ஒருத்தி – அம்ஷன் குமார் இயக்கத்தில் மாற்று தமிழ் சினிமா
அம்ஷன் குமாரை திரைப்படங்கள் பற்றிய விமர்சனங்கள் மற்றும் விவரங்களான கட்டுரைகள் எழுதுபவராகவே அறிந்திருக்கிறேன். உயிர்மை மற்றும் தீராநதி இதழ்களில் வாசித்ததாக நினைவு. அவர் செயல் வீரராகவும் கிடை என்னும் கி.ராஜநாராயணனின் நாவலை ஒட்டி எடுக்கப்பட்டிருக்கும் படம். 2004ல் வெளியானது.
செவானி என்னும் தலித் பெண்ணும் எல்லப்பன் என்னும் நாயக்கர் இளைஞனும் ஆடு மேய்க்கும் போது காதல் வயப்படுகிறார்கள். அவன் தன் ஜாதியில் ஒருத்தியையும் இவளையும் மணப்பதாகக் கூறுகிறான். அது நடக்காது என்பதை நாமே யூகிக்கலாம். ஆனால் படம் நாயக்கர்கள் சம்சாரிகளாய் கரிசல் காட்டில் விவசாயம் செய்த காலத்தை நம் கண் முன் நிறுத்துகிறது. ஆட்சிக் காலத்தில் ஜமீன்தார் முறையில் விவசாயிகளும் தலித்துகளும் எந்த மாதிரியான சவால்களை எதிர் நோக்கினார்கள் என்பதை நாம் தெரிந்து கொள்கிறோம்.
கிடை என்றால் ஆடுகளை ஒரு கிராமமே மொத்தமாக அடைக்கும் பட்டி. அதன் பொறுப்பாளர் கிதாரி. அவருக்கு ஊர்த்தலைவர் என்னும் அளவு மரியாதையும் இருந்தது. ஊர்ப்பஞ்சாயத்து மிகவும் பொறுப்பாக செயல்படுகிறது. ஒரு விதவைப் பெண்ணின் நிலத்தில் இருந்த பருத்தியை ஆடுகள் தின்று விடுகின்றன. அந்தப் பெண்ணோ ஜமீனுக்கு வரி கட்ட வேண்டும். ஆனால் யாருடைய ஆடுகளால் அந்த இழப்பு ஏற்பட்டது என்பதை உடனடியாகக் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போது பஞ்சாயத்தே அவளுக்கு நட்ட ஈடு கொடுத்து விடுகிறது. பிறகு துப்பறிகிறது. துப்பறிந்தவர் செவானி மற்றும் எல்லப்பன் காதலைக் கண்டுபிடித்து விடுகிறார். அவர்கள் ஆடுகளைக் கவனிக்காமல் ஒட்டி ஒட்டிப் பேசிக் கொண்டிருக்கும் போது ஆடுகள் இஷ்டம் போல் திரிந்து பயிர்களை மேய்ந்து விடுகின்றன. அவர் இதைப் பஞ்சாயத்தில் குறிப்பிடும் முன் அந்த ஊர் நாட்டு வைத்தியருக்கு வயல்களில் திருடும் பழக்கம் இருக்கிறது. அவர் பெயரை யாரோ சொல்ல அவரே இந்த நஷ்ட ஈட்டை கட்டிவிடுகிறார். அதன் பின் அவர் கிதாரியிடம் துர்கை மீது சத்தியமாகத் தான் பருத்திப் பயிரைத் திருடவில்லை என்று எடுத்துரைக்கவே கிதாரி பிறருடன் இதை விவாதிக்கிறார். துப்பறிந்த அந்த ஆள் அவர்கள் காதல் பற்றி உறுதியாகச் சொல்ல எல்லப்பனின் தந்தை அவனை ஆடு மேய்ப்பதில் இருந்து தடுத்து வீட்டுக்குள் அடைத்து வைக்கிறார். அவனது முறைப்பெண்களான இரண்டு சகோதரிகளை அவன் மணம் முடிப்பதாக முடிவாகிறது.
இந்த இடத்தில் இணையான சில நிகழ்வுகள் தொடங்குகின்றன. ஊருக்கு வரிவசூல் பாக்கி பற்றி விசார்ரிக்க வரும் வெள்ளைக்கார அதிகாரி (வெள்ளையர் இனத்தாலும்). செவானியிடம் ஆட்டுப்பால் மருந்தாகப் பெறுகிறார். முயல் வேட்டையாட அவருக்கு அவள் உதவுகிறாள். பேச்சுவாக்கில் அவரிடம் ஊர் மக்கள் எல்லாம் அவர் சீக்கிரம் திரும்பிப் போவதையே விரும்புகிறார்கள் – இன்னும் அதிகவரி கேட்டு அவர் வந்திருக்கிறார் என்றெல்லாம் எடுத்துரைக்கிறாள். அவள் மூலமாக அவர் எல்லா விவசாயிகளையும் சந்திக்கிறார். அப்போது தான் அவருக்கு ஜமீந்தார் தன்னிடம் கூறியதெல்லாம் பொய் – வரி வசூல் செய்து அதைத் பிரிட்டிஷ் அரசிடம் செலுத்தவே இல்லை என்பதைத் தெரிந்து கொள்கிறார், அவர் பழைய வரியை நேரடியாக மக்கள் அரசுக்கு செலுத்தும் முறையை சீக்கிரமே கொண்டு வருகிறