்டியைத் தர விரும்புகிறாள். அவளைக் கண்டதும் அவனது உற்சாகம் குறைகிறது. பிறகு “கேமரா” ஷட்டர் திறக்கவில்லை என்று சாக்குச் சொல்லி அந்த பேட்டியைத் தவிர்க்கும் அவன் விடைபெறும் வேளையில் அவள் புடவையில் வந்திருக்கலாம் என்று குறிப்பிடுகிறான். அப்படியே விடைபெற்றுவிடுகிறான்.
ஜெயந்தி சங்கர் மிகவும் நுட்பமான ஒரு கருவைக் கையில் எடுத்திருக்கிறார். படைப்பாளிகளுக்குள் ஆண் பெண் ஏற்றத் தாழ்வு எந்த அளவு ஊறி இருக்கிறது என்பதை மையப்படுத்தி இருக்கிறார். பெண்ணியப் பிரசார நெடி இல்லை. மறுபக்கம் வேறு ஒரு குறுகிய நோக்கத்தையும் இந்தக் கதை வெளிக்கொணர்கிறது. ஒரு படைப்பாளி அல்லது அறியப்பட்ட ஆளுமை தனக்கு -தான் முன்னெடுக்கும் ஒரு திட்டத்துக்கு எந்த அளவு பயன் படுவான் அல்லது பயன் படுவாள் என்னும் உள்நோக்குடன் அணுகும் சக படைப்பாளிகளை என்ன செய்ய?
பெண்களின் உடை மற்றும் தோற்றம் அவர்களுக்கு முக்கியமாக இருப்பது வேறு. ஒரு சக ஆண் படைப்பாளியின் பார்வையில் அது முக்கியத்துவம் இல்லாததாக கவனிக்கப்படாததாக இருப்பதே கண்ணியம். நேர்காணலில் பெண் படைப்பாளி எப்படித் தோன்ற வேண்டும் என்பதை ஆண் படைப்பாளி முடிவு செய்கிறார். இது காலங்காலமாக ஊறி வந்த ஆணாதிக்க மனப்பான்மை மாறவில்லை என்பதன் அடையாளமே.
பெண் படைப்பாளிகள் மட்டுமே புனைவு தரக்கூடிய சில ஆழ்ந்த நுட்பமான தரிசனங்கள் உண்டு. அவர்கள் ஆண் படைப்பாளிகளின் நிராகரிப்பைத் துல்லியமாக உணர்கிறார்கள். தம் விலகலால் அதை எதிர்கொள்கிறார்கள். விளைவு பெண் படைப்பாளிகள் குறுகிய காலமே எழுதுகிறார்கள். ஜெயந்திக்கு புனைவு கைவருகிறது.
(image courtesy:tamiloviam.com)