ஜென் – ஒரு புரிதல்
சத்யானந்தன்
பகுதி (1)
ஜென் (ZEN) என்பதற்கான இந்திய மொழிபெயர்ப்பு தியானம். சான் என்னும் சீனப் பதமே ஜென் என்னும் பெயருக்கான மூலம் என்று கருதப்படுகிறது. 25 நூற்றாண்டுகளுக்கு மேற் பழமையான ஜென் தத்துவம் தாவோயிசம் மற்றும் பௌத்ததின் சங்கமத்தில் உருவானதாகக் கருதப் படுகிறது.
இந்தியத் தத்துவ மரபில் பொருத்திப் பார்க்கும் போது கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம் என்ற மூன்றில் ஞான யோகத்தில் நாம் ஜென் மரபை அடையாளப் படுத்திக் கொள்ளலாம.
வழிபாட்டுமுறைகளும் சடங்குகளும் மதம் சம்பந்தப் பட்ட எண்ணற்ற நிறுவனங்களும் குரு பீடங்களும் ஒருவனுக்குள் நீறு பூத்த நெருப்பாக இருக்கும் ஆன்மீகம் பற்றிய தேடலை கொழுந்து விட்டு எரியச் செய்யவில்லை. தேடல் வசப்பட்டவருக்கு வழிகாட்ட எந்த ஒரு கைகாட்டியும் ஊன்றப்படவில்லை. அப்படி ஒரு சூழல் இருந்திருந்திருந்தால் இன்று வாழ்க்கை இத்தகைய வெறுமையைச் சுமக்காது. உலகம் மனித நேயம் தழைத்தோங்கும் பூங்காவாக இருந்திருக்கும். மாறாக ஆன்மீகம் என்பது நிகழ்காலமோ அல்லது வாழ்நாளோ சம்பந்தப்பட்டது அல்ல. மரணத்துக்குப் பின் உள்ள வாழ்க்கை சம்பந்தப் பட்டது என்னும் கருத்தை நிறுவதை மட்டுமே இந்நிறுவனங்கள் செய்து வந்தன.
ஆன்மீகம் என்றால் என்ன என்னும் கேள்விக்கான விடையை மத நிறுவனங்களுக்கு வெளியே வடக்கே கபீரும் தமிழகத்தில் சித்தர்களும் தேடித் தமது கவிதைகளில் பதிவு செய்தனர். ஆன்மீகம் என்பது ஒரு மனிதன் தன்னைப் பிரபஞ்சத்துடன் இணைக்கும் புள்ளியை உணர முயலும் முடிவற்ற தேடல் ஆகும். அது துறவறம் மேற்கொண்டோரின் ஏகபோகப் பணி என்றும் அவர்களை வழிபட்டால் போதும் என்றும் மலினப் படுத்திச் சிந்திக்க நாம் பழக்கப் படுத்தப் பட்டு விட்டோம். ஆன்மீகம் ஒன்றே மனிதன் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சில அடிப்படைக் கேள்விகளுக்கு விடை தரும் என்பதும் அன்றாட வாழ்வில் ஆன்மீகத் தேடல் உறுதுணையாகும் என்பதும் ஏனோ உணரப்படவில்லை.
அர்ச்சுனன் கையில் வில்லை ஏந்தி எதிரிகளை நோக்கும் போது அவனது ஆன்மீகம் விழித்தெழுந்தது. சுதந்திரப்போராட்டத்தின் போது அரவிந்தருக்கு அது நிகழ்ந்தது. அமேரிக்காவின் பில் கேட்ஸிடம் ஆன்மீகத் தேடலைக் காண இயலுகிறது. மனிதனின் மேம்பட்ட வாழ்க்கைச் சுகங்களுக்கு மட்டும் விஞ்ஞானமும் தொழில் நுட்பமும் உதவவில்லை. உலகமே அஞ்சும் ஆயுதக்குவிப்பும் அதிகார வேட்டையும் பொருளாதாரச் சுரண்டலுக்கும் தான். இன்று மனித வாழ்வின் மிகப் பெரிய வெற்றிடத்தை ஆன்மீகம் மட்டுமே இட்டு நிறப்ப இயலும்.
ஜென் பற்றிய அறிமுகத்திற்கு சுஜூகி (Daisetz Teitaro Suzuki) என்னும் ஜப்பானிய சிந்தனையாளரின் கருத்துக்கள் முக்கியமானவை. 20ம் நூற்றாண்டில் ஜென் பற்றிய புரிதலுக்கு அவர் ஆற்றியுள்ள பணி மகத்தானது.
சுஜூகி ஜென் எல்லா சடங்குகள், சொர்க்கம், நரகம் என்னும் உருவாக்கங்கள் எல்லாவற்றையுமே ஜென் நிராகரிப்பதை முன் வைக்கிறார். ஜென் கோயில்களில் உள்ள கடவுட் சிலைகள் வெறும் காட்சிப் பொருட்களே. மதங்கள் உருவாக்கிய எந்தக் கோட்பாட்டுக்கும் ஜென்னில் இடமில்லை. கடவுளை நோக்கி நீ மேற் செல்ல வேண்டும் என்றால் உன்னுள் ஆழ்ந்து அகழ்ந்து செல். தன்னிலிருந்து வேறுபட்ட புறவயமான எல்லாவற்றையுமே ஜென் ஆன்மிகத்துக்கு அன்னியமானதாய்க் கருதுகிறது. மனத்தைக் கொன்றழி என்பதே ஜென் என்னும் மேலோட்டமான ஒரு கருத்து ஜென்னைப் பற்றி சொல்லப் படுகிறது. தன்னை ஒரு போதையிலும் மனம் கட்டமைத்த கோட்பாடுகளின் வழி செல்வனாகவும் கொண்ட ஒருவனது கண்கள் கட்டப் பட்டவை. முதலில் இன்று உள்ள எல்லா கோட்பாடுகளும் பாரம்பரியங்களும் மனங்கள் உருவாக்கியவை எனபதை உணர வேண்டும். மனம் மரித்து எல்லையற்ற சூனியத்தை உணரும் தேடலுடன் மறுபிறவி எடுக்க வேண்டும். நிர்வாணம் என்னும் விடுதலையின் தொடக்கம் மனம் மரித்தால் மட்டுமே சாத்தியம். மனம் மற்றும் புத்தி ஜென்னைப் பொருத்த அளவில் பிறரோடு கருத்துப் பரிமாற மட்டுமே தேவை அல்லது பயனுள்ளது.
ஆன்மாவை உள்ளாழ்ந்து உணருவது மிகவும் அந்தரங்கமானதும் அனுபவபூர்வமானதும் ஆகும். அனுபவம் அசலாக இருக்க ஏற்கனவே நிலை நிறுத்தப் பட்டு போதிக்கப் பட்ட எல்லாவற்றையும் நிராகரிப்பது அவசியம். இந்த அனுபத்தின் தொடக்கத்தில் ஜென் அறிமுகமாகி நிறுவன மதங்கள் பின்னே தங்கி விடுகின்றன. உண்மையை உணருவது தனிமனித ஆன்மீகத் தேடல். இதில் பிறர் சென்ற வழி அல்லது நிறுவனங்கள் சொன்ன வழி என்று எதுவுமே இல்லை. பிரபஞ்சத்தின் இயங்குதல் நம் அடையாளத்திலிருந்து அன்னியமானது அல்ல. நாம் நம்மை அந்த இயங்குதலுடன் அனுபவம் வாயிலாக மட்டுமே இணைத்துக் கொள்ள இயலும். இந்தத் தேடல் பற்றிய ஒரு புரிதல் மட்டுமே சாத்தியம். அது பற்றிய உரையாடலாக அந்த அனுபவம் தொடர்பான செய்திகளாக சம தளத்தில் பீடங்கள் இன்றி ஜென் தத்துவ சிந்தனையாளர்கள் பல பதிவுகளைச் செய்தார்கள். ஜென் கதைகள் ஜென் பற்றிய புரிதலுக்கு அதிகம் அறியப் பட்ட வழியாகும்.
.
எளிய கதைகள். ஆனால் மிகவும் ஆழ்ந்த பொருளுள்ளவை. ஜென் கதைகள் சிந்தனையைத் தூண்டுபவை. நமது மனம் என்பது எது? நம் அறிவின் தன்மை என்ன? இந்தக் கதை நமக்கு விடை அளிக்கக் கூடும்.
துரதிஷ்ட வசமாக கண் பார்வை இல்லாமற்போன ஒரு மாற்றுத்திறனாளி பாதைகளைப் பழகி இருப்பதால் தாம் நிறைய நடமாடிய பாதைகளில் ஒரு குச்சியின் உதவியுடன் நடப்பார். அவ்வாறான தெரு வழியே அவர் சென்று கொண்டிருந்த போது ஒரு வீட்டிலிருந்து “தம்பி நில்லுங்கள்” என்றார் ஒரு பெரியவர் ” இந்த இருட்டில் எப்படி நடக்கிறீர்கள்?”
“ஐயா! தாங்கள் சொல்லித்தான் எனக்கு தற்போது இருட்டு என்பதே தெரியும். கண் பார்வை அற்ற நான் பழக்கத்தின் அடிப்படையில் நடந்து சென்று விடுவேன்”
” இல்லை. இந்த விளக்கைக் கையில் நீங்கள் எடுத்துச் சென்றால் எதிரே வருபவர் ஒதுங்கிச் செல்ல ஏதுவாயிருக்கும்.”
“வேண்டாம். குச்சியை ஒரு கையிலும் விளக்கை மறு கையிலும் கொண்டு செல்வது சிரமமே”
“வெளிச்சம் இருக்கும் போது குச்சி மட்டும் போதலாம். ஆனால் இப்பொது விளக்கு அவசியம்”
வேறு வழி இன்றி அந்த விளக்கை வாங்கிக் கொண்டு மறு கையில் குச்சியையும் சரியாக ஊன்ற முடியாமல் அந்த இளைஞர் தடுமாறிச் சென்றார். ஒருவர் அவர் மீது மோதினார். “என் கையில் விளக்கு இருக்கிறதே. நீங்கள் கவனிக்க வில்லையா?”
“விளக்கா? அது அணைந்தது கூடத் தெரியாமல் நீ நடக்கிறாயே? நீ இதை ஏற்றும் போது கவனம் கொண்டிருந்தால் நீண்ட நேரம் வந்திருக்கும்.”
“ஐயா. இது என்னுடையது இல்லை. இரவல்’
“இரவலா ? அதான் துன்பப் படுகிறாய்”
ஜென் நமது மனம் அதன் எண்ணங்கள் எல்லாமே அடிப்படையில் இரவல் வாங்கப் பட்டவை என்கிறது. சுகமும் துக்கமுமாகத் தோன்றுபவை நமக்குச் சொல்லிக் கொடுக்கப் பட்ட அல்லது பாரம்பரியமாக நம் மனம் பழக்கப் படுத்தப் பட்ட மேற்பூச்சுக்களே. தன்னை உணரும் தேடலின்றி புறவயாமான நோக்கில் சுகமும் துக்கமுமாய், பெருமையும் சிறுமையுமாய் அலை பாய்ந்து ஒரு ஊடாடும் வெறுமையைச் சுமக்கிறது மானுடம்.
காலம் காலமாக ஜென் இந்த வெறுமையை எப்படி எதிர் கொண்டது என்பதை ஜென் மரபுச் சிந்தனையாளரின் கவிதைகள் சுட்டுகின்றன. ஜென் வழி ஆன்மீகத் தேடலை புரிந்து கொள்ள ஜென் கவிதைகள் நூற்றாண்டுகாலத் தொடர்ச்சியுடன் வழிகோலுகின்றன. கால வரிசைப்படி இக்கவிதைகளையும் ஜென் கவிஞர்களையும் இக்கட்டுரைத் தொடரின் வாயிலாகத் தரிசிப்போம்.
ஜென் ஒரு புரிதல் – பகுதி -2
ஜென் பதிவுகளைக் கால வரிசைப் படுத்தும் போது பதிவுகளில் காணப் படும் சொற் சிக்கனமும் வார்த்தைகளைத் தேர்வு செய்வதில் காணும் நுட்பமும் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. வாசகனின் விழிப்பைத் தொடுவதும் தொடர் சிந்தனையைத் தூண்டுவதும் ஆன கருத்துக்களை வாசிக்கும் போது தனது வெளிக்காட்டும் அகந்தை தென்படுவதில்லை. மாறாக ஆழமும் செறிவும் ஆன ஒரு தத்துவ தா¢சனத்தின் வெளிப்பாடாக அது அமைய வேண்டும் என்னும் அக்கறை தொ¢கிறது. நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த ” ஹ¥யி கோ” (HUI KO) வின் கவித்துவமிக்க சொற்கள் இவை:
நான் என்று ஏதுமில்லை
எல்லா தர்மங்களும் உள்ளீடற்றவை
மரணத்துக்கும் வாழ்விற்கும் உள்ள வேறுபாடு அற்பமானது
அறிந்து கொள் பின் காண்பாய்
மர்மத்தின் பா¢ணாமத்தின் மையம் இதுவே
அம்பு இலக்கைத் தைக்கும்
இடத்தில் ஓலமிடும் உண்மை
நான் என்று ஏதுமில்லை என்பது மெய்ஞானத்தின் உச்ச நிலையாய் இல்லாமல் சர்வ சாதாரணமான ஒரு உண்மை என்பது போல் தொடங்குகிறார் ஹ¥யி கோ. என்னிலும் குள்ளமானவரை அல்லது உயரமானவரைத் தொடர்பு படுத்திப் பார்க்கும் போது நான் இவ்வளவு உயரமானவன் அல்லது உயரம் குறைந்தவன். செல்வம் ஜாதி அந்தஸ்து என பிறர் பார்வையில் நான் இவ்வளவு மதிப்பானவன் என “நான்” சம்பந்தப் பட்ட எல்லாவற்றிலும் மற்றவா¢ன் பங்களிப்பு இருக்கும். நான் என்பது பல பா¢மாணங்களில் பிறரால் கட்டமைக்கப் பட்ட ஒன்று என்பதில் ஐய்யமில்லை.
நான் என்கிற தனி மனிதனையும் சமுதாயத்தின் அதிகாரம் அல்லது நெறிமுறைகளையும் இணைக்கும் புள்ளியாகவே நாம் தர்மத்தைக் காண்கிறோம். க்ஷத்திரிய தர்மம், ஸ்திரி தர்மம் எனத் தொடங்கி திட்டவட்டமான வழிகாட்டுதல்கள் உள்ளதாகவும் சூழ்நிலைக்கேற்ப நாம் நடந்து கொள்ள வேண்டும் என்பதாகவும் தர்மம் இரு தடத்தில் இயங்கும். உதாரணத்திற்கு விபத்தில் அடிபட்டவரைக் கண்டதும் முதலுதவி செய்து அவரை மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்னும் கடமை.
இந்த அடிப்படையில் காந்தியடிகளிடம் ஒரு சூழ்நிலையைக் குறிப்பிட்டு ஒரு கேள்வி கேட்கப் பட்டது. ஒரு வேடன் ஒரு மானைத் துரத்தி வருகிறான். அவ்வழியில் ஒரு துறவி தியானத்தில் ஆழ்ந்திருக்கிறார். அவரைத் தாண்டி மான் சென்ற சலசலப்பில் அவரது தியானம் கலைந்து மானைக் கவனிக்கிறார். மான் ஓடி விடுகிறது. பின்னாடியே வந்த வேடன் அவரை மான் சென்ற வழி குறித்து வினவுகிறான். அவர் உண்மையைக் கூறினால் மான் கொல்லப் படக் காரணமாகி விடுவார். பொய் சொல்வது துறவிக்குப் பொருந்தாத செயல். இதற்கு காந்தியடிகள் என்னிடம் கேட்கப் படுகிற எல்லாக் கேள்விகளுக்கும் நான் விடை சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றார்.
ஹ¥யி கோ “நான்” என்பதும் தர்மங்கள் என்பவையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல என்றால் நான் என்னும் கட்டமைப்பு எவ்வளவு போலியானதோ அந்த அளவு தர்மங்கள் உள்ளீடற்றவையாக ஆகி விடுகின்றன. உண்மையை உணரும் தேடலில் முதற்கட்டமாக நான் என்பதையும் தர்மங்கள் என்பவற்றையும் தாண்டியாக வேண்டும் எனத் தொடங்குகிறார்.
மரணத்திற்கும் வாழ்விற்கும் உள்ள வேறுபாடு அற்பமானது என்பது தனி மனிதனுக்குக் கட்டாயம் பொருந்தாதது. எனவே இதை மனித வாழ்க்கை என்னும் அகண்ட கண்ணோட்டத்தில் தான் பு¡¢ந்து கொள்ள இயலும். ஆசைகள், விருப்பு வெறுப்புகள், வெற்றி தோல்விகள், இன்ப துன்பங்கள் இவை கோடிக்கணக்கில் காலங்காலமாக நிகழ்ந்த மரணங்களுக்குப் பிறகும் தொடர்கின்றன. வாழ்வும் சாவும் இவற்றில் எந்த வித மாற்றத்தையும் உண்டாக்க வில்லை.
அறிந்து கொள் பின் காண்பாய் என்பது அனுபவ அறிவை அல்லது உணருதலைக் குறிப்பிடுகிறது. நாம் அலைந்து திரிந்து ஒரு வீட்டிற்குள்ளோ அல்லது ஒரு அறைக்குள்ளோ சென்றவுடன் கணப் பொழுதில் வியர்த்துக் காற்று தேவை என்பதை உணரும் போது நம் கண்கள் நம்மை அறியாமலேயே சாளரங்களைக் கண்டு பிடித்து அவை மூடப் பட்டிருப்பதைச் சுட்டிக் காட்டுகின்றன். அதாவது முதலில் உஷ்ணத்தை உணர்கிறோம் அல்லது அறிகிறோம். பின் காரணத்தை அல்லது அந்த உஷ்ண சூழலின் வடிவத்தைக் காண்கிறோம்.
மர்மத்தின் பா¢ணாமம் என்று அவர் குறிப்பிடுவது என்ன? ஒரு மர்மம் பா¢ணமிக்க பல வேறு வடிவங்கள் உண்டு. ஒரு மர்மம் இன்னொரு மர்மாகப் பா¢ணமிக்கலாம். ஒரு விடையாகவோ அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட விடைகளுக்கான சாத்தியத்தைக் காட்டுவதாகவோ பா¢ணமிக்கலாம். நமது பு¡¢தலை ஒட்டி அது வெவ்வேறாகப் பா¢ணமிக்கிறது. கணிதத்தில் ஒரு புதிரை விடுவிக்க முயலும் போது இது தெள்ளத் தெளிவாகிறது. எனவே ஒரு மர்மம் நம் பு¡¢தலின் அடிப்படையில் தான் பா¢ணமிக்கிறது.
அம்பு இலக்கைத் தைக்கும்
இடத்தில் ஓலமிடும் உண்மை
அம்பு இலக்கைத் தைக்கும் போது அம்பு எய்தவா¢ன் நோக்கம் நிறைவேறுகிறது. எவ்வளவு முழுமையாக் நிறைவேறியது என்பது வேண்டுமானால் உடனடியாகத் தெரியாமலிருக்கலாம். ஆனால் உண்மையோ வேட்டையும் துரத்தலும் மனித வாழ்க்கையின் நீங்காத இயக்கம் என்பதே. எனவே தாக்கப்பட்டதும் பிறக்கும் வலியின் ஓலம் கால காலமாக மனிதன் முடிவற்றுத் தொடரும் வேட்டையின் விளிம்பு பற்றியதே. பல பந்தயங்களாக, போட்டிகளாக, விருதுகளாக, அங்கீகா¢ப்புகளாக இன்னும் பலவாக வேட்டைக்கார வேகத்துடன் துரத்தும் இயக்கம் உருமாறி இருக்கலாம். ஆனால் மௌனமாகவும் கூக்குரலாகவும் ஓலங்கள் தொடர்கின்றன்.
ஜென் பற்றிய புரிதலுக்கு நாமும் தொடர்ந்து வாசிப்போம்.
ஜென் – ஒரு புரிதல்
பகுதி 3
சத்யானந்தன்
கணிதம் பல சமயம் நமக்கு ஒரு சவாலாகவே இருக்கிறது. கணிதம் பற்றிய புரிதல் மெதுவாக பலவேறு வழிகளில் நம்முள் நிகழ்கிறது. சரியான அறிமுகம் துவக்கமாகவும் பின்னர் நடப்பு வாழ்க்கையில் கணிதம் தரும் பலன்கள் மென்மேலும் கணிதத்தின் அருகாமைக்கு நம்மை இட்டுச் செல்கின்றன. நமது புரிதலின் நிலை அல்லது அளவு எத்தகையதாயிருந்தாலும் கணிதம் அன்னியமாயில்லாமல் சொந்தமாகி விடுகிறது. ஜென் பற்றிய பதிவுகள் இத்தகைய ஒரு மாற்றத்தைத் துவக்கி அதைப் பரிணாமம் என்னுமளவு நம்முள்ளே வெளிச்சமிடுகின்றன.
ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜெங் டீ சான் (Zeng T”san) “அப்பழுக்கற்ற நம்பிக்கையுள்ள மனம்” என்னும் நீண்ட கவிதையில் ஜென்னுடன் நம்மை நெருங்கச் செய்கிறார்.
அப்பழுக்கற்ற நம்பிக்கையுள்ள மனம்
——————————————
தனது விருப்பங்களில் பற்றில்லாதவருக்கு
உன்னதமான அந்தப் பாதை கடினமானது அல்ல
ஏக்கமோ ஒவ்வாமையோ இரண்டும் போகட்டும்
ஒவ்வொன்றும் தெள்ளத் தெளிவாகும்
வானமும் பூமியும் வெவ்வேறானவையே
நீ நூலிழையான வேறுபாட்டையே நோக்கினால்
நீ உண்மையை உணர வேண்டுமென்றால்
ஏற்றலையும் எதிர்ப்பதையும் விட்டு விடு
நல்லதுக்கும் கெட்டதுக்கும் இடைப்பட்ட போர்
மனதின் அடிப்படை நோயாகும்
ஆழ்ந்த உட்பொருளை நாடாமல்
மனதின் அழகிய சூழலை அவஸ்தைப் படுத்துகிறாய்
பிரபஞ்சத்தைப் போல விளிம்பற்றதாய்
குறையேதுமின்றி முழுமையானதாய்
அதை நீ காண இயலாததற்குக் காரணம்
நீ அறிந்ததெல்லாம் தேர்ந்தெடுப்பது அல்லது நிராகரிப்பது
உலகுடன் சிக்கிக் கட்டுறாதே
உள்ளீடற்ற உலகில் உன்னை இழக்காதே
அனைத்தும் ஒன்றெனும் உணர்வில் அமைதி காண்
எல்லாத் தவறுகளும் தானே மறையும்
‘தாவோ’ வாழ்க்கையை நீ வாழா விட்டால்
அறுதி செய்வதும் மறுப்பதுமாய்க் கழியும் உன் காலம்
உலகம் உண்மையென்று நீ அறுதியிட்டால்
அதன் ஆழ்ந்த உண்மையைப் புறந்தள்ளுகிறாய்
உலகின் உண்மையை நீ மறுத்தால் நீ காணாதது
எல்லா உயிர்களுள் உறையும் தன்னலமின்மையை
இவற்றையெல்லாம் பற்றி எவ்வளவு யோசிக்கிறாயோ
அந்த அளவு உண்மையை விட்டு விலகுகிறாய்
சிந்தனை எல்லாவற்றிடமிருந்தும் விலகி நில்
நீ அடைய முடியாத இடமே இல்லை
வேரை நோக்கித் திரும்பினால் அர்த்தத்தை உணர்கிறாய்
தோற்றங்களைத் துரத்தினால் வெற்றிடத்தை
உண்மையைத் தேடிக் கொண்டே இருக்காதே
அபிப்ராயங்களை (கருத்துக்களை) விட்டுத் தள்ளு
தாவோ உடன் ஒருங்கிணைந்த மனதிலிருந்து
வெறுமை நீங்கி விடும்
நீ தன்னை சந்தேகிக்கா விட்டால்
பிரபஞ்சத்தை முழுமையாக நம்பலாம்
பார் நீ திடீரென விடுதலையாகி விட்டாய்
பற்றிக் கொள்ள ஏதும் மீதவில்லை
எல்லாமே சூன்யமாய் பிரகாசமாய்
தன்னளவில் முழுமையாக –
‘தான்’ ‘தான் இல்லை’ என்ற இரண்டுமே அற்ற
உலகில் தன்வயமாய் இருக்கின்றன
அதன் சாரத்தை நீ வர்ணிக்க விரும்பினால்
‘இரண்டில்லை’ என்பதே ஆகச் சிறந்தது
எல்லாக் காலத்திலும் எல்லா இடங்களிலும்
ஞானம் பெற்றோர் அதன் உண்மைக்குள் கலந்தனர்
பத்தாயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும்
அபூர்வமான லாப நட்டமற்ற நிலை அது
இவ்விடம் அவ்விடம் என்று ஏதுமில்லை
விளிம்பற்ற வெளி உன் கண் முன்னே
நாம் ஏற்படுத்திய எல்லைகள் அழிந்தால்
கடுகளவானதும் பிரம்மாண்டமும் ஒன்றே
வெளிப்புற வேலிகள் இல்லையேல்
பிரம்மாண்டமும் கடுகளவும் ஒன்றே
இருப்பது இல்லாமலிருப்பதின் ஒரு அம்சமே
இல்லாமலிருப்பது இருப்பதிலிருந்து வேறானது அல்ல
இதைப் புரிந்து கொள்ளும் வரை நீ எதையும்
தெளிவாகக் காண்பது இயலாது
ஒன்றே பலவும் பலவும் ஒன்றே இதை
உணர்ந்தால் புனிதமும் ஞானமும் எதற்கு?
பரிபூரணமான நம்பிக்கையில் எல்லா ஐயங்கள்
இடையறா முயற்சிகள் அனைத்தையும் தாண்டி
மனம் பூரண சாந்தி பெறும்
அங்கே நேற்றில்லை இன்றில்லை
நாளையுமில்லை
மிக நீண்ட கவிதை இது. எளிதாக உரையாடும் தொனி உள்ளது. ஏற்பது – எதிர்ப்பது, நல்லது – கெட்டது, தேர்ந்தெடுப்பது – நிராகரிப்பது, தான்- தான் இல்லை, கடுகளவானது- பிரம்மாண்டமானது என இருமைகள் மறைய வேண்டும் என்கிறார் ஜெங் டீ சான். மறுபடி மறுபடி வாசிக்கும் போது இந்த எட்டு வரிகள் ஜென் பற்றிய புரிதலுக்கு இந்நீண்ட கவிதையின் சாராம்சமென்று கொள்ளலாம்.
இவற்றையெல்லாம் பற்றி எவ்வளவு யோசிக்கிறாயோ
அந்த அளவு உண்மையை விட்டு விலகுகிறாய்
சிந்தனை எல்லாவற்றிடமிருந்தும் விலகி நில்
நீ அடைய முடியாத இடமே இல்லை
வேரை நோக்கித் திரும்பினால் அர்த்தத்தை உணர்கிறாய்
தோற்றங்களைத் துரத்தினால் வெற்றிடத்தை
உண்மையைத் தேடிக் கொண்டே இருக்காதே
அபிப்ராயங்களை (கருத்துக்களை) விட்டுத் தள்ளு
புலங்களின் வழியே காண்பதில், தொடுகையில், ருசிப்பதில், கேட்பதில் மற்றும் நுகர்வதில் பெறும் அனுபவம் வார்த்தைகளில் சிக்குவதில்லை. புலனுக்கு அப்பாற்பட்ட ஆனால் அனுபவித்து உணர வேண்டிய ஆன்மிகத்தை ஜென் வழி புரிந்து கொள்ள மேலும் வாசிப்போம்.
ஜென் ஒரு புரிதல் – பகுதி 4
சத்யானந்தன்
எனது பொருளாதார வசதிகளை எளிதாக வெளிக்காட்ட இயலுகிறது. ஆனால் எனது அறிவையோ திறமையையோ வெளிப்படுத்த எனக்கு இணையான அல்லது என்னிலும் மிக்கவர் தேவை படுகின்றனர்.அவர்களிடமிருந்து அங்கீகரிப்பும் அரிதாக என்னை மேம்படுத்திக் கொள்ள விஷய தானமும் கிடைக்கின்றன.
அவர்களுள் ஒருவனாக நான் அறியப் பட்டவுடன் எங்களை விடவும் விவரமற்றோர் யாவருக்கும் என்னை வணங்கி ஏற்றல் கட்டாயமாகி விடுகிறது. இவ்வாறாக ஒரு புறம் ஒப்பாரும் மிக்காரும் மறுபுறம் கீழ் தளத்தில் வழியிலிகளுமாக ஒரு அறிவுஜீவ வழியில் நான் பயணப்படுகிறேன். காலப்போக்கில் அது சுற்றிச் சுற்றி வருவதும் என்னை இவர் யாவருக்கும் அப்பாற்பட்ட ஒன்றைத் தேடும் வாய்ப்பிலிருந்து விலக்கி விடுவதும் விளங்குகிறது. ஆனாலும் இந்த வசதியும் அப்பாற்பட்ட ஒன்றைத் தேடுவதிலுள்ள நிச்சயமின்மையும் என்னைப் பின்னுழுக்கின்றன. கையறு நிலையில் நான் மிகவும் முதிர்ச்சி அடைந்தவனாகக் காட்டிக் கொள்கிறேன்.
என்னை எவ்வளவோ தூரம் கொண்டு வந்த அறிவே அதன் கடிவாளமே என்னை உன்னதமான இலக்கை விட்டு விலக்கிப் பிடித்து இழுத்துச் சென்றது. கொஞ்சம் முயன்றதும் கிடைக்கும் குறுகிய அங்கீகரிப்பு எல்லையில்லாத உன்னத வழியில் போக எனக்குத் தடையாகி விட்டது.
ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘யோகா கென்கேகு’வின் பதிவுகளில் சிலவற்றைக் காண்போம்.
நீ உண்மையிலேயே விழிப்பு பெறும் போது
சம்பிரதாயமான உயர் தகுதி ஏதும் உனக்கில்லை
பன்மை இயங்குதலில் ஓயாத உன்னைச்
சுற்றியுள்ள உலகில் இதற்கான சுதந்திரம் இல்லை
தன்னையே மையப் படுத்தி தகுதியில் உயர்ந்து நிற்பது
சொர்க்க சுகவாசம் போல மகிழ்ச்சி தரும்
வானை நோக்கி எய்யும் அம்பைப் போல்
விசை நீங்கியதும் வீழ்ந்து விடும்
பிறகு எல்லாமே தலைகீழாகும்
தெளிவுள்ள பிரதிபலிக்கும் கண்ணாடி போலுள்ள மனத்தின்
பாதையில் தடைகளேதுமில்லை அதன் தேஜஸ்
பிரபஞ்சம் முழுவதும் ஒவ்வொரு மணற் துகள் வரைக்கும்
ஒளியூட்டும்
வெளியெங்கும் விரவியிருக்கும் யாவையும் உன்
மனதில் பிரதிபலிக்கும் அது அகமும் புறமும் என்னும்
இருமைக்கு அப்பாற்பட்டுத்
தெளிவு படும்
மனம் என்னும் தளம் ஒரு ஆடியைப் போல
தூசி போல அதன் மேல் விந்தைகள் படிந்திருக்கும்
இரண்டுமே குறையுள்ளவை
குறையென்னும் தூசி நீங்கியதும்
மனம் விந்தைகள் இரண்டையும் மற
நாம் இயற்கையாகவே அசலாவோம்
இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு பேட்டியில் அண்ட்ரூ அகாஸ்ஸி என்னும் உலகப் புகழ் பெற்ற டென்னிஸ் வீரர் ஆரம்பம் முதல் ஓய்வு பெறும் வரை தான் டென்னிஸை விரும்பவில்லை என்றும் தனது தந்தையின் கட்டாயத்தில் தொடங்கிய டென்னிஸ் வாழ்வு புலி மேல் ஏறி விட்டது போல ஆகி விட்டது என்றும் வேறு வழி இன்றியே தொடர்ந்ததாகவும் கூறினார். தமிழகத்துக்கும் இந்தியாவுக்கும் பெருமை சேர்க்கும் இளையராஜா நாட்டுப்புற இசை, கர்னாடக மற்றும் மேற்கத்திய இசையிலும் திறம்பட இயங்கும் அபூர்வமான இசைக் கலைஞர். அவர் ஒரு வருடம் முன்பான பேட்டியில் சினிமாவில் தமது வாழ்க்கையே வீணாகி விட்டதாகக் குறிப்பிட்டார். சினிமா தவிர்த்து பல தனி ஆல்பங்களையும் அவர் வடிவமைத்தவர். வெற்றியின் மறு பக்கம் மட்டுமல்ல நடப்பு வாழ்க்கையில் பிறரின் எதிர்பார்ப்புகள் வழி நடத்த ஒருவர் தனது வாழ்க்கைப் பயணத்தை எந்தத் தேடலும் இன்றித் தொடரும் கட்டாயம் மிகவும் துக்ககரமானது.
மீண்டும் ‘யோகா கென்கேகு’வின் வரிகளைப் பார்ப்போம்
மனம் என்னும் தளம் ஒரு ஆடியைப் போல
தூசி போல அதன் மேல் விந்தைகள் படிந்திருக்கும்
இரண்டுமே குறையுள்ளவை
குறையென்னும் தூசி நீங்கியதும்
மனம் விந்தைகள் இரண்டையும் மற
நாம் இயற்கையாகவே அசலாவோம்
நமது சொந்த வாழ்க்கையின் மிக முக்கியமான பகுதி நம் மனம் உந்தும் ஆரோக்கியமான் தேடல்கள். அசலான தேடலின் துவங்கு புள்ளிகள் வேறு பட்டாலும் இறுதியில் ஆன்மீகத்தில் இணையும். ஜென் பற்றிய வாசிப்பில் நம் தேடலைத் தொடர்வோம்.
ஜென் ஒரு புரிதல் பகுதி -5
சத்யானந்தன்
எதற்கு நான் முன்னுரிமை கொடுக்க வேண்டும் ? இவ்வுலகிற்கா ? (கேள்வி மட்டுமே பட்ட) அவ்வுலகிற்கா ? விடை ஒன்றே. கண்டிப்பாக இவ்வுலகைப் பற்றித் தான் கவலைப் பட வேண்டும். இன்றைய வாழ்க்கைப் போராட்டத்தில் புறமுதுகு தோல்வி இரண்டுமே இல்லாத ஒரு வழி கண்டிப்பாகப் பார்க்க வேண்டும். அதற்குத் தேவையான பொருளை, விவரங்களை, மனிதர்களைத் தேடத் தான் வேண்டும். ஆன்மீகம் இவ்வுலகிற்கு அன்றாட வாழ்க்கைக்கு என்ன செய்யப் போகிறது? இது தெளிவாகாத வரை ஆன்மீகம் ஒரு வேண்டப்படா முதுகுச் சுமையே.
அன்றாட வாழ்க்கை உண்மையிலேயே அலைக்கழிப்பும் அலுப்பூட்டுவதும் மட்டுமே ஆனதா? சகமனிதர்கள் அனைவருமே எதிர்மறையானவரா? ஒவ்வொரு நாளும் வரலாற்று மரத்தில் புதிது புதிதாய் துளிர் விடும் தளிரா? இல்லை மௌனமாய் உதிரும் சருகா?
