நிஷாத் (2002) ஹிந்தி திரைப்படம் 17.10.2015 இரவு டிடி இந்தியா தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. அர்ச்சனா இதைத் தவிர வேறு ஹிந்திப்படத்தில் நடித்திருக்கிறாரா என்று தெரியவில்லை. சுமாராக ஹிந்தி பேசுகிறார். திபெத்தில் இந்தக் கதை நடப்பதாகக் காட்டப்படுகிறது அதுவும் 1972ல். இந்தியா பாகிஸ்தான் இடையே போர் வெடிக்கும் நேரத்தில் நடப்பதாகக் காட்டப்படுகிறது.
அரசாங்க மருத்துவர் ஒருவரும் அவரது மனைவியும் தனிமையில் வாடுகிறார்கள். அந்த அம்மாள் திபெத்தின் பௌத்தப் பள்ளி ஒன்றில் இசை சொல்லித் தரும் ஆசிரியையாகப் பணியாற்றுபவர். அவர்களுடைய ஒரே மகன் 22 23 வயதுள்ளவன் ராணுவத்தில் பணி புரிகிறான். வாரம் ஒரு முறை கூட தொலைபேசியில் பேசுவது அவனால் இயலாத காரியமாகிறது. தங்களது மகனுடனில்லாமல் தனிமையில் இருப்பது தாய்க்குப் பெரிய ஏக்கத்தை ஏற்படுத்துகிறது. நள்ளிரவுகளில் அடிக்கடி ஒரு 10 11 வயது சிறுவன் தன் தாய் என நினைத்து தொலைபேசியில் அழைக்கிறான். அவனுடன் என்ன பேசுவது என்பது இந்தத் தாய்க்குத் தெரியவில்லை. விரைவில் அவன் தன் தாயை சந்திக்க விரும்புகிறான். இந்த “ராங் கால்” அடிக்கடி வருகிறது. மருத்துவரை ஒரு முறை காவல்துறை ஒரு நக்ஸல் இளைஞன் சம்பந்தமாகத் தீவிரமாக விசாரிக்கிறது. அவனுக்கு சிகிச்சை தந்ததைத் தவிர இவர் எந்த விவரமும் தெரியாதவர். இந்திய பாகிஸ்தான் யுத்தம் அதில் தம் மகன் பங்கேற்பது இவையும் இவருக்கும் மிகுந்த மன அழுத்தத்தைத் தருகின்றன. மறுபக்கம் தாய்மையின் ஏக்கத்தில் அந்தப் பெண்மணி இரண்டு பெரியவர்களின் அறிவுரையை நாடுகிறார். ஒருவர் புத்த மடாலயத்தின் தலைவரான பிட்சு. மற்றொருவர் அங்கே பயணத்தின் ஒரு பகுதியாகத் தங்கியிருக்கும் வயதானவரும் கிறித்துவரானவரும் மேற்கத்தியப் பெண்மணி இருவருமே அறிவுரை கூறுகிறார்கள். தான் பாடம் எடுக்கும் சிறுவர்களில் ஒருவன் மேல் இவருக்குப் பாசம் அதிகரிக்கிறது. அது பற்றி பிட்சுவிடம் ஆலோசிக்கும் போது அவர் முந்தைய பிறவியின் நீட்சியான இந்த பந்தங்களை மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டாம் என்கிறார். கிறித்துவப் பெண்மணி அந்த இளம் பௌத்த மாணவனிடம் பேச்சுக்கொடுத்து அவனது சொந்த அம்மாவைத் தான் சந்திக்க இருப்பதாகவும் அவருக்கு என்ன கொடுக்க வேண்டும் என்றெல்லாம் கேட்கிறார். அவன் தன் மேல் சட்டையில் உள்ள ஒரு வெண்கலப் பொத்தானை எடுத்துக் கொடுக்கிறான். அதை அந்த ஆசிரியையிடம் இந்த அம்மாள் கொடுத்து விடுகிறார். 10 வயதே ஆன அந்தச் சிறுவன் தான் பிசு ஆகவே விரும்புகிறேன் என்று மழலையுடன் கூறுகிறான். ஒரு நாள் இரவு அதே “ராங் நம்பரில்” இருந்து அழைப்பு. இந்த முறை ஒரு பெரிய ஆண் குரல். அவர் “நீங்கள் என்ன தாய்? இந்த சிறுவன் இத்தனை நாட்களாக ஏங்கித் தவித்தான். இப்போது இறந்தே போய்விட்டான்” என்கிறார். ஓரிரு நாட்களில் இவர்களது சொந்த மகன் , ராணுவத்தில் பணிபுரிபவன் இறந்த செய்தி வருகிறது.. அத்துடன் படம் நிறைவடைகிறது.
அர்ச்சனாவின் முதிர்ச்சியான நடிப்பு படத்தைத் தூக்கி நிறுத்துகிறது. ஷாஜி என். கருண் என்னும் இயக்குனர் தாய்மை என்பது மொழி மதம் தாண்டி விரியும் அடையாளம் என்பதான செய்தியைத் தருவதில் வெற்றி அடைந்திருக்கிறார். போர் ஒரு தாய்க்குத் தரும் பதட்டமும் வலியும் நுட்பமாகக் காட்டப் பட்டுள்ளன. ஒளிப்பதிவு பாராட்டத்தக்க அளவு வந்திருக்கிறது. நல்ல முயற்சி.