புனிதத்தலத்தில் யானைக்கு எதற்கு இந்தக் கொடுமை?
நவராத்திரி விழாவை ஒட்டி ஸ்ரீரங்கம் கோயில் யானை ஊரில் வலம் வந்த காணொளியை ஒரு நண்பர் பகிர்ந்தார். அதற்கான இணைப்பு இது
பாரம்பரிய விழாக்களில் இப்படி யானை நொண்டியடிக்கும் கட்டாயம் எதுவும் இல்லை. இவை குரூரமான வணிக நோக்கம் கொண்ட ஒன்றே. நாம் வாயில்லா ஜீவன் களை மதத்தின் பெயரால் வதைக்கிறோம். குழந்தைகளைக் கல்வியின் பெயரால் வதைக்கிறோம். பெண்கள் மீது ஆணாதிக்க வெறி கொண்டோர் பலாத்காரம் செய்கிறார்கள். குரூரம் நம்முள் விரவி இருக்கிறது. நேயம் நமக்குள் இல்லவே இல்லை. நாம் வன்முறை செய்பவராக இருக்கிறோமோ இல்லையோ குரூர ரசனையுடன் இருக்கிறோம். இது மாற வேண்டும். வெகுஜன மனப்பாங்கில் பெரிய மாற்றத்தை திரும்பத் திரும்ப நாம் கோர வேண்டும். வலியுறுத்த வேண்டும். யானை வைத்திருக்கும் கோயில்கள் பெரிய வருமானம் கொண்டவை. யானைகளை நன்றாகப் பராமரிக்க அவர்களால் இயலும். பெரிய கோயில்கள் முன்னுதாரணமாக மிருக வதையில்லாமல் அவற்றை நன் கு பராமரித்து பிறருக்கு வழி காட்ட வேண்டும்.
ஜெயமோகனின் யானை டாக்டர் என்னும் குறு நாவலை வாசிப்போர் கண்ணீர் சிந்துவது உறுதி. ( மூன்று பகுதிகளுக்கான இணைப்பு இது—> ஒன்று, இரண்டு, மூன்று) விடுமுறைகளில் வனப்பகுதியில் குடித்துக் கும்மாளம் போடுவோர் வீசும் கண்ணாடி மது பாட்டில்கள் யானைகளின் கால்களைக் கடுமையாகக் காயப்படுத்துகின்றன. அவைகளைக் குழந்தைகளைப்போல அரவணைத்தவரே யானை டாக்டர். இது உண்மை வாழ்க்கையை ஒட்டிய நாவல். மிகவும் நுட்பமான அறிவும் அவர் மீது நம்பிக்கையும் கொண்ட யானைகள் இரவு பகல் பார்க்காமல் அவர் வீட்டுக் கதவுகளைத் தட்டி மருத்துவம் பெறும். நாம் இந்த உலகின் மீது நமக்கு எப்படி நலமாக வாழ உரிமை இருக்கிறதோ அதற்கு இணையான உரிமை வாயில்லா ஜீவன்களுக்கும் உண்டு என்பதை எப்போது உணருவோம்?
(image courtesy:srirangam.in)