நேர்மையும், கடினமான உழைப்பும், வெகுளித் தன்மையும் கொண்டு சொற்ப வருமானத்திற்குப் பணியோ தொழிலோ செய்யும் அடித்தட்டு மக்களைப் பார்க்கிறோம். தமக்கு எத்தகைய வருங்காலமும் சூழ்நிலையும் சகபயணிகளும் என்பது பற்றிய எந்தக் கவலையும் இன்றி மலர்களைப் போல் சிரித்திருக்கும் குழந்தைகள். ஒரு சதுர அடியில் சாலையும் இடையறாப் போக்குவரத்துமான சூழலிலும் உயர்ந்து நின்று நிழல் தரும் மரங்கள். வீழ்த்தப் பட்ட மரத்தின் நினைவுச் சின்னமானஅடி மரத்திலும் முளைத்தெழுந்த சிறு கிளை ஒன்று. ஆதவனுடன் எழுந்து உறங்கி சிறகடிக்கும் பறவைகள். நம்பிக்கையும் எதிர்பார்ப்புமாக வழி பாட்டுத் தலங்களில் சுடர் விடும் விழிகள். எதிர்பாராமல் கேட்கக் கிடைத்த மனதைத் தொடும் சங்கீதம். அன்னியமென நாம் நினைத்த உதடுகளிலிருந்து ஒலித்த ஆறுதல் தரும் ஒரு வார்த்தை. வெப்பம் தணித்துப் பெய்த ஒரு கோடை மழை. இன்னும் எத்தனையோ நம் கவனத்தில் வாராதவை. இடையறா ஓட்டத்தில் பேச வேண்டியவரிடம் பேச வேண்டியதைப் பேச வாய்க்கவில்லை. மனம் விட்டுப் பேச யாருமே இல்லையோ என்று சில சமயம் ஐயம். மனம் விட்டுப் பேசக் கூடியவரும் நம்பிக்கையானவரும் நம்மை விடவும் விரைவான ஓட்டத்தில். இணையாக ஒரு வேளை என்னுடன் மனம் விட்டுப் பேச யாரேனும் எண்ணித் தோற்றிருக்கலாம்.
இந்தச் சூழலில் ஆன்மீகம் என்ன செய்ய இயலும்?
சுருதி சரியாக உள்ளதா என்பது வீணையைச் சுண்டியவுடன் தெளிவாவது போல் நம் மனச் சமநிலை நமது நேர்மறையான அழகியல் ரீதியான கண்ணோட்டத்தில் வெளிப்படும். துளசி, வேப்பிலை, மஞ்சள் எனத் தொடங்கி மூலிகைகள் பல பட்டியலிட வேண்டிய அளவு வெவ்வேறு விதங்களில் நன்மை செய்பவை. ஆன்மீிகம் அவ்வாறானதே. ஆன்மீகக் கண்ணோட்டம் இயல்பான பிறகு கிடைக்கும் உடனடிப் பயன் மனச் சமநிலை. அது குடும்பம் அல்லது தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களின் முடிவுறா ஏற்ற இறக்கங்களில் சரியான நிலைப்பாடு எடுக்கவும் மன அமைதி குலையாமல் இருப்பதால் சளைக்காமல் போராடவும் கண்டிப்பாக வழி வகுக்கிறது.
இயற்கையோடு ஒன்றிவிட்ட எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த “மெங்க் ஹாவ்-ஜன்” கவிதை இது:
தீவில் கவியும் பனியில் சூரியன் மறைந்தான்
இனி பயணி சற்றே சிரமப் பட வேண்டி இருக்கலாம்
விரிந்த சமவெளியைத் தாண்டி
மரங்களும் வானமும் வெவ்வேறாயில்லை
மென்மையான நதியின் மீது நிலவு வந்தமர்கிறது
என்றுமே கண்டிராத நதிகள் மலைகள்
ஸியாங் ஜாங்கின் (ஸியாங் ஜாங் மலையின்)
அழகு அவற்றை நம் வசமாக்கும்
நான் சிகரமடையத் துணியாத இம்மலை
அருகிலுள்ள மலைகளெல்லாம்
குன்றுபோல் தோன்ற நெடுதுயர்ந்து நிற்கும்
இன்று தெளிவான ஒளி மிகுந்த வானம்
என்னை பயணம் செய்யச் சுண்டி இழுத்தது
விரைவில் தொடுவானமும் காணக் கிடைக்காது
கனவு போன்ற மேக மூட்டங்கள்
பிரம்மாண்டமான வீரனாய் நிமிர்ந்த மலையை
விழுங்கியது போல் பூத்திருக்கும் நந்தவனங்கள்
மெல்லக் கவியும் முன்னிரவு இருளைத் தாண்டி
திராட்சைக் கொடிகளால் இறுக்கி இளக்கப் பட்ட
நிலவு ஓடைகளில் ஆழ்ந்து ஒளி வீசும்
யாருமற்ற தோப்பில் ஒரு குடிலில்
தியானத்தில் அமரும் பொழுது
எதிரே மலைச் சிகரம் கீழே பள்ளத்தாக்கு
அன்றலர்ந்த தாமரையின் அழகை அவதானி
எதுவும் இவ்விதயத்தைக் கறைப் படுத்த
இயலாது என்றுணர்வாய்
அழகு என்பது தோற்றமல்ல. காட்சியுமல்ல. ஓர் அனுபவம் என்பது இந்தக் கவிதை வழி நாம் உணர்வதாகும். ஜென் நம்மை இட்டுச் செல்லும் அசலான உலகை மேலும் வாசித்து அறிவோம்
ஜென் ஒரு புரிதல் பகுதி -5
சத்யானந்தன்
எதற்கு நான் முன்னுரிமை கொடுக்க வேண்டும் ? இவ்வுலகிற்கா ? (கேள்வி மட்டுமே பட்ட) அவ்வுலகிற்கா ? விடை ஒன்றே. கண்டிப்பாக இவ்வுலகைப் பற்றித் தான் கவலைப் பட வேண்டும். இன்றைய வாழ்க்கைப் போராட்டத்தில் புறமுதுகு தோல்வி இரண்டுமே இல்லாத ஒரு வழி கண்டிப்பாகப் பார்க்க வேண்டும். அதற்குத் தேவையான பொருளை, விவரங்களை, மனிதர்களைத் தேடத் தான் வேண்டும். ஆன்மீகம் இவ்வுலகிற்கு அன்றாட வாழ்க்கைக்கு என்ன செய்யப் போகிறது? இது தெளிவாகாத வரை ஆன்மீகம் ஒரு வேண்டப்படா முதுகுச் சுமையே.
அன்றாட வாழ்க்கை உண்மையிலேயே அலைக்கழிப்பும் அலுப்பூட்டுவதும் மட்டுமே ஆனதா? சகமனிதர்கள் அனைவருமே எதிர்மறையானவரா? ஒவ்வொரு நாளும் வரலாற்று மரத்தில் புதிது புதிதாய் துளிர் விடும் தளிரா? இல்லை மௌனமாய் உதிரும் சருகா?
நேர்மையும், கடினமான உழைப்பும், வெகுளித் தன்மையும் கொண்டு சொற்ப வருமானத்திற்குப் பணியோ தொழிலோ செய்யும் அடித்தட்டு மக்களைப் பார்க்கிறோம். தமக்கு எத்தகைய வருங்காலமும் சூழ்நிலையும் சகபயணிகளும் என்பது பற்றிய எந்தக் கவலையும் இன்றி மலர்களைப் போல் சிரித்திருக்கும் குழந்தைகள். ஒரு சதுர அடியில் சாலையும் இடையறாப் போக்குவரத்துமான சூழலிலும் உயர்ந்து நின்று நிழல் தரும் மரங்கள். வீழ்த்தப் பட்ட மரத்தின் நினைவுச் சின்னமானஅடி மரத்திலும் முளைத்தெழுந்த சிறு கிளை ஒன்று. ஆதவனுடன் எழுந்து உறங்கி சிறகடிக்கும் பறவைகள். நம்பிக்கையும் எதிர்பார்ப்புமாக வழி பாட்டுத் தலங்களில் சுடர் விடும் விழிகள். எதிர்பாராமல் கேட்கக் கிடைத்த மனதைத் தொடும் சங்கீதம். அன்னியமென நாம் நினைத்த உதடுகளிலிருந்து ஒலித்த ஆறுதல் தரும் ஒரு வார்த்தை. வெப்பம் தணித்துப் பெய்த ஒரு கோடை மழை. இன்னும் எத்தனையோ நம் கவனத்தில் வாராதவை. இடையறா ஓட்டத்தில் பேச வேண்டியவரிடம் பேச வேண்டியதைப் பேச வாய்க்கவில்லை. மனம் விட்டுப் பேச யாருமே இல்லையோ என்று சில சமயம் ஐயம். மனம் விட்டுப் பேசக் கூடியவரும் நம்பிக்கையானவரும் நம்மை விடவும் விரைவான ஓட்டத்தில். இணையாக ஒரு வேளை என்னுடன் மனம் விட்டுப் பேச யாரேனும் எண்ணித் தோற்றிருக்கலாம்.
இந்தச் சூழலில் ஆன்மீகம் என்ன செய்ய இயலும்?
சுருதி சரியாக உள்ளதா என்பது வீணையைச் சுண்டியவுடன் தெளிவாவது போல் நம் மனச் சமநிலை நமது நேர்மறையான அழகியல் ரீதியான கண்ணோட்டத்தில் வெளிப்படும். துளசி, வேப்பிலை, மஞ்சள் எனத் தொடங்கி மூலிகைகள் பல பட்டியலிட வேண்டிய அளவு வெவ்வேறு விதங்களில் நன்மை செய்பவை. ஆன்மீிகம் அவ்வாறானதே. ஆன்மீகக் கண்ணோட்டம் இயல்பான பிறகு கிடைக்கும் உடனடிப் பயன் மனச் சமநிலை. அது குடும்பம் அல்லது தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களின் முடிவுறா ஏற்ற இறக்கங்களில் சரியான நிலைப்பாடு எடுக்கவும் மன அமைதி குலையாமல் இருப்பதால் சளைக்காமல் போராடவும் கண்டிப்பாக வழி வகுக்கிறது.
இயற்கையோடு ஒன்றிவிட்ட எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த “மெங்க் ஹாவ்-ஜன்” கவிதை இது:
தீவில் கவியும் பனியில் சூரியன் மறைந்தான்
இனி பயணி சற்றே சிரமப் பட வேண்டி இருக்கலாம்
விரிந்த சமவெளியைத் தாண்டி
மரங்களும் வானமும் வெவ்வேறாயில்லை
மென்மையான நதியின் மீது நிலவு வந்தமர்கிறது
என்றுமே கண்டிராத நதிகள் மலைகள்
ஸியாங் ஜாங்கின் (ஸியாங் ஜாங் மலையின்)
அழகு அவற்றை நம் வசமாக்கும்
நான் சிகரமடையத் துணியாத இம்மலை
அருகிலுள்ள மலைகளெல்லாம்
குன்றுபோல் தோன்ற நெடுதுயர்ந்து நிற்கும்
இன்று தெளிவான ஒளி மிகுந்த வானம்
என்னை பயணம் செய்யச் சுண்டி இழுத்தது
விரைவில் தொடுவானமும் காணக் கிடைக்காது
கனவு போன்ற மேக மூட்டங்கள்
பிரம்மாண்டமான வீரனாய் நிமிர்ந்த மலையை
விழுங்கியது போல் பூத்திருக்கும் நந்தவனங்கள்
மெல்லக் கவியும் முன்னிரவு இருளைத் தாண்டி
திராட்சைக் கொடிகளால் இறுக்கி இளக்கப் பட்ட
நிலவு ஓடைகளில் ஆழ்ந்து ஒளி வீசும்
யாருமற்ற தோப்பில் ஒரு குடிலில்
தியானத்தில் அமரும் பொழுது
எதிரே மலைச் சிகரம் கீழே பள்ளத்தாக்கு
அன்றலர்ந்த தாமரையின் அழகை அவதானி
எதுவும் இவ்விதயத்தைக் கறைப் படுத்த
இயலாது என்றுணர்வாய்
அழகு என்பது தோற்றமல்ல. காட்சியுமல்ல. ஓர் அனுபவம் என்பது இந்தக் கவிதை வழி நாம் உணர்வதாகும். ஜென் நம்மை இட்டுச் செல்லும் அசலான உலகை மேலும் வாசித்து அறிவோம்
ஜென் ஒரு புரிதல் பகுதி 6
சத்யானந்தன்
மானூடத்தின் மிக நீண்ட வரலாற்றில் மதங்களின் பங்களிப்பு குறிப்பாக இரு தளங்களில் இருந்தன. ஒன்று சமுதாய ஒழுங்குமுறை – அறநெறிகளை நிறுவியதில். மற்றது அவநம்பிக்கைகும் நம்பிக்கைக்கும் இடையே இடையறாது ஊசலாடும் மனிதனைத் தேற்றி அவன் தொய்வின்றி இயங்கத் துணை நின்றதில். இன்றும் மதம் மற்றும் வழிபாடு இந்த இன்றியமையாத தொண்டைப் புரிகின்றன. இதன் மறுபக்கம் மதங்களின் எல்லைக் கோடு சம்பந்தப் பட்டது. சர்ச்சையே இப்படி ஒரு எல்லைக் கோடு கிடையாது என்பது தான். என் மதம் எப்போதோ எல்லாக் கேள்விகளுக்கும் விடை அளித்து விட்டது. எல்லைக் கோடு என்பது எழுப்பப் படக் கூடாத கேள்வி என்றே நிறுவப்பட்ட மதங்களின் பக்கமிருந்து அதன் வழி நடப்போரும் அதன் பீடங்களில் இருந்து பேசுவோரும் வாதிடுகின்றனர்.
மதங்கள் மானுட பரிணாமத்தின் ஒரு உயர் நிலை என்பதில் மாற்றுக்கருத்து இருக்க இயலாது. பிரச்சனையே பரிணாம வளர்ச்சி மதங்கள் ஊன்றியவுடன் நின்று போனது என்னும் நிலைப்பாடே. இந்த நிலைப்பாட்டால் நிகழ்ந்துள்ள மிகப் பெரிய விபரீதம் மதங்களின் நற்கூறுகளையும் சேர்த்தே நிராகரிக்கும் ஒரு தலைமுறை உருவானது. ஏனையர் இன்னும் கடுமையாக இந்தச் சடங்குகளிலும் நூல்களிலும் யாவும் தீர்வு காணும் என்னும் வறட்டு சித்தாந்தத்தைப் பற்றிக் கொண்டு ஒதுங்கி விட்டனர். இந்தத் தேக்க நிலையை உடைக்க இந்து மற்றும் பௌத்த மதங்களில் போற்றத்தக்க மறு மலர்ச்சிகள் நிகழ்ந்தன (அந்த மறுமலர்ச்சி மத நிறுவனங்களால் நிராகரிக்கப் பட்டது மிகப் பெரிய சோகம்). ஜென் அத்தகைய மறுமலர்ச்சியின் தத்துவ வடிவம். மனித குல பரிணாமம் முடிவற்றதாகும். அறிவியலிலும் தொழில் நுட்பத்தில் மட்டுமல்ல. ஆன்மீகத்திலும் மேற்செல்லும் மானுட ஆற்றல் அளப்பரியதாகும். இந்த ஆற்றலின் தொட்டே தொடர்ந்து பரிணமிக்கும் கட்டாயம் அவனுக்கு உள்ளது.
மானுட வரலாற்றின் அற்புதங்கள் அவலங்கள் இரண்டுமே மனிதமனத்திலிருந்து ஊற்றெடுத்தவை. மனித மனத்தின் இயங்குதல் சீராதனல்ல. இந்தச் சீரின்மை அதன் இயல்பு என்னும் புரிதல் ஒன்றே மனத்தை மையமாக்கி அதே சமயம் மனதுள் பதிவாகியுள்ள புறவுலகு தொட்ட கண்ணோட்டத்தைக் கடந்து செல்ல உதவும்.
எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ”ஷிஹ்டே’ யின் சிந்தனை இது:
யாரும் காணவில்லையா?
—————————-
யாரும் காணவில்லையா?
மூவுலகிலும் மாயையால் கிளர்ந்தெழும் அமைதியின்மை
எண்ணங்களின் அணிவகுப்பு நின்றால் மட்டுமே
மனம் தெளிவடையும்
மரணமில்லை ஜனனமில்லை
எதுவும் வருவதில்லை போவதில்லை
நிலவின் ஒளியை அவதானி
நீளுலகின் நாற்புறமும் அதன் ஒளிவெள்ளம்
முழுமையான வெளியில் முழுமையான ஒளி
தூய்மைப் படுத்தும் அதன் பிரகாசம்
நிலவு வளர்கிறதென்றும் தேய்கிறதென்றும்
சொல்கிறார்கள்
ஆனால் அது மங்கி நான் பார்த்ததே இல்லை
மாய முத்துப் போல அது ஒளிரும்
பகலிலும் இரவிலும்
வேலிகள் இல்லாதது என் உறைவிடம்
யதார்த்தமான உண்மையே அதைச் சூழ்ந்திருக்கிறது
சில நேரம் நான் நிர்வாணம் (விடுதலை) என்னும்
சிகரத்தில் ஏறுவேன் வேறு சமயம்
சந்தனத்தில் ஆன கோயிலினுள் விளையாடுவேன்
ஆனால் பெரும்பாலும் நான் சலமின்றி இருக்கிறேன்
லாபத்தைப் பற்றியோ புகழைப் பற்றியோ பேசுவதில்லை
ஒரு நாள் கடல் முழுக்க மல்பேரி மர வனமாக ஆனாலும்
அது என்னை பாதிக்காது
நிலவை எதுவாக உருவகப்படுத்தி இருக்கிறார்? உருவகத்திற்கு நிலவை ஏன் தேர்ந்தெடுத்தார்? ஜென் பதிவுகளில் நாம் காண்பது மிகவும் ஆழ்ந்த கவனத்துடன் கூடிய வார்த்தைகளின் தேர்வு. தேடலின் கிடைக்கும் தரிசனங்கள் தொடக்கத்தில் மிகவும் உற்சாகமளிப்பவை. மளமளவென்று பல கதவுகள் திறப்பதாகத் தோன்றும். முழுதும் உணர்ந்தது போன்று ஒரு பரவசம் கூட ஏற்படலாம். அந்நிலை நிஜ வாழ்க்கையில் ஒரு சறுக்கல் ஏற்படும் போது மாறிவிடும். படிப்படியாக ஒரு சோர்வும் தொய்வும் ஆட்கொண்டு தற்காலிகமாக தொடங்கு புள்ளிக்கே வந்தது போல ஒரு வெறுமை கவிந்து விடும். இன்னிலையை அமாவாசை எனலாம். ஆனால் அப்போதும் நாம் கட்ந்து வந்த ஒளிமிகுந்த பாதையை மட்டுமே நினைவிற் கொள்ள வேண்டும். ஏற்ற இறக்கங்களை அல்ல. தற்காலிகப் பின்னடைவுகள் மீண்டும் தேடலில் தீவிரம் என்னும் இடையறாத் தொடர் முயற்சியின் நிலைகளையே – அப்போது கிடைக்கும் பிரகாசமானதும் மங்கியதுமான தரிசனங்களையே- அவர் நிலவாக உருவகப் படுத்தி உள்ளார்.
ஆன்மீகத் தேடல் என்பது மனம் ஒரு புள்ளியிலிருந்து இன்னொன்றிற்கு நகருவதல்ல. மனம் தேடல் வழி பரிணமிப்பதின் வெவ்வேறு நிலைகளை உணருவதாகும். ஜென் இந்த உணர்வைப் பற்றிய புரிதலுக்கு மிகவும் அண்மைக்கு இட்டுச் செல்லும். மேலும் வாசிப்போம்.
ஜென் ஒரு புரிதல் பகுதி 7
சத்யானந்தன்
நகரங்களும் நகர வாழ்க்கையும் கிராமங்களிலிருந்து எவ்வாறு வேறு படுகின்றன? நகரங்களும் நகரவாசிகளும் சுகவாசிகளாகவும் சூட்சமம் மிக்கவர்களாகவும் கிராமவாசிகள் அப்பாவிகள் என்றும் சித்தரித்துப் பல திரைப் படங்களும் எழுத்துலகப் படைப்புகளும் வந்துள்ளன. இது சரியான அணுகுமுறை தானா என்று தொடராமல் நகரங்களுக்கே உரித்தான சில பிரச்சனைகளைப் பார்ப்போம். ஒரு நகரம் உருவான பின் சுற்றியுள்ள எல்லாப் பகுதிகளுக்குமான வணிகமும் சேவைகளும் நகரில் மென்மேலும் வளருகின்றன. தன்னால் தாக்குப் பிடிக்க முடியாத ஒரு ஜனத்திரளை நகர் வரவேற்று சமாளித்து அனுப்புகிறது. ஒரு நிலையில் நகரினுள் அல்லது அதன் புறங்களில் கூட விவசாயமோ கால்நடை வளர்ப்போ இல்லாமற் போய் விடுகிறது. இதனால் ஒரு நகரம் சதா தனது தேவைகளுக்கான பொருட்கள் அனைத்தும் வெளியிலிருந்து வரவேண்டிய சார்பு நிலைக்குத் தள்ளப் படுகிறது.
வெளியிலிருந்து தான் தீர்வு வரும் என்னும் மனப்பாங்கு மெல்ல மெல்ல நகர வாழ்க்கையின் பெரும்பாலான நடவடிக்கைகளில் ஊன்றிவிடுகிறது. போக்குவரத்து நெரிசல் அதிக செலவினங்கள் என நகரவாசி மிகவும் நிம்மதியில்லாத ஒரு வாழ்க்கை முறைக்குத் தன்னைப் பழக்கிக் கொள்கிறார். தனது குடும்பம் அல்லது தொழில் சம்பந்தப்பட்ட பணிகளை ஒரு கிராமவாசியுடன் ஒப்பிடும் போது இவர் அதிக முயற்சியும் இடர்களும் பட்டு கால அவகாசம் குறைவாக முடித்தே பழகி விடுகிறார். ஒரு ரகளையோ, பொது வேலை நிறுத்தமோ நகரங்களையே பெரிதும் பாதிக்கும். கிராமத்தில் வெளியிலிருந்து வர வேண்டியவை மிகக் குறைவானவை என்பது மட்டுமல்ல. அவை இன்றியும் அமையும் என்கிற அளவு இன்றியமையாத பொருளோ சேவையோ கிராமத்தில் உள்ளேயே உண்டு. இந்த ஒரு காரணத்தாலேயே கிராமவாசியால் நிம்மதியாக வாழ இயலுகிறது. நகரவாசியிடம் ஒரு பதட்டம் தென் பட்டுக் கொண்டே இருக்கிறது.
இதே போலத்தான் தனக்கு வெளியே எல்லாவற்றையும் தேடிப் பழகிய மனத்தால் ஆன்மீகம் நோக்கி நகர இயலுவதில்லை. புற உலகின் பரிமாணங்களான பூச்சு, ஒப்பனை, புனைவு, போலித்தனங்கள் எதுவுமே இல்லாத ஒரு அக உலகம் சாத்தியம் என்று நம்புவதே பெரிய சவாலாக உள்ளது. பெரிய சிக்கலான நூலின் உருண்டையாகத் தோன்றும் இதை ஒற்றைச் சரடாகப் பிரித்துக் காண முடியும் என்பது நம்பக் கூடியதாக இல்லை.
“சியாவ் ஜன் “ என்னும் எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த சிந்தனையாளரின் பதிவுகள் இவை:
குடிலின் சுவரின் மீது ஏரி செதுக்கிய பதிவு
———————————————-
நீ ஒரு மலைவாசி ஆக விரும்பினால்
போராடி மலைப் பாதைகள் வழி
இந்தியா சென்று ஒரு மலையைக் கண்டுபிடிக்கத்
தேவையில்லை
இந்த ஏரி எனக்கு ஒராயிரம் சிகரங்கள் காட்டும்
ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்தால் போதும்
புற்களின் மணம் வெண் மேகங்கள்
என்னை இங்கே இருத்தி வைக்கும்
உலகவாசியே எது உன்னை
அங்கே பிடித்து வைத்திருக்கிறது?
ஒரு குறிப்பிட்ட கோயிலில் புத்தத் துறவிகளுக்குக் காட்ட வேண்டியது
—————————————————————————–
எதுவும் செய்யாமை என்னும் கரையில் நீ இன்னும்
நங்கூரமிடவில்லையா?
அதற்காக வருந்துவது அற்பமானது
கிழக்கே உள்ள மலையின்
வெண் மேகங்கள் என்ன சொல்கின்றன?
மாலையானால் என்ன தடுமாறி விழுந்தால் என்ன
நகர்ந்து கொண்டே இரு
“குடிலின் சுவரின் மீது ஏரி செதுக்கிய பதிவு” என்னும் தலைப்பு மிகவும் சிந்தனையைத் தூண்டுவதாகவும் ரசனை மிகுந்ததாகவும் இருக்கிறது. ஒரு ஏரியில் சிறிய பெரிய பறவைகள், படகுகள், நிறம் மாறும் மேகங்களின் பிம்பங்கள், சூரியன் அல்லது சந்திரனின் ஒளியின் ஜொலிப்பு, காற்றில் பரவும் மெலிதான அலை, விரிந்த அதன் தோற்றம் காட்டும் கம்பீரமான அமைதி, ஏரியைச் சுற்றிலும் உள்ள நெடிதுயர்ந்த மரங்கள், மரங்களைத் தாண்டி மலைகள், அருவிகள் என எத்தனையோ எழில் மிகு காட்சிகள். இவை யாவும் குடிலின் சுவரின் மீது பிரதிபலிப்பது ஒரு பதிவாக சியாவ் ஜன்னுக்குத் தோன்றுகிறது.
அவர் இந்தியா என்று குறிப்பிட்டிருப்பது வெளியே என்றே பொருள் படும். ஏரி அவருக்கு பல சிகரங்களைத் தன்னுள் கொண்டிருக்கிறது என்பது வாழ்க்கையை ஏரியாக உருவகப்படுத்துதலே. தனது வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை ஆழ்ந்து ஒருவர் அவதானித்தால் அவருக்கு வெளியே சென்று எதையும் தேடும் தேவை இல்லை.
மலை வாசத்தலத்திற்கு போகும் போதெல்லாம் நாம் சொல்லுவது ” இங்கேயே இருந்து விடலாம் போலிருக்கிறது.” ஆனால் நாம் உண்மையிலேயே அங்கே தங்குவதற்குத் தயாரா? மலை வாழ் மக்களின் வாழ்க்கை முறையை நாம் ஏற்றாலே அன்றி அது சாத்தியமே இல்லை. தனது இருப்பிடத்திலேயே மௌனமாக ஒரு அறையில் ஒரு மணி நேரம் ஒருவரால் உட்கார முடியுமா? நம்மை பிறரோ பிரச்சனைகளோ அலைக்கழிப்பது வேறு. நாம் எப்போதுமே ஆர்ப்பரிக்கும் மனத்தைப் பற்றிய புரிதல் இல்லாமலிருப்பது வேறு. நாம் முதுகில் சுமப்பதாக நினைத்துக் கொண்டிருப்பவை எல்லாமே நாம் கெட்டியாகப் பற்றிக் கொண்டிருப்பவை.
அலைப்புறும் மனம் பற்றியது அவரது அடுத்த பதிவு “ஒரு குறிப்பிட்ட கோயிலில் புத்தத் துறவிகளுக்குக் காட்ட வேண்டியது”
எதுவும் செய்யாமை என்பது சியாவ் ஜன் தனது காலத்தில் முன் வைத்த ஜென் பற்றிய கருத்தாகும். எதுவும் செய்யாமையில் நங்கூரமிடு என்கிறார். முடிக்கும் போது மேகங்கள் தொடர்ந்து செல்லும் படி சொல்கின்றன என்கிறார். எதுவும் செய்யாமை மனம் பற்றியது. எதுவும் செய்யாதிருக்க மனத்தை நாம் தொடர்ந்து முயலும் போது முதலில் நாம் உணருவது எது நம்முள் முன்னுரிமை பெருகிறது என்பதே. நாம் முதலாவதாக நினைப்பது எதுவாக இருந்தாலும் அதில் “இது என்னால் நடப்பது; இது என்னை மையமாகக் கொண்டது என “நான்” முன்னிற்பதைக் காண இயலும். எதுவும் செய்யாமையில் நங்கூரமிடுவதும் பின் மேற் செல்வதும் “நான்” என்னும் அடையாளம் எது என்னும் முடிவில்லாக் கேள்விக்கான விடையை நோக்கிய தேடலில் இருந்து நாம் பிறழ வில்லை என்று பரிசோதித்துக் கொள்ளத் தான். ஆத்ம பரிசோதனை ஆர்ப்பரிக்கும் மனம் எதுவும் செய்யாமல் தன்னுள் ஆழும் போது மட்டுமே சாத்தியம். மேலும் வாசிப்போம்.
ஜென் ஒரு புரிதல் பகுதி 8
சத்யானந்தன்
ஒரு காலத்தில் இலக்கிய உலகில் ‘உ’ மட்டுமே முக்கியமாயிருந்தது. உருவம்-உள்ளடக்கம். ஆனால் இப்போது ‘ஊ’ தான் முக்கியமானது. ஊடகம். அதிலும் சினிமா என்னும் ஊடகம் எல்லோரது கவனத்தையும் தேவையைக் காட்டிலும் பன்மடங்கு ஈர்க்கிறது. அப்படி சினிமா பற்றி பேச எல்லோருக்குமே ஒரு காரணம் இருக்கிறது. எழுத்து அல்லது அச்சு ஊடகத்தின் ஒப்பற்ற தனிச்சிறப்புகளை நன்கறிந்த எழுத்தாளர்களுக்கே நல்ல சினிமாவைக் காப்பாற்ற எனவும் வணிக சினிமாவை விமர்சிக்க எனவும் சினிமா மீது கவனம் மிகுந்து விட்டது. ஏனையோர் பற்றிக் கேட்கவே வேண்டாம்.
சினிமா பற்றி பேசுவோர் ஒரு இயக்குனர் எந்த அளவு முக்கியமானவர் என்றும் அவர் இன்ன இன்ன வித்தைகள் செய்து அந்தப் படத்தை உருவாக்கினார் என்றும் குறிப்பிடுவார்கள். சினிமாவை இயக்குனர் தான் முன்னெடுத்துச் செல்கிறார் என்பது தெளிவானது. அதே போல் ஆன்மீகம் பற்றிய எல்லாப் பதிவுகளிலும் மனம் மையப் படுத்தப் படும். ஜென் பதிவுகளிலும் இதைக் காணலாம். மனம் ஒரு கருவியா? வாகனமா? இல்லை அதுவே தான் இயக்குனரும் மனிதன் நடிகனுமாகிறார்களா? இந்தக் கேள்விகளுக்கு விடை ஒற்றைச் சொல்லில் இல்லை.
நிழலான சினிமா பற்றிப் பேசி நமக்கு அலுக்காதது மட்டுமல்ல. இன்னும் இன்னும் பேச எத்தனையோ இருக்கின்றன. நிஜமான ஆன்மீகம் பற்றிப் பேச ? கண்டிப்பாக நிறையவே இருக்கிறது. ஜென்னில் நாம் காணும் பதிவுகள் நிஜம் பற்றிய நமது பிரமைகளை உடைத்து நிஜத்துடன் நம்மைக் கைகுலுக்கச் செய்பவை. அவற்றை வாசிப்பதில் நாம் நமது தேடலின் திசையை மற்றும் அதன் தீவிரத்தை அடையாளம் கண்டு கொள்கிறோம்.
எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த “பாங்க் யுன்” பதிவில்
மனம் கண்ணாடியில் பிம்பம் போல
—————————————-
மனம் கண்ணாடியில் பிம்பம் போல
அது ஒரு பொருளின் பிம்பமே பொருளின் வடிவம் அதில் இல்லை
ஆனாலும் அது உள்ளது – இல்லாமலில்லை
இருப்பதின் மீது நமக்குக் கட்டுப்படுத்தும் அதிகாரம் இல்லை
இல்லாததோ நிரந்தரமற்றது
இந்தப் புதிரை விடுவித்த சாதாரண
மனிதர் தானே நாம் வணங்கும் தவ யோகிகள் ?
மாற்றங்களின் மீது மாற்றங்கள்
ஐந்து மூலக்கூறுகளை நாம் தெளிவாகக் காணும் போது
உலகில் வெவ்வேறாயிருந்தவை எல்லாம்
ஒன்றாய் ஐக்கியமாகின்றன
தர்மத்தின் உருவில்லா உடல்கள் இரண்டு எவ்வாறு
இருக்க இயலும் ?
மூர்கத்தனமான இச்சைகளைத் தொலைத்து
உள்ளுணர்வு மேம்படும் போது
உத்திரவாதமளிக்கப் பட்ட அந்த நிலம்
எங்கே என்னும் கேள்வி பற்றிய
எண்ணங்கள் மறைந்து விடுகின்றன
தாக்குப் பிடித்துத் தொடரும்
விடாப்பிடியைக் கொல்ல வேண்டும்
அதை கொன்றவுடன் மனம் சாந்தி பெறும்
இந்நிலையை மனம் ஒருங்கிணைக்கும் போது
ஒர் இரும்புக் கப்பல் மிதக்கத் தயார்
நான் என்று ஏதுமில்லை
பிரிதொன்று என்றும் ஏதுமில்லை
பின் நெருக்கத்திற்கோ முறிவிற்கோ வாய்ப்புண்டா?
அங்கே சென்றடைய தியானம் புரிவதை விட்டு
விடுங்கள் என்பதே என் பரிந்துரை மாற்றாக
நேரடியாக கையருகிய நிஜத்தை வசப்படுத்துவீர்
வைரச் சூத்திரம் இதுதான்
அனுபவம் மிக்க நம் உலகிலிருந்து
விலக்கப்பட்டது ஏதுமில்லை
தொடக்கத்திலிருந்து இறுதி வரை அது
நம் பொய்யான அடையாளங்களை
கண்கூடாக்கும்
ஜென் தடத்தில் ஒவ்வொரு சிந்தனையாளரிடமிருந்தும் ஒவ்வொரு அரிய கண்ணோட்டம் நமக்கு ஆன்மீகம் பற்றிக் கிடைக்கிறது. “பாங்க் யுன்”னின் இந்தப் பதிவில் “தாக்குப் பிடிக்கும்” எண்ணத்தையே கொன்றழிக்க வேண்டும் என்கிறார். இது நம்மை மிகவும் வியப்பில் ஆழ்த்துகிறது. தப்பித்துத் தாக்குப் பிடித்து தனது இருப்பைத் தக்க வைத்துக் கொள்வது உயிரினங்களிடையே இயல்பாயிருப்பது.
தாக்குதல் வரும் போது தப்பிக்க, தாக்குப் பிடிக்க நான் செய்தவை எல்லாம் அனிச்சையானவை தானே? அந்த எண்ணத்தையே கொன்றழித்தால்? எந்த இருப்பில் எந்த அடையாளத்தில் இயங்கி வந்தேனோ அது இல்லை என்றாகியிருக்கக் கூடும். அதன் பிறகு? ஒரு அடையாளம் மரித்து விடும். பின் நான் எதுவாக மறுபிறவி எடுத்திருப்பேன்? ஒரு புள்ளியில் தொக்கி நின்ற என் அடையாளம் பேரண்டத்தின் ஒரு பிரம்மாண்டத்தின் அங்கமென்னும் புரிதல் நிகழ்ந்திருக்குமோ? அடையாளம் பற்றியதே இந்தக் “கொன்றழி” என்னும் அழுத்தம் திருத்தமான அறைகூவல் என்பது நமக்கு கவிதையை முடிக்கும் போது “தொடக்கத்திலிருந்து இறுதி வரை அது நம் பொய்யான அடையாளங்களை கண்கூடாக்கும் ” எனும் போது அர்த்தமாகிறது.
“அனுபவம் மிக்க நம் உலகம்” என்பதையும், “ஐந்து மூலக்கூறுகளை நாம் தெளிவாகக் காணும் போது உலகில் வெவ்வேறாயிருந்தவை எல்லாம் ஒன்றாய் ஐக்கியமாகின்றன” என்பதையும் பொருத்திப் பார்க்கும் போது நாம் மனிதனுக்கும் மனிதன் தவிர்த்த ஏனயவை அனைத்திற்கும் உள்ள ஒரே வேறுபாட்டை உணர்கிறோம். ஐந்து மூலக்கூறுகள் என்பது ஒற்றுமை. அனுபவங்களே வேற்றுமை. இந்த அனுபவங்கள் அனைத்தும் மனதின் பிரதிபலிப்புக்களே. அதைத்தான் தொடக்கத்திலேயே “மனம் கண்ணாடியில் பிம்பம் போல- அது ஒரு பொருளின் பிம்பமே பொருளின் வடிவம் அதில் இல்லை
ஆனாலும் அது உள்ளது – இல்லாமலில்லை” என்று குறிப்பிடுகிறார். ஸ்தூல வடிவம் இல்லாத மனத்தை ஒரு பிம்பத்துடன் ஒப்பிடுவது எவ்வளவு பொருத்தமானது! புற உலகின் பிம்பமாகவே இருக்கும் மனம் அக உலகில் ஆழவே அடையாளங்களைத் தியாகம் செய்து முட்டையிலிருந்து வெளிப்படும் குஞ்சு போல் முன் அறிந்திராத ஒரு விழிப்பில் கண் திறக்கிறது. விழிப்பு பிம்பங்களிலிருந்து அசலை நமக்கு வேறுபடுத்திக் காட்டுகிறது. இந்த வேறுபாட்டை உணர மேலும் வாசிப்போம்.
ஜென் ஒரு புரிதல் பகுதி 9
சத்யானந்தன்
ஜென்னைப் புரிந்து கொள்ள விருப்பந்தான். ஆனால் எங்கிருந்து துவங்குவது? ஒரு ஜென் கதை இது: ஒரு மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தின் சக்கரவர்த்திக்கு வாரிசாக ஒரே மகள். எனவே குழந்தைப் பருவம் முதலே அவள் விருப்பம் எதையுமே ராஜா தட்டுவதில்லை. அதனால் அவளை வழி நடத்துமளவு யாருமே இல்லை. ராணி செய்த முயற்சிகளையும் ராஜா தடுத்து விட்டார். இளம் பெண்ணாக வளர்ந்து விட்ட இளவரசிக்கு ஒரு நாள் ஒரு கண்ணில் அரிப்பும் எரிச்சலும் வந்தது. அந்தக் கண்ணைக் கசக்கிக் கொண்டே இருந்த போது இன்னொரு கண்ணுக்கும் பரவி விட்டது. ராஜா தமது சிறந்த மருத்துவர்களை அழைத்தார். யாரையுமே அந்தப் பெண் மருந்து போட விடாமல் கண்ணைக் கசக்கிக் கொண்டே இருந்தாள். இதனால் அவளது கண்ணின் நிலை இன்னும் மோசமாகி விட்டது. நாலைந்து நாட்கள் ஆகி விட்டன. தனது முகத்தைக் கண்ணாடியில் பார்த்துக் கொண்டே இருந்ததால் அழுது அழுது கண்கள் மிகவும் நோய்ப் பட்டு விட்டன. ராஜாவுக்கு மிகவும் கவலையாகி விட்டது. அன்புடன் மகளை மருத்துவர்களை மருந்து போட விடும்படி வேண்டினார். ஆனால் அவள் சம்மதிக்கவில்லை. அப்போது ராஜா ஒரு அறிவிப்பு செய்தார். யாராயிருந்தாலும் என் மகளுக்கு கண் குணமாகும்படி செய்தால் அவர் சுமக்குமளவு பொற்காசும் விரும்புமளவு நிலம், மாடுகள் அனைத்தும் பரிசு என்று அறிவித்தார். ஒரு ஆள் வந்து நின்றான். நான் மருத்துவனில்லை. ஆனால் ஒரு மந்திரம் போட்டு குணப்படுத்துகிறேன். முதலில் அவளது கண்களின் நிலைமையைப் பார்க்க வேண்டும் என்றான். பார்த்த பிறகு நிலை மோசமாக இருக்கிறது. நான் ராஜாவிடம் மட்டுமே ஒரு விஷயம் சொல்ல வேண்டும் என்றான். “ராஜா, ஒரு மந்திரம் போட்டால் 96 மணி நேரத்தில் குணமாகி விடும். ஆனால் ஒரு எச்சரிக்கை மட்டும் தேவை என்றான். ” அது என்ன என்று ராஜா கேட்டதும் ” முதல் 48 மணி நேரத்தில் மந்திரம் செயற்படும் போது இளவரசியின் நெற்றியின் இரண்டு பக்கங்களிலும் சிறு கொம்புகள் முளைக்கும். ஆனால் அது வெளிப்படும் போதே கவனித்து இந்த சந்தனத்தைத் தடவினால் முளைக்காது. பின்னர் மேலும் 48 மணி நேரம் முன்னெச்சரிக்கையாக சந்தனத்தை ஒரு மணிக்கு ஒரு முறை மாற்ற வேண்டும் என்றான் ” என்றான். மீறி கொம்பு முளைத்தால் உன் தலையை எடுப்பேன் என்று ராஜா எச்சரித்தார். அவன் சம்மதித்தான். இரண்டு நாட்களில் பாதி குணமானது. நான்கு நாட்களில் முழு குணம் தெரிந்தது. கொம்பும் முளைக்கவில்லை. ராஜா அவன் விரும்பிய அளவு பரிசு கொடுத்து அனுப்பினார். ராஜ வைத்தியர் அவனை வரவழைத்து குணப் படுத்திய விவரம் கேட்டு அவன் பயன் படுத்திய மந்திரம் என்ன என்று கேட்டார். அவன் சிரித்தபடியே “அந்தப் பெண் தனது கண்களை கசக்கிக் கொண்டே இருப்பதிலிருந்து அவள் கவனத்தைத் திருப்பவே அதைச் சொன்னேன். நான் எதிர்பார்த்தபடியே நெற்றியைத் தடவிக் கொண்டே கொம்பு முளைக்கிறதா என்று கவனித்த அந்தப் பெண் கண்களைக் கசக்குவதை நிறுத்தினாள். தானே குணமாகி விட்டது.” என்றான்.
ஆன்மீகத் தேடலிலும் அதுவே தான் நடக்கிறது. நம் கவனமெல்லாம் அற்ப விஷயங்களிலோ அல்லது நாம் முக்கியத்துவம் கொடுத்தே பழகி விட்ட சாதாரண விஷயங்களிலோ மட்டுமே செல்கிறது. அவற்றிலிருந்து ஆன்மீகம் நோக்கி நாம் நகர மிகவும் முயற்சி தேவைப்படும்.
ஜென் முன்வைக்கும் ஆன்மீகம் ஒரு குறிப்பிட்ட தடத்தில் செல்வது அல்ல. நம் இயல்புகளை அறிந்து மேற்செல்வதே. இயல்பு என நாம் எண்ணிக்கொண்டிருப்பவை நம் மீது பூசப் பட்டவை. ஒரு சிசு ஒரு மாதம் தான் ஆகிறது பிறந்து- அந்தக் குழந்தையை ஒரு நீச்சல் குளத்தில் விட்டால் அது நீந்தும். அதே குழந்தையை ஒரு வருடம் கழித்து அவ்வாறு காண இயலாது. நம் அசலான இயல்புகள் பிரபஞ்சத்தின் பிற உயிர்களின் அடிப்படை குணங்களோடு ஒப்பிடக் கூடியவை. ஆனால் மனித மனதின் சாத்தியங்கள் மேலானவை. அதாவது பிற உயிர்களுடன் ஒப்பிடக் கண்டிப்பாக மேலானவை.
மேலான நிலைக்குச் செல்லும் நம் ஆற்றலை நாம் அறிவோமா? இல்லை. ஏனெனில் அதற்கான உந்துதல் மீது புறவயமான கண்ணோட்டம் கற்பித்தவை நம்முள் மூடுபனியாகப் படர்ந்து விட்டன.
சரி, நம்முள் விதிவிலக்காக யாரேனும் இருக்கிறாரா? மாற்றுத் திறனாளிகளை எடுத்துக் கொள்வோம். அவர்களைக் காணும் போதெல்லாம் நாம் பிறரிடம் உள்ள எந்தத் திறன் அவரிடம் இல்லை என்று மட்டுமே காண்கிறோம். ஆனால் அவர் தமது ஏனைய ஆற்றல்களை எந்த அளவு குவித்து, ஒருங்கு படுத்தி தமது நடைமுறை வாழ்க்கையைக் கொண்டு செல்கிறார் என்பதைக் கண்டு நாம் ஆச்சரியப்படுவதே இல்லை. நம் பார்வையில் “இல்லை” என்பது தென்படுகிறது. அவரது வாழ்க்கை முறையில் “இருப்பது” என்பது வெளிப்படுகிறது. ஜென் நம்மிடம் காட்டுவதெல்லாம் இதே போன்ற இருப்பும் இன்மையுமே.
இன்மை பற்றி ஒன்பதாம் நூற்றாண்டில் “ஃபெங்க் கன்” எழுதியது இது:
ஒன்றுமே இல்லை
———————
ஒன்றுமே இல்லை
—————————————
உண்மையில் ஒன்றுமே இல்லை
துடைக்க ஒரு தூசி கூட
இவ்விந்தையைக் கரைத்துக் குடித்தவர்கள்
முதுகை நேராக்கி உட்கார வேண்டியதில்லை
கடலில் கல்லைப் போல மூழ்குதல்
—————————————
கடலில் கல்லைப் போல மூழ்கி
மூவுலகிலும் திரியும்
பரிதாபமான ஒரு சூட்சம வடிவம்
காட்சிகளுள் பொதிந்து கிடக்கும்
ஒரு மின்னல் கீற்று
வாழ்வும் மரணமும்
நீள்வெளியில் தூசிகள்
என்று சுட்டும் வரை
அடையாளங்களை யார் ஏற்றி விட்ட சுமை என்று தெரியாமல் சுமந்து திரிகிறோம். அடையாளங்களைப் போலவே காட்சிகளில் இருப்பதாகக் காண்பவை அசலில் இல்லாதவையே. எது இல்லையென்று எண்ணியிருக்கிறோமோ அவை அறியப்படாதவையே. பூ என்பது எது? மொட்டாயிருந்ததா? மலராயிருந்ததா?வாடியிருந்ததா? சருகாய் ஆனதா? பூவின் வெவேறு தோற்றங்களாய் நாம் ஏன் இவற்றைக் காணவில்லை? நாம் காணாததில் எது இருந்தது? எது இல்லை?
வாழும் கால அளவும் அனுபவங்களும் எனக்கொன்று உங்களுக்கொன்று அவருக்கொன்று என்றானவையா? மானுடத்தின் சிறப்புகளும் அவலங்களும் நிகழ்த்திக்காட்டும் அனுபவத் தொடருக்கு மரணமுண்டா? அனுபவம் வேறு உணர்வது வேறு இல்லையா? உண்மையை உணர்வதும் தேடுவதும் தனி மனித இயங்குதலாக நின்று போகுமா? புற உலக அனுபவங்களோ அல்லது ஆன்மீகத் தேடலோ அனுபவச் சங்கிலித் தொடரின் கண்ணிகளாகும் கணங்களில் எது எது யாருடையது? எந்த ஒருவரின் உடலின் முடிவுடன் அற்றுப் போகாத இந்தத் தொடரின் முன் மரணமெது? வாழ்வு எது? மேலும் தேடுவோம்.
ஜென் ஒரு புரிதல் பகுதி 9
சத்யானந்தன்
ஜென்னைப் புரிந்து கொள்ள விருப்பந்தான். ஆனால் எங்கிருந்து துவங்குவது? ஒரு ஜென் கதை இது: ஒரு மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தின் சக்கரவர்த்திக்கு வாரிசாக ஒரே மகள். எனவே குழந்தைப் பருவம் முதலே அவள் விருப்பம் எதையுமே ராஜா தட்டுவதில்லை. அதனால் அவளை வழி நடத்துமளவு யாருமே இல்லை. ராணி செய்த முயற்சிகளையும் ராஜா தடுத்து விட்டார். இளம் பெண்ணாக வளர்ந்து விட்ட இளவரசிக்கு ஒரு நாள் ஒரு கண்ணில் அரிப்பும் எரிச்சலும் வந்தது. அந்தக் கண்ணைக் கசக்கிக் கொண்டே இருந்த போது இன்னொரு கண்ணுக்கும் பரவி விட்டது. ராஜா தமது சிறந்த மருத்துவர்களை அழைத்தார். யாரையுமே அந்தப் பெண் மருந்து போட விடாமல் கண்ணைக் கசக்கிக் கொண்டே இருந்தாள். இதனால் அவளது கண்ணின் நிலை இன்னும் மோசமாகி விட்டது. நாலைந்து நாட்கள் ஆகி விட்டன. தனது முகத்தைக் கண்ணாடியில் பார்த்துக் கொண்டே இருந்ததால் அழுது அழுது கண்கள் மிகவும் நோய்ப் பட்டு விட்டன. ராஜாவுக்கு மிகவும் கவலையாகி விட்டது. அன்புடன் மகளை மருத்துவர்களை மருந்து போட விடும்படி வேண்டினார். ஆனால் அவள் சம்மதிக்கவில்லை. அப்போது ராஜா ஒரு அறிவிப்பு செய்தார். யாராயிருந்தாலும் என் மகளுக்கு கண் குணமாகும்படி செய்தால் அவர் சுமக்குமளவு பொற்காசும் விரும்புமளவு நிலம், மாடுகள் அனைத்தும் பரிசு என்று அறிவித்தார். ஒரு ஆள் வந்து நின்றான். நான் மருத்துவனில்லை. ஆனால் ஒரு மந்திரம் போட்டு குணப்படுத்துகிறேன். முதலில் அவளது கண்களின் நிலைமையைப் பார்க்க வேண்டும் என்றான். பார்த்த பிறகு நிலை மோசமாக இருக்கிறது. நான் ராஜாவிடம் மட்டுமே ஒரு விஷயம் சொல்ல வேண்டும் என்றான். “ராஜா, ஒரு மந்திரம் போட்டால் 96 மணி நேரத்தில் குணமாகி விடும். ஆனால் ஒரு எச்சரிக்கை மட்டும் தேவை என்றான். ” அது என்ன என்று ராஜா கேட்டதும் ” முதல் 48 மணி நேரத்தில் மந்திரம் செயற்படும் போது இளவரசியின் நெற்றியின் இரண்டு பக்கங்களிலும் சிறு கொம்புகள் முளைக்கும். ஆனால் அது வெளிப்படும் போதே கவனித்து இந்த சந்தனத்தைத் தடவினால் முளைக்காது. பின்னர் மேலும் 48 மணி நேரம் முன்னெச்சரிக்கையாக சந்தனத்தை ஒரு மணிக்கு ஒரு முறை மாற்ற வேண்டும் என்றான் ” என்றான். மீறி கொம்பு முளைத்தால் உன் தலையை எடுப்பேன் என்று ராஜா எச்சரித்தார். அவன் சம்மதித்தான். இரண்டு நாட்களில் பாதி குணமானது. நான்கு நாட்களில் முழு குணம் தெரிந்தது. கொம்பும் முளைக்கவில்லை. ராஜா அவன் விரும்பிய அளவு பரிசு கொடுத்து அனுப்பினார். ராஜ வைத்தியர் அவனை வரவழைத்து குணப் படுத்திய விவரம் கேட்டு அவன் பயன் படுத்திய மந்திரம் என்ன என்று கேட்டார். அவன் சிரித்தபடியே “அந்தப் பெண் தனது கண்களை கசக்கிக் கொண்டே இருப்பதிலிருந்து அவள் கவனத்தைத் திருப்பவே அதைச் சொன்னேன். நான் எதிர்பார்த்தபடியே நெற்றியைத் தடவிக் கொண்டே கொம்பு முளைக்கிறதா என்று கவனித்த அந்தப் பெண் கண்களைக் கசக்குவதை நிறுத்தினாள். தானே குணமாகி விட்டது.” என்றான்.
ஆன்மீகத் தேடலிலும் அதுவே தான் நடக்கிறது. நம் கவனமெல்லாம் அற்ப விஷயங்களிலோ அல்லது நாம் முக்கியத்துவம் கொடுத்தே பழகி விட்ட சாதாரண விஷயங்களிலோ மட்டுமே செல்கிறது. அவற்றிலிருந்து ஆன்மீகம் நோக்கி நாம் நகர மிகவும் முயற்சி தேவைப்படும்.
ஜென் முன்வைக்கும் ஆன்மீகம் ஒரு குறிப்பிட்ட தடத்தில் செல்வது அல்ல. நம் இயல்புகளை அறிந்து மேற்செல்வதே. இயல்பு என நாம் எண்ணிக்கொண்டிருப்பவை நம் மீது பூசப் பட்டவை. ஒரு சிசு ஒரு மாதம் தான் ஆகிறது பிறந்து- அந்தக் குழந்தையை ஒரு நீச்சல் குளத்தில் விட்டால் அது நீந்தும். அதே குழந்தையை ஒரு வருடம் கழித்து அவ்வாறு காண இயலாது. நம் அசலான இயல்புகள் பிரபஞ்சத்தின் பிற உயிர்களின் அடிப்படை குணங்களோடு ஒப்பிடக் கூடியவை. ஆனால் மனித மனதின் சாத்தியங்கள் மேலானவை. அதாவது பிற உயிர்களுடன் ஒப்பிடக் கண்டிப்பாக மேலானவை.
மேலான நிலைக்குச் செல்லும் நம் ஆற்றலை நாம் அறிவோமா? இல்லை. ஏனெனில் அதற்கான உந்துதல் மீது புறவயமான கண்ணோட்டம் கற்பித்தவை நம்முள் மூடுபனியாகப் படர்ந்து விட்டன.
சரி, நம்முள் விதிவிலக்காக யாரேனும் இருக்கிறாரா? மாற்றுத் திறனாளிகளை எடுத்துக் கொள்வோம். அவர்களைக் காணும் போதெல்லாம் நாம் பிறரிடம் உள்ள எந்தத் திறன் அவரிடம் இல்லை என்று மட்டுமே காண்கிறோம். ஆனால் அவர் தமது ஏனைய ஆற்றல்களை எந்த அளவு குவித்து, ஒருங்கு படுத்தி தமது நடைமுறை வாழ்க்கையைக் கொண்டு செல்கிறார் என்பதைக் கண்டு நாம் ஆச்சரியப்படுவதே இல்லை. நம் பார்வையில் “இல்லை” என்பது தென்படுகிறது. அவரது வாழ்க்கை முறையில் “இருப்பது” என்பது வெளிப்படுகிறது. ஜென் நம்மிடம் காட்டுவதெல்லாம் இதே போன்ற இருப்பும் இன்மையுமே.
இன்மை பற்றி ஒன்பதாம் நூற்றாண்டில் “ஃபெங்க் கன்” எழுதியது இது:
ஒன்றுமே இல்லை
———————
ஒன்றுமே இல்லை
—————————————
உண்மையில் ஒன்றுமே இல்லை
துடைக்க ஒரு தூசி கூட
இவ்விந்தையைக் கரைத்துக் குடித்தவர்கள்
முதுகை நேராக்கி உட்கார வேண்டியதில்லை
கடலில் கல்லைப் போல மூழ்குதல்
—————————————
கடலில் கல்லைப் போல மூழ்கி
மூவுலகிலும் திரியும்
பரிதாபமான ஒரு சூட்சம வடிவம்
காட்சிகளுள் பொதிந்து கிடக்கும்
ஒரு மின்னல் கீற்று
வாழ்வும் மரணமும்
நீள்வெளியில் தூசிகள்
என்று சுட்டும் வரை
அடையாளங்களை யார் ஏற்றி விட்ட சுமை என்று தெரியாமல் சுமந்து திரிகிறோம். அடையாளங்களைப் போலவே காட்சிகளில் இருப்பதாகக் காண்பவை அசலில் இல்லாதவையே. எது இல்லையென்று எண்ணியிருக்கிறோமோ அவை அறியப்படாதவையே. பூ என்பது எது? மொட்டாயிருந்ததா? மலராயிருந்ததா?வாடியிருந்ததா? சருகாய் ஆனதா? பூவின் வெவேறு தோற்றங்களாய் நாம் ஏன் இவற்றைக் காணவில்லை? நாம் காணாததில் எது இருந்தது? எது இல்லை?
வாழும் கால அளவும் அனுபவங்களும் எனக்கொன்று உங்களுக்கொன்று அவருக்கொன்று என்றானவையா? மானுடத்தின் சிறப்புகளும் அவலங்களும் நிகழ்த்திக்காட்டும் அனுபவத் தொடருக்கு மரணமுண்டா? அனுபவம் வேறு உணர்வது வேறு இல்லையா? உண்மையை உணர்வதும் தேடுவதும் தனி மனித இயங்குதலாக நின்று போகுமா? புற உலக அனுபவங்களோ அல்லது ஆன்மீகத் தேடலோ அனுபவச் சங்கிலித் தொடரின் கண்ணிகளாகும் கணங்களில் எது எது யாருடையது? எந்த ஒருவரின் உடலின் முடிவுடன் அற்றுப் போகாத இந்தத் தொடரின் முன் மரணமெது? வாழ்வு எது? மேலும் தேடுவோம்.
ஜென் ஒரு புரிதல் 11
சத்யானந்தன்
மூத்த எழுத்தாளர் ஜெயகாந்தன் தமது கட்டுரைகளுள் ஒன்றில் சாவு வீட்டில் அழுகிறவர்கள் எல்லோருமே தமது மரணத்தை எண்ணியே அழுகிறார்கள் என்று குறிப்பிட்டிருந்தார். சென்னையில் மின்சார மயானத்தில் ஒரு உறவினரின் ஈமைக் கிரியைகளுக்கெனச் சென்றிருந்த போது எரிக்கும் மின் எந்திரத்தின் முன் உடல்கள் வரிசையில் இருப்பதைக் காண நேர்ந்தது. நாம் ஒருவரின் வாழ்நாட்களில் அவர் நம்மிடம் பகிர்ந்து கொள்ளுபவற்றில் பலவற்றின் முழு விவரங்களைக் கேட்டு அறிவதில்லை. அவர் நம்மிடம் உதவி கேட்கப் போவதில்லை என்று தெரிந்த பிறகே நிம்மதியாகப் பேசத் துவங்குகிறோம். அவரின் மரணத்தின் போது துக்கம் பாராட்டுவது பண்பு தான் எனினும் அது செயற்கையான ஒரு சம்பிரதாயத்துக்கென செய்வதாகவே அமைகிறது. எனவே ஜெயகாந்தன் சொன்னது சரியே.
பௌத்தம் சம்பந்தப்பட்ட ஒரு கதை உண்டு. புத்தரின் புகழ் பரவிக் கொண்டிருந்த காலத்தில் அவர் பல ஊர்களுக்கும் பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது ஒரு ஊரில் ஒரு தாயின் சிறு வயது மகன் மரணமடைந்து விட்டான். புத்தர் அவனை உயிர் பிழைப்பிக்கக் கூடும் என்று ஒருவர் குறிப்பிட அந்தத் தாயும் புத்தரை அணுகினாள். புத்தரிடம் அந்தத் தாய் தனது துக்கத்தில் நீண்ட நேரம் அழுது புலம்பி இறைஞ்சிய படியே இருந்தாள். புத்தர் ஆழ்ந்த இரக்கத்துடன் அவளைப் பார்த்தபடி மௌனமாகவே இருந்தார். அவளுக்கு பதில் சொல்ல அவர் விரும்பவில்லை என எண்ணிய சீடர்கள் அவளை வெளியே போகும் படி சொல்ல அவர்களைக் கையமர்த்திய புத்தர் “ஒரு பிடி எள் வேண்டும்” என்றார். “ஐயா. உடனே கொண்டு வருகிறேன்” என்றாள். “நீ அந்த எள்ளை மரணமே நிகழாத குடும்பத்திலிருந்து வாங்கி வர வேண்டும்” என்றார். பல மணி நேரம் அலைந்து திரிந்த அந்தப் பெண் அப்படி ஒரு குடும்பமே இல்லை என்றே அறிந்தாள். புத்தரின் எதிரே வந்து அமைதியாக அமர்ந்தவள் எதுவும் பேசவே இல்லை. ” இது தாங்க இயலாத துக்கமே எனக்குப் புரிகிறது. ஆனால் இது எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானதே. உன் கடமைகளைத் தொடர்ந்து செய்” என்று அனுப்பி வைத்தார்.
மரணம் நமக்கு இரண்டு விஷயங்களை சற்று வலிக்கும் படி புரிய வைக்கிறது. ஒன்று மனித வாழ்க்கையின் நிலையின்மை. மற்றொன்று நம் பற்றுகள் தற்காலிகமானவை. மாறிக்கொண்டே இருப்பவை. இடையறாத ஒரு மாயைக்குள் நம்மை ஆழ்த்துபவை. ஆனால் சற்று நேரத்திலேயே மரணம் தந்த பாடம் நமக்கு மறந்து விடுகிறது.
பற்றுகள் நமது பார்வையைக் குறுக்கி விடுகின்றன. பற்றுகளின் எண்ணிக்கையும் இறுக்கமும் அதிகரிக்க அதிகரிக்க நம்
சமநிலை கெடுகிறது. நாம் பற்றியது நம் கை நழுவிப் போய்விடக் கூடாதே என்னும் பதட்டம் அதிகரிக்கிறது. அந்தப் பதட்டமே நாம் பற்றிய உறவுகளுக்கோ சொத்து அல்லது புகழுக்கோ காவலாகத் தாறுமாறாக ஏதேதோ செய்ய வைக்கிறது. இது என்னுடையது என்னும் இறுமாப்பின் இருளிலேயே இருக்க நேரிடுகிறது. உறவுகள் நம்மை நிராகரிக்கும் போது, பொருளை நாம் இழக்கும் போது, புகழ் காலப் போக்கில் மறையும் போது இவை நிலையற்றவை என்னும் விவேகம் மிகுவதில்லை. ஒரு வலியும் துக்கமுமே மிகுகிறது.
அவ்வாறெனில் பந்த பாசங்களே கூடாதா? பொருளிலாருக்கு இவ்வுகில்லை என்றதும் தோன்றிற் புகழொடு தோன்றுக என்றதும் பொய்யா? இல்லை. இது என்னுடையது என்னும் பற்றும் இது நிலைக்கும் என்னும் மயக்கமுமே நம்மை முடக்கிப் போடுகின்றன. பற்றில்லாத பாசம், பற்றில்லாத பொருள், புகழ் நமது காலுக்கு விலங்காக அமையாமல் நம்மை விவேகம் நோக்கி நகர அனுமதிக்கின்றன. ஜென் பதிவுகளில் பற்று விடல் குறித்த தீர்க்கமான செய்தியைக் காண இயலும்.
ஒன்பதாம் நூற்றாண்டின் “பொ சூ ஐ” கவிதைகளை வாசிக்கும் போது அவர் புத்த பிட்சு அல்லர் குடும்ப வாழ்க்கையில் இருந்தவர் என்று தெரிகிறது:
வசந்தகாலப் பனி
——————-
ஒரு பனிக் கிரீடத்தை நான் அணிந்திருக்கிறேன்
காலத்தின் பரிகாசத்துக்குரிய சரிவாய்
முற்றத்தில் படலமாய் பனி
வசந்தத்தின் பளபளக்கும் சுவாசம்
நலங்குன்றிப் படுத்துவிட்டேன்
என் மனைவி மூலிகைத் தேடலில்
குளிரில் உறைந்த என் தலையைச் சீவ
பணிப்பெண்ணுக்காகக் காத்திருக்கிறேன்
உடலே இல்லையேல் புகழால் பயனுண்டா?
உலக வாழ்வுக்கான பொருட்களை
நான் ஒதுக்கி விட்டேன்
சலனமற்ற என் மனதின் முனைப்பு
யாருமற்ற படகிடமிருந்து கற்றுக் கொள்வது
லியூட் (வயலினை விட சற்றே பெரிய இசைக் கருவி)
———————————————————–
எனது ‘லியூட்’ டை சிறிய மேசை மீது
வைத்து விட்டேன்
உணர்வுகளை அசை போட்டு
நான் தியானத்திலிருக்கிறேன்
நான் அதை மீட்டி சுண்டி
இசைக்காத காரணம்?
தென்றல் அதன் தந்திகள்
மீது
லியூட் தானே தன்னை
வாசித்துக் கொள்கிறது
மூங்கில் விடுதியில்
———————-
ஒரு மாலையில் பைன் மரங்களின்
அரவணைப்பில்
இரவில் மூங்கில் விடுதியில்
போதை தரும்
தெள்ளத் தெளிவான வானம்
ஆழ்ந்த தியானத்தில்
மலைப்புரத்து வீட்டிற்குப் போனது போல்
புத்திசாலிகள் அசடுகளை விஞ்ச இயலாது
விரைபவர் மௌனிகளுடன் பொருந்தார்
மெய்வருத்தாமை! (உன்னால் பாதை அமைக்க இயலாது)
அதுவேதான்!
விந்தையின் தலைவாயில்!
யாருமற்ற படகிலிருந்து கற்றுக் கொள்வது என்னும் பதிவு மிகவும் ஆழ்ந்த பொருளுள்ளது. வாழ்க்கைப் பயணத்தில் மனம் பல பயணிகளை ஏற்றிக் கொள்கிறது. இறக்கி விடுகிறது. காற்றின் திசையில் கரை சேருகிறது. அல்லது படகோட்டியின் நோக்கப்படி. யாருமற்று அது காலியாக நிற்கும் போது தான் பயணிகளும் பயணங்களும் இல்லாத ஒரு இருப்பு அதற்கு உண்டு என்பது தெளிவாகிறது. பயணிகள் மீதோ திசைகள் மீதோ இலக்குகள் மீதோ எந்தத் தேர்வும் படகுக்குச் சாத்தியமில்லை. எனவே காலியாய் கரையிலிருப்பதும் நகர்வதும் சுமப்பதும் இவை எல்லாமே ஒன்று தான். பயணிகள் மீதோ திசைகள் மீதோ இலக்குகள் மீதோ பற்றுக்கொள்ள் என்ன இருக்கிறது?
ஜென் பற்றிய புரிதலுக்கு இன்னும் நிறையவே இருக்கிறது. மேலும் வாசிப்போம்.
ஜென் ஒரு புரிதல் – பகுதி 12
சத்யானந்தன்
புற உலகை என்ன செய்வது? கண் விழிப்பதும் இயங்குவதும் ஓய்வதும் எப்போதும் புற உலகு என்னைச் சுற்றித்தானே இருக்கிறது? புற உலகில் நான் ஒட்டிக் கொண்டிருக்கிறேனா? இல்லை அது என்னை எல்லாத் திக்கிலும் வளைத்து இருத்திக் கொண்டிருக்கிறதா? அகத்துள் ஆழ்ந்து ஆன்மீகம் தேடுவது தொடங்கியதா இல்லை தேடலின் சங்கிலித் தொடர் அறுபட்டு நான் தடுமாறி மீண்டும் விட்ட இடத்தில் தொடங்க இயலாது உழல்கிறேனா? புற உலகிலாவது ஒட்டி ஒன்றாக முடிகிறதா? கால் பந்தாகவும் பந்தை உதைக்கும் கால்களாகவும் மனித உறவு மாறும் மாய வித்தையில் புற உலகில் ஒட்டிக் கொள்ள ஏதுமில்லை. உண்மை பொய் மாயை என மூன்றும் ஒன்றாகவும் வெவ்வேறாகவும் தோன்றும் புற உலக வாழ்க்கையை வேடிக்கை பார்க்கும் பக்குவமும் என்னிடம் இல்லை. மருத்துவரிடமும் தையற்காரரிடமும் மட்டும் ஊசி இருந்தால் போதும் என்னும் ஆற்றாமை ஏற்படுமளவு ஒருவரை ஒருவர் உற்சாகமாகக் காயப்படுத்தும் அற்ப விளையாட்டு தொடர்கிறது.
இந்த ஆற்றாமையில் என்னால் தன்னல நோக்கின்றி சமுதாய நோக்குடன் வாழ இயலவில்லை. சமூக நோக்குடன் இயங்க ஒரு மலையளவு மன உறுதியும் தன் மீது வீசப் படும் கற்களை வைத்தே தனது கனவு மாளிகையை எழுப்பும் வீரமும் தேவை என்பது தெள்ளத் தெளிவாகத் தென் படுகிறது. என் மீது சுமத்தப் படும் அடையாளங்களை என்னிடமிருந்து அன்னியப் படுத்தி என் இலக்குடன் மட்டும் என்னை உறவு படுத்திக் கொள்ளும் மனத் திண்மை என்னிடம் இல்லை. ஒவ்வொரு சூழலில் ஒவ்வொரு வசதிக்கென ஒவ்வொரு நிலை எடுத்து வழி காணும் சந்தர்ப்ப வாதம் மட்டுமே புற உலகில் புலன் மற்றும் கௌரவம் தொடப்பான் சுக அனுபங்களுக்கு வழி கோலுகிறது. எந்த சுகத் தேட்டமும் வாய்ப்பும் இல்லாத புற உலக வாழ்க்கையில் எப்படி ஈடுபாடு வரும்? இடையறாத ஈடுபாடும் கவனமும் வேண்டும் புற உலகின் காட்டாற்று வெள்ளத்தில் காணாமற் போகாமல் அதில் நீந்தவும் ஓரிடத்தில் நிலை கொள்ளவும் மீண்டும் நீந்தி முன்னேறவும். இந்த இடையறாப் போராட்டத்திற்கு உற்சாகம் தருவதே புலன் மற்றும் கௌரவம் தொட்ட சுகங்களுக்கான வாய்ப்பே.
புற உலகும் ஆன்மீகத் தேடலுமான இரு துருவங்களை ஜென் பதிவுகள் நமக்கு கோடிட்டுக் காட்டுகின்றன. புற உலகின் மாயையை உணர்ந்தும் அதனுள்ளே இருந்து ஆன்மீகத் தேடலைத் தொடங்கித் தொடரும் மகத்தான பரிணாமம் நிகழாமற் போவதற்குத் தன்னலமும் அதன் பிள்ளைகளான பற்றுகளுமே காரணம். இந்த நோய்க்கான மூலிகை ஒன்றே ஒன்று தான். தேடுபவர் எந்த வழியில் எந்தக் காட்டில் அதைத் தேடுகிறார் என்பது மட்டுமே வேறுபாடு.
ஜென் பதிவுகளில் நமது சிலந்தி வலையின் தன்மையை கவித்துவமான பதிவுகளில் காண்கிறோம். ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘துங்க் ஷன்’னின் பதிவு இது:
வெகு காலமாய் அதை மற்றவர் மூலம் தேடினேன்
_________________________________
வெகு காலமாய் அதை மற்றவர் மூலம் தேடினேன்
நான் அதை அடைவதிலிருந்து மிகத்
தொலைவிலேயே இருந்தேன்
இப்பொழுது நானே போகிறேன்
அதை எல்லா இடங்களிலும் காண்கிறேன்
அது நானே தான் நான் அது அல்ல
இவ்வாறான புரிதலுக்குப் பின்
நான் நானாக இருக்க இயலும்
ஐந்து தரவரிசை பற்றிய பாக்கள்
____________________
காணப்படுவது உண்மைக்குள் அடக்கம்:
மூன்றாம் சாமத்தில் நிலவு உதிக்கும் முன்
நாம் சந்தித்த போது அடையாளம் கண்டு கொள்ளாததில்
வியப்பேதுமில்லை
இன்னும் என் மனதில் நிழலாடும்
கடந்த நாட்களின் அழகு
காண்பதற்குள் உண்மை அடக்கம்:
தூங்கி வழியும் கண்களுடன் ஒரு மூதாட்டி
தன்னை ஒரு நிலைக்கண்ணாடியில்
எதிர்கொள்கிறார்
தனது முகத்தைத் தெளிவாகப் பார்க்கிறார்
ஆனால் அது அவர் போலவே இல்லை
மோசம் அவர் தனது பிம்பத்தை அடையாளம் காண
முயற்சிக்கிறார்
நிஜத்திலிருந்து தொடங்குதல்:
ஒன்றுமின்மைக்குள் ஒரு பாதை உண்டு
உலகின் தூசுகளுக்கு அப்பாற்பட்டு
நம்மை வழி நடத்தும்
ராஜாவின் பெயரை உச்சரிக்கக் கூடாது
என்னும் கண்டிப்பை நீ கடைப்பிடித்தாலும்
முன்னாளில் தன் நாவன்மையால் எல்லா
நாக்குகளையும் மௌனமாக்கியோரின் சாதனையை
விஞ்சி விடுவாய்
பரஸ்பர சங்கமத்தை அடைதல்:
இரண்டு கத்திகள் உரசும் போது
பின்னேறத் தேவையில்லை
நெருப்பிலிருந்து பூக்கும்
தாமரையைப் போன்றவன் வாள் வீச்சில் வல்லோன்
அவனது உற்சாகம் வானுலகை எட்ட வல்லது
ஒற்றுமை எட்டப் பட்டது:
இருப்பது இல்லாதது இவை இரண்டுக்குள்ளுமே
வீழ்ந்து விடாதவனுக்கு நிகராகும்
தைரியம் யாருக்குண்டு?
எல்லா மனிதரும் சாதாரண வாழ்வின் ஒட்டத்திலிருந்து
வெளியேற விரும்புவர்
அவனோ என்னதான் இருந்தாலும்
கரிகளுக்கும் சாம்பருக்கும் இடையே
அமரத்தானே வருகிறான்
ஆசானின் பாடற் குறிப்பு:
எத்தனை முறை “டோக்குன்” மது
மலையிலிருந்து வராமற் போயிருக்கிறது
அவனோ அசட்டு புத்திசாலிகளை
பனியை கொண்டு வரப் பணிக்கிறான்
அதைக் கொண்டு அவர்கள்
கிணற்றை நிரப்புகிறார்கள்
“அது நானே தான். நான் அதுவல்ல” என்பது ஏன்? பனிக்கட்டி, காற்றில் ஈரப்பதம், பனித்துளி, நீராவி, நதி, கடல், ஏரி எனப் பல்விதமாக நிலைகளின் காரணமாகவோ அல்லது சேர்ந்த இடம் காரணமாகவோ தண்ணீர் பல பெயர்களைப் பெறுகிறது. இவை அனைத்தின் மூலக்கூறாகத் தண்ணீர் இவற்றுள் இருக்கிறது. ஆனால் தண்ணீருக்குள் இவை இல்லை. இருப்பதும் இல்லாததும் எந்தப் புள்ளியில் இணைகின்றனவோ அங்கிருந்து தான் ஆன்மீகம் தொடங்குகிறது. ஜென் பற்றி மேலும் வாசிப்போம்.
ஜென் ஒரு புரிதல் – பகுதி 13
சத்யானந்தன்
நிறையவே பேசுகிறோம். பேசுவதற்கு நிறையவே இருக்கிறது. நம் மீது அதிகாரம் செலுத்துபவர், நம் கட்டுப்பாட்டில் இருப்பவராக நாம் கருதுபவர் என்னும் இருவரிடம் எண்ணிக்கையில் அதிகமான அளவு பேசுகிறோம். நமது அச்சத்திலும், இரண்டாம் நபரை பயமுறுத்தவும் நீண்ட நேரம் பேசுகிறோம். போட்டியிட்டு ஒரு வாய்ப்பை வென்றெடுக்கவும், போராடி ஒரு வசதியைத் தக்க வைத்துக் கொள்ளவும், குற்றம் சாட்டவும், தன்னிலையை விளக்கவும் என புறவுலகில் நம் நிலைப்பே பேச்சில் தான் இருக்கிறது.
எப்போது பேச வேண்டும், எதைப் பேச வேண்டும், எப்படிப் பேச வேண்டும், யாரிடம் பேச வேண்டும், எவ்வளவு நேரம் எந்த நேரம் என்பதெல்லாம் அத்துப் படியானவர், இதையே ஒரு கலையாக வளர்த்தெடுத்தவர் புறவுலகில் மிகவும் வெற்றி பெறுகிறார். விற்பதற்கோ வாங்குவதற்கோ எதாவது இருந்து கொண்டே இருக்கிறது. எதை என்ன விலைக்கு என்பது முடிவில்லாத கேள்வி. “கடை விரித்தேன். கொள்வாரில்லை” என்னும் வள்ளலாரின் பதிவு மிகவும் ஆழ்ந்த பொருளுள்ளது.
மின்னணுப் பரிமாற்றத்தில் இவை எல்லாம் ஆவணமாக வேறு ஆகிவிடுகின்றன. விற்க எதுவுமில்லாமல் நேயத்துடன் என்னை யாரும் அணுகினாரா? நான் கவனித்ததே இல்லை. என் கவனமும் கவனமின்மையும் என் தரப்பு வசதிகளை ஒட்டியவை. கலை, எழுத்து, சமூகம் உய்வது மற்றும் மனித வாழ்க்கையின் சூட்சமம் பற்றிய பதிவுகள் எனக்குத் தேவையற்றவை.
மெளனம் பேசாமலிருப்பது இவை இரண்டும் ஒன்றே என்பது மிகவும் தவறான புரிதல். சொற்கள் இல்லாத, சொற்களுக்கு அப்பாற்பட்ட ஒரு சூனியத்தில் ஒன்ற இயலும். அப்படி ஒன்றினால் அது மெளனம். ஓயாமல் மனம் சொற்களை அசை போடும் நிஜ வாழ்க்கையில் மெளனம் என்ற ஒன்று அன்னியமானது.
ஆன்மீகத்தின் அத்தனையையும் உள்ளடக்கிய ஒரு கருவூலம் உண்டு என்றால் அது மெளனமே. அந்த மெளனத்தில் ஒன்றும் தாகமும் தேடலும் வாய்க்க வேண்டும். பிரசவ வைராக்கியம், மசான வைராக்கியம் போல புறவுலகில் அடிபடும் போது வாழ்க்கையின் நிலையின்மை பற்றிப் பேசுவதும், வாழ்த்தும், வாய்ப்பும் வசதியும் கிடைத்தால் ஆர்ப்பரிப்பதும் ஆன்மீீகமாகாது.
இருள் நீங்கியதும் ஒளிதான். ஒளியில் ஓசையில்லை. உள்ளொளியின் அடையாளமும் அதுவே.
“ஹங்க் சிஹ் செங்க் சூ” என்பவரின் (பதினோராம் நூற்றாண்டு) ” மௌன ஒளி வெள்ளம்” என்னும் கவிதையின் ஒரு பகுதியே இது:
முடிவற்ற யுகங்கள்
ஒன்றுமின்மையில் கரையும்
இந்த ஒளி வெள்ளத்தில்
தொடர்ந்து முயன்றதெல்லாம்
மறந்து போகும்
இந்த அதிசயம் எங்கே இருக்கிறது?
பிரகாசமும் தெளிவும்
குழப்பங்களைப் போக்கும்
எழுவாயும் செயப்படு பொருளும்
ஒன்றை ஒன்று பாதிக்கின்றன
ஒளியும் இருளும் ஒன்றை ஒன்று
சார்ந்துள்ளன
ஆதரவென்று நம்ப
உலகுமில்லை மனமுமில்லை
ஆனால் இரண்டும் பரஸ்பரம் உரையாடுகின்றன
சரியான கருத்துக்கள் என்னும் மருந்தை அருந்து
விஷம் தடவிய மேளத்தை அடி
மௌனமும் ஒளி வெள்ளமும் முழுமையான பின்
கொல்வதா உயிர்ப்பிப்பதா
என்பது என் தேர்வாக இருக்கும்
இறுதியாக கதவு திறந்து
ஒன்று வெளிப்படுகிறது
கிளையில் காய் கனிந்து விட்டது
இந்த மௌனமே
இறுதிப் போதனை
இவ்வொளிவெள்ளமே பிரபஞ்சத்தின்
பதிலாகும்
யத்தனமில்லாத பதில் அது
காதுகள் வழியாகக் கிடைப்பதில்லை
இந்த போதனை
பிரபஞ்சம் முழுதும் யாவும்
ஒளியைத் தந்து
தர்மமே பேசுகின்றன
ஒன்றுக்கு ஓன்று சாட்சி கூறும்
ஒன்றின் கேள்விக்கு மற்றொன்று
விடை கூறும்
இசைவான பரிமாற்றம்
பரஸ்பரம் சாட்சி கூறுவதும்
பதில் அளிப்பதும்
சாந்தி இல்லாத ஒளிர்வில்
பேதங்கள் தென்படும்
அப்போது சாட்சி கூறுவதும்
விடையளிப்பதும்
ஒருமைப்பாடின்மைக்கே வழி கோலும்
சாந்திக்குள் ஒளி மறைந்ததெனில்
எல்லாமே வீணாகும்
இரண்டாம் பட்சமாகும்
மெளன வெளிச்சம் பூரணமடையும் போது
தாமரை மலரும்
கனவு காண்பவன் விழித்துக் கொள்வான்
நூறு நதிகள் ஆழ்கடல் நோக்கி பிரவாகிக்கும்
ஆயிரம் மலைகள் சிகரம் நோக்கி எழுந்துயரும்
மெளன ஒளி பூரணத்தை அடையும் போது
பாலை நீரினின்று பிரித்து அருந்தும் அன்னம் போலவும்
மதுவைத் தேடும் இடையறாச் சுறுசுறுப்பான தேனீ போலவும்
எனது பிரிவின் அசல் பாரம்பரியத்தை மேற்கொண்டு செல்கிறேன்
இந்த சாதனைக்கு மெளன ஒளி என்று பெயர்
அது அறுதியான ஆழ்நிலையினின்று
துளைத்து ஊடுருவி
ஆகச்சிறந்த உச்சத்தை எட்டும்
ஜென் ஒரு புரிதல் – பகுதி-14
சத்யானந்தன்
இரு நண்பர்கள். இருவரில் யார் அதிக சுயநலவாதி என்று சொல்வது கடினம். அவர்கள் ஊர் மலைகளுக்கும் காடுகளுக்கும் நடுவே இருந்தது. காட்டின் நடுவே செல்லும் ஒரு நதிக்கரையில் ஒரு நாள் பகலில் இருவரும் உலாவிக் கொண்டிருந்தார்கள். நதி நல்ல வேகத்துடன் பாய்ந்து கொண்டிருந்தது. நதியில் ஒரு பெரிய கம்பளி நூல் மூட்டை மிதந்து சென்று கொண்டிருந்தது. மலை மேல் செம்மறி ஆடுகள் நிறைய உண்டு. யாரோ ஒரு ஆட்டுக்காரரின் நூல் மூட்டை தவ்றி நதியில் விழுந்து விட்டது என்று இருவருமே எண்ணினர். ஆனால் ஒரு கணத்துக்குள் இருவருள் ஒருவன் குதித்து மூட்டையைப் பற்றினான். இரண்டாமவன் முதலில் அதிர்ச்சி அடைந்தாலும் பின்னர் சுதாரித்துக் கொண்டு கரையில் ஒரு குறுக்கு வழியில் ஓடினான். நதி ஒரு இடத்தில் வளையும். அங்கே எப்படியும் அவன் கரை சேர்ந்தாக வேண்டும். அங்கே மூட்டையை ஊர் வரை கொண்டு வர உதவுவேன் ஒரு பங்கு எனக்கும் தா என்று கேட்க முடிவு செய்தான்.
அவன் பார்த்த காட்சியில் முதலாமவன் நதி வளையும் திருப்பத்தில் நதிவரை நீண்டிருந்த ஒரு கிளையைப் பற்றிக் கொண்டிருப்பது தெரிந்தது. அவனது தலையும் மரக்கிளையைப் பற்றிய ஒரு கையும் மட்டுமே தண்ணீருக்கு வெளியே தென் பட்டன. மூட்டை நதி வெள்ள வேகத்தில் அவனுக்கு முன்னே இருந்து அவனை இழுத்துக் கொண்டிருந்தது. எந்தக் கணமும் அவன் மூட்டையுடன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப் படுவான் என்றே தோன்றியது. “அந்த மூட்டையை விட்டுவிடு. இல்லையேல் ஆபத்து” என்று கத்தி குரல் கொடுத்தான் இரண்டாமவன். ” அது கம்பளி மூட்டையில்லை. கரடி. நான் அதைப் பிடித்துக் கொண்டிருக்கவில்லை. அது தான் என்னைப் பிடித்துக் கொண்டிருக்கிறது” என்று பதிலளித்தான் முதலாமாவன். இரண்டாமவன் அவன்ருகே சென்று அவனைப் பிடித்து கரையில் இழுக்க முயன்றான். மறுபக்கம் கரடி இழுத்தது. இறுதியில் கரடி அவனை இழுத்துச் சென்று விட்டது.
இந்தக் கதையில் வரும் கரடி போல எண்ணங்களில் என் பிடிப்பே இல்லை. எப்போதும் அவை தானாகவே என்னை ஆக்கிரமிக்கின்றன். நேர்மறையானவையும் மாறானவையுமாக எண்ணங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. சிறிதும் பெரிதுமாக அச்சங்கள் என்னை வேறு எதிலும் கவனம் கொள்ள விடாமல் கடத்திக் கொண்டு போய் விடுகின்றன.
எண்ணங்களின் மூலம் நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட நிகழ்வுகளில் தொடங்கி இன்று என் அருகில் உள்ள என்னை பாதிக்கும் நபர்கள் மற்றும் சூழல்கள் வரை நீள்கிறது. எனக்கு நிகழ்பவை என் மரபணு ரீதியான இயல்புகளின் வழியேயும் அதே சமயம் தற்காலத்தில் மற்றவர் கண்ணோட்டம் இது என்னும் அணுகுமுறையிலும் இரு விதமாக என்னால் எதிர்கொள்ளப் படுகின்றன. எண்ணங்களின் சங்கிலி என்னைக் கட்டி இழுத்துக் கொண்டே போகிறது. பதிமூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த டொகென்னின் கவிதைகள் இந்த சங்கிலித் தொடரைத் தொற்றிக் கொள்ளாதே என்கின்றன
மனமே புத்தர்
—————–
மனமே புத்தர் –
விளக்குவது எளிது
வாழ்ந்து காட்டுவது கடினம்
மனமில்லையேல் புத்தரில்லை
இவ்வழி செல்வது எளிது
விளக்குவது கடினம்
அனைத்திற்கும் அப்பாற்பட்டு
எதிர்காலத்தில் புத்தராக முயலாதே
உன் முனைப்பெல்லாம்
எண்ணத்தின் பின் எண்ணம் கண்ணிகளாகும்
தொடர் சங்கிலியைத் தொற்றிக் கொண்டிருப்பதைத்
தவிர்ப்பதாக இருக்க வேண்டும்
மழைத்துளியின் சத்தம்
————————-
மனம் விடுபட்டதால்
இலைகளினின்று சிந்தும்
மழைத்துளியின் ஓசையைக்
கேட்கும் போது
அம்மழைத்துளிகள்
என்னுள் ஒன்றாயின
வருவது அல்லது போவது
——————————–
இடம் பெயரும் பறவை
எந்தத் தடயத்தையும்
விட்டுச் செல்வதில்லை
அதற்கு ஒரு வழிகாட்டியும்
தேவையில்லை
நிலையின்மை
——————-
உலகை நான் எதனோடு
ஒப்பிடவேண்டும்?
காட்டுப் பூச்செடியிலிருந்து
சிந்தும் பனித்துளியில்
பிரதிபலிக்கும்
நிலவொளியுடன்
நீரோடையில்
——————–
நீரோடையை விரைந்து
கடந்து
தூசிகள் மிகுந்த உலகை நோக்கிச்
விரையும் என் வடிவம்
எந்த பிம்பத்தையும்
வீழ்த்துவதில்லை
சிக்குண்ட தலைமுடி போல
———————————-
சிக்குண்ட தலைமுடி போல
தொடக்கமும் முடிவுமான சுழற்சி
மாயை
சிக்குகளை நேராக்கியபின்
ஒரு கனவாக இருப்பதில்லை
இந்த கனவு போன்ற நிலப்பரப்பில்
———————————————
இந்த கனவு போன்ற நிலப்பரப்பில்
என் தடங்களைத் திரும்பிப் பார்க்காது
நான் நகரும் போது
ஒரு மைனாவின் பாட்டு என்னைத்
திரும்பி வீடு வந்து சேர அழைக்கும்
என்னை அழைத்தது யார் என
நான் திரும்பிப் பார்ப்பேன்
நான் எங்கே போகிறேன் என்று
என்னைக் கேட்காதீர்கள்
எல்லையில்லா இவ்வுலகில் என்
பயணத்தில் நான் எடுத்து வைக்கும்
ஒவ்வொரு அடியும் என் வீடே
உண்மையான ஒருவன் உலகின்
———————————-
பத்து பகுதியிலும் தென்படுவான்
—————————————-
உண்மையான மனிதன் ஒரு
குறிப்பிட்ட நபர் ஆகான்
முடிவற்ற வானின் ஆழ்ந்த
நீல நிறம் போல
அவன் ஒவ்வொருவராகவும்
எங்கெங்கும் தென்படுகிறான்
வியப்பளிக்கும் நிர்வாண மனம்
———————————
ஏனெனில் எங்கள் அசல் வீட்டு
மலர்கள் வாடுவதே இல்லை
வசந்தம் வரலாம் போகலாம்
ஆனால் அப்பூக்களின் நிறம்
மங்காது
வழிபாடு
———–
பனிவெளியில்
மறைந்திருக்கும்
ஒரு வெள்ளைக் கொக்கு
பனியின் கீழுள்ள புற்களும்
தென்படாது
என் வாழ்க்கை என்று தொடங்கி மனித வாழ்க்கை என்று புரிந்து பிரபஞ்ச இயங்குதல் என விரியும் கண்ணோட்டம் ஜென் வழி நமக்கு நிகழக் கூடும். மேலும் வாசிப்போம்.
ஜென் ஒரு புரிதல் பகுதி – 15
சத்யானந்தன்
கூண்டிலிருந்த ஒரு கிளி விடுதலையாக புத்தர் எப்படி வழி வகுத்துக் கொடுத்தார் என்பது பற்றி ஒரு புராணக் கதை உண்டு. ஷென் குவாங்க் என்னும் துறவியைத் தான் முதன் முதலாக புத்தர் சீன தேசத்தில் சந்தித்தார். அப்போது தொடக்கத்திலேயே ஷென் கோபப் பட்டு புத்தரின் கேள்விகளால் எரிச்சலுற்று ஒரு சங்கிலியால் புத்தரின் முகத்தில் அடிக்க புத்தரின் பற்கள் விழுந்து விட்டன. (பின்னாளில் ஷென் அவரது சீடரானார்) புத்தர் அங்கிருந்து வெளியேறி ஒரு கோயிலின் மதிலை நோக்கியபடியே ஒன்பது ஆண்டுகளைக் கழித்ததாக ஒரு நம்பிக்கை. அந்தக் கோயிலுக்கு வெளியே ஒரு கிளி கூண்டில் அடைபட்டிருந்தது. அந்தக் கிளி “என்னால் இந்தக் கூண்டைவிட்டு வெளியேற முடியவில்லையே” என்று கூறிய படியே இருந்தது. அப்போது புத்தர் ” உன் கால்களை விரைப்பாக்கி, கண்களை மூடிக் கொள். இதுவே கூண்டிலிருந்து வெளியேறும் வழி” என்றார். மாதக் கணக்கில் கூண்டிலிருந்த கிளி எதையும் செய்யத் தயாராயிருந்தது. அது அவ்வாறே தனது கண்கள் மூடிய நிலையில் கால்களை விரைப்பாக்கி அப்படியே படுத்து விட்டது. மாலையில் கிளியைப் பிடித்து வைத்திருந்தவன் வந்தான். அவன் கிளியின் நிலை கண்டு கண் கலங்கினான். ஆசையாய் வளர்த்த கிளி செத்து விட்டதே என வருந்தினான். அதைக் கையிலெடுக்கும் போது அதன் உடல் சில்லிடாமல் சற்றே உஷ்ணமாக இருந்ததால் அதை காற்றோட்டமாக வீட்டுத் திண்ணையில் வைத்து இப்படியும் அப்படியும் அசைத்துக் காத்திருந்தான். கிளி கண் விழித்தது. சிறகுகளை அசைத்தது. உடனே பறந்து சென்று விட்டது.
மனம் மற்றும் புலன்கள் இவற்றின் வாயிலாக நாம் அடையும் அனுபவங்கள் அனைத்தும் மாயைகள் – ஏனெனில் இவை நிகழ்கிற அல்லது நிகழப் போகிற ஒன்றால் கிளர்ந்து ஒருவருக்கு உள்ளே மட்டும் ஒரு நாடகத்தை அரங்கேற்றுகின்றன. அதே சமயம் இந்த மாயை புற உலகைப் பொருத்த அளவில் உண்மை. மனம் புலன்கள் மற்றும் உடல் என்னும் சிறையிலிருந்து வெளி வர கிளி போலவே மரணமே நிகழ்ந்தது போல் எண்ணங்கள் ஏதுமற்று வெறும் சுவாசம் மட்டும் நிகழும் ஒரு யோக நிலை உண்டு. இந்த உடல் நானில்லை- புலன்களும் மனமும் அரங்கேற்றும் நாடகம்- இவை அனைவரையுமே சிறைப்படுத்தும் கூண்டு போன்றவை என்னும் தெளிவே விழிப்பு. இந்த விழிப்பே ஆன்மீகத் தேடலில் மனம் ஒன்ற வழி வகுக்கும். இந்தத் தேடலின் ஏதோ ஒரு அபூர்வ கணத்தில் ஆத்ம தரிசனம் நிகழக் கூடும். அப்போது எப்படிப் பட்ட அனுபவம் இருக்கும்? இதைக் கவிதையில் வடிக்க முடியுமா? பதிமூன்று மற்றும் பதினாங்காம் நூற்றாண்டில் “மியுஸோ ஸொஸெகி” யின் கவிதைகளில் “புத்தரின் ஸடோரி” என்னும் கவிதையில் இதற்கான முயற்சியைக் காண்கிறோம். பல நூற்றாண்டுகளுக்கும் முன்னே புதுக்கவிதை என்னும் நுட்பத்துடன் எழுதப்பட்டிருப்பவை வியப்பளிக்கின்றன.
“நச்சி கனான்” (ஜப்பானியக் கோயில்) மண்டபத்தில்
————————————————————
பால் வண்ண அண்டப் பெரு வழி
மனித உலகின் மீது
நீர் வீழ்ச்சி போல் ஒளியை ஊற்றும்
அவிலோகிடேஷ்வரரை (பௌத்த குரு) வணங்கச் சரியும்
சரிந்து வீழும் அவ்வொளி வீழ்ச்சியின் ஒலியை
கேட்கும் கொடுப்பினை என் பேறு
உலகிற்கு அப்பால்
———————
அடர்ந்த காட்டில்
வரப்புகளில்லை
கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு
எதுவுமில்லை
இதன் இடைப்பட்டு தனியே
ஒரு மரத்தை அடையாளம் காணுவது கடினம்
தலையைத் திருப்பி ஒவ்வொரு
திசைக்கு அப்பாலும்
நோக்கும் போது
முதன்முறையாக உன் கண்கள்
உன்னை ஏமாற்றி
வந்திருப்பதை அறிவாய்
புத்தரின் ஸடோரி (ஆத்ம தரிசனம்)
—————————————
ஆறு வருடங்கள்
தனியே மூங்கிற் புதரின் கீழே
அமர்ந்து
பனியைத் தவிர குடும்பம்
ஏதுமற்ற பனிமலையில்
நேற்றிரவு
வான் வெளி தூளாவதைக்கண்டு
விடிவெள்ளியைத் தட்டி எழுப்பி அதைத்
தன் கண்களில் பதித்துக்
கொண்டான்
தெளிவான பள்ளத்தாக்கு
—————————–
(ஆறாவது குரு என்று அவர் குறிப்பிடுவது ஹ்யுனெங்க் என்பவர். அவர் சித்தி அல்லது ஆத்ம தரிசனம் பற்றி நிகழ்த்திய உரைகளையே இவர் குறிப்பிடுகிறார்)
ஒரு குச்சியால் கலக்கி விட முடியாத
நீர்நிலை
ஆழத்தை விட ஆழமானது
வானும் நீரும்
ஒரே ஆழும் நீலமாகும்
ஆறாவது குருவின்
சொற் பெருக்கின்
மூலத்தை நீ அடைய விரும்பினால்
நதியின் இக்கரையிலோ
மறு கரையிலோ
மையத்திலோ தேடாதே
“ஹ்யுனெங்க்” கின் சுனை
—————————–
“ஹ்யுனெங்க்” கின் தர்மம் என்னும்
நீரூற்று வற்றாதது
அது இப்போதும் பிரவாகிக்கிறது
அதனின்று தெறித்த
ஓரு துளி விரிந்தும் ஆழ்ந்தும்
பரவியது
விளிம்பிலுள்ள அலங்காரங்களிலும்
அதைச் சுற்றியுள்ள சுவரிலும்
சிக்கிக் கொள்ளாதே
நடு சாமத்தில்
நிலவு சுனையின் மையத்தில்
வீழ்ந்து ஒளிரும்
ஒப்பற்ற பாக்களின் பள்ளத்தாக்கு
————————————–
ஓடையிலிருந்து ஒலிகள்
புத்தரின் பாக்களாகத்
தெறிக்கின்றன
ஆழ்ந்த உட்பொருளை
ஒருவரின் உதடுகள் மட்டுமே
உச்சரிக்கும் என்று சொல்லாதே
இரவும் பகலும்
எண்பதாயிரம் கவிதைகள்
ஒன்றன் பின் ஒன்றாக உதிக்கின்றன
உண்மையில்
ஒரு வார்த்தை கூட
உச்சரிக்கப் படவில்லை
முடிவுப்புள்ளி இல்லை
————————–
(நம் நம்பிக்கையின் படி யானையின் காலை முதலை பற்றியதும் யானையின் கூக்குரல் கேட்டு விஷ்ணுவின் சக்கரம் வந்து யானையைக் காப்பாற்றியது. பௌத்தத்தில் அது கருடன் வந்து காப்பாற்றியதாக உள்ளது. 2. இந்தக் கவிதையில் அவர் குறிப்பிடும் தாமரை விஷ்ணுவின் நாபி கமலத்தில் உள்ளது)
முழு உலகமும் தெளிந்து ஏதுமற்றதாய்
பத்து திக்குகளிலும்
முடிவுப்புள்ளியே இல்லை
இருந்தாலும்
கவனம் கூர்ந்தால் ஒன்றே ஒன்று உள்ளது
நாம் பின்னோக்கிப் பார்க்கும் போது
பிரம்மாண்ட கருடனின் மீது பறந்தபடி
உலகை விட்டு வெளியேறினோம்
தாமரையின் குழிவினைத் தொட்டு
தண்டின் ஆழத்தில்
வானும் மண்ணும் என்றுமே
பிரியாத இடத்தில் வாழவென
தொன்மையான நதி
————————
(டிராகன் என்பது சீன நம்பிக்கையின் படி
உயர்ந்த ஒல்லியான ஒரு மிருகம். நீண்ட
குஞ்சங்கள் போன்ற வடிவில்
தலையைச் சுற்றி ஏகப் பட்டவை இருக்க
நெருப்பைக் கக்கும்)
எல்லோரது ஞாபகங்களையும் விஞ்சி
தொன்று தொட்டு
தெள்ளியதாய் வெள்ளி போலப்
பிரகாசிப்பதாய்
நிலவொளி ஊடுருவியதின்
காற்று உலுக்கியதின்
எந்தச் சுவடும் அதன் மேல் இல்லை
இன்று இந்த ஆற்றுப்
படுகையின் ரகசியத்தை வெளிக்
கொணரத் துணிய மாட்டேன்
ஆனால் அது ஒரு சுருண்டிருக்கும்
நீல டிராகன்
பனித் தோட்டம்
——————-
(ஷென் குவாங்க் என்னும் குரு பற்றி தொடக்கத்தில் குறிப்பிட்டோம்)
ஆறு இதழுள்ள பூக்கள்
நிலமெங்கும் தெனபடும்
உறைந்தனவாய்
சொர்க்கமும் பூமியும்
இந்தத் தூய நிறத்துக்குள்
கலந்து மறைந்தன
“பைன்” மரமும் “செடர்” மரமும்
கற்படிக்கட்டுகள் அருகே
இன்றும் பசுமையாய் நிற்கின்றன
ஷென் குவாங்க்
பெரிய கப்பல் போன்ற மனத்தை
நழுவ விட்டிருக்க வேண்டும்
அமர ஜோதியின் ஆலயம்
—————————–
மலைத்தொடர்
தண்ணீருக்குள் தென்படும் கற்கள்
இவை யாவுமே
விசித்திரமானவை அபூர்வமானவை
இந்த அழகான நிலப்பரப்பு
அதைப் போன்றவர்களுக்கே சொந்தமானது
இதை நாம் அறிவோம்
மேலுலகங்களும் கீழுலகமும் ஒன்றே
தூசியின் ஒரு துகள் கூட இல்லை
அமைதியும் பூரண ஞானச் சேர்க்கையுமே உள்ளன
பிரபஞ்ச ஒளியின் தலைவாயில்
———————————–
(இந்தக் கவிதையில் குறிப்பிடப் படும் சுதானா பாஞ்சால நாட்டு இளவரசன். அவன் ஞானம் தேடி ஜப்பான் சென்றதாகவும் ஒரு மாயக் கோவிலின் கதவுகள் திறந்து அவனுக்கு ஞானம் கிடைத்ததாகவும் பௌத்த நம்பிக்கை)
பரிவின் மகோன்னதமான ஒளி
இவ்வுலகின் ஒவ்வொரு பகுதியையும்
ஒளிமயமாக்கும்
ஒரு சிறுவனாக சுதானா
கதவுகள் திறக்கக் காத்திருந்தான்
வெற்றுலகு உன் பார்வைக்கு
அகப்படுமென்றால்
அவனுக்குத் திறந்து வழிவிட்ட
கதவுகள் அதே போல
உன் விரல் பட்டதும் திறக்கும்
ஒகி-நொ-கெ (ஸடோரி கவிதை)
————————————-
வருடக் கணக்கில்
நான் நிலத்தைத் தோண்டினேன்
நீல வானைத் தேடி எடுக்கவென
தோண்டத் தோண்ட புழுதி
கிளம்பி என் மூச்சை அடைத்தே பலன்
ஒரு நாள் பின்னிரவில்
ஒரு உடைந்த செங்கல் தட்டுப் பட்டது
அதை உதைத்துக் காற்றில் வீசினேன்
என்னையுமறியாமல் நான்
வெற்று வானின் எலும்புகளை
நொறுக்கி விட்டதைக் கண்டேன்
ஜென் ஒரு புரிதல் – பகுதி -16
சத்யானந்தன்
யானை எப்போதுமே வியப்பளிப்பது. அதன் பிரம்மாண்டமான தோற்றம், அதன் மிக வித்தியாசமான உடல் அமைப்பு, அதன் அசைவில் தென்படும் அழகு இவை அதன் உடல் சம்பந்தப் பட்டவை. அது ஒரு பாகனிடம் அடங்கி நடப்பது தான் இதை விடவும் ஆச்சரியத்தை ஏற்படுத்துவது. இன்னும் சுருங்கச் சொல்ல வேண்டுமெனில் யானை வளர்ப்பு மிருகங்களில் ஒன்றாயிருப்பதே அதியசயமாய்த் தோன்றும் எப்போதும். இயந்திரங்கள் வரும் முன் யானை கடுமையான பளுவை கையாளுவதில் முக்கியப் பங்கு வகித்தது. இடும் சிறு சிறு பணிகளைச் செய்வதிலோ அல்லது
போர்க்களம் போன்ற அச்சமும், காயமும் ஏற்படுத்தும் சூழலில் கூட அது எஜமானனின் பக்கமிருக்கத் தவறுவதில்லை. மனிதனின் வழிபாடு , கொண்டாட்டம் எல்லாமே யானைக்கு அத்துப்படி.
யானை பலம் என்னும் ஒரு உருவகம் இருக்கிறது. அது எவ்வளவு தூரம் சரியானது? கேள்வியை மாற்றினால் தெளிவாக இருக்கும். யானை தன் பலத்தை அறிந்துள்ளதுவா? பலம் என்பது தனது பலவீனங்கள் தனது பலத்தை வீணடித்து விடாமல் காத்து பலத்தை உணர்ந்து தேவையான இடத்தில் பிரயோகிப்பது என்னும் அடிப்படையில் யானை பலமானதா? அந்த அணுகுமுறையில் யானை பலமானது இல்லை என்றே கொள்ள வேண்டும். அவ்வாறெனில் யானையின் தோற்றமே நம் கண்ணோட்டத்தைத் தீர்மானித்தது. அதன் உண்மை நிலை அல்ல. இல்லையா? தோற்றம் அல்லது உருவம் மற்றும் செயற்பாடு பொருந்த வேண்டிய கட்டாயமில்லை என்பதற்கு மட்டுமல்ல யானை உதாரணம். தோற்றம் மற்றும் செயற்பாடு குறித்து நம்முள் ஆழ்ந்த பிரமை உள்ளது என்பதற்கும் யானையே சான்று.
கல்லின் மீது நான் இடறினேன் என்று சொல்லாமல் கல் என் மீது இடறியது என்று சொல்லுவது நம் பழக்கம். நமது பிரமைகளை நாம் மாயை என்று பெயரிடுவதும் அவ்வாறானதே. தோற்றங்களும் செயற்பாடும் தொடர்புடையவையே அல்லது பொருந்துபவையே என்னும் நமது கண்ணோட்டம் பல பிரமைகள் அல்லது சான்றில்லா தருக்கங்களுக்கு வழிகோலி விட்டன. ஜென் பற்றிய புரிதலில் மிக முக்கியமானது பிரமைகள் நம் அவதானிப்புகளை நீர்க்கடித்து விடுகின்றன என்பதே. இதனால் உண்மையின் அருகாமைக்கு நேரெதிர் திசையில் செல்வது நம் வழக்கமாகி விடுகிறது.
எல்லா துக்கங்களின் மற்றும் மறுபக்கம் கொண்டாட்டங்களின் அடிப்படை பிரமைகளே. மாயை நம்மைச் சூழ்ந்திருக்கவில்லை. நம் கண்ணை மறைக்கவில்லை. நாம் மாயையின் மடியில் நிம்மதி காண்கிறோம். நல்லது கெட்டது, உகந்தது பாதகமானது, பிடித்தது பிடிக்காதது, எனது அன்னியமானது என இருமைகளில் சிக்கித் தவிக்க மாயை துணையாகிறது. விடுதலை என்பது இருமைகளின்றும் மாயையினின்றும் மட்டுமே. தோற்றம் மற்றும் செயற்பாடு பற்றி துளிர் தேயிலையின் உதாரணத்தைச் சொல்லும் பதினான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜகுஷிட்சுவின் கவிதை மிக நுட்பமானது:
தேயிலை சேகரித்தல்
————————
கிளையின் முடிவையும்
இலையின் கீழ்ப்பகுதியையும்
கூர்ந்து அவதானி
பரவும் அதன் மணம்
தூரத்தில் இருக்கும்
மக்களை வசீகரிக்கும்
தோற்றம் மற்றும் செயற்பாட்டு
அதிகார விளிம்பிற்குள்
அது அடைபடாது
“மார்க் ட்வைனி”ன் ‘டாம் ஸாயரின் சாகசங்கள்’ என்னும் நாவல் மிகவும் நேர்த்தியானது. நாவலுக்கு உரிய பல அம்சங்கள் அதில் பொருந்தி இருப்பதைக் காண இயலும். “டாம் ஸாயர் வேலிக்கு வெள்ளையடிக்கிறான்” என்னும் அத்தியாயம் மிக சுவையானது. அவனது சேட்டைகளால் கோபமான அவனது அத்தை (அவளது பொறுப்பில் தான் அவன் வளர்கிறான்) அவனை ஒரு ஞாயிறு காலை வேலிக்கு வெள்ளை அடிக்கச் சொல்லி விடுகிறாள். டாமை விளையாடுவதற்கு என அவனது நண்பர்கள் அழைக்கிறார்கள். அவன் தனது நண்பர்கள் அழைக்க, கவனிக்க நேரம் இல்லாதது போல மிகவும் ஈடுபாட்டுடன் ஆர்வமாக அந்த வேலையைச் செய்வது போல் பாவனை செய்கிறான். அவனது நண்பர்கள் சற்று நேரம் அதை கவனித்துப் பிறகு தாங்களும் அதைச் செய்யலாமா என்று கோருகிறார்கள். மிகவும் தயங்குவது போல் பாவனை செய்து அவர்களையும் டாம் அதில் ஈடுபடுத்தி தன் வேலையைச் சுளுவாக்கிக் கொள்வதுடன் அவர்கள் தன்னைத் தவிர்த்து விட்டு விளையாடாது இருப்பதையும் உறுதி செய்து விடுகிறான்.
நமது முன்னுரிமைகள் பற்றிய அங்கதம் வெளிப்படும் அத்தியாயம் இது. நமது அடையாளம் மற்றவர் மனதில் நம்மைப் பற்றி உள்ள பிம்பம் தொடர்பானதே என்னும் அடிப்படை மனோபாவம் நம்முள் ஆழ வேரூன்றி இருக்கிறது. நாம் மேற் கொள்ளும் பணிகள் அல்லது தொழிலை இதுவே நிர்ணயிக்கிறது. தோற்றம் முதலாவதாகவும் பணி இரண்டாமிடத்திலும் இருக்க இரண்டும் பொருந்தி இருப்பதே நமக்கு ஆறுதல் தருகிறது. தனித்த அடையாளம் எனக்கு இல்லை. தனித்துவம் மிக்க புரிதல் எதைப் பற்றியுமே எனக்கு இல்லை என்று நாம் பிரகடனம் செய்தது போல ஒரு வாழ்க்கையை காலம் தள்ளுவது போல் வாழ்கிறோம். இதை உதறித் தள்ளிய தேடல் மட்டுமே ஆன்மீகத்தில் ஒரு நல்ல தொடக்கமாக இருக்க இயலும்.
ஜென் ஒரு புரிதல் -17
சத்யானந்தன்
“நெஞ்சுக்குள்ளே இருக்குது உப்புக்கண்டம்; நெருப்புக் கண்ட இடத்திலே சுட்டுத் தின்னு”. இது தென் தமிழ் நாட்டில் உள்ள சொலவடைகளில் ஒன்று. இங்கே உப்புக் கண்டம் என்பது உணவுப் பொருள் அல்ல. ஒரு படிமம். “ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம் உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும்”, “பனை மரத்துல ஏறுகிறவனை எட்டின வரைக்குந்தான் தாங்க இயலும்” , ” அவன் பேனையும் எடுப்பான்; காதையும் அறுப்பான்”, “அம்மா பாடு அம்மணம்; கும்பகோணத்திலே கோதானம்”,”தென்னை மரத்தில தேள் கொட்டிச்சாம்; பனை மரத்தில அண்டக் கட்டிச்சாம்”, குதிரைக்கு வடக்கே பயணம்; ராவுத்தருக்குத் தெக்கே பயணம்” , நந்தவனமே அழிஞ்சு போச்சு; கழுதை மேஞ்சா என்ன? குதிரை மேஞ்சா என்ன?”
– இப்படி எளிய அன்றாட வாழ்விலுள்ள பல படிமங்களை சொலவடைகளில், பழமொழிகளில், புதுக்கவிதைகளில், சிறுகதைகளில் நாம் காண்கிறோம். புதுமைப்பித்தனின் கயிற்றரவில் வரும் கயிறு ஒரு உதாரணம்.
இப்படிப் படிமங்களாலேயே புரிய வைக்கிற ஒரு பாரம்பரியம் சீனத்தில் ஜென்னுக்கு முன்பே உண்டு. ஜென் மாணவர்களை ஆசிரியர்கள் படிமங்களை வைத்தே பரிட்சை செய்தார்கள். இத்தகைய கேள்விகள், புதிர்கள், இவை தொடர்பான சிறு உரைகள், கவிதைகள் “கோன்” (k?an ) என்றே அழைக்கப் பட்டன. “ஹகுவின் இகாககு” வின் கேள்வி “இரண்டு கைகள் ஒன்று சேர்ந்த்தால் கரவொலி. ஒரு கையின் ஓசை யாது?” ஒரு உதாரணம். “ஷுன்ரியூ ஸுசூகி” யின் “புத்தர் வேறெங்கும் இருந்தால் அவரைக் கொன்று விடு. ஏனெனில் உன்னுள் உள்ள புத்தர் இயல்பை நீ தொடர வேண்டும்” என்னும் பதிவு மற்றொரு உதாரணம்.
ஜென் என்பது ஒரு பாரம்பரியத்துக்கு இருந்த பெயரே. ஆன்மீகம் பற்றிய ஒரு தெளிவு நிகழும் தருணம் புத்தருக்கு நிகழ்ந்தது போல் அபூர்வமான ஒரு கணத்தில் நிகழும் என்பதே இந்தப் பாரம்பரியத்தின் நம்பிக்கை. மாறாத விழிப்பும் இடையறாத் தேடலும் வாய்த்த ஒருவருக்கு அந்த அபூர்வமான கணம் வாய்க்கும். அது கைவசப்பட்டவரும் பீடத்தில் ஏறிக்கொள்வதில்லை. தேடலின் தொடக்கத்தில் உள்ளவருடன் உரையாடுவதும் அவரின் மீது கவனம் செலுத்துவதும் அந்த மூத்தவரின் ஈடுபாட்டுக்கு உரியவையே. “கோன்” என்றால் என்ன என்னும் அபிப்ராயம் நமக்கு இருந்தால் போதும். “கோன்” களைத் தொடர்ந்து நாம் வெகு தூரம் செல்வது சாத்தியமில்லை. ஜென் பதிவுகளில் கோன் இல்லாது இருப்பதே இல்லை. ஆனால் நம்முடன் உரையாடுபவையாக இருப்பவையே நாம் மேற் செல்ல உதவுகின்றன. பதினைந்தாம் நூற்றாண்டின் “இக்கியு ஸொஜுன்” பங்களிப்பு இவை:
ஒரு மீனவன்
—————
புத்தகங்களைப் படிப்பதும்
விறைப்பாக அமர்ந்த தியானமும்
உன் அசல் மனதை இழக்கச் செய்யும்
ஆயினும் ஒரு மீனவனின் தனிமைப் பண்
ஒரு விலை மதிப்பற்ற பொக்கிஷமாய் இருக்க இயலும்
நதி மீது மாலை நேர மழை,
நிலவு மேகங்களின் உள்ளேயும் வெளியேயும்
வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட இவ்வெழிலை
அவன் இரவுக்குப் பின் இரவாக
உச்சரித்துக் கொண்டே இருக்கிறான்
ஒவ்வொரு நாளும் பிட்சுக்கள் துல்லியமாக
சட்டத்தை பரிட்சை செய்கிறார்கள்
முடிவே இல்லாமல் சிக்கலான சூத்திரங்களை
முணுமுணுத்த படி
எனினும் அதைச் செய்வதற்கு முன் அவர்கள்
காற்றும், மழையும், பனியும், நிலவும் அனுப்பும்
காதற் கடிதங்களைப் படிப்பது எப்படி
என்று கற்றுக் கொள்ள வேண்டும்
ஒன்றுமின்மையில் வடிவம்
——————————
அது பட்ட மரம்
அதன் மணம் வண்ணம்
ஏதும் மீதி இல்லை
ஆனாலும் எந்தக் கரிசனமும் இன்றி
அதன் கிளை மீது வசந்தம்
———-
இக்கியு இந்த உடல் உனதல்ல
எனக்கு நானே சொல்லிக் கொள்வேன்
எங்கெங்கு நான் இருப்பேனோ இருப்பேனோ
———–
கோன் உள்ளே தெளிவான மனம்
காரிருளை வெட்டிப் பிளக்கும்
———–
மறையும் பனி
கணப் பொழுதில் பளிச்சிட்டு
மறையும் மின்னல்
நாம் சுதாரிக்கும் போது போயிருக்கும்
இவை போல்வே நான் என
எண்ணலாம் ஒருவர் தன்னைப் பற்றி
————
ஒரே ஒரு கோன் தான் முக்கியமானது
நீ
————
இதை என்னவென்று அழைத்தாலும்
சலிப்புத் தட்டுகிறது
அசூயை ஏற்படுத்துகிறது
இங்குள்ள ஒவ்வொரு நுண்துளையையும்
இங்கே இருக்கும் அதற்கு சமர்ப்பிக்கிறேன்
ஜென் ஒரு புரிதல்- பகுதி 18
சத்யானந்தன்
“கோன்” என்னும் படிமங்கள் வழி புரிதலுக்கு வழி செய்யும் ஜென் பாரம்பரியத்தைப் பற்றி ஏற்கனவே வாசித்தோம். வண்ணக் கலவைகள் மாறி மாறித் ததும்பும் ஒரு கோப்பையாக மனதைக் கொள்ளலாம். தான் உள்வாங்கும் எதன்மீதும் அந்த வண்ணங்களைப் பூசியே மனம் ஒரு பார்வையை அல்லது ஒரு காட்சியை அல்லது ஒரு அனுபவத்தை அணுகும். ‘பூமி தன்னைத் தானே சுற்றி சூரியனை விட்டு மறைந்தும் பின்னர் அதன் ஒளியில் அமிழ்ந்தும் பகல் இரவு என்னும் இருமையைக் காண்கிறது’ என்று நாம் சொல்லப் போவதே கிடையாது. சூரியன் உதித்தது. மறைந்தது என்று தானே சொல்கிறோம்? நம் மனப்பாங்கை மாற்றிக் கொள்வது என்பது மிகவும் எளிமைப் படுத்திய தேவையாக இருக்கும். நம் மனத்தைக் கழற்றி விட்டுப் பிறகு உண்மைக்கு அருகாமையில் நோக்குவது என்பதே பொருத்தமாக இருக்கும்.
மனம் உள்ளார்ந்த வர்ணப் பூச்சுகள் வழி காணும் இருமைகள் கசப்பு இனிப்பு உயர்வு தாழ்வு என குறுகிய வட்டத்துள் உழன்று அதைத் தாண்டி ஏதுமில்லை என்று தேங்கி விடுகிறது. முற்றிலும் இந்த மாய சுழற்சியினின்று விடுபட்ட நிலையில் மட்டுமே புரிதல் துவங்குகிறது. இந்தத் துவக்கம் நிகழ்ந்த இருவரிடையே நடக்கும் உரையாடலை நாம் “கோன்”கள் என்னும் படிமம் வழி அடைந்து ஜென் சிந்தனைத் தடத்தில் செல்ல இயலும். பதினாங்காம் நூற்றாண்டின் “ர்யூசன்” என்னும் சிந்தனையாளரின் ஒரு உரையாடலைக் காண்போம்.
ஒரு முறை “டோசன்’ என்னும் ஜென் துறவி மற்றொரு புத்த பிட்சுவுடன் ஒரு மலைவழிப் பயணம் மேற் கொண்டார். ஒரு நீரோடையில் காய்கறியினின்று வெட்டப் பட்ட ஒரு இலை மிதந்து வந்தது. ‘ இங்கே யாருமில்லை என எண்ணியிருந்தோம். ஆனால் யாரோ வசிப்பது போலிருக்கிறதே?” என்றார். ” மலை மீது ஏறிச் செல்கையில் நாம் யாரேனும் ஒரு வழி தவறிய ஆளைக் காணக் கூடும்”. புதர்கள் மண்டிய பாதையில் அவர்கள் பல மைல்கள் மேற்சென்றதும் ஒடிசலான வற்றிய வடிவத்து ஆள் ஒருவரைக் கண்டார்கள். அது ஆசான் “ர்யூசன்”. அந்தப் பெயருக்கு ‘டிராகன் மலை” என்று பொருள். அவருக்கு “யின்ஷன் ” என்றும் ஒரு பெயர் உண்டு. “மலைக்குள் மறைந்தவர்” என்று பொருள். தம் சுமைகளை இறக்கி வைத்த இருவரும் அவருக்கு வணக்கம் தெரிவித்தனர்.
ர்யூசன்: பாதையில்லாத இந்த மலையில் இவ்வளவு உயரம் எப்படி வந்தீர்கள்?
டோசன்: பாதையில்லை என்பதை விட்டு விடுவோம். நீங்கள் எந்த இடத்தில் நுழைந்தீர்கள்?
ர்யூசன்: நான் மேகம் வழியோ அல்லது நீர் வழியோ வரவில்லை
டோசன்: எவ்வளவு காலமாகத் தாங்கள் இந்த இடத்தில் வசிக்கிறீர்கள்?
ர்யூசன்: வருடங்களும் பருவங்களும் கடப்பதால் இதை அடைய இயலாது
டோசன்: தாங்கள் இங்கே முதலில் வந்தீரா? மலை முதலில் இருந்ததா?
ர்யூசன்: எனக்குத் தெரியாது
டோசன்: ஏன் இல்லை?
ர்யூசன்: நான் வானுலகின் அல்லது மனிதச் சூழலனின்று வருபவனல்லேன்
டோசன்: இந்த மலையில் வாழ வந்ததில் நீர் உணர்ந்த உண்மை யாது?
ர்யூசன்: நான் இரண்டு எருதுகள் முட்டி மோதி சமுத்திரத்தில் ஆழ்ந்து முழுகியதைக் கண்டேன். இதுவரை அவை பற்றிய
தகவல் ஏதுமில்லை.
இதைக் கேட்டதும் முதன் முறையாக ஆழ்ந்த மரியாதையுடன் டோசன் ர்யூசனை வணங்கினார்.
டோசன்: உபசரிப்பவருக்குள் இருக்கும் விருந்தாளி யார்?
ர்யூசன்: நீல மலை வெண் மேகங்களால் மூடப்பட்டுள்ளது
டோசன்: உபசரிப்பவருள் இருக்கும் உபசரிப்பாளர் யார்?
ர்யூசன்: அவர் வாசல் தாண்டி வெளியே போவதில்லை
டோசன்: உபசரிப்பவரும் விருந்தாளியும் எந்தத் தொலைவு இடைவெளியில் உள்ளனர்?
ர்யூசன்: நதியின் மீது அலைகள்
டோசன்: உபசரிப்பவரும் விருந்தாளியும் சந்திக்கும் போது என்ன சொல்லப் படுகிறது
ர்யூசன்: தூய தென்றல் வெண் நிலவை வீசி அசைக்கிறது
டோசன் விடை பெற்றார்.
உரையாடலின் முதற் பகுதியில் உள்ள இருப்பு என்பது வசிப்பிடம் அல்ல. இரண்டு எருதுகள் என்பது மாயையும் விழிப்பும் ஆகும். விருந்தாளி என்பவர் உபசரிப்பவர் இருவரும் ஒருவரே. புற உலகு விருந்தாளியாக நம் மனம் வழியே உள் நுழைந்தபடியே இருக்கிறது. புற உலகின் ஒரு அங்கமாகவும் அக உலகில் ஆன்மீகம் மட்டுமே அடையாளமாகவும் இருவகையான இருப்பு நமக்கு உள்ளது. ம்லை முதலில் வந்ததா அல்லது நீர் வந்தீரா என்னும் கேள்வி பகவத் கீதையில் ஷேத்ரன் ஷேத்ரஞன் என்னும் விவாதம் நடக்கும் அத்தியாத்தை நினைவு படுத்துகிறது. “கோன்” களைப் புரிந்து கொள்வதில் இது ஒரு எளிய முயற்சி. இன்னும் ஆழ்ந்த் உட்பொருள் இந்த உரையாடலுக்குள் இருக்கக் கூடும்.
ர்யூசன் கவிதை இது:
தெள்ளிய நீலத்துள் நிலா!
சில்லென்ற தண்ணீர் தொடுவானம் வரை
மேல் கீழ் இவற்றின் விளக்கமாய்
அதிர்ந்த டிராகன்
மேக மூட்டத்தில் இருந்து வெளிப்படும்
உயர்வு தாழ்வு இவை சந்திக்கும் தொடுவானம் எது? இந்தச் சிந்தனையைத் தூண்டும் நோக்கோடே கவிதை எழுதப் பட்டுள்ளது.
ஜென் ஒரு புரிதல் – பகுதி 19
சத்யானந்தன்
ஆதி கால மனிதன் அனைவருக்குமே மூதாதையர் தான். அவனது அடிப்படை இயல்புகளை யாருமே தாண்டிச் செல்லவில்லை. அந்த இயல்புகளைப் பயன்படுத்தி மேற் சென்ற திசை அல்லது இலக்கு மாறு பட்டிருக்கலாம். வேட்டையாடுவதும், துரத்துவதும், தப்பிப்பதும், இந்நடவடிக்கைகள் ஈடேறும் வரை எதிரி குறித்த அச்சமும் குறிப்பான அடிப்படை இயல்புகள். அவன் ஒரு சமூகமாக வாழத் துவங்கிய போதும் இவ்வியல்புகள் புதிய வடிவத்தை அடைந்தனவே ஒழிய அடிப்படையில் மாற்றம் இல்லை. துரத்துவதும் வேட்டையாடுவதும் சில விதிகளுக்கு உட்பட வேண்டிய தேவையை அவன் உணர்ந்ததும் அவற்றை வகுத்ததும், பல துறைகளை அழகியல், பொருளாதாரம், வழிபாடு என அவன் கண்டறிந்ததும் பண்பாட்டின் துவக்கமாயின. அவனது வேட்டை சில துறைகளில் அழகு மிளிர்வதும் ஏனையவற்றில் முகம் சுளிக்க வைப்பதும் இன்றும் வழக்கிலுள்ளன.
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக அவன் முன்னும் பின்னும் சென்று கொண்டிருக்கிறான். கல் ஆயுதமாயிருந்ததிலிருந்து இரும்பு ஆயுதமானது. மூங்கிற் குடிலுக்கு பதில் செங்கல், பின்னாளில் மின்னணுக் கருவிகள் ஆயுதங்கள். சகமாந்தர் ஏற்ற போட்டாப் போட்டி, வேட்டை இவை திறமைகள், பலம் என்னும் அளவிகளில் கோலொச்சுவது , பின்னடைவது, பின்னர் காலாவதியாவது என்னும் இடையறா சுழற் புள்ளிகளுக்குள் உழல்வதில் பெருமிதமும், ஈடுபாடும் ரசனையும் ஆக ஒரு குறுகிய சிந்தனைத் தடம் மிக ஆழமாகக் கட்டமைக்கப் பட்டு விட்டது.
இவை யாவுமே நாம் கட்டமைத்து நம்மைப் பிணைக்கும் சங்கிலிகள் என்னும் சிந்தனை இரு விதமான தடங்களில் சுய சிந்தனை அமையப் பெற்றோருக்கு வாய்த்தது. ஒன்று தருக்கம். மற்றொன்று ஆன்மீகம். தருக்கம் ஆதாரம், நிரூபணம் என்னும் இரு பக்கத்தைத் தாண்டி வேறு பரிமாணம் சாத்தியம் இல்லை என்று சபித்துத் தேங்கியது. ஆன்மீகம் தனது இயல்புகள் என்று அறியப்பட்டவற்றைத் தாண்டி பிரபஞ்ச இயங்குதல் என்னும் பிரம்மாண்டத்தின் சூட்சமத்தை நோக்கி நகரத் துவங்கியது. ஆன்மீகத் தேடலும் தரிசன்மும் சாத்தியமானவர்கள் அந்த அற்புதத்தின் சரித்திரச் சின்னங்களாய் இருந்த என்றும் இருக்கிற ஒரே சாதனையில் ஆயிரம் ஆண்டு மனித இனம் வளர்த்து தலைமுறைகளுக்கு வழங்கிய அகத்தை அழித்து ஆனந்தம் கண்டனர்.
இந்த ஆனந்தத்திற்கு ஒரு கோடிட்ட வரை படத் தடம் தானா? பதிமூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த “வூ மென்”னின் பதிவுகளை வாசிப்போம் .
உன்னதமான வழிக்கு வாயிலெதுவும் கிடையாது
ஆயிரம் சாலைகள் அதில் நுழைகின்றன
கதவில்லாத இந்த வாயிலைக் கடப்பவன்
சுதந்திரமாக பூமிக்கும் சுவர்க்கத்திற்கும் இடையே நடக்கிறான்
————————————–
வசந்தத்தில் பத்தாயிரம் பூக்கள்
இலையுதிர் காலத்தில் நிலா
குளிர் காலத்தில் வெண் பனி
உன் மனம் தேவையற்றவற்றால் மூட்டமுறவில்லை என்றால்
இதுவே உன் வாழ்க்கையின் சிறந்த பருவம்
—————————————
ஒரு தருணம் அழிவற்றது
அந்த அழிவில்லாப் பொழுது இதோ இக்கணமே
இந்த ஒரு பொழுதை நீ ஊடுருவிப் பார்க்க இயலும் எனின்
காண்போனை ஊடுருவிக் காண்பாய்
—————————————–
நிலவும் மேகங்களும் ஒன்றேயாம்
மலையும் பள்ளத்தாக்குமே வெவ்வேறானவை
அனைவரும் அருளாசி பெற்றோரே அனைவரும்
இது ஒன்றா? இது இரண்டா?
——————————————
ஒரு புத்த பிட்சு “சாவ் சவ் ட்ஸுங்க் ஷென்” னைப் பார்த்து “ஓக் மரத்திற்கு புத்த இயல்பு உண்டா?” என்றார்.
சாவ் சவ்: ஆம். உண்டு.
பிட்சு: எப்போது ஓக் மரம் புத்த இயல்பை அடையும்?
சாவ் சவ்: இப்பேரண்டம் வீழும் வரை காத்திருப்பீர்
பிட்சு: இப்பேரண்டம் எப்போது வீழும்?
சாவ் சவ்:ஓக் மரம் புத்த இயல்பை அடையும் காத்திருப்பீர்
(இப்பதிவு கோன் என்னும் படிம வழி உரையாடலாகும்)
ஜென் ஒரு புரிதல் – பகுதி 20
சத்யானந்தன்
வறட்டுத் தன்மை மிகுந்த அன்றாட வாழ்வில் ஒரு சாரல் மழையைப் போன்றதா ஒரு கவிதையை வாசிக்கும் அனுபவம்? சிந்தனை எந்த அளவு இருண்டிருந்தது என்பதைப் புரிய வைப்பது போன்ற ஒரு மின்னலா கவிதை? ஒரு படிமமாகும் சிறு பொருள் அல்லது கருவி அல்லது நிகழ்ச்சியின் மூலம் ஒரு தரிசனத்தை நிகழ்த்தும் அற்புதமா? சொற்களின் சாத்தியத்தை பல பரிமாணங்களை வாசகருக்குக் காட்சியாக்கும் ஓவியமா? சிக்கல்கள் மிகுந்த மனித உறவுகளின் பிடிபடா முடிச்சுகளை அப்படியே காட்டும் நிதர்சனமா? அக உலகும் புற உலகுமான இரு கோடுகள் சந்திக்கும் புள்ளிதான் அனுபவமா? எது அனுபவம்? எது காட்சி? எது தோற்றம்? இவை யாவற்றையும் பார்வை தான் தீர்மானிக்கிறதா? பார்வையை எது தீர்மானிக்கிறது? இப்படி எண்ணற்ற கேள்விகளை குழந்தை போல கண் விரித்துப் பார்க்கும் விளையாட்டுத் தனம் தானா கவித்துவம்? கவிதைக்குள் இவை யாவுமே தென்படும். கவித்துவம் கவிதையில் வெளிப்படையாகவே காணப் படும். கவித்துவம் வெளிப்படும் அளவு ஒரு கவிதையின் படைப்பாக்க வெற்றியை நிர்ணயிக்கிறது.
முதற் பத்தி கவிதையின் தன்மை பற்றியதும் உள்ளடக்கம் பற்றியதும் ஆகும். கவிதையின் உருவம் பல நிலைகளைக் கடந்து எந்த உருவிலும் வரும் மாயாவியாகிவிட்டது. யாப்பு விதிகளைத் தாண்டி, புதுக் கவிதைக்கென நிர்ணயிக்கப் பட்ட புரிதல் அளவிகளைத் தாண்டி கவிதை படைப்பாக்கத்தின் ஆகச் சிறந்த வடிவம் என்னும் நாற்காலியைத் தானே கைப் பற்றிக் கொண்டது. ஜப்பான் துவங்கி வைத்த “ஹைக்கூ” என்னும் வடிவத்தின் பூர்வீகம் புதிரான முறையில் படிமங்கள் மையமாக உரையாடும் ஜென் மரபு ஆகும். “ஹைக்கூ” ஒரு வடிவமே. உள்ளடக்கம் தான் நாம் தேடும் சாராம்சம். “ஹைக்கூ” பெரிய அளவு வரவேற்புப் பெறாததற்கு தேடல் இல்லாத வறட்டுத் தடத்தில் தேங்கிப் போகும் படி படைப்பாளிகளால் சபிக்கப் பட்ட வாசகரின் கையறு நிலையே காரணம். பதினேழாம் நூற்றாண்டின் ‘மட்ஸுவோ பஷோ’ வின் “ஹைக்கூ” கவிதைகளைக் காண்போம்.
மாரிக்கால சூறைக் காற்றில் ஒரு வாழை மரம்
—————————————————
மாரிக்கால சூறைக் காற்றில் ஒரு வாழை மரம்
நான் இரவில் மழை நீர்
ஒரு பாத்திரத்தில் சொட்டுவதைக்
செவி மடுக்கிறேன்
இந்தச் சாலை வழி
———————
இந்தச் சாலை வழி
யாரும் போவதில்லை
மாரிக்கால மாலையில்
மேகங்கள்
———–
மேகங்கள்
நிலவின் காட்சியை
புறந்தள்ள ஒரு
வாய்ப்பு
வா நாம் போகலாம்
——————————–
வா நாம் போகலாம்
புதையுறும் வரை
பனிப்பொழிவைக் காண
காகத்தினுடையது
———————
காகத்தினுடையது
அது விட்டுச் சென்ற ஒரு கூடு
பிளம் மரம்
மரண கானம்
—————
காய்ச்சலால் வீழ்த்தப் பட்ட
என் கனவுகள்
மீண்டு எழுந்து
ஒரு பாதாள நிலத்துக்குள்
அணிவகுத்துச் சென்றன
பனித்துளியே நான் சுத்தம் செய்கிறேன்
——————————————–
பனித்துளியே நான் சுத்தம் செய்கிறேன்
உன் சுவையான சொட்டுக்களில்
வாழ்க்கையின் இருண்ட கைகளை
நிலவால் சுற்றி வளைக்கப்பட்ட
————————————
நிலவால் சுற்றி வளைக்கப்பட்ட
மூங்கிற் காடு
மைனாவின் பாட்டு
அங்கு வாசனை இருந்திருந்தால்
——————————-
அங்கு வாசனை இருந்திருந்தால்
பனி விழுதுகள்
பாறைகள் மீது
லில்லி மலர்களை
அழுத்தி விட்டன
இது அடை மழைக் காலம்
—————————–
இது அடை மழைக் காலம்
என் அண்டை வீட்டுக் காரர்
எப்படி வாழ்கிறாரோ
ஆச்சரியப்படுகிறேன்
பயணத்தின் முடிவு
———————-
பயணத்தின் முடிவு
இன்னும் வாழும்
இந்த மாரிக்கால
மாலைப் பொழுது
பழைய குட்டை
——————
பழைய குட்டை
குதிக்கும் நீர் தெரிக்க
தவளை
வானம்பாடி
————–
வானம்பாடி
பாடிக் கொண்டே இருக்கும்
பகல் முழுதும்
பகல் போதுமான அளவு நீண்டதல்ல
முற்றிலும் நிசப்தம்
———————
முற்றிலும் நிசப்தம்
தட்டாம் பூச்சிகளும்
கானம் பாடும்
கொதிக்கும் பாறைகள் நடுவே
கோடைக்காலப் புற்கள்
————————–
கோடைக்காலப் புற்கள்
படை வீரரின் கனவுகளில்
எஞ்சியவை
கோயில் மணியோசை அடங்கும்
————————————-
கோயில் மணியோசை அடங்கும்
மாலைப் பூக்களின் மணம்
மணியை அசைக்க
இந்தப் பனிக்கால காலைப் பொழுதில்
——————————————-
இந்தப் பனிக்காலக் காலைப் பொழுதில்
அந்தக் காகம்
அதை முற்றிலும் வெறுக்கிறேன்
ஆனால் அவன் அழகானவன்
பனி நாள்
———–
பனி நாள்
என் குதிரை
மீது நான்
ஒரு உறைந்த நிழல்
வருட இறுதி
—————
வருட இறுதி
மிதக்கும் இவ்வுலகின்
எல்லா முனைகளும்
அடித்துச் செல்லப் பட்டன
நீ தீ மூட்டு
————-
நீ தீ மூட்டு
நான் உனக்கு அற்புதமான
ஒன்றைக் காட்டுவேன்
ஒரு பெரிய பனிப் பந்து
தேனீ
——
தேனீ
மெதுவாகக் குதிரைக்குள்
இருந்து மேலெழும்பும்
(‘மட்ஸுவோ பஷோ’ வின் “ஹைக்கூ” கவிதைகளை அடுத்த
பகுதியில் தொடர்ந்து வாசிப்போம்)
ஜென் ஒரு புரிதல் – பகுதி 21
சத்யானந்தன்
பகுதி இருபதைத் தொடர்ந்து ‘மட்ஸுவோ பஷூ’வின் கவிதைகள்:
யாரும் இந்தப் பாதையில்
பயணிக்கவில்லை
என்னையும் மாரிக்கால மாலைப்
பொழுதையும் தவிர
வருடத்தின் முதல் நாள்
எண்ணங்கள் வருகின்றன
தனிமையும்
மாரிக்கால மாலை கவியும்
நேரம்
ஒரு பழைய சுனை
ஒரு தவளை தாவிக் குதிக்கும்
‘தொபக்’
பழைய இருண்ட
தூங்கி வழியும் சுனை
திடீரென விரையும் தவளை
தாவும் – தண்ணீர் தெரிக்கும்
மின்னல்
கொக்கின் கூவல்
இருளைக்
குத்தித் துளைக்கும்
தட்டாம் பூச்சிகளின்
ஒலிப்பில்
அது எவ்வளவு சீக்கிரம்
இறக்கும் எனக்
கட்டியம் கூற
ஏதுமில்லை
வறுமையின் குழந்தை
அவன் திரிகையில்
மாவை அரைத்த படி
நிலவை நோக்குகிறான்
நீ வந்து தனிமையைப்
பார்க்க மாட்டாயா?
‘கிரி’ மரத்தின்
ஒரே இலை
கோவிலின் மணிகள் ஓய்கின்றன
பூக்களின் மலர்ச்சி நிற்கிறது
நிறைவான ஒரு மாலைப் பொழுதில்
காற்றில் ஒரு
பாலே நடனம்
இரட்டை வெண்மையாய்
இரண்டும் பட்டாம் பூச்சிகள்
அவை சந்திக்கின்றன
கலவி கொள்கின்றன
அடர்ந்த கரு மேகங்கள்
திப்பித் திப்பியாய்
வானில் திரியும்
இப்போது பார்
நிலவொளியில் மலைகளின்
எழிலை
மலை முகட்டில்
மரங்களில்லா ஊதா நிறச்
சரிவுகள்
வானில் பிரதிபலிக்கும்
மலையுச்சி ஆபரணங்கள்
கப்பரையை அழகூட்ட
மலர்களால் நிரப்புவோம்
சோறு இல்லாத காரணத்தால்
இப்போது பனி படர்ந்த இரவில்
கழுகுகளின் கண்கள்
இன்னும் கருமையடைந்து விட்ட வேளை
சிறு பறவைகளின் சிணுங்கல் சத்தம்
கடல் நீர் கரையைத் தொடும் இடத்தில்
சிறிய கிளிஞ்சல்கள்
“புஷ் க்ளோவர்” (ரோஜா நிற ஜப்பானியக் காட்டுப் பூ)
இதழ்கள்
வெள்ளை செர்ரி மலர்களுக்கு மேல்
வெள்ளை மேகம் போன்ற பனி மூட்டம்
அதிகாலையில் ஒளிரும் மலைகள்
புலர் காலையில்
சீழ்கை அடிக்கும் சிறு பறவைகள்
கருமையான தனிமையை
இனிமையாய் ஆழப்படுத்தும்
மலைரோஜா இதழ்கள்
உதிர்ந்து உதிர்ந்து
உதிர்கின்றன இப்போது
நீர்வீழ்ச்சி இசை
நானா?
நான் எனது சொற்ப
காலை உணவை
“மார்னிங் க்லோரி”
பூக்களைப் பார்த்தபடி
கழிப்பவன்
கடல் அபாயகரமாக
மேலெழுந்து “ஸடோ”
தீவை முழுகடிக்கப் பார்க்கிறது
விரவியிருக்கும் நட்சத்திரங்கள்
மௌனத்தில்
பெருமை மிக்க நிலவுக்கு
நன்றி
கரிய மேகங்களே
வாருங்கள்
எங்கள் கழுத்துக்கு ஓய்வு தர
செர்ரி மரத்துக்குக் கீழே
ஸூப், காய்கறித் துண்டு
மீனும் மற்றயவையும்
மலரிதழ்களும் சேர
பசி மிகுந்த கழுதை
மிகவும் ஆர்வத்தோடு
பூக்களை ரசிக்கும்
எங்களைத் தாண்டிப்
போய்
மரணத்தைத் தழுவியது
வசந்தம் வாடி மறைய வேண்டுமா?
எல்லா பறவைகளும் மீன்களும் அழும்
சோகையான உஷ்ணமில்லாத
விழிகள் கண்ணீர் சிந்தும்
பெண் பட்டாம் பூச்சி
பூந்தோட்டத்தின் மீது
பறந்து
தன் இறகுகளில்
வாசனை பூசிக் கொள்கிறது
தொங்கு பாலம் மரக்கட்டைகளுடன்
மௌனமாயிருக்கிறது
நூல் பந்தாகச் சிக்குண்ட
நம் வாழ்வைப் போல
ஆயிரம் தலைவர்கள்
வெற்றிச் சபதம்
செய்தனர் இங்கே
நீண்டுயர்ந்த புற்கள்
அவர்களது நினைவுச் சின்னங்கள்
மலர்ந்து வரும் உன்
கல்லறையில் நாம்
மீண்டும் சந்திப்போமா?
இரண்டு வெள்ளைப் பட்டாம் பூச்சிகள்
செதுக்கப் பட்ட கடவுள்கள்
எப்போதோ போய் விட்டனர்
கோயில் பலி பீடம்
கீழே உதிர்ந்த சருகுகள்
குளிர்காலத்தின்
சில்லென்ற முதல் மழை
பாவம் குரங்கே!
நீயும் நெய்த தொப்பியைப்
பயன் படுத்தி இருக்கலாம்
மேலும் வாசிக்க
விளக்கில் எண்ணையில்லை
ஆ! என் தலையணையில்
நிலா ஒளி
வாழும் மகன்கள்
மூதாதையர் கல்லறைகளுக்குச்
செல்கின்றனர்
தாடியும் வளைந்த ஊன்று கோல்கள் சகிதம்
ஜென் ஒரு புரிதல் – பகுதி 22
சத்யானந்தன்
‘அ’ , ‘ ஆ’ ஒரே நாட்டைச் சேர்ந்த இரு படை வீரர்கள். இருவரும் காட்டு வழியே போய்க் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு மரத்தைக் கடந்து போகும் போது ‘அ’ சற்று முன்னே சென்று விட்டான். அப்போது ‘ஆ’ அந்த மரத்தின் ஒரு கிளையில் ஒரு கேடயம் தொங்குவதைப் பார்த்தான். அது பச்சை நிற வண்ணம் பூசப் பட்டிருந்தது. முன் சென்று விட்ட ‘அ’ வை ‘ஆ’ அழைத்து ” பாரப்பா ஆச்சரியத்தை! கேடயத்துக்கு வண்ணம் பூசப் பட்டிருக்கிறது. அதுவும் பச்சை வண்ணம்” என்றான். ‘அ’ நின்று திரும்பிப் பார்த்து “பார்வைக் கோளாறா உனக்கு? இது சிவப்பு வண்ணக் கேடயமப்பா” என்றான். ‘ஆ’ “உன் கண்களில் கோளாறு! பச்சை உனக்கு சிவப்பாகத் தெரிகிறது” என்றான். ‘அ’ “முட்டாளே! தவறாக ஒன்றைச் சொல்லி விட்டு அதைச் சரி என்று நிலை நாட்ட என்னைக் குறை சொல்கிறாயா?” என்றான். “யாரை முட்டாள் என்கிறாய்? கேடயத்தை சரியாகக் காண முடியாத நீயெல்லாம் ஒரு படை வீரன்!” என்றான். உடனே ‘அ’ “என் வீரத்தையா எள்ளுகிறாய்?” என்று கத்தியை உருவினான். “ஆ”வும் பின்வாங்கவில்லை. இருவரும் ஒருவரை ஒருவர் தாக்க இருவர் உயிருமே பிரிந்தது.
அற்பமான ஒரு விஷயத்துக்காக இருவரும் உயிரை விடக் கூடத் துணிந்தனர். கேடயத்தின் ஒவ்வொரு பக்கமும் ஒரு வண்ணம் இருக்கக் கூடிய சாத்தியம் அவர்கட்கு எட்டவில்லை. அகந்தை அறியாமையோடும் அற்பத்தனத்தோடும் வெளிப்படுவது கண்கூடு.
சுவையான மறுபக்கம் என்னவென்றால் மனிதனின் அற்பமான அன்றாடத் தேவைகளுக்கும், வசதிகளுக்கும், சுகங்களுக்கும் தீனி போடும் விதமாகவே பெரும்பான்மையோரின் தொழிலோ பிழைப்போ அமைந்திருப்பது. வரும்படி அதிகமான தொழிலில் பலவும் இவ்வகைப்பட்டதே. எனவே அற்பத்திற்கு சேவை செய்து மதிப்புடன் நடமாடும் தேர்வோ கட்டாயமோ உள்ளவர் ஒரு புறம். மறுபுறம் கலைகள், இலக்கியம், ஆன்மீகத் தேடல் என்று துவங்கி அற்பங்களின் மூச்சு முட்டும் சூழலில் தன் அசலைத் தக்க வைத்துக் கொள்ளப் போராடி உதாசீனங்களையும் நிராகரிப்பையும் விழுங்கப் பழக இயலாது அவஸ்தைப் படும் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவு சிறுபான்மையானவர்.
அற்பமானவற்றின் முடிவுப் புள்ளியில் தான் ஆன்மீகம் தொடங்குகிறது. அற்பமானவற்றுக்கும் தேடிப் பிந்தொடரும் அளவு உன்னதமானவற்றிற்கும் உள்ள வேறுபாடு வெளிப்படையானது. தேடல் திசை மாறாது ஓயாது வழிநடத்தும் கொடுப்பினை உள்ளோருக்கு புற உலகம் பெரிய சிறையாகிறது. தேடலின் மேன் நிலையில் ஏனையரை இளப்பமாகவோ தனது எதிரியாகவோ நினைக்காது ஒரு தனிமையைச் சுமந்தே ஜீவிப்பது சாத்தியமாகிறது. அதற்கும் அப்பாற்பட்ட ஆழ்ந்த புரிதல் சித்தித்த நிலையில் முழுமையான சாந்தியும் பிரபஞ்ச இயங்குதலில் மனித இனம் அங்கமாகவும் பொருந்தாமலும் இரண்டுமாகவும் இருக்கும் முரணை அவதானித்து மெளனமாகும் பெரு நிலை சாத்தியமாகிறது. அந்நிலையில் நின்று மௌனம் கலைத்த ஜென் பாரம்பரியத்திய ஆசான்களின் பதிவுகளை நாம் வாசிக்கிறோம்.
பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்த “மஸாஹிடே” யின் கவிதைகளில் நிலவும் பறவையும் படிமங்களாவதைக் காண்கிறோம். நம்முடன் பயணிப்போரோ அல்லது சில விழுமியங்களோ நம் பற்றுக் கோடுகள் ஆகின்றனர். நம் வாழ்க்கையின் நிலைப்பின் மையமாய் நம் மனதுள் அவர் நிற்பது கோபுரங்களை பொம்மைகள் தாங்குவது போன்ற ஒரு தோற்றமே. நிலவும் பறவையும் தம் நகர்வுக்கும் இருக்கும் தொலைவுக்கும் ஏற்ப நம்முள் வெவ்வேறு பிம்பங்களை வீழ்த்துகின்றனர். அவை மாறிக் கொண்டே இருக்கின்றன. நிலையின்மையே நிலையானதாய் நிதர்சனமாகிறது. நாம் அதை ஏற்க மறுக்கிறோம். எனது என்று ஏதுமில்லை என்னும் இறுதி உண்மையை ஏற்று விடலாம். பின் பிடிமானம் ஏதுமின்றி மீதி வாழ்க்கையை எப்படி நகர்த்துவது என்னும் கேள்வி பூதாகாரமாய் நம்முள் எழுகிறது. தனிமை என்பதும் தனித்து நின்று தேடல் என்பதும் நம் திடமான முடிவைப் பொறுத்தது. ஆன்மீகம் ஒரு கும்பலின் ஒரு கூட்டத்தின் அல்லது ஒரு சமூகத்தின் கூட்டு நடவடிக்கையாக எப்போதுமே இருக்க இயலாது. ஒருவருக்கு மிகவும் அந்தரங்கமான ஒரு சாதனை அது.
பண்ணைக் கிடங்கு
எரிந்து சாம்பலானது
என்னால்
இப்போது நிலவைக்
காண இயலும்
நான் நடக்கும் போது
உடன் வரும் நிலவு
தண்ணீருக்குள் தோழன்
நிலவைப் போல
பறவை கடந்து செல்லும் போது
தண்ணீருக்கு ஒரு நண்பன்
ஜென் ஒரு புரிதல் – பகுதி 23
சத்யானந்தன்
நமது வாசிப்பில் “ஹகூயின்” என்னும் பதினேழு மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜென் ஆசானின் பதிவில் ஒரு வெளிப்படையான நேரடியான கருத்துப் பரிமாற்றத்தைக் காண்கிறோம்.
ZAZEN பாடல் (ஜஜேன் என்பது பத்மாசனத்தில் பலரும் ஒன்றாய் அமர்ந்த்து தியானம் செய்யும் முறை ஆகும்)
——————
எல்லா உயிர்களும் அடிப்படையில் புத்தர்களே
தண்ணீரையும் பனிக்கட்டியையும் போல
தண்ணீரில்லாமல் பனிக்கட்டி இல்லை
ஏனைய உயிர்களிடமிருந்து பிரிந்த புத்தர்கள் இல்லை
தமக்கு எவ்வளவு நெருங்கியது இவ்வுண்மை என்றறியாமல்
தொலைவில் எங்கேயோ தேடுகிறார்கள்; பரிதாபம்!
தண்ணீரால் சூழப்பட்டர்கள் தாகம்
என்று கதறுவது போல்
ஒரு பணக்காரரின் மகன்
தன் தந்தையை விட்டுத் தள்ளிப் போய்
ஏதுமற்றவர்களுள் ஒருவனாய்த் திசை இழந்து
போனதற்கு ஒப்பாகும் அது
உயிர்கள் ஆறு நிலைகளுக்குள்
மாறி மாறி உழல்வதற்கு இந்த
அறியாமையே காரணம்
(ஆறு வகை உயிர்கள்: நரகத்திலிருப்பவர்கள், பேய்கள்,விலங்குகள், அசுரர்கள், மனிதர்கள், தேவர்கள்)
ஒரு இருளிலிருந்து இன்னொரு இருளுக்கு இடம் மாறும்
அவர்கள்
எப்படி பிறப்பிலிருந்தும் மரணத்திலிருந்தும் விடுபட இயலும்?
மகாயானாத்தில் கூறப்பட்டுள்ள தியான முறைகளுக்கு
ஈடு இணை ஏதுமில்லை
ஆறு “பரமிதஸ்”ஸின்
சாராம்சம் தியானமே
(ஆறு “பரமிதஸ்”: 1. கொடுத்தல், 2. கட்டுப்பாடுகளை மேற் கொள்ளல், 3.சகிப்புத்தன்மையும் பொறுமையும்
4.வலிமை (மனத்திண்மை) 5.ஆழ்நிலை தியானம் / சமாதி 6.ஞானம்)
ஒரு முறை அமர்ந்து உண்மையான ஈடுபாட்டுடன்
இருந்தால் அதுவரை செய்த பாபங்கள் அனைத்தையும்
போக்குமளவு தியானம் உயர்ந்தது
அப்போது தீய வழிகள் என்கே இருக்கும்?
புனிதமான பூமி அதிக தூரத்தில் இருக்காது
ஒரு முறையேனும் தர்ம வழி பற்றிப்
பணிவுடன் செவி மடுத்துப்
புகழ்ந்து பின்பற்றி வழி நடப்போர்
எண்ணற்ற மேன்மைகளை அடைவார்
ஆனால் உனது விழிகளை உனக்குள்ளேயே
செலுத்தித் தேடி
உனது அகத் தன்மையை உணரும் போது
எத்தனையோ இருக்கிறது
அக இயல்பு என்றொரு தன்மை இல்லை
என்பதை நீ காண்பாய்
பயனற்ற வறட்டு வாதங்களை
உண்மை அனுமதிப்பதில்லை
அப்போது உன் எதிரே காரணமும் விளைவும் ஒன்றுபடும்
இலக்கை அடையும் கதவு திறக்கும்
உன் எதிரே இருமை, மும்மையும் இல்லாத பூரணத்திற்கான
நேர் வழி நீளும்
அப்போது வடிவம் என்பது வடிவமின்மையின் வடிவே
என்று தெளிவாய்
ஜென் ஒரு புரிதல் – 25
சத்யானந்தன்
பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘ப்யூசனி’ன் ஹைக்கூ கவிதைகள் இவை. கடைசியில் உள்ள கவிதை எந்த மதத் துறவியும் எழுதாதது. ஜென் சிந்தனையைத் தெளிவாக்குவது.
தலையணைக்குப் பதில்
முழங்கை
மங்கிய நிலவொளியில்
என்னை எனக்கே பிடித்திருக்கிறது
—————————————-
இன்னும் இருள் முழுவதுமாகக்
கவியவில்லை
காலியான நிலங்களின் மேல்
நட்சத்திரங்கள் மின்னுகின்றன
—————————————-
பழைய கிணறு
ஒரு மீன் தாவும்
இருட்டுச் சத்தம்
—————————————-
நிலத்தை உழுகையில்
ஒரு பறவையும் பாடவில்லை
மலையின் நிழலில்
—————————————-
தவிட்டுக் குருவி
பாடும்
தன் குஞ்சு வாயைத் திறந்து
—————————————-
வசந்த மழை
கதைகள் சொல்லும்
ஒரு வைக்கோல் அங்கியும்
குடையும் நம்மைக்
கடந்து செல்லும்
—————————————
வைக்கோல் செருப்பு
பாதி மாட்டிக் கொண்டது
உறை பனி மிதக்கும்
பழைய குட்டையில்
—————————————
‘வில்லோ’ மரங்களின் இலைகள்
உதிர்கின்றன
வசந்தம் வற்றிக் காய்ந்து விட்டது
பாறைகள் இங்கொன்றும்
அங்கொன்றுமாய்
—————————————
தம் பறத்தலை ஒன்றன் பின் ஒன்றாக முடிக்கும்
மாலை கவியும் நேரம்
காகங்கள்
—————————————
சிற்றிரவு- 11 கவிதைகள்
சிற்றிரவு
கம்பளிப் பூச்சியின் மீது
பனியின் மணிகள்
சிற்றிரவு
காவலாளிகள்
நதியில் குளிக்கின்றனர்
சிற்றிரவு
ந்தியின் மெல்லிய நீரோட்டங்களில்
நண்டின் நகர்வில்
நீர்க்குமிழிகள்
சிற்றிரவு
கடற்கரையின் மீது
வீசப்பட்ட ஒரு துடைப்பம்
சிற்றிரவு
‘ஓஜ்’ நதி இரண்டடி இறங்கி விட்டது
சிற்றிரவு
கிராமத்துக்கு வெளியே
ஒரு கடை திறந்து விட்டது
சிற்றிரவு
சரிவுகளில் உடைந்து
ஒரு வளர்பிறை
சிற்றிரவு
மலை ரோஜா ஒன்று
பூத்திருக்கிறது
சிற்றிரவு
அமுங்கும் அலைகள்
யாரோ விட்டுச் சென்ற
ஒரு தீ
சிற்றிரவு
தலையணை அருகே
ஒரு திரைச்சீலை
வெள்ளியாகிறது
சிற்றிரவு
யூயி கடற்கரையில்
அழுந்திய பாதச் தடங்கள்
——————————————–
நாணலால் நதியில் சலசலப்பு
வெகு தூரத்தில்
காட்டு வாத்து
———————————————-
பேரிக்காய் மரத்தின்
வெண்மைப் பூப்பு
நிலவொளியில் வெள்ளை
ஆடையில் ஒரு
பெண் ஒரு கடிதத்தை வாசிக்கிறாள்
———————————————-
நிலவொளியில் ஒரு வௌவால்
அலைபாயும்
பிளம் மரப் பூப்பின் மேலாக
———————————————-
பெரிய வெள்ளைக்
காட்டுப் பூ பூவின் முன்
கத்திரிக்கோல் தயங்கும்
ஒரு நொடி
———————————————-
ஒரு கோடாலியின் வெட்டு
பைன் மர வாசனை
குளிர் காலக் காடு
———————————————-
மேலைக் காற்றில்
கிழக்கே குவியலாகும்
உதிர்ந்த சருகுகள்
———————————————-
வானத்தின் மீது
காட்டு வாத்தின்
கீறல்கள் – நிலவு அதை
இறுக்கி நிறுத்தும்
———————————————-
நிர்தாட்சண்யம்
மணி ஒலி
மணியை விட்டு நீங்கையில்
———————————————-
இள வேனிற்கால மழை
நதியை நோக்கி நிற்கும் வீடுகள்
இரண்டு
———————————————-
மாலைக் காற்று
தண்ணீர் உறிஞ்சும்
கொக்கின் கால்களை
————————————————-
குளிர்கால நதி
அதில் மிதந்து கீழே வரும்
புத்தருக்கு அர்ப்பணித்த மலர்கள்
———————————————————–
அறுவடை நிலா
அவன் வீடு
தேடி வந்தது
அவன் உருளைக்கிழங்குகளைத்
தோண்டி எடுத்துக் கொண்டிருந்தான்
————————————————–
அவன் கூரையில் இருக்கிறான்
மனைவியிடமிருந்தும் குழந்தைகளிடமிருந்தும்
தப்பிக்க
அது எவ்வளவு உஷ்ண்மாக இருக்கிறது
—————————————————
வறண்ட வயல் வெளியில்
புனித அப்பாட்
கழித்துக் கொண்டிருக்கிறார்
———————————————–
வசந்தம்
இந்த வருடத்தின் முதல் கவிதை
எழுதி
அசுர தன்னம்பிக்கையில்
ஒரு ஹைகை கவிஞன்
பகல்கள் நீண்டு விட்டன
வாலாட்டிக் குருவி ஒன்று
பாலத்தை நோக்கிக் கீழே
இறங்கி வருகிறது
வசந்த கால மாலையில்
ஒரு பிட்சுவின் வெள்ளைத்
தோள் பட்டை
உறங்கிக் கொண்டிருக்கிறது
வசந்தத்தின் இள மாலையில்
ஒரு நரி
தன்னை நல்லவனாக
உருமாற்றிக் கொண்டு விட்டது
ஒரு மெழுகுவர்த்தி பீடத்தில்
இருந்த ஒளி
இன்னொரு மெழுகுவர்த்திக்கு
இடம் மாறியது
வசந்த இளங்காலை
ஒரு பூனைத் தூக்கம்
போட்டு எழுவதற்குள்
இந்த வசந்த காலப் பகல்
இருட்டி விட்டது
தரையின் மீது தலையணை
யாருக்காக
இந்த வசந்த விடியற்காலை
——————————————————
வசந்த கால மழை
——————–
வசந்த கால மழை
கிட்டத்தட்ட இருட்டு
ஆனாலும் இந்நாள்
நீண்டு கொண்டே இருக்கிறது
வசந்த கால மழை
கடற்கரையில் சிறிய கிளிஞ்சலை
நனைக்குமளவு
வசந்த கால மழை
கூரையின் மீது குழந்தையின்
துணிப் பந்து
நனைந்து கொண்டிருக்கிறது
——————————————————
நிலவொளி
மேற்கே நகர
பூ இதழ்களின் நிழல்
கிழக்கே நகர்கிறது
இந்தக் கடுங்குளிரில்
பழைய புத்தர் மரச்சிலை
கணப்பில் எரிக்கத் தோதாயிருக்கும்
ஜென் ஒரு புரிதல் -26
சத்யானந்தன்
பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த “யுவான் மெய்” யின் கவிதைகள் இவை: (கொள்கை என்னும் கவிதை ஜென் தத்துவத்தின் தனிச்சிறப்பை உணர்த்துவது )
மலை ஏறுகையில்
——————–
நான் ஊதுபத்தி ஏற்றினேன்
நிலத்தைப் பெருக்கினேன்
ஒரு கவிதை வருவதற்காகக்
காத்திருந்தேன்
பிறகு நான் சிரித்தேன்
மலையின் மீது
என் உதவியாளர்கள் மீது
ஊன்றியபடி ஏறினேன்
மேகத்தின் பிசுறுகளை
எவ்வளவு அப்பக்கம்
தள்ளி விட்டது பார்
நீல வானம்
அதன் கலையில்
என்னால் ஆசானாக முடியுமா?
மீண்டும் நீர்வீழ்ச்சி அவதானிப்பில்
—————————————-
ஒரு வாழ்க்கை முழுதும் பேசாமல்
“இடி முழக்கமான மௌனம்”
அது “வெய் மா” * வழியாகும்
ஆனால் எந்த பிட்சுவும் கற்பிக்க இயலாத
இடம் ஒன்று இங்கே உள்ளது
சித்தி பெற்ற “தாவ் சீன்” ** னின்
“என்னால் கூற இயலாது” என்னும்
வார்த்தைகள் இப்போது புரிகின்றன
மிகவும் தெளிவாக
இந்தத் தண்ணீர் என் ஆசிரியர்
* – “வெய் மா”- “ழி லு வெய் மா” என்னும் சீனப் பழமொழிக்கு “ஒரு மானைச்
சுட்டிக் காட்டி குதிரை என்று கூறுதல் என்று பொருள்
** -“தாவ் சீன்”- நான்காம் நூற்றாண்டின் புகழ் பெற்ற சீனக் கவி
சற்று முன் நிறைவு செய்தது
——————————–
மூடப்பட்ட கதவுகளுக்குப் பின்னே
ஒரு மாதம்
புத்தகங்களை மறந்து, ஞாபகம் வைத்து
மீண்டும் தெளிவாகி
பீறிட்டு வரும் தண்ணீர்
நிறைந்து ஒரு சுனையாவது போல்
அப்பழுக்கற்ற மௌனத்திலிருந்து
வெளிவருகின்றன கவிதைகள்
பித்து வார்த்தைகள்
———————-
ஆசையில்லாமல் வாழக் கற்க வேண்டுமென்றால்
அதன் மீது ஆசைப் படு
உனக்குப் பிடித்த மாதிரி நட
வெட்டியாயிருப்பதைப் பாடு
மிதக்கும் மேகங்கள்
வெட்டியாய் ஓடும் நீர்
அவற்றின் மூலம் எது?
விரிந்து பரந்த கடலிலும் நதியிலும்
அது எங்குமே கிடைக்காது
கொள்கை
———–
ஒரு பிட்சுவைப் பார்க்கும் போது
நான் பணிவாக வணங்குகிறேன்
ஒரு புத்தரைப்* பார்க்கும் போது
அவ்வாறு செய்வதில்லை
புத்தருக்கு வணங்கினால்
அது அவ்ருக்குத் தெரியாது
ஆனால் நான் ஒரு பிட்சுவுக்கு
மதிப்புக் கொடுக்கிறேன்
அவர் இங்கே நேரில் இருக்கிறார்
அல்லது இருப்பது போலத் தென்படுகிறார்
*- குறிப்பிடப்பட்டுள்ளது புத்தரின் சிலை வடிவம்
“ஹாவ் பா” வை நெருங்குகையில்
————————————-
(அந்த கிராமத்தின் நடுவில் சில ஓட்டு வீடுகளைப்
பார்த்து ரசித்தேன்)
நீரோடை, மூங்கில், மல்பெரி, ஹெம்ப்,
பனியும் மேகமும் சூழ்ந்த குடியிருப்புகள்
மென்மையான மோனமான இடம்
சொற்பமான உழப்பட்ட நிலம்
சில ஓடு வேய்ந்த வீடுகள்
எத்தனை பிறவிகள் நான்
வாழ வேண்டுமோ
இந்த எளிமையை எட்ட
ப்யூட்டோ கோயில்
———————-
மலையின் மடியில்
மறைந்திருக்கும் ஒரு
பொக்கிஷம் போன்ற கோயில்
பைன் மூங்கில்
உள்ளார்ந்த மணம்
புராதன புத்தர் அங்கே வார்த்தையின்றி
அமர்ந்துள்ளார்
ஆன்மீக நதிமூலம்
அவருக்கென பேசும் பீறிட்டு
————————————
பத்தாயிரம் மலைகளால் சூழப்பட்டு
சுற்றப்பட்டு வெளியேற வழியற்று
நீ இங்கே வரும் வரை
இங்கே வர வழியே கிடையாது
இங்கே வந்து விட்டாலோ
போக வழி கிடையாது
நான் கண்டதை எழுதுகையில்
———————————-
உயிரோடு இருப்பவை எல்லாம்
வாழ்ந்தாக வேண்டும்
வசப்பட்டது என்பதில்லாமல்
கிடைத்தவை என்று ஏதுமில்லை
மாயாஜால பெரிய விலங்குகளில் தொடங்கி
நுண்ணிய கிருமிகள் வரை
தன் வழியைத் திட்டமிடும் ஒவ்வொன்றும்
புத்தர், தாவோ வழி பிட்சு ?
தம் உழைப்பில் தளர்ந்து ஒயாமல்
காலையின் தூதுவனாய் சேவல்
ஒரு கானம் பாட இயலாதவனா?
என் பசி தீர நான் உணவுக்குத் திட்டமிடுகிறேன்
எனக்குக் குளிர் எனவே என்னைப் போர்த்துவர்
ஆனால் அம்மாப் பெரிய திட்டங்கள்
உனக்குத் துன்பத்தையே விளைவிக்கும்
உனது தேவைக்கு மட்டும் எடுத்துக் கொள்
அத்தோடு முடிந்தது
ஒரு சிறு படகு
காற்றின் வழி
நீரைக் மென்மையாய்க்
கடைந்து முன் செல்லும்
ஜென் ஒரு புரிதல் – 27
சத்யானந்தன்
பதினெட்டு மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் “ரியோகன்” கவிதைகள் இவை. புற உலகை ஜென் எவ்வாறு காண்கிறது என்பதை “ஒரு நண்பனுக்கு மறுவினை” என்னும் கவிதையில் தெள்ளத் தெளிவாகக் காட்டி இருப்பதைக் காண்கிறோம். பௌத்தத்துக்கும் முந்திய சீன மறை நூலான “ஐ சிங்” பற்றிய இவரது கவிதை இவரது ஆழ்ந்த அறிவுக்கு அடையாளம்.
ஒரு வானம்பாடியின் கானம்
——————————–
ஒரு வானம்பாடியின் கானம்
என்னைக் கனவினின்று வெளியே
இட்டு வரும்
காலை ஒளிரும்
———————————
வசந்தத்தின் முதற் தூறல்
எத்தனை மகிழ்வாய்
பெயரில்லா மலை
———————————
கங்கையின் மணற் துகள்கள்
போல் நீ
எத்தனை உட்கொண்டாலும்
அது ஜென்னின் ஒரு
பா பிடிபடுவதற்கீடு ஆகாது
பௌத்ததின் மர்மம் வேண்டினாய் எனில்
அது இது தான்
எல்லாம் உன் மனதில் உள்ளது
———————————-
வசந்தத்தின் தொடக்க நாட்களில்
வானம் நீலமாய்
கதிரவன் பெரியதாய் உஷ்ணமாய்
எல்லாமே பசுமையாய் மாறும்
பிட்சுவின் கப்பரையுடன்
என் ஒரு நாள் உணவுப் பிச்சை கேட்க
நான் கிராமம் நோக்கிச் செல்வேன்
கோயிலின் வாயிலில் குழந்தைகள்
என்னைச் சூழ்வர் குதூகலித்து
என் கைகளைப் பற்றி நான்
நிற்கும் வரை
கப்பரையை ஒரு வெள்ளைப் பாறையின்
மீது வைத்து
என் பையை ஒரு மரக்கிளையில் மாட்டி விடுவேன்
முதலில் நாங்கள்
நீண்ட புற்களைப் பற்றி
இழுபறி விளையாடுவோம்
பின் ஒரு உதை பந்தை மாற்றி மாற்றி
காற்றில் உதைத்துப் பாடுவோம்
விளையாடுவோம்
நான் எத்த அவர் பாட
அவர் உதைக்க நான் பாட
காலம் மறந்து போகும்
மணிகள் பறக்கும்
கடந்து செல்வோர் என்னைச் சுட்டி
“நீ ஏன் ஒரு முட்டாள் போல நடந்து கொள்கிறாய் ?” என்பர்
பதில் சொல்லாமல் தலையை அசைப்பேன்
நான் எதேனும் சொல்லலாம். ஆனால் ஏன்?
என் மனதில் உள்ளது என்ன என்று நீ கேட்டால்
காலத்தின் துவக்கம் முதல் ‘இது தான்; இது மட்டும் தான்’
————————————————–
நான் இன்று அங்கே
போயாக வேண்டும்
நாளை பிளம் மலர்கள்
இங்கொன்றும் அங்கொன்றுமாகிவிடும்
————————————–
ஒரு நண்பனுக்கு மறுவினை
———————————
விடாப்பிடியான மூடத்தனத்துடன்
நான் தனியே வாழ்கிறேன்
மரங்களின் மூலிகைகளின் தோழமையுடன்
தவறுகளினின்று சரியைக் கற்க இயலாத அளவு
சோம்பேறியாய்
பிறரைக் கண்டுகொள்ளாமல்
என்னைப் பார்த்து நானே
நகைக்கிறேன்
எலும்பான முழங்கால்களை உயர்த்தி
நான் நீரோடையைக் கடக்கிறேன்
என் கையில் ஒரு சாக்குப் பை
வசந்ததின் நல்லாசியுடன்
இவ்வாறு வாழ்ந்து
நான் எல்லா உலகத்துடனும்
சாந்தத்தில் இருக்கிறேன்
உன் விரல்கள் நிலவைச் சுட்டும்
ஆனால் நிலவு உதிக்கும் வரை
அவை பார்வை அற்றவை
நிலவுக்கும் விரலுக்கும் என்ன தொடர்பு?
அவை தனித் தனி வடிவங்களா
அல்லது பிணைக்கப் பட்டவையா?
அறியாமை என்னும் ஆழ்கடலுள் அமிழ்ந்த
தேடலின் துவக்கத்திலுள்ளோருக்கான கேள்வி இது
ஆனால் படிமத்தைத் தாண்டிப் பார்த்தால்
அங்கே நிலவும் இல்லை விரலும் இல்லை
இலையுதிர்கால நிலவு
————————–
நிலவு எல்லாப் பருவங்களிலும் வரும்
ஆனால் அது பனிக்காலத் தொடக்கத்தில் தான்
ஆகச் சிறந்து விளங்கும்
இலையுதிர் காலத்தில் மலைகள் விரிந்திருக்கும்
நீர் தெளிவாக ஓடும்
எல்லையற்ற வானில் ஒரு பிரகாசமான வட்டம்
ஏனெனில் ஒவ்வொன்றும் தனது இருப்பால்
பரந்து ஊடுருவி நிறைந்திருக்கிறது
முடிவற்ற வானம் மேலே; இலையுதிர்கால பனி என் முகத்தின் மீது
அபூர்வமான என் உதவியாளர்களுடன் நான்
மலைகளில் சுற்றித் திரிகிறேன்
உலகின் தூசியின் ஒரு துகள் கூட இங்கில்லை
நிலவின் பிரகாசமான ஒளிக்கதிர்கள்
மற்றோரும் நிலவை அவதானிப்பர் என்றே நினைக்கிறேன்
அது எல்லா தரப்பு மக்களுக்கும் ஒளி வழங்கும்
இலையுதிர்காலத்துக்குப் பின் இலையுதிர்காலமாக
நிலவு வந்து போகிறது
அந்தமின்மைக்காக மக்கள் அதை வியந்து நோக்குவர்
புத்தரின் மொழிகளும் “எனோ” *வின் போதனைகளும்
நிச்சயமாக இதே போன்ற நிலவுக்குக் கீழே தான் நிகழ்ந்தன
நான் இரவு முழுதும் நிலவே கவனமாயிருக்கிறேன்
எந்த வழிப்போக்கன் மிக அதிகமாக நிலவொளியில்
சயனித்திருப்பான்?
யாருடைய வீடு அவ்வொளியை அதிக பட்சமாய் விழுங்கும்?
(*எனோ என்பது ஜப்பானியப் பெயர். இவர் ஹுய் நெங் என்னும் சீன ஜென் ஆசான்)
“ஐ சிங்”* சொல்கிறது மகிழ்ச்சி என்பது இவற்றின் கலவை
——————————————————————
உஷ்ணம்-குளிர்ச்சி
நல்லது-கெட்டது
கருப்பு-வெள்ளை
அழகு-விகாரம்
பெரியது-சிறியது
மேதை-மூடத்தனம்
நீண்டது-குட்டையானது
பிரகாசம்-இருள்
உயர்வு-தாழ்வு
பகுதி-முழுமை
ஓய்வு-விரைவு
அதிகரிப்பு-குறைவு
தூய்மை-அழுக்கு
மெது-விரைவு
(ஐ சிங் என்பது சீனத்தின் மிகவும் புராதனமான மறை நூல். மாற்றங்கள், தனி மனித மற்றும் பிரபஞ்ச அளவில் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என வான சாஸ்திரமும் ஆன்மீகமும் இணைந்த நோக்கு உடையது. ஒரு எண் கோணம் இதன் மையப் பொருளாகும். ஒவ்வொரு கட்டத்திலும் பின் வரும் எட்டு சக்திகள் அல்லது இயற்கை வடிவுகள் வருகின்றன. பூமி, மலை, நீர், காற்று, இடி, தீ, ஏரி, வான்வெளி. ஐ சிங் கி.மு 2000 அல்லது 500 என இரு கருத்துகள் உண்டு)
தாமரை
———
முதலில் தெற்கு சொர்க்கத்தில்
தோன்றிய தாமரை
நம்மைப் பல யுகங்களாக
மகிழ்வு படுத்தியிருக்கிறது
அதன் வெள்ளை இதழ்கள்
பனித்துளி போர்த்தியும்
கரும்பச்சை இலைகள்
குளம் முழுதும் பரவி
அதன் மணம் படித்துறை வரைக்கும்
விரிந்திருக்கும்
குளிர்வாய் கம்பீரமாய்
அது சேற்றிலிருந்து மேலெழும்புகிறது
மலைகளுக்குப் பின்
சூரியன் மறைந்து விட்டது
ஆனால் நான்
இருளிலிருந்து கிளம்ப முடியாமல்
சிறைப்பட்டு விட்டேன்
செடிகளும் பூக்களும்
————————-
என் குடிலைச் சுற்றி
செடிகளையும் பூக்களையும் வைத்தேன்
நான் காற்றின் விருப்பத்திற்கு
அடி பணிகிறேன்
———————————
திருடன் ஒன்றை விட்டுச் சென்றான்
நிலவை என்
சாளரத்தருகில்
———————————
காற்றுகள் நின்று விட்டன
ஆனால் மலர்கள் விழுந்து கொண்டே
பறவைகள் அழைக்கும்
ஆனால் மௌனம் ஒவ்வொரு பாடலையும்
ஊடுருவும்
———————————
மர்மம்! அறியவியலாதது
கற்க இயலாதது
கனோனின் (போதிசத்துவரின்) நெறி
———————————-
இவ்வுலகு
மலையில் அமிழும் எதிரொலி
ஏதுமற்றது
உண்மையானதல்ல
மென்பனிக்குள்
முவாயிரம் சரடுகள்
அச்சரகுகளுக்குள்
வீழும் மென்பனி
அப்பனி என் குடிலை
மூழ்கடிக்கும் போது
என் இதயமும்
விழுங்கப் பட்டு விடுகிறது
————————————
ஒரு தீயை வளர்க்க
இலையுதிர் காலம்
சருகுகளைச்
சேர்த்து விட்டுச் சென்றது
————————————-
எண்ணங்கள் எல்லாம் தீர்ந்தபின்
நான் காட்டுக்குள் சென்று
ஒரு இடையனின்
தேட்டத்தைச் சேகரிப்பேன்
சிறிய நீரோடை
காட்டுப் புதர்கள் ஊடே
வழி காண்பது போல்
நானும் சத்தமின்றி
தெளிவானவனாய்
வெளிப்படையானவனாய்
மாறுகிறேன்
————————————–
கவிதைகள் கவிதைகளென்று யார் சொன்னது?
என் கவிதைகள் கவிதைகள் ஆகா
என் கவிதைகள் கவிதைகளில்லையென்று
நீ அறியும் போது
நாம் கவிதை பற்றிப் பேசலாம்
—————————————
ஜென் ஒரு புரிதல் – பகுதி-28
சத்யானந்தன்
பகவத் கீதையின் ஆகச்சிறந்த தனித்தன்மை அது சொல்லப் பட்டிருக்கும் விதம் தான். (காந்தியடிகளுக்கே அதன் சில பகுதிகள் ஏற்புடையாதில்லை.) வேதாந்தம், இந்தியத் தத்துவ மரபு பற்றிய புரிதலுக்காக அதை வாசிப்பவர் விமர்சன நோக்கில் வாசித்தாலும் வாதப் பிரதி வாத அடிப்படையில் அது அமைந்திருப்பதைக் கண்டு வியக்காமல் இருக்க இயலாது. ஒரு நிலையில் முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறாயே என்று அர்ச்சுனன் கிருஷ்ணரைக் கேள்வி கேட்பதை நாம் காண்கிறோம். பெரியப்பா, சித்தப்பா, சகோதரர், குரு என்னும் உறவுகளைப் புறந்தள்ளி அவருடன் போரிடுவதும், போரில் அவரை வதம் செய்ய நேரிடுவதும் அர்ச்சுனனுக்கு ஏற்புடையதாயில்லை.
அந்த நிமிடம் அர்ச்சுனனுக்கு வேறு வழி இருந்ததா? இல்லை. அதே சமயம் அவனுள் எழுந்த கேள்விகள் மனசாட்சி உள்ள யாருக்குமே தோன்றக்கூடியவையே. ஆனால் அந்த உறவுகள் அமைந்ததும், பின்னர் போர் என்னுமளவு எதிர் எதிர் முனையில் அந்தக் குடும்பம் பிரிந்து நின்றதும் அவனால் நிர்ணயிக்க இயலாப் பின்னணி.
நமது பின்னணி மட்டுமல்ல. நம்மால் கட்டுப்படுத்த இயலாதவைதான் கிட்டத்தட்ட பிறர் சம்பந்தமான யாவுமே. கட்டுப்படுத்தக் கூடியது நம் மனம் மட்டுமே. அதைக் கட்டுப்படுத்துவது சாத்தியமே இல்லை என்று தான் எவ்வளவு முயன்றாலும் தீர்மானமாய்த் தெரிகிறது.
நாம் ஏனையருடனும், ஏனையர் நம்முடனும் இணையும் புள்ளி நதிமூலம் போல நம் பிரச்சனைகள் அனைத்துக்கும் துவக்கமான அல்லது ஆதாரமான புள்ளியாயிருக்கிறது. அப்புள்ளி மாறிக் கொண்டே இருப்பதை நாம் காண்கிறோம். அந்த நிலையின்மை ஒன்றே நிலையாய் இருக்கிறது. அது பதட்டத்தை, தற்காலிக சந்தோஷத்தை, துக்கத்தை, ஆதரவை, எதிர்ப்பை, பாதுகாப்பை, பயத்தை என மாறி மாறி வழ்ங்கிக் கொண்டே இருக்கிறது. உதைக்கும் கால்கள் எந்த அணி என்றாலும் கால் பந்தாய் உதை படும் அவஸ்தை தனிம்னித வாழ்வின் நீங்காத தன்மையாகி விடுகிறது.
ஒருவனின் சறுக்கலை, ஒரு விபத்தை, மரணத்தைக் காணும் போது நிலையின்மை பற்றிய ஒரு நிதரிசனம் கிடைக்கிறது. ஆனால் புத்தருக்கு நிகழ்ந்தது போல ஓர் ஒப்பற்ற தேடலின் துவக்கமாக அது இருப்பதில்லை. நிலையின்மை பற்றிய புரிதல் சோகமயமானது என்னும் தவறான அணுகு முறையில் நாம் தொடர்ந்து செல்கிறோம்.
சோகமயமானதாய் நிலையின்மை தென்படுவது நமது பிரமையின் பிள்ளையான மாயத் தோற்றமே. மாற்றம் என்னும் பஞ்சின் நூல் வடிவமே நிலையின்மை. பிறப்பும் , மாற்றங்களும் மரணங்களும் சமமாய் நாம் உணர இயலாத ஏதோ ஒரு ஒழுங்கில் உயிர்த்துடிப்புடன் நிகழ்ந்த வண்ணமே உள்ளன. மாற்றத்தை ஏற்க மனமில்லை நமக்கு. நிலையின்மை சோக வடிவமானதன்று. உயிர்த்துடிப்பின் வடிவமானது. அதை இயற்கையின் ஏனைய உயிரினங்கள் யாவும் இயல்யாய் ஏற்று இயங்குவைக் காண்கிறோம். பதினெட்டு மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் “கொபயஷி இஸ்ஸா” வின் கவிதைகளில் இதைத் தெள்ளத் தெளிவாய்க் காண்கிறோம்.
இலையுதிர்காலக் காற்று
மலையின் நிழல்
அசையும்
——————————-
புத்த விதி
ஒரு இலையின் மேல்
பனித்துளியாய் ஒளிரும்
——————————-
மயான விளக்கொளியில்
சோறு உண்பது
முழுதும் நிர்வாணமாய்
——————————–
பூச்சிகளே அழாதீர்
காதலர்கள், நட்சத்திரங்கள் கூடப்
பிரிவர்
———————————
சரியாய் நடப்படாத
நெற் பயிர்
மெதுவாய் மெதுவாய்.. பசுமை!
———————————
முதல் விட்டிற் பூச்சி
ஏன் விரட்ட வேண்டும்
அது இஸ்ஸா
———————————
நெருஞ்சி முட் புதரிலிருந்தா
இவ்வளவு அழகிய பட்டாம் பூச்சி
தோன்றியது?
————————————–
என் வீட்டில் எலிகளும்
விட்டிற் பூச்சிகளும்
இணக்கமாய் இயங்கும்
————————————–
செர்ரிப் பூ நிழலில்
அன்னியம் என்று
யாருமில்லை
————————————–
ஊதாப்பூந் தோட்டத்துக்குள்
ஒரு தோள் தெரிய
புனிதன்
————————————–
இருப்பினால்
இங்கே இருக்கிறேன்
பனிப் பொழிவில்
————————————–
மொகுபோஜிக் கோவில்–
விட்டிற் பூச்சிகள்
குரைக்கும் நாயிடமும்
வரும்
————————————-
எப்போதும் மறவாதே
நாம் நரகத்தின் மீது
நடக்கிறோம்
பூக்களின் மீது
விழி பதிய
————————————-
இப்போது துவங்கும்
வருங்கால புத்த ஆட்சி
வசந்த பைன்கள்
————————————-
பிரதிபலிக்கும்
ஈசலின் கண்ணில்
மலைகள்
————————————-
நெல் நாற்றுகள்
முதிர்ந்த புத்தரின்
களைத்த முகம்
————————————-
வசந்தம் துவங்கும்
இவ்வைம்பது வயதில்
குறைந்த பட்சம்
நான் மனிதமாய்
இருக்கிறேன்
————————————-
மோனம்
ஏரியின் ஆழத்தில்
அலை மோதும்
மேகங்கள்
————————————-
மலையைப் பார்த்த படி
ஒரு வண்ணத்துப் பூச்சியை
நசுக்கி
————————————
தொலைவு மலையின்
மலர்க் கூட்டம்
ஒளி சிந்தும்
கிழக்குச் சாளரம்
————————————
மனிதர் இருக்கும் இடத்தில்
நீ பூச்சிகளைக் காண்பாய்
புத்தர்களையும்
————————————
மலைக் கோயில்
பனியின் ஆழத்தில்
ஒரு மணி
————————————
பெரு நதியை நோக்கி
வீசிச் செல்லப்பட்டன
மிதந்தன
செர்ரி மலர்கள்
————————————
வசந்தப் பகல்
கிழக்கு மலைகளை
அஸ்தமனத்துக்கு பிறகும்
காண இயலும்
————————————
புற்றிசலின் இறகுகள் கூட
நாளுக்கு நாள்
மூப்படையும்
————————————
அமைதியும் மோனமும்
மலையை அவதானிக்கும்
தவளை
————————————
சூரியனைப் பார்க்காமலேயே
குளிர்காலச் செம்பருத்தி
பூக்கும்
————————————
புத்தரின் உடல்
அதை ஏற்கும்
குளிர்கால மழை
ஜென் ஒரு புரிதல்- பகுதி 29
சத்யானந்தன்
கல்வியின் மகத்துவம் யாரும் அறிந்ததே. புற உலக வாழ்க்கையில் மிகப் பெரிய சக்தி கல்வியறிவே. தெரிதலும், அறிதலும், புரிதலும் அவற்றை மனதில் இருத்தி ஒரு திசையைத் தேர்ந்தெடுத்து மேற் செல்லலும் தரும் பாதுகாப்பு இணையற்றது. இந்தப் பத்திரமே ஒரு சிறை மற்றும் தன்னளவில் ஒரு தேக்க நிலை என்னும் பரிமாணம் தென்படும் தருணம் ஆன்மீகத்தின் துவக்கமாக அமைகிறது. அனேகமாக அது ஒரு கர்வ பங்கம் அல்லது கையறு நிலையினின்று பிறக்கும்.
அப்படித் துவங்கும் ஆன்மீகம் பிடிபடும் கால கட்டம் இது வரை எதிர் கொள்ளாத போராட்டமாக இருக்கும். அந்தத் தனிமை, தாயின் வயிற்றில் இருந்த நிலைக்கு ஒப்பாகும். முடிவில் ஒரு புதிய பிறவியாக வெளிவருவது போராட்டமே. ஆனால் அது வலிமையை நிரூபித்து வெல்வது அன்று. தெளிவில் நிலைப்பதே அது. என்ன தெளிகிறோம்? எப்படி அது நிகழும் என்பது குறித்த ஒரு ஒப்பற்ற பதிவைப் பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டின் “ஸூ யுன்” னின் பதிவுகளில் காண்கிறோம். “தர்மத்தைத் தேடி” என்னும் கவிதை ஒரு திறவு கோலாகப் பேசும்.
என் மனதை நான் உற்பத்தி செய்த முதல் நாள் பற்றிய உணர்வுகள்
______________________________________________
அறுபது வருடங்கள் முன்பு “கர்மா” வினால் இழுக்கப்பட்ட நான்
வாழ்க்கையைத் தலை கீழாய்ப் புரட்டிப் போட்டேன்
நெடிதுயர்ந்த சிகரங்களை
எட்ட நேரடியாய் மலை ஏறத் தலைப் பட்டேன்
என் விழிகளுக்கிடையே ஒரு கத்தி தொங்கும்
முவ்வுலகும் தூயவை
வெற்றுக் கைகளில்
ஒரு கதிரருவாளை வைத்து
நான் நட்சத்திர வெளியை
சமன் செய்ய முயல்கிறேன்
‘அறியும் மனம் என்னும் பெருங்கடல்’ வற்றும் போது
முத்துக்கள் தாமே ஒளிர்ந்து வெளிப்படும்
அண்ட வெளி தூசியாய்த் தகரும் போது
நிலவு தன்னிச்சையாய்த் தொங்கும்
சொர்க்கத்தினுள்ளே வலை வீசி
நான் ‘டிராகனை’யும் ‘ஃபீனிக்ஸை”யும்
வசப்படுத்தினேன்
வான்வெளியில் நான் தனியே நடக்கிறேன்
இறந்த காலத்துடன் அதன்
மக்களுடன் இணைந்த படி
________________________________________________
வேட்கையைத் தாண்டிச் செல்லல்
_______________________
காட்டுத்தனத்தை விட்டு விடும்
முயற்சியில் காட்டின் ஒரு பகுதியாகி விட்டாய்
குரங்குப் பிடியை விடச் செய்யும் போராட்டமே
ஒரு முரட்டுப் பிடியாகும்
சரி எப்படி கட்டுப்பாடு வைத்து வேட்கையைத்
தாண்டிச் செல்லப் போகிறாய்?
உன் கண்களைத் திற
உன் மண்டை ஓட்டோடு பிறந்த
அதே இரண்டு கண்களைத் தான்…
________________________________
புத்தரின் இதயம்
___________
அலைகளைப் போல்
முன்னும் பின்னும் துரத்திச் செல்ல
வேண்டியதில்லை
கரை தாண்டி வடிந்தோடிய அதே
நீர்தான் ஓடுவதும்
திரும்பி சுற்றி தண்ணீரைத் தேடுவதில்
அர்த்தமில்லை
உன்னைச் சூழ்ந்து தண்ணீர்
எல்லா திசையிலும் ஓடுகிறது
புத்தரின் மனமோ மக்களின் மனமோ
வித்தியாசம் என்ன இருக்கிறது?
________________________________
“ஷாங்க்ஸி” யின் “டைபோ” மலையின் கண்ணாடிச் சுனை
_______________________________________
தண்ணீரும் என் மனமும் பூரணமான
சமநிலைக்கு வந்து விட்டன
சூரியனும் நிலவும் அதில் ஒளிரும்
இரவில் நீர் மட்டத்தில்
நிலவின் பெரிய முகத்தைக் காண்கிறேன்
இந்த பிம்பத்தின் அசலை நீ சந்தித்திருக்க மாட்டாய்
கீச்சிடும் எல்லா சத்தமும் நிசப்ததினுள் சென்று மறையும்
அவ்வப்போது பனியின் புகை கண்ணாடியின் மீது மிதக்கும்
அது என்னைச் சற்றே குழப்பும்
ஆனால் என் கரிசனங்களை மறப்பதை மறக்குமளவு அல்ல
________________________________________
தர்மத்தைத் தேடி
________________
தர்மத்தைத் தேடி நீ பத்தாயிரம் படிகள் ஏறி வந்து விட்டாய்
ஏடுகளில் இருந்து பிரதி எடுத்து பிரதி எடுத்து
எத்தனை பிரதிகள் எடுத்திருப்பாய்
‘டங்க்’ கின்* ஆழமும் “ஸங்க்”** கின் விரிவும்
பெரிய மூட்டையாய்
இதோ பார்! நான் உனக்கென ஒரு
காட்டுப் பூங்கொத்தைக் கொண்டு வந்திருக்கிறேன்
இப்பூக்கள் அவ்வேடுகளின் பொருளையே கொண்டவை
ஆனால் எடுத்துச் செல்ல லேசானவை
*’டங்க்’ வம்ச ஆட்சி காலம் கிபி 7ம் நூற்றாண்டில் இருந்தது.
யுவான் ஸ்வாங்க் இந்தியப் பயணம் செய்து பௌத்த கிரந்தங்களை
சீன மொழியில் கொண்டு வந்த நூல்கள் ‘டங்க்’ என்னும் மன்னர்
வம்சப் பெயருடன் பொருத்திக் குறிப்பிடப் பட்டுள்ளன.
**’ஸங்க்’ என்று குறிப்பிடப்படுவது ‘ஸங்க்’ வம்சம். இவர்களது காலம்
ஒன்பதாம் நூற்றாண்டுக்குப் பிந்தையது. இவர்களுள் பதினோராம்
நூற்றாண்டின் தொடக்க 25 ஆண்டுகள் ஆட்சி புரிந்த ‘சென் ஸங்க்’
என்னும் அரசர் தாவோ மற்றும் பௌத்தத்தில் பிற மதங்கள் மீது
வெறுப்புக் காட்டும் பகுதிகளை நீக்கி ஏனயவற்றைத் தொகுக்கச்
செய்தார். இங்கே குறிப்பிடப் படுவது அந்த நூல்களே.
____________________________________________
இது ஓர் அழகிய உண்மை
__________________
இது ஓர் அழகிய உண்மை
துறவிகளும் சாதாரண மனிதரும்
தொடக்கம் முதலே ஒன்றே ஆவர்
என்ன வேறுபாடு என்றாய்வது
தாம்புக்கயிறு இருக்கும் போது
ஒரு நூலை இரவல் கேட்பது போல
ஒவ்வொரு தர்மமும் மனதில் அறியப் படுகிறது
மழைக்குப் பிறகு மலையின் வண்ணங்கள்
பளிச்சிடும்
விதியின் பிரமைகளுடன் நீ பரிச்சயமாகி விட்டால்
உன் மசிக் கிணறு
பிறப்பின் மரணத்தின் அனைத்தையும்
கொண்டிருக்கும்
_____________________________________________
ஜென் ஒரு புரிதல்- பகுதி 30
சத்யானந்தன்
இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘திக் நா ஹன்’ னின் பெயரிடப்படாத “நாளை நான் கிளம்புகிறேன் என்று சொல்லாதே” என்று துவங்கும் கவிதையில் போர், அகதிகள், அரசியல், அதிகாரம் பற்றிய குறிப்புகளைக் காண்கிறோம். ஆன்மீகத் தேடலும் அதில் நிலைப்பதும் கொடுப்பினை சம்பந்தப்பட்டது என்று எண்ணுவது வசதியானதாக இருக்கலாம். அது திடமான முடிவை அடிப்படையாகக் கொண்டது. இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘திக் நா ஹன்’ னின் பதிவுகளில் ஞானம், மனித நேயம், பிரபஞ்சம் முழுவதையும் இயக்கும் தெய்வத்தின் மீது கொண்ட பற்று இவை அனைத்தையும் காண்கிறோம். அத்வைதக் கூறுகளும் உள்ளன. தமது பதிவுகளில் புத்தர் தம்மைத் தாமே எப்படிக் குறிப்பிட்டுக் கொண்டார் என்பதை “ஒருவரை ஒருவர் தேடிய படி” என்னும் கவிதையில் காண்கிறோம். ‘ததாகத் ‘என்ற அந்தப் பெயருக்கான பொருளைக் கண்டால் ஒரே சொல்லில் ஆன்மீகத்தின் சாரம்சமே வந்துள்ளதைக் கண்டு வியக்கிறோம். ஜென் சிந்தனைத் தடம் ஒரு மறை நூல் அல்லது தண்டவாளம் போன்று வரையறுக்கப்பட்டதல்ல என்பது இவரை வாசிக்கும் போது தெளிவாகிறது.
ஆழ் சிந்தனை
__________
இன்று பௌர்ணமி
நாம் பிரார்த்தனையில் நட்சத்திரங்களை அழைப்போம்
மன ஒருமையின் சக்தி
பிரகாசமான ஒரு முனைப்பட்ட மனதால் பார்க்கப் படும் போது
பிரபஞ்சத்தையே அசைக்கிறது
அச்சப் பெருங்கடல் பூமியில்
வெள்ளமென மேலெழுவைத்காண
உயிரினங்கள் அனைத்தும்
இங்கே வந்துள்ளன
நள்ளிரவு மணியோசை கேட்டதும்
பத்து திக்கிலும் உள்ள ஒவ்வொருவரும்
கை கோர்த்து மகாகருணா* தியானத்தில் நுழைகின்றனர்
வாழ்க்கையின் காயங்களை
ஆற்றும் தூய நீரோட்டமாய்
நேயம் மனதினின்று ஊற்றெடுக்கும்
மனமென்னும் மலையின் ஆக உயர்ந்த சிகரத்தில் இருந்து
புண்ணிய நீர் நெல் வயல்களையும்
ஆரஞ்சுத் தோப்புகளையும் தாண்டிக்
கீழ் நோக்கிப் பெருகும்
ஒரு விஷப் பாம்பு புல்நுனியில் உள்ள இந்த
அமிழ்தத்தின் ஒரு துளியைப் பருக
அதன் நாக்கில் உள்ள விஷம் மறையும்
மாறனின் அம்புகள்
வாசப் பூக்களாய்ப்
பரிணமிக்கின்றன
என்ன வியப்பு! மருந்தாகும் அந்த நீர்
நிகழ்த்திய ஒரு வியக்கத்தக்க மாற்றம்
ஒரு குழந்தை தன் கையில்
நச்சுப் பாம்பைப் பிடித்துக் கொண்டிருக்கிறது
அவலோகிதா** வின் காட்டு மரக் கிளையிலும்
அல்லது என் இதயத்திலும்
அந்த மூலிகை நீர் ஒன்றே
இன்றிரவு எல்லா ஆயுதங்களும் நம் காலடியில் வீழும்
தூசியாகும்
ஒரு மலர்
இரு மலர்கள்
லட்சம் சிறிய மலர்கள்
பச்சை வயல்களில் தோன்றும்
முக்தியின் கதவு
என் குழந்தையின் கள்ளம் கபடமற்ற
புன்னகையுடன் திறக்கும்
____
மகாகருணா* – தானே ஒன்று பட்ட ஒரு குழு எந்த அமைப்பாகவும் இல்லாமல் விவாதங்கள், தியானம் , மற்றும் ஐயம் போக்கும் சம்பாஷணைகளைச் செய்யும் முறைக்கு மகாகருணா என்று பெயர்.
அவலோகிதா**– போதிசத்துவரைக் குறிப்பது. நான்காம் நூற்றாண்டில் ஆண் வடிவில் வழிபடப்பட்ட அவரது வடிவம் படிப்படியாக மாறி பன்னிரண்டாம் நூற்றாண்டில் பல கைகளையுடைய பெண் தெய்வமாக, காக்கும் மற்றும் சக்திவடிவமானவளாக வழிபடப்பட்டு வருவது. இன்றும் சீனா, கொரியா, ஜப்பான் மற்றும் மலேஷியாவில் காணப்படும்.
___________________________________________
பௌர்ணமி விழா
_____________
வடிவம் சூன்யத்துடன் மோதும் போது என்ன நிகழும்?
பார்வை பார்வைக்கு அப்பாற்பட்டதில் நுழையும் போது என்ன நிகழும்?
என்னுடன் வா நண்பா
நாம் ஒன்றாக கவனிப்போம்
இரு கோமாளிகள் வாழ்வும் மரணமும்
மேடை மீது நாடகம் செய்வதைப் பார்த்தாயா?
இதோ இலையுதிர் காலம் வருகிறது
இலைகள் முதிர்ந்து விட்டன
அவை பறக்கட்டும்
மஞ்சள் சிவப்பென வண்ண விழா
கிளைகள் அவற்றை
கோடையிலும் வசந்தத்திலும்
பற்றிக் கொண்டிருந்தன்
இன்று காலை விட்டு விட்டன
கொடிகளும் விளக்குகளுமாய்
பௌர்ணமி விழாவுக்கு எல்லோரும் இங்கே
வந்து விட்டார்கள்
நண்பா நீ எதற்காகக் காத்திருக்கிறாய்?
பிரகாசமான நிலா நம் மேலே ஒளிர்கிறது
மேகங்களும் இன்று இல்லை
விளக்குகளையும் தீயையும் பற்றி ஏன் விசனப்பட வேண்டும்?
இரவு உணவு சமைப்பதைப் பற்றி எதற்குப் பேச வேண்டும்?
யார் தேடுகிறார்? யார் கண்டுபிடிக்கிறார்?
நாம் இரவு முழுவதும் நிலவை அனுபவிப்போம்
____________________________________________
ஒருவரை ஒருவர் தேடிய படி
___________________
குழந்தைப் பருவத்திலிருந்து
உலகம் போற்றுபவனே உன்னை நான் தேடுகிறேன்
என் முதல் மூச்சில் உன் அழைப்பைக் கேட்டேன்
பின் உன்னைத் தேடத் துவங்கினேன் அருள் பெற்றவனே
விபரீதமான பல வழிகளில் நான் நடந்திருக்கிறேன்
எத்தனையோ அபாயங்களை எதிர் கொண்டிருக்கிறேன்
விரக்தி, பயம், நம்பிக்கை, நினைவுகள் அனைத்தையும்
தாக்குப் பிடித்தேன்
கரடு முரடான காட்டு வழிகளில் போராடித் திரிந்து
விரிந்த பெருங்கடல்களில் பயணித்து
அதி உயரச் சிகரங்களைக் கடந்து
மேகங்களில் கலந்து மறைந்திருகிறேன்
தனியே மரணமுற்று
புராதனப் பாலைவனங்களின் மணல் வெளிகளில்
உயிரற்றுக் கிடந்திருக்கிறேன்
கற் கண்ணீர் துளிகளை
என் இதயத்தில் ஏந்தி இருக்கிறேன்
அருளாளனே நான் கண்ணுக்கெட்டா நட்சத்திரக் கூட்டத்து
ஒளியில் மின்னும் பனித்துளிகளை அருந்தும் கனாக் கண்டிருக்கிறேன்
சொர்க்க மலைகளில் என் காலடிகளை விட்டுச் சென்றேன்
‘அவிசி’ ***நரகத்திலிருந்து அலறி இருக்கிறேன்
அவநம்பிக்கைப் பித்தாகி
அவ்வளவு பசி அவ்வளவு தாகம்
லட்சக்கணக்கான பிறவிகளில்
நான் உன்னைக் காண ஏங்கினேன்
எங்கே பார்க்க வேண்டுமென்றறியாமல்
இருப்பினும் உன் அருகாமையை
ஒரு வியத்தகு நிச்சயத்துடன் உணர்ந்திருக்கிறேன்
நான் அறிவேன்
ஆயிரக்கணக்கான பிறவிகளில் நானும் நீயும் ஒன்றாகவே இருந்தோம்
நம்மிருவருக்கிடையே ஒரு எண்ணக் கீற்று மட்டுமே இடைவெளி
நேற்று நடை செல்லும் போது
பழைய பாதையில் இலையுதிர்கால இலைகள் சிதறிக் கிடப்பதைக் கண்டேன்
வாயிலுக்கு மேலே பிரகாசிக்கும் நிலவு ஒரு
பழைய நண்பரின் பிம்பமாய்த் திடீரெனத் தோன்றியது
எல்லா நட்சத்திரங்களும் நீ அங்கே இருக்கிறாய் எனக் கட்டியம் கூறின!
இரவு முழுவதும் நேய மழை பெய்தபடி இருந்தது
மின்னல் என் சாளரம் வழியே வெட்டியது
வானும் பூமியும் சமரிடுவது போல்
ஒரு புயல் வீசியது
இறுதியாக மழை நின்றது மேகங்கள் விலகின
நிலவு சாந்த ஒளி வீசி வந்தது
வானையும் பூமியையும் அமைதிப்படுத்தியபடி
நிலவின் கண்ணாடியில் பார்த்த போது
நான் தெரிந்தேன் அருளாளனே
என்ன விசித்திரம்! நீயும் தெரிந்தாய்
சுதந்திரம் என்னும் நிலவு
எனக்கு நான் இழந்தவை என எண்ணியிருந்ததையெல்லாம்
திரும்ப வழங்கி விட்டது
அந்த நொடியிலிருந்து
ஒவ்வொரு நொடியும்
ஒன்றுமே போய் விடவில்லை என்று கண்டேன்
திரும்பப் பெற ஏதுமில்லை
ஒவ்வொரு பூ, ஒவ்வொரு கல் ஒவ்வொரு இலையும்
என்னை அடையாளம் காண்கின்றன
நான் திரும்பும் இடமெல்லாம் உன் புன்னகையைக் காண்கிறேன்
பிறப்பில்லை மரணமில்லை என்னும் புன்னகை
நிலவென்னும் கண்ணாடியில் பார்த்த அதே புன்னகை
நீ மேரு மலை போல அங்கே அமர்ந்திருப்பதைப் பார்க்கிறேன்
என் மூச்சு போல அமைதியாய்
ஒருபோதும் ஜ்வாலை விடும் தீப்புயல் நிகழாதது போல
முழு சுதந்திரத்தில் அமைதியில் அமர்ந்த படி
இறுதியாக உன்னைக் கண்டுபிடித்தேன் அருளாளனே
என்னையே கண்டு பிடித்தேன்
அங்கே தான் அமர்வேன்
ஆழ்ந்த நீல வானம்
பனிமுடி சூட்டிய மலைகள் தொடுவான் மீது சித்திரமாய்
ஒளிரும் செங்கதிரவனும் மகிழ்வுடன் பாடும்
புண்ணியனே நீயே என் முதற் காதல்
அவ்வன்பு எப்போதும் தூயதாய், நிகழ்வில், புத்தம் புதியதாய்
இறுதியானது என அழைக்கப்படும் பிரியம் எனக்குத் தேவையில்லை
எண்ணற்ற தொல்லைமிகுந்த வாழ்வுகளின் ஊடாகப்
பெருக்கெடுக்கும் நலத்தின் மூலம் நீயே
உன் ஆன்மீக நீரூற்றின் நீர் என்றும் தூயது
தொடக்கம் போலவே
சாந்தியின், உறுதியின், அக விடுதலையின் ஆதி நீயே
நீதான் புத்தர், ததாகத்****
என் ஒருமுனைப்பான மனதுடன்
நான் என்னுள் உன் உறுதியையும் சுதந்திரத்தையும்
வளர்த்தெடுக்கும் சபதம் ஏற்கிறேன்
எண்ணற்றோருக்கு அதே உறுதியை சுதந்திரத்தை
இன்றும் என்றென்றும் அர்ப்பணிப்பதற்காக
________
‘அவிசி’ ***- நரகத்தின் பாதாளம்
ததாகத்****-என்னும் சமஸ்கிருதச் சொல்லுக்கு வந்தவரும் போனவரும் ஆனவர் என்று பொருள். தமது பதிவுகளில் புத்தர் தம்மைத் தாமே நான் அல்லது புத்தர் என்று குறிப்பிடாமல் ததாகத் என்றே குறிப்பிட்டுக் கொண்டார். ஆதாவது போனவரும் வந்தவருமான எண்ணற்ற மானுடப் பிறப்பு மற்றும் இறப்பில் தன்னை ஒரு கண்ணி என்றே புத்தர் நினைத்தார். அகம் கொள்ளவோ அவமானம் கொள்ளவோ ஏதுமின்றி மானுடம் உய்யும் வழி கண்ட அவர் தனது பெயர் என்னும் ஒரே சொல்லை ஆன்மீகத்தின் சாராம்சமாக்கியது எவ்வளவு ஆழ்ந்த படிப்பினை!
_____________________________
அலைகளின் தலையணையில் என் தலை
பெருக்கோடு நான் செல்கிறேன்
அகண்ட நதி
ஆழ்ந்த வானம்
அவை மிதக்கின்றன
மூழ்குகின்றன
நீர்க்குமிழிகளைப் போல்
_______________________________
நடந்தபடி தியானம்
______________
என் கையைப் பற்று
நாம் நடப்போம்
நாம் நடக்க மட்டுமே செய்வோம்
நம் நடையை நாம் அனுபவிப்போம்
எங்கேயும் சேருவதை எண்ணாமல்
சாந்தமாய் நட
மகிழ்ச்சியாய் நட
நமது அமைதி நடை
நமது ஆனந்த நடை
பிறகு சாந்த நடை என்று ஒன்றில்லை
என்று தெளிகிறோம்
சாந்தமே நடை
சந்தோஷ நடை என்று ஒன்றில்லை
சந்தோஷமே நடை
நாம் நமக்காக நடக்கிறோம்
நாம் ஒவ்வொருவருக்காகவும் நடக்கிறோம்
எப்போதும் கையோடு கை கோர்த்தபடி
ஒவ்வொரு நொடியும் நட அமைதியைத் தொடு
ஒவ்வொரு நொடியும் நட மகிழ்ச்சியைத் தொடு
ஒவ்வொரு அடியும் புதிய தென்றலை வீசச் செய்யும்
ஒவ்வொரு அடியும் ஒரு பூவை நம் காலடியில் மலர வைக்கும்
உன் காலால் பூமியை முத்தமிடு
பூமியின் மீது உன் அன்பையும் மகிழ்ச்சியையும் பதிவு செய்
பூமி பாதுகாப்பாய் இருக்கும்
நம்முள் நாம் பத்திரத்தை உணரும் போது
தாமரைத் துளி
__________
வானில் பூக்கள்
பூமியில் மலர்கள்
புத்தரின் இமைகளாகத்
தாமரைகள் மலரும்
மனிதனின் இதயத்தில்
தாமரைகள் இதழ் விரிக்கும்
தனது கரத்தில் அலங்காரமாகத் தாமரையை ஏந்தி போதிசத்துவர்
கலையின் பிரபஞ்சத்தைக் கொண்டு வந்தார்
வானென்னும் புல் வெளியில் நட்சத்திரங்கள்
முளைத்தன
புன்னகைகும் புதிய நிலவு மெலெழும்பி விட்டது
சாம்பல் நிறத் தென்னை மரம்
வானின் நடுவே நீள்கிறது
என் மனம் சூன்யத்தில்
இத்தன்மையுடன் வீடு திரும்பும்
______________________________________________
உள்ளே ஒன்றுபட்ட உறவு
___________________
நானே நீ நீயே நான்
“உள்ளே நாம் ஆக இருக்கிறோம்” என்று தெளிவாகவில்லை?
நான் அழகாக இருப்பதற்காக
நீ உனக்குள் பூக்களைப் பயிரிடுகிறாய்
என்னுள் உள்ள குப்பையை நான் பரிணமிக்கச் செய்கிறேன்
நீ துன்பப்பட்டாமலிருக்க
நான் உனக்கு ஆதரவு
நீ என்னை ஆதரிக்கிறாய்
நான் இவ்வுலகில் இருப்பது உனக்கு சாந்தியை முன்வைக்க
நீ இவ்வுலகில் இருப்பது எனக்கு சந்தோஷத்தை வ்ழங்க
நான் நாளை கிளம்புகிறேன் என்று சொல்லாதே
இன்றும் நான் வந்து கொண்டே இருக்கிறேன்
கூர்ந்து பார்: நான் ஒவ்வொரு நொடியும் வந்து
கொண்டே இருக்கிறேன்
வசந்தக் கிளையில் ஒரு மொட்டாக இருக்க
சிறு பறவையாக இன்னும் முழுதாகாத பிஞ்சுச் சிறகுகளுடன்
புதிய கூட்டில் கானம் பாட
ஒரு மலரினுள் பட்டாம் பூச்சிப் புழுவாக
கல்லினுள் ஒளிந்திருக்கும் நகையாக
நான் இன்னும் வந்து கொண்டே இருக்கிறேன்
அழவும் சிரிக்கவும்
நம்பவும் அச்சமுறவும்
என் இதயத்துடிப்பின் லயம்
உயிருடன் இருக்கும் அனைத்தின்
மரணமும் பிறப்புமாகும்
நதிநீர்ப் பரப்பின் மேல்
பரிணமித்துக் கொண்டிருக்கும் ஈசல் நான்
அதை விழுங்க இறங்கி வரும் பறவையும் நானே
சுனையின் தெள்ளிய நீரில்
நீந்தி மகிழும் தவளை நான்
தவளையைச் சத்தமின்றி
நகர்ந்து வந்து உணவாக்கும்
சாரைப் பாம்பும் நானே
உகாண்டாவின் குழ்ந்தை நான்
எலும்பும் தோலுமாய்
மூங்கிற் குச்சி போன்ற கால்களுடன்
உகாண்டாவுக்கு பேரழிவுப் போர்த்தடவாளங்கள்
விற்கும் ஆயுத வியாபாரியும் நானே
கடற்கொள்ளையனால் பாலியல் பலாத்காரத்துக்கு
ஆளாகிக் கடலில் குத்திதுத் தன்னை
மாய்த்துக் கொள்ளும் பன்னிரண்டு வயது அகதிச் சிறுமியும் நானே
பார்க்கவும் நேசிக்கவும் வக்கில்லாத
மனமுள்ள கடற்கொள்ளையனும் நானே
நான் “பொலிட் பீரோ” அங்கத்தினன்
என் கையில் ஏகப்பட்ட அதிகாரங்கள்
“லேபர் கேம்ப்” பில் என் மக்களுக்கு
ரத்தக் கடனைச் செலுத்த வேண்டிய மனிதனும் நானே
வசந்தம் போன்றது என் மகிழ்ச்சி
அன்பால் பூமியெங்கும் மலர்களைப் பூக்க வைக்கும்
நான்கு பெருங்கடல்களை நிரப்பும்
கண்ணீர் நதியும் நானே
என்னை என் உண்மையான பெயர்களைச் சொல்லி அழைப்பாயாக
அப்போது தான் என் அழுகையும் சிரிப்பையும் நான்
ஒன்றாகக் கேட்க இயலும்
மகிழ்ச்சியும் வலியும் ஒன்றே எனக் காண இயலும்
நான் விழித்தெழ வேண்டும்
என்னை என் உண்மையான பெயர்களைச் சொல்லி அழைப்பாயாக
அப்போது தான் என் இதயத்தின் கதவு திறந்திருக்கும்
நேயத்தின் கதவு
ஜென் ஒரு புரிதல் – பகுதி 31
சத்யானந்தன்
“காரி ஸ்னைடர்” தற்போது எண்பத்து இரண்டு வயதான அமெரிக்கக் கவிஞராவார். “பீட்ஸ்” என அறுபதுகளில் அறியப்பட்ட காலகட்டத்து அமெரிக்கக் கவிஞர்களுள் ஒருவர். ஸான் “பிரான்ஸிஸ்கோ மறுமலர்ச்சி ” என்னும் புதுக்கவிதை எழுச்சிக்காலத்தில் ஒரு முக்கியமான முன்னோடி. புலிட்ஸர் பரிசைப் பெற்ற இவர் இருபதாம் நூற்றாண்டின் மிகப் பிரசித்தி பெற்ற “ஸுஸுகி” என்னும் ஜென் சிந்தனையாளரால் ஈர்க்கப் பட்டவர். இவரது கவிதைகளில் சில ஒரு மேற்கத்தியரின் ஜென் பற்றிய புரிதலாகக் காணக் கிடைக்கின்றன. ஸ்னைடர் எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஹன் ஷன் என்னும் ஜென் ஆசானின் கவிதைகளை மொழி பெயர்க்குமளவு அவரால் பாதிக்கப் பட்டார். ஸ்னைடரின் சில கவிதைகளை வாசிப்போம்.” பூமிப்பா” என்னும் கவிதை மானுடமும் பிரபஞ்சமும் இணையும் புள்ளி துல்லியமாய்ச் சித்தரித்து ஜென் பற்றிய புரிதலில் நம்மை மேலெடுத்துச் செல்லும்.
கோபுர உச்சியில்
___________
ஒவ்வொரு காய்ந்த புல்வெளியும் வளாகமாகிவிடும்
திறந்த வழிகள் யாவும் போக்குவரத்தில் திணறுகின்றன
படிப்பாளிகளின் ஆய்வுகளால் கல்விக் கூடங்கள் நிறைந்திருக்கின்றன
நகர மக்கள் மெலிந்தும் கருத்தும்
இந்த நிலம் கிட்டத்தட்ட நிஜமானது
மேற்கில் சரியும் இதன் பொன்னிறப் பள்ளத்தாக்குகளும்
பறவைகள் அடைந்த மத்தியப் பள்ளத்தாக்கு
நீண்ட கடற்கரைகள்
கிட்டத்தட்ட மெக்ஸிகன் மலைகளைத் தொடும்
வரிசையான கிரானைட் சிகரங்களின் பெயர்கள்
கிட்டத்தட்ட மறந்து விட்டன
கிழக்காகப் பாயும் ஒரு நதி பாலைவனத்தில் முடியும்
கிறீச்சிடும் அணிலகள் ஏறுமாறான பாளங்களின் இடையே
ஒரு ஆத்மாவைப் போல ஒரு பனிமுகட்டில் பனித் தட்டு
இங்கு தான் நாம் பத்து மணி நேர உறக்கத்துக்குப் பின்
புத்துணர்ச்சியுடன் விழித்தெழுகிறோம்
ஒரு நாள் முடிவில் நீண்ட நடை பழகி
நம் பாரங்களைப் பனியிடம் விட்டு
பெயர்களே இல்லாத அதே பழைய உலகத்தில் விழிக்கிறோம்
ஏதுமில்லை என்றும் புதுமையான கல் தண்ணீர்
விடியற்காலையில் சில்லெனப் பறவையின் அழைப்புகள்
நீண்ட வாலுடன் ஜெட் விமானத்தின் புகைத்தடம்
ஒரு நாளோ பத்து லட்சம் நாட்களோ
சுவாச்த்துடன் பின் நகரும்
இன்றைய வரலாற்றினின்றும் இறங்கு முகமாக
ஒரு வகையான பனி யுகம் பரவும் பள்ளத் தாக்குகளை நிரப்பும்
மண்களுக்குச் சவரம் செய்து, வயல்களை சமன் செய்து
நீ அதில் நடக்கலாம்,
அதனுள் வாழலாம், அதனுள் வாகனம் ஓட்டிச் செல்லலாம்
அது உருகி
உறைந்த இதயங்களுக்குப் பின் எது முளை விடுமோ
அதற்கென
சதைத் துருவப்பட்ட பாறைகள்
மலை முகட்டில் புழுதிப் புயல்கள்
காட்டுத் தீயில் இருந்து வெள்ளைப் புகை
தூரத்துப் பள்ளத்தாக்கின் மேல் மாலை இருள் போலக் கவியும்
இது ஒரே உலகம் தான்
பாறையும் நதிகளும் முதுகெலும்பாய்
சரளைகளும் மண்ணும் மணலும் சிறு புற்களும்
உப்புப் படிவங்களும் தேனடைகளும்
இங்கே நதிநீரோட்டத்தில் கீழே
இருபது லட்சம் மக்களும்
______________________________________________
பூமிப் பா
_______
உன்னைப் பார்த்துக் கொண்டே
இருக்கச் செய்யுமளவு அகண்டது
உன்னை நகர்ந்து கொண்டே இருக்கச் செய்யுமளவு
திறந்தது
உன்னை நேர்மையாய் இருக்கச் செய்யுமளவு காய்ந்தது
உன்னைக் கடுமையாய் இருக்கச் செய்யுமளவு குத்தும் கூர்மையுள்ளது
வாழ்ந்து கொண்டே இருக்குமளவு பசுமையானது
உனக்குக் கனவுகளைத் தந்து கொண்டே இருக்குமளவு
வயது முதிர்ந்தது
_________________________________________
அனைவருக்கும்
_______________
ஆ! செப்டம்பர் மாத மத்தியில்
உயிருடனிருப்பது
ஒரு நீரோட்டத்தை
அளைந்து கடப்பது
வெற்றுக் கால்கள்
கால் சராயை மடித்து விட்டு
கைகளில் காலணிகள், முதுகில் பைச் சுமை
பிரகாசமான வெயில்
தண்ணீரில் தென்படும் பனிக்கட்டிகள்
வடக்கு மலைத் தொடர்கள்
சலசலத்துப் பளபளக்கும்
பனி முக்ட்டு நீரோடைகள்
கால் விரல்கள் போன்று உறுதியான
சிறு கற்கள் பாதங்களை நெருடும்
பனியில் மூக்கில் நீர் வழியும்
உள்ளே மலைமுகட்டு இசை
உள்ளத்து இசை பாடும்
என் பற்றுக்கு உறுதி கூறுவேன்
_______________________
என் பற்றுக்கு உறுதி கூறுவேன்
ஆமைத் தீவு என்னும் இம்மண்ணுக்கு
அதில் வாழும் உயிர்களுக்கும்
ஒரு இயற்கைச் சூழல்
அதன் பன்முகத் தன்மையில்
சூரியனுக்குக் கீழே
மகிழ்ச்சியான பரஸ்பர ஊடுருவல்
அனைவருக்குமாய்
கவிதை எனக்கு எப்படி வருகிறது
________________________
அது கற்பலகைகளுக்குக் கீழிாருந்து
தட்டுத் தடுமாறி வரும் இரவில்
என் கூடாரத்து முற்ற நெருப்புக்கு
அஞ்சி அதன் வீச்சுக்கு அப்பால்
காத்திருக்கும்
நான் அதைச் சந்திக்கச் செல்வேன்
வெளிச்சத்தின் விளிம்பிற்கு
__________________________________
வடிவமானதேதுமில்லை பொருட்படுத்தாதே
________________________________
தகப்பன் தான் வெற்றிடம்
மனைவி அலைகள்
அவர்தம் குழந்தையே பொருள்
அவன் தாயுடன் பொருண்மை செயற்பட
அவர்களின் குழந்தையே உயிர்
ஒரு மகள்
மகள் ஒரு மகா தாய்
அவள் தாய் / சகோதரன்
பொருள் என்னும் காதலனுடன்
பெற்றெடுக்கிறாள் மனத்தை
ஜென் ஒரு புரிதல் – பகுதி 32
சத்யானந்தன்
“காரி ஸ்னைடர்” தற்போது எண்பத்து இரண்டு வயதான அமெரிக்கக் கவிஞராவார். “பீட்ஸ்” என அறுபதுகளில் அறியப்பட்ட காலகட்டத்து அமெரிக்கக் கவிஞர்களுள் ஒருவர். ஸான் “பிரான்ஸிஸ்கோ மறுமலர்ச்சி ” என்னும் புதுக்கவிதை எழுச்சிக்காலத்தில் ஒரு முக்கியமான முன்னோடி. புலிட்ஸர் பரிசைப் பெற்ற இவர் இருபதாம் நூற்றாண்டின் மிகப் பிரசித்தி பெற்ற “ஸுஸுகி” என்னும் ஜென் சிந்தனையாளரால் ஈர்க்கப் பட்டவர். இவரது கவிதைகளில் சில ஒரு மேற்கத்தியரின் ஜென் பற்றிய புரிதலாகக் காணக் கிடைக்கின்றன. ஸ்னைடர் எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஹன் ஷன் என்னும் ஜென் ஆசானின் கவிதைகளை மொழி பெயர்க்குமளவு அவரால் பாதிக்கப் பட்டார். ஸ்னைடரின் சில கவிதைகளை வாசிப்போம்.” பூமிப்பா” என்னும் கவிதை மானுடமும் பிரபஞ்சமும் இணையும் புள்ளி துல்லியமாய்ச் சித்தரித்து ஜென் பற்றிய புரிதலில் நம்மை மேலெடுத்துச் செல்லும்.
கோபுர உச்சியில்
___________
ஒவ்வொரு காய்ந்த புல்வெளியும் வளாகமாகிவிடும்
திறந்த வழிகள் யாவும் போக்குவரத்தில் திணறுகின்றன
படிப்பாளிகளின் ஆய்வுகளால் கல்விக் கூடங்கள் நிறைந்திருக்கின்றன
நகர மக்கள் மெலிந்தும் கருத்தும்
இந்த நிலம் கிட்டத்தட்ட நிஜமானது
மேற்கில் சரியும் இதன் பொன்னிறப் பள்ளத்தாக்குகளும்
பறவைகள் அடைந்த மத்தியப் பள்ளத்தாக்கு
நீண்ட கடற்கரைகள்
கிட்டத்தட்ட மெக்ஸிகன் மலைகளைத் தொடும்
வரிசையான கிரானைட் சிகரங்களின் பெயர்கள்
கிட்டத்தட்ட மறந்து விட்டன
கிழக்காகப் பாயும் ஒரு நதி பாலைவனத்தில் முடியும்
கிறீச்சிடும் அணிலகள் ஏறுமாறான பாளங்களின் இடையே
ஒரு ஆத்மாவைப் போல ஒரு பனிமுகட்டில் பனித் தட்டு
இங்கு தான் நாம் பத்து மணி நேர உறக்கத்துக்குப் பின்
புத்துணர்ச்சியுடன் விழித்தெழுகிறோம்
ஒரு நாள் முடிவில் நீண்ட நடை பழகி
நம் பாரங்களைப் பனியிடம் விட்டு
பெயர்களே இல்லாத அதே பழைய உலகத்தில் விழிக்கிறோம்
ஏதுமில்லை என்றும் புதுமையான கல் தண்ணீர்
விடியற்காலையில் சில்லெனப் பறவையின் அழைப்புகள்
நீண்ட வாலுடன் ஜெட் விமானத்தின் புகைத்தடம்
ஒரு நாளோ பத்து லட்சம் நாட்களோ
சுவாச்த்துடன் பின் நகரும்
இன்றைய வரலாற்றினின்றும் இறங்கு முகமாக
ஒரு வகையான பனி யுகம் பரவும் பள்ளத் தாக்குகளை நிரப்பும்
மண்களுக்குச் சவரம் செய்து, வயல்களை சமன் செய்து
நீ அதில் நடக்கலாம்,
அதனுள் வாழலாம், அதனுள் வாகனம் ஓட்டிச் செல்லலாம்
அது உருகி
உறைந்த இதயங்களுக்குப் பின் எது முளை விடுமோ
அதற்கென
சதைத் துருவப்பட்ட பாறைகள்
மலை முகட்டில் புழுதிப் புயல்கள்
காட்டுத் தீயில் இருந்து வெள்ளைப் புகை
தூரத்துப் பள்ளத்தாக்கின் மேல் மாலை இருள் போலக் கவியும்
இது ஒரே உலகம் தான்
பாறையும் நதிகளும் முதுகெலும்பாய்
சரளைகளும் மண்ணும் மணலும் சிறு புற்களும்
உப்புப் படிவங்களும் தேனடைகளும்
இங்கே நதிநீரோட்டத்தில் கீழே
இருபது லட்சம் மக்களும்
______________________________________________
பூமிப் பா
_______
உன்னைப் பார்த்துக் கொண்டே
இருக்கச் செய்யுமளவு அகண்டது
உன்னை நகர்ந்து கொண்டே இருக்கச் செய்யுமளவு
திறந்தது
உன்னை நேர்மையாய் இருக்கச் செய்யுமளவு காய்ந்தது
உன்னைக் கடுமையாய் இருக்கச் செய்யுமளவு குத்தும் கூர்மையுள்ளது
வாழ்ந்து கொண்டே இருக்குமளவு பசுமையானது
உனக்குக் கனவுகளைத் தந்து கொண்டே இருக்குமளவு
வயது முதிர்ந்தது
_________________________________________
அனைவருக்கும்
_______________
ஆ! செப்டம்பர் மாத மத்தியில்
உயிருடனிருப்பது
ஒரு நீரோட்டத்தை
அளைந்து கடப்பது
வெற்றுக் கால்கள்
கால் சராயை மடித்து விட்டு
கைகளில் காலணிகள், முதுகில் பைச் சுமை
பிரகாசமான வெயில்
தண்ணீரில் தென்படும் பனிக்கட்டிகள்
வடக்கு மலைத் தொடர்கள்
சலசலத்துப் பளபளக்கும்
பனி முக்ட்டு நீரோடைகள்
கால் விரல்கள் போன்று உறுதியான
சிறு கற்கள் பாதங்களை நெருடும்
பனியில் மூக்கில் நீர் வழியும்
உள்ளே மலைமுகட்டு இசை
உள்ளத்து இசை பாடும்
என் பற்றுக்கு உறுதி கூறுவேன்
_______________________
என் பற்றுக்கு உறுதி கூறுவேன்
ஆமைத் தீவு என்னும் இம்மண்ணுக்கு
அதில் வாழும் உயிர்களுக்கும்
ஒரு இயற்கைச் சூழல்
அதன் பன்முகத் தன்மையில்
சூரியனுக்குக் கீழே
மகிழ்ச்சியான பரஸ்பர ஊடுருவல்
அனைவருக்குமாய்
கவிதை எனக்கு எப்படி வருகிறது
________________________
அது கற்பலகைகளுக்குக் கீழிாருந்து
தட்டுத் தடுமாறி வரும் இரவில்
என் கூடாரத்து முற்ற நெருப்புக்கு
அஞ்சி அதன் வீச்சுக்கு அப்பால்
காத்திருக்கும்
நான் அதைச் சந்திக்கச் செல்வேன்
வெளிச்சத்தின் விளிம்பிற்கு
__________________________________
வடிவமானதேதுமில்லை பொருட்படுத்தாதே
________________________________
தகப்பன் தான் வெற்றிடம்
மனைவி அலைகள்
அவர்தம் குழந்தையே பொருள்
அவன் தாயுடன் பொருண்மை செயற்பட
அவர்களின் குழந்தையே உயிர்
ஒரு மகள்
மகள் ஒரு மகா தாய்
அவள் தாய் / சகோதரன்
பொருள் என்னும் காதலனுடன்
பெற்றெடுக்கிறாள் மனத்தை
______
ஜென் ஒரு புரிதல்- பகுதி 33
சத்யானந்தன்
எது ஆதரவென்று நிம்மதி தந்ததோ அது நிலையில்லையென்று அச்சம் தந்து விடுகிறது. எது உற்சாகம் தந்ததோ அதுவே சோர்வைத் தருகிறது. எந்தெந்த வழியெல்லாம் ஊர் போய்ச் சேர்க்கும் என்று நினைத்தேனோ அதெல்லாம் முச்சந்தியிற் கொண்டு போய் நிறுத்தி விட்டது. இப்படியாக ஒரு சுழலில் உழலும் போது வரும் தற்காலிகச் சலிப்பே எஞ்சியதே ஒழிய ஆன்மீகத்தில் நிலைப்பது அதைத் தொடர்வது வசப் படவே இல்லை. ஜென் பற்றி ஒரு புரிதல் நிகழும் என்று வாசித்தால் அவர்கள் என் விரலைப் பற்றி அழைத்துப் போகும் வாய்ப்பே இல்லை. நீயே பார்த்துக் கொள்- நீயே புரிந்து கொள்- உன் மனமே ஏணி உன் மனமே தடை என்பது போல ஏதோ சொல்கிறார்கள்.
எதற்காக ஜென்? அது எத்தகைய புரிதல்? அதற்குப் பின் எப்படி இருக்கும் என் வாழ்க்கை? அவ்வாழ்க்கை எத்தகைய அணுகு முறையை முன் வைக்கும்? இந்தச் சுழலில இருந்து விடுதலை ஆன மன நிலையில் நான் இயங்கினால் அது எந்த மாதிரியானது?
தற்போது எழுபது வயதிற்கும் மேற்பட்டவரான “ஷோடோ ஹரடா ரோஷி” யின் கவிதையில் விடை கிடைக்கிறது இக்கேள்விகளுக்கு. அமெரிக்காவில் ஜென் சிந்தனை மையமான ” தஹோமா ஒன் ட்ராப் ஜென்” னை வாஷிங்க்டனில் நிறுவியவர். “யமடா முமன் ரோஷி” என்னும் ஜப்பானிய ஜென் ஆசானின் மாணவரான இவர் மேற்கிற்கு ஜென் பற்றிய புரிதலை சம காலத்தில் நிகழ்த்திய சிந்தனையாளர்.
கடந்து செல்லும் இந்நொடியில்
__________________
கடந்து செல்லும் இந்நொடியில்
‘கர்மா’ முதிர்ந்து
அனைத்தும் நடப்பாகத் துவங்குகின்றன
சபதம் செய்வேன் என் தேர்வு-
விலையிருந்தால் செலுத்துவதே என் தேர்வு
தேவையிருந்தால் கொடுப்பதே என் தேர்வு
வலியிருந்தால் உணர்வதே என் தேர்வு
துக்கம் இருந்தால் சோகமே என் தேர்வு
தீ எரிகிறதென்றால் – நான் சூடு செய்வதைத் தேர்ந்தெடுப்பேன்
அமைதியாயிருக்கும் போது சாந்தமே என் தேர்வு
பட்டினியாயிருக்கும் போது பசியே என் தேர்வு
மகிழ்ச்சியாயிருக்கும் போது சந்தோஷமே என் தேர்வு
யாரை எதிர் கொள்கிறேனோ அவரைச் சந்திப்பதே என் தேர்வு
எதற்குத் தோள் கொடுக்கிறேனோ அதைச் சுமப்பதே என் தேர்வு
மரண காலத்தில் மரிப்பதே என் தேர்வு
இது எங்கே என்னை இட்டுச் செல்கிறதோ
அங்கே போவதே என் தேர்வு
எது இருக்கிறதோ அதனுடன் இருப்பதில்-
நான் எது இருக்கிறதோ அதற்கு பதில் சொல்கிறேன்
இவ்வாழ்க்கை ஒரு கனவு போலவே நிஜமானது
இதை அறிந்தவரைத் தேடிக் காண்பது இயலாது
மேலும் உண்மை என்பது ஒரு பொருளல்ல
என்வே என் சபதம்
இந்த தர்மத்தின் வாயிலே என் தேர்வு!
எல்லா புத்தர்களும் மெய்யறிவாளிகளும்
இந்த சபத்தை நான் வாழ உதவுவார்களாக
ஜென் ஒரு புரிதல்- பகுதி 34
சத்யானந்தன்
“டைஜன் ரோஷி” என்னும் ஜென் ஆசான் பற்றி ஏற்கனவே பார்த்தோம். அவர் அமெரிக்காவில் “ஜென் சென்டர் ஆஃப் லாஸ் ஏஞ்சலிஸ்” என்னும் ஜென் பள்ளியை ஸ்தாபித்தார். அந்தஅமைப்பைச் சேர்ந்த “அர்விஸ் ஜொயன் ஜஸ்டி” அவரின் சீடர்களுள் ஒருவராவார். அர்விஸின் சீடர் “அட்யா ஷாந்தி”. பிறப்பால் அமெரிக்கரான அட்யா ஷாந்திக்கு தற்போது ஐம்பது வயதாகிறது. சமகாலத்தில் ஒரு சிறந்த ஜென் சிந்தனையாளராகக் கருதப் படுபவர். இவரது “ஓய்வுறு எடுத்துக் கொள்ளப் படு” என்னும் கவிதையை வாசிப்போம்.
ஓய்வுறு எடுத்துக் கொள்ளப் படு
________________________
ஆழ்ந்த பொருட் செழிப்பு
இருக்கும் போது
சகிப்புத் தன்மை காட்ட வேண்டிய
இடம் என்று ஒன்று இருக்காது
ஓய்வெடுக்கவோ பற்றிக் கொள்ளவோ
இடம் ஏதும் இல்லை
இருந்தாலும் ஓய்வு இருக்கிறது
வானம் சகித்துக் கொள்கிறது
ஆனாலும் அது ஓய்வெடுப்பதே இல்லை.
அதே சமயம் எது எப்போதுமே
ஒய்வெடுப்பதில்லை என்று நாம் கூற இயலாது
வானத்துக்கு என்று ஒரு வடிவம் இருப்பது போலவும்
நிஜத்திலேயே அது இருப்பது போலவும்
நாம் பேசிக் கொள்கிறோம்
அதே சமயம் வானம் இல்லை என்றும்
நாம் கூற முடியாது
வானம் என்பது என்ன?
வருவதும் போவதும் தான்
எல்லாமே தன்வயமானது
வருவதும் போவதும் பரஸ்பரமாய்த் தொடங்குகிறது
உடனுக்குடனாக நிகழ்கிறது
உண்மையான நான் உறக்கத்திலிருந்தால்
நீ இதை கவனிக்கத் தவறுவாய்
எதிர்மறைகளின் உலகிலேயே
தொடர்ந்து வசித்து விடுவாய்
எனவே இரண்டை ஒன்றாகக் காண்
ஒன்றை காலியானாதாக
இருமைகளின் உலகத்துக்குள்ளே
விடுதலை பெற்றவனாக இரு
ஒன்றாக மாறியதைத் தொடர்ந்து
அதற்கும் முன்னான
மாற்றத்திற்கும் பின்னால்
செல்வதே நிகழ்கிறது எனத் தோன்றும்
முதலில்
நெருங்கி நோக்கினால்
மின்னல் கீற்றுகளே
காலி வானத்திற்கு ஒளியூட்டுவது
தெரியும்
வாழ்க்கை மரணம்
மாற்றம் முரண்மாற்றம்
இவை வெற்றுச் சொற்கள்
நொடிக்கு நொடி
தருணத்திற்குத் தருணம்
நீ மரிப்பதை உறுதி செய்ய வேண்டும்
உயிர் வாழ்வதற்கு
இப்போது நீ எங்கே அடங்கி சகித்திருக்கிறாய்?
எங்கே அடங்காது இருக்கிறாய்?
உண்மையில் உன் தலையைச் சாய்த்து ஓய்வு எடுக்க
இடம் ஏதுமில்லை
அதே சமயம் ஓய்வைத் தவிர வேறு ஏதுமில்லை
எனவே நிரந்தரம் மற்றும் நிரந்தரமின்மை
பற்றிய கருத்துக்களைக் கைவிடு
காரணம் விளைவு பற்றியதையும்
காரணமற்றவை விளைவற்றவை பற்றியுந்தான்
இந்தக் கருத்துக்கள் யாவுமே இருமைக் கோட்பாடுகள்
நீ யார் என்னும் உண்மை
முற்றிலும் இருமைகளுக்கு அப்பாற்பட்டது
இருமையின்மை பற்றிய கருத்துக்களுக்கும் தான்
இருப்பினும் அதனுள் இருமையும் இருமையின்மையும்
இரண்டுமே அடங்கும்
அது ஒரு சாகரம் போன்றது
அலைகள் அசைவில்லா ஆழ் கடல் இரண்டுமாய்
அதே சமயம் அதை அலைகள் என்றோ
அசைவற்றது என்றோ விளக்க முடியாது
இருப்பின் உண்மையை
யோசனைகளாலும் அனுபவங்களாலும்
வசப்படுத்த இயலாது
அலைபாய்வதும் அமைதியும்
இரண்டுமே
வெளிப்படுத்தும் நடவடிக்கைகளே
அல்லது நீயே
ஆனால் சுயம் என்பதை
செயல் அல்லது
செயலின்மையைக் கொண்டு
விளக்க இயலாது
உண்மையோ
அனைத்தையும் கடந்ததாய்
வசப்படாததாய்
அனைத்தையும் உள்ளடக்கியதாய்
உன் தோலை விட நெருங்கியதாய்
அதைப் பற்றிய ஒற்றைச் சிந்தனை கூட
அதன் சாராம்சத்தை சிதற அடித்து விடும்
உண்மையான வாழ்க்கையின் வாசனைத் திரவம்
உன் மூக்கிலேயே இருக்கிறது
நீ என்ன செய்தும் அதைக்
காண இயலாது
அதே சமயம் நீ ஏதேனும் செய்தே
தீர வேண்டும்
நான் சொல்வது:
ஓய்வுறு எடுத்துக் கொள்ளப் படு
ஓய்வுறு எடுத்துக் கொள்ளப் படு
ஜென் ஒரு புரிதல் – பகுதி 35
(நிறைவுப் பகுதி)
சத்யானந்தன்
ஜென் பற்றிய புரிதலுக்கான வாசிப்புக்கு இடம் தந்த திண்ணை இணையதளத்தாருக்கு நம் நெஞ்சார்ந்த நன்றிகளுடன் நிறைவுப் பகுதியைத் தொடங்குகிறோம். Daisetz Teitaro Suzuki (1870 – 1966). டி.டி.ஸுஸுகி ஜப்பானில் பேராசிரியராகவும், இலக்கியவாதியாகவும் இயங்கியவர். மேற்கத்திய நாடுகளுக்கு ஜென் பற்றிய புரிதலை எடுத்துச் சென்றோருள் ஆகச் சிறந்தவராக அறியப்படுபவர். இவரது “ஜென் ஒரு அறிமுகம்” என்னும் உரையுடன் நம் வாசிப்பை நிறைவு செய்வது முத்தாய்ப்பாக இருக்கும்.
ஜென் ஒரு மதமா? இல்லை. மதம் எனப் பெருமளவு புரிந்து கொள்ளப் பட்ட வரையறைகளில் ஜென் இல்லை. ஏனெனில் ஜென்னுக்கு வழிபடும் கடவுள் கிடையாது. சடங்குகள் கிடையாது. இறந்தவர் சென்று சேரும் எதிர்காலப் புனித இடம் இல்லை. எல்லாவற்றிற்கும் மேலாக ஜென்னுக்கு பிறரால் நலம் பேணப் பட வேண்டிய, அதன் அழிவின்மையைப் பற்றி ஆழ்ந்த கவலை கொள்ள வேண்டிய ஆன்மா எதுவும் கிடையாது. பழமைவாதமிகுந்த இத்தகைய சுமைகள் எதுவும் ஜென் மீது இல்லை.
ஜென் கோவில்களில் காணப் படும் புத்தர்கள், போதிசத்துவர்கள், தேவர்கள் மற்றும் பல உயிரினங்களின் வடிவங்கள் உலோகததிலோ அல்லது மரத்தினாலோ ஆன வேறு எந்தப் பொருட்களுக்கும் ஒப்பானவை. அவை எனது தோட்டத்திலுள்ள செம்பருத்தி, அரளி அல்லது கல்லாலான விளக்குளைப் போன்றவை. இப்போது பூரணமாய் மலர்ந்துள்ள செம்பருத்தியை நீ விரும்பினால் வணங்கு என்பதே ஜென் சொல்வது. இவ்வாறு செய்வதில் புத்தர்களை வணங்குவது, புனித நீரைத் தெளிப்பது அல்லது கடவுளின் இரவு உணவில் பங்கு பெறுவது இவற்றில் எந்த அளவு மதம் உள்ளதோ அதே அளவு மதம் உள்ளது. ஜென்னின் பார்வையில் உன்னதமானதும் புனிதமானதுமாகக் கருதப்படும் இத்தகைய செயல்கள் செயற்கையானவை. “அப்பழுக்கற்ற யோகிகள் நிர்வாணத்தை அடைவதில்லை. கோட்பாட்டிலிருந்து விலகிய பிட்சுக்கள் நரகத்துக்குப் போவதில்லை” என்று அது துணிச்சலாக பிரகடனம் செய்கிறது. சாதாரண மனங்களுக்கு இது ஒழுக்கமான வாழ்க்கைக்கான பொது விதிக்கு முரணானதாகத் தெரியலாம். ஆனால் இங்கே தான் ஜென்னின் உயிரும் உண்மையும் இருக்கின்றன. ஜென் மனிதனின் ஆன்ம உணர்வாகும். (Zen is the spirit of a man. ) ஜென் உட்தூய்மையையும் நற்தன்மையையும் நம்புகிறது. மேற்சுமத்தப்பட்டதோ அல்லது வன்முறையாகப் பிய்த்து எரியப் பட்டதோ ஆன்மாவின் முழுமையைக் காயப் படுத்துகிறது. எனவே மத அடிப்படையிலான எந்த ஒரு சம்பிரதாயத்திற்கும் ஜென் முற்றிலும் எதிரானது.
“மனிதனின் உள் உறைவதில் பூரணமான நம்பிக்கை வீற்றுள்ளது. ஜென்னில் எந்த ஆட்சிமை (authority) இருந்தாலும் அது எல்லாம் தன்னுள்ளேயிருந்தே வருகிறது.”
ஆகவே ஜென் நம்மை நாய் தான் கடவுள், மூன்று பவுண்டு ஆழி விதை (சணல் விதை) புனிதமானது என்னும் எண்ணத்தின் மீது தியானிக்கச் சொல்லவில்லை. அப்படி ஜென் செய்தால் அது நம்மை ஒரு திட்டவட்டமான தத்துவத்திற்குள் தன்னைப் பிணைத்துக் கொண்டதாக ஆகும் ; அதன் பிறகு ஜென் என்று ஒன்று இருக்காது. ஜென் நெருப்பு சுடுமென்றும் பனிக்கட்டி சில்லிடும் என்றும் உணர்கிறது. உறைபனி சில்லிடும் போது நாம் நெருப்பைத் வரவேற்கிறோம் . ஃபாஸ்ட்* பிரகடனப் படுத்தியதைப் போல இந்த உணர்வு அனைத்துள்ளும் அனைத்தானது ; நமது தத்துவப்படுத்துதல் எல்லாம் யதார்த்தத்தைத் தொடத் தவறி விடுகிறது. ஆனால் “அந்த உணர்வு” இங்கே அதன் ஆகத் தூய அல்லது ஆக ஆழ்வு வடிவில் புரிந்து கொள்ளப் பட வேண்டும். ” இது தான் அவ்வுணர்வு” என்று சொல்லுதல் கூட இனி ஜென் அங்கே இல்லை என்பதாகவே பொருளாகும். ஜென் எல்லா கோட்பாடு – கட்டமத்தலையும் நிராகரிக்கிறது. அதனாலேயே ஜென்னை ஸ்பரிஸித்துப் பற்றிக் கொள்ளுதல் கடினமானது…
{* ஃபாஸ்ட் ( Faust )- ஜெர்மானிய புராதன கதாபாத்திரம். சாத்தானிடம் தன் ஆன்மாவுக்கு பதிலாக அளவற்ற அறிவையும் துய்ப்பையும் பேரம் பேசியவன். Faustian- என்னும் ஆங்கிலப் பிரயோகம் தனது வெற்றிக்காகத் தனது அறவுணர்வை அடமானம் வைக்கும் முயற்சியைக் குறிக்கப் பயன் படுத்தப் படுவது.}
உண்மையென்னவெனில், ஜென் புறவயமான தன்மைகளப் பொறுத்த அளவில் நழுவி விடுகிறது. அதன் ஒரு தரிசனம் கிடைத்தது என நீங்கள் நினைக்கும் போது அது அங்கே இருப்பதில்லை. தள்ளி இருந்து பார்க்கும் போது அணுகக் கூடியதாகத் தெரியும். ஆனால் அருகினாலோ அது முன்னை விடவும் தள்ளியிருப்பதை நீங்கள் காண்பீர்கள். ஆகவே நீங்கள் சில வருடங்கள் அதன் அடிப்படைக் கொள்கைகளைப் புரிந்து கொள்ளச் செலவிடாத பட்சத்தில் அதைப் பற்றிய சுமாரான பிடிமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கக் கூடாது.
“கடவுளை நோக்கி உயரே செல்ல வேண்டுமென்றால் ஒருவர் தன்னுள்ளே ஆழ்ந்து செல்ல வேண்டும்” இது ஹ்யூகோ**வின் சொற்கள். “கடவுளின் ஆழ்ந்த விஷயங்களை நீ தேடிக் கொணர விரும்பினால் நீ உன் அந்தராத்மாவில் தேடு” என்பது “ஸெயின்ட் விக்டாரின் ரிச்சர்ட்”*** கூறியது. அப்படி எல்லா ஆழ்ந்த விஷயங்களையும் தேடி முடிக்கும் தருணத்தில் “அகம்”, “அந்தராத்மா”, கடவுள் என்று ஆழ்ந்து தேடப் படுபவை எதுவுமே இல்லை. ஏனெனில் ஜென் ஒரு ஆழ்வின் விளிம்பு இல்லாத வெளியாகும். சற்று வித்தியாசமான முறையில் ஜென் அறிவிப்பது “முவ்வுலகிலும் எதுவுமே இல்லை. நீ எங்கே பார்க்க விரும்புகிறாய் மனதை (அல்லது ஆத்மா அல்லது ‘ஹ்ஸின்’****)? நான்கு பூதங்களும்***** அவைகளின் அதிநுட்பமான இயல்பில் உள்ளீடற்றவை; புத்தரின் சன்னிதி எங்கே இருக்க இயலும்? – ஆனால் பார்! உண்மை தன்னைத் தானே உன் கண்ணெதிரே துல்லியமாய் கட்டவிழ்த்துக் கொள்கிறது – அதற்குண்டானதெல்லாம் இது தான். வேறேதுமில்லை” . ஒரு நிமிடம் தயங்கினால் ஜென் பிடிக்கவே இயலாத படி காணாமற் போய் விடும். கடந்த, சமகால மற்றும் எதிர்கால புத்தர்கள் எல்லோரும் அதை நீ மீண்டும் ஒரு முறை கைப்பற்ற உனக்கு உதவலாம். ஆனாலும் அது ஆயிரம் மைல்கள் தள்ளியிருக்கும். ‘மனக்கொலை’ – சுயபோதை’ விட்டுத்தள்ளுங்கள்! இத்தகைய விமர்சனங்களைப் பொருட்படுத்த ஜென்னுக்கு நேரமில்லை.
{ஹ்யூகோ**-புகழ் பெற்ற ப்ரென்ச் நாவலாசிரியர் மற்றும் கவி.
“ஸெயின்ட் விக்டாரின் ரிச்சர்ட்”*** – ஸ்காட்லாந்தில் பிறந்து பிரான்ஸில் மதபோதகரான கிறித்துவ மத குரு.
‘ஹ்ஸின்’**** – கி.மு 3 மற்றும் 4ம் நூற்றாண்டில் கன்ஃயூசியஸ் தத்துவ மரபில் மென்ஸியஸ் என்னும் அறிஞரால் சிந்திப்பதும் முடிவெடுக்கும் ஆற்றல் ‘ஹ்ஸின்’ என்று அறியப்பட்டது.
நான்கு பூதங்களும்***** – நிலம் நீர் நெருப்பு காற்று }
விமர்சகர்கள் சொல்ல வருவது இதுதான். ஜென் சுய வசியம் வழி மனத்தை ஸ்மரணையில்லாத நிலைக்குக் கொண்டு சென்று அது வசமானதும் புத்தரின் விருப்பமான கோட்பாடான “சூன்யதம்” *******உணரப்படுகிறது. அந்நிலையில் தன்னையும் ஸ்தூலமான உலகையும் அவன் உணருவதேயில்லை. அவன் ஒரு விரிந்த சூன்யத்திலோ அல்லது எதோ ஒன்றிலோ மறைந்து விடுகிறான். இவ்வாறு விளங்கிக் கொள்வது ஜென்னைச் சரியாக அணுகும் முறையில்லை. இவ்வாறு புரிந்து கொள்வதற்கான சில பதிவுகள் ஜென்னில் இருப்பது உண்மை தான். ஆனால் இந்த இடத்தில் நாம் ஒரு பாய்ச்சல் பாய வேண்டும். “விரிந்த சூன்யம்” தாண்டப் பட வேண்டும். ஆழ்பவர் அவர் உயிரோடு புதை பட விரும்பாத பட்சத்தில் ஸ்மரணையற்ற நிலையினின்று எழுப்பப் பட வேண்டும். சுயபோதையைக் கைவிட்டு சுயத்தின் அதி ஆழத்தில் அந்தக் “குடிகாரன்” விழிக்க வேண்டும். என்றேனும் மனதைக் “கொல்ல” வேண்டுமென்றால் அந்த வேலையை ஜென்னிடம் விட்டு விடுங்கள். ஏனெனில் ஜென் மட்டுமே அந்தக் கொல்லப் பட்டவரை உயிரற்றவரை ஆதியந்தமில்லா வாழ்வு என்னும் நிலையில் மீட்டெடுக்கும். “மறுபிறவி எடு, கனவிலிருந்து விழித்தெழு. சாவிலிருந்து எழுங்கள்! குடிகாரர்களே” என்று அது கூக்குரலிடும். கண்ணைக் கட்டிக் கொண்டு ஜென்னைப் பார்க்க முயலாதீர்கள். உங்கள் கரங்கள் அதைப் பற்ற முடியாத அளவு நடுங்குபவை”. நான் உவமைச் சொற்பெருக்கில் ஈடுபடவில்லை என்பதை நினைவிற் கொள்ளுங்கள்.
(“சூன்யதம்” *******- அதிருப்தி மனமுடைதல் ஆகியவற்றிலிருந்து விடுபட்டு பிரக்ஞையில் நிலைத்தல்)
இதே போல் பன்மடங்கு விமர்சனங்களை அவசியமானால் நான் எடுத்துக் கொள்ள இயலும். ஆனால் மேற்குறிப்பிட்டவை வாசகரின் மனதை, பின் வரும் நேர்மறையான கருத்துக்களுக்கு ஆயத்தமாக்கியிருக்கும் என் நம்புகிறேன். நம் இருப்பின் செயற்பாடுகளுடன் நெருங்குவது- அதுவும் எந்த அளவு சாத்தியமோ அவ்வளவு நேரடியான வழியில் , புறவயமானதும் மேற்சுமத்தலான எதையும் கைகொள்ளாது – நிகழ்த்துவதே ஜென்னின் அடிப்படைக் கருத்தாகும். ஆகவே புறவயமான ஆட்சிமை போன்றது எதையும் ஜென் நிராகரிக்கிறது. ஒரு மனிதனின் அக ஜீவனின் மீது பரிபூரண நம்பிக்கை வைக்கப் படுகிறது. ஜென்னில் எந்த ஆட்சிமை இருந்தாலும் அனைத்தும் உள்ளிருந்தே வருபவை. இது உண்மை என்னும் சொல்லின் ஆகக் கடுமையான பொருளில் சத்தியமானது. ஆய்ந்தரியும் ஆற்றல் கூட இறுதியானதோ முழுமையானதோ என்று கருதப் படவில்லை. மாறாக அது மனம் தன்னுடன் ஆக நேரடியான தொடர்பு கொள்வதற்குத் தடையாய் நிற்கிறது. புத்தி இடைப்பட்டதாக இயங்கும் போது தனது இலக்கை அடைந்து விடுகிறது. ஆனால் ஜென்னுக்கு ஊடகத்துடன் எந்த சம்பந்தமுமில்லை, விதிவிலக்காக மற்றோருடன் தொடர்பு கொள்ளும் சந்தர்ப்பத்தைத் தவிர்த்து. இந்த ஒரே காரணத்தினால் எல்லா மறை நூல்களும் மேம்போக்கானவை அல்லது குத்துமதிப்பானவை. இதுதான் இறுதியானது என்று அறுதியிட்டுக் கூற அவற்றுள் ஏதுமில்லை. வாழ்க்கை எப்படி வாழப் படுகிறதோ அதன் மைய உண்மையை தொடுகை வசமாக்குவதே ஜென்னின் இலக்கு – அதுவும் ஆக நேரடியான வழியில் ஆக வீரியமான முறையில் . ஜென் தன்னை பௌத்தத்தின் ஆன்மாவாகப் பெருமிதம் கொண்டாலும் அது எல்லாத் தத்துவங்களின் மதங்களின் ஆன்ம வடிவாகும். ஜென்னைத் துல்லியமாகப் புரிந்து கொண்ட பின் பூரணமான மனச்சாந்தி கிடைக்கப் பெறுகிறது. ஒரு மனிதன் தான் எப்படி வாழ வேண்டுமோ அப்படி வாழ்கிறான். இதற்கு மேல் நாம் என்ன எதிர்பார்க்க இயலும்?