குடிமை – மாத்தளை சோமுவின் சிறுகதை
நாடி நரம்பெல்லாம் முறுக்கேற்றிக் கொண்டு நாம் அரசியல் நடத்துவதென்றால் லட்டுபோல இருக்கவே இருக்கிறது இலங்கைத் தமிழர் பிரச்சனை. உண்மையில் இன்றைய இலங்கைத் தமிழர் நிலை என்ன? இளைய அப்துல்லா எழுத்தில் நாம் உண்மை நிலவரத்தைத் தெரிந்து கொள்கிறோம். மாத்தளை சோமுவின் ‘குடிமை’ என்னும் அக்டோபர் தீராநதியில் வந்துள்ள கதையில் நாம் தற்காலத்தில் இலங்கையில் இருக்கும் அங்கிருந்து ஆஸ்திரேலியா அல்லது ஐரோப்பாவுக்கு அகதிகளாகச் செல்லும் தமிழரின் அவல நிலை பற்றித் தெரிந்து கொள்கிறோம்.
முகாம்களிலிருந்து தப்பிக்க பெரிய தொகை ஒன்றைக் கொடுத்து இரு இளைஞர்கள் தப்பிக்கிறார்கள். தவம், சீலன் என்ற அந்த இருவரும் வேறுபலருடன் ஒரு பெரிய படகில் ஏற்றி அனுப்பி வைக்கப் படுகிறார்கள். படகில் காய்ச்சலுற்ற ஒருவன் இறந்து விடுகிறான். அந்த உடலைக் கடலில் எடுத்து வீசும் அளவு கல் இதயத்துடன் யாரும் இல்லை. அவ்வளவே. ஆனால் அதைப்பற்றிக் கவலைப்படவும் யாருக்கும் வழியில்லை. தாங்கள் ஆஸ்திரேலியா போகும் தவிப்பிலிருக்கிறார்கள். தவம், சீலன் இருவருமே ஆஸ்திரேலிய அகதி முகாம் சென்றடைகிறார்கள். பின்னர் விசா கிடைத்து சிட்னியில் குடியேறி விடுகிறார்கள். தவம் கடுமையான மதுப்பழக்கத்துக்கு ஆளாகிறான். தன்மானமில்லாமல் பாதையில் விழுந்து கிடக்கிறான். சீலன் மனதைக் கல்லாக்கிக் கொண்டு அவனைத் தன் அறையை விட்டு வெளியேறச் சொல்கிறான். தவன் தனது தாய்தந்தை மற்றும் நிலத்தை இழந்ததை எண்ணி மனதுள் தீராத வேதனை கொள்கிறான். அதுவே அவன் மதுவில் வீழ்ந்து கிடக்கக் காரணமும்.
தமது வேர்களை இழந்து இன்று ஐரோப்பிய நாடுகளில் அல்லது ஆஸ்திரேலியாவில் வாழும் தமிழர்களின் மனதுள் உள்ள ரணம் அதன் வலி நம்மால் உணரவே முடியாதது. நமக்குத் தேவை அவர்கள் பெயரில் அரசியல். அமர்க்களப்படுத்தி விட்டோம்.
புனைவின் நுட்பங்களுக்காக அல்ல வலியைப் பதிவு செய்ததற்காக சோமுவின் இந்தக் கதை வாசிக்கப்படும்.
(image courtesy:https://www.google.co.in)