பஜ்ரங்கி பாயிஜான்- சினிமாத்தனமான மதநல்லிணக்கம்
சினிமாத்துறையில் ஒரு வரிக்கதை மிகவும் முக்கியம். அந்தக் கதை எடுபடும் என்று பட்டால் அதைச் சுற்றி ஜிகினா எப்படிப் பின்னுகிறார்கள் என்பதே வணிக சினிமா. பாகிஸ்தான் பெண் குழந்தை தவறி இந்தியப் பகுதியில் தங்கி விடுகிறது. அதை மீண்டும் பாகிஸ்தான் பெற்றோருடன் சென்று சேர்க்க வேண்டும். இதுவே ஒரு வரிக் கதை. இது ஒரு இளைஞனிடம் பொறுப்பாக மாறுகிறது. அதை அவன் எப்படிச் செய்து முடிக்கிறான் என்பதே கதை. அவன் பிராமணன். அதே சமயம் பாரம்பரிய மல்யுத்த வீரன்.
வாகா எல்லைப் பகுதியில் (அமிரிட்ஸர் அருகே) இரயிலில் இருந்து இறங்கி விடுகிறாள் 6 வயது பாகிஸ்தான் சிறுமி. அவள் ஊமை. அவள் பேச வேண்டும் என புது டெல்லியில் உள்ள ஹஸ்ரத் நிஸாமுத்தின் தர்காவில் வேண்டிக்கொள்ளவே அவளது அம்மா அழைத்து வந்தாள். இரவில் ஒரு குழியில் விழுந்துள்ள ஆட்டுக்குட்டியைக் காப்பாற்ற இறங்கிய சிறுமியை விட்டுவிட்டு ரயில் நகர்ந்து விடுகிறது. அவள் மற்றொரு கூட்ஸ் வண்டியில் ஏறி இந்திய எல்லைப்பகுதிக்கே சென்று விடுகிறாள். அது டெல்லியை ஒட்டிய குருட்சேத்ரா என்னும் சிற்றூர். அங்கே பஜ்ரங்கி என்னும் ராம அனும பக்தன் அவளை எதேச்சையாகப் பார்த்து உணவு வாங்கித் தருகிறான். அவள் ஹிந்து என நினைத்து ஒரு கோவிலில் விட்டுவிட்டுக் கிளம்ப முயலும் போது அவள் அவனுடனேயே ஒட்டிக் கொள்கிறாள். அந்தப்பக்கம் பெற்றோரும் இந்தப் பக்கம் இவனும் காவல் நிலையப் புகார் செய்கிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாக அவள் அசைவம் சாப்பிடுபவள், முஸ்லீம் (தொழுகை தெரிந்த சின்னக் குழந்தை) என்று தெரிந்து கொள்ளும் பஜ்ரங்கி இறுதியில் அவள் பாகிஸ்தானைச் சேர்ந்தவள் என்றும் தெரிந்து கொள்கிறான். முறையாக பாகிஸ்தான் தூதரகம் வழியே செல்ல அவளிடம் பாஸ்போர்ட் நகல் இல்லை.
அப்படியானால் என்ன வழி? வேறு வழியே கிடையாது. கள்ள வழியில் ,குழந்தையைப் பெற்றோரிடம் சேர்ப்பதே வழி. ஒரு கள்ள இடைத்தரகன் அவளைப் பாலியல் தொழிலுக்கு விற்க முயல்கிறான். சமயத்தில் பஜரங்கி காப்பாற்றி இனி அவளைத் தானே பெற்றோரிடம் (கள்ள வழியில் எல்லை தாண்டி) சேர்ப்பேன் என அனுமானிடம் வாக்குறுதி அளிக்கிறான்.
பிறகென்ன? டெல்லியில் இருக்கும் அவன் ராஜஸ்தான் எல்லை வழியே நுழைகிறான். பல இடங்களில் அவனை மனித நேயத்துடன் போலீஸார் விட்டு விடுகின்றனர். அவர்களே பெரும்பான்மை சிறுபான்மையான கண்டிப்புப் போலீஸ் இவனைத் துரத்தும் போது ஒரு ஊடக நிருபர் இவனைக் காப்பாற்றி இவன் நிலையை இணையம் மூலம் உலகறியச் செய்து அந்தக் குழந்தையை அம்மாவிடம் சேர்ப்பித்து, பிறகு ஆயிரக்கணக்கான இந்திய பாகிஸ்தானிய குடிமக்களை காஷ்மீர் எல்லைப்பகுதியில் வரவழைத்து திரும்பவும் இவன் முறையற்ற வழியில் ஆனால் பொது மக்கள் ஆதரவுடன் இந்தியா திரும்ப உதவி செய்கிறான். கடைசிக் காட்சியில் பெண் குழந்தைக்குப் பேச வந்து மாமா ஜெய் ஸ்ரீராம் என்று கத்துகிறாள்.
புல்லரிக்கிறதில்லையா?
உண்மையில் இந்தியா பாகிஸ்தான் மக்களிடையே குறிப்பாக எல்லைப்பகுதி இந்தியரிடையே பிரிவினையின் போது நடந்த வன்முறையின் ஆழமான காயங்கள் இன்னும் ஆறாமல் அப்படியே இருக்கின்றன. பாகிஸ்தானில் மதவாதிகள் கை கன்னாப்பின்னா என்று ஓங்கி இருக்கிறது. மற்றபடியும் கருத்துச் சுதந்திரமோ நிலையான ஆட்சியோ இல்லை. இப்படி இருக்கும் போது மனித நேயம், மத நல்லிணக்கம் இவற்றுக்கு இருபக்கமும் சாத்தியங்களே இல்லை. பயங்கரவாதிகளை ஊக்குவித்து பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் அமைதிக்கு இப்போதைக்கு (இன்னும் 20 30 ஆண்டுகளுக்குக் கூட) வழியில்லாமல் செய்து விட்டார்கள்.
இந்தச் சூழலில் இந்தப் புல்லரிப்பு நல்ல வசூலை அள்ளிக் கொண்டு போனது என்பதைத் தவிர்த்து “ஷாஹிதா” என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள சின்னக் குழந்தை அற்புதமாக நடித்திருக்கிறார். அவரைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல அழகான அற்புத நடிப்பை வெளிப்படுத்தும் குழந்தை. அல்லாஹீ அக்பர், ஜெய் ஸ்ரீராம்.
(image courtesy:indianexperess.com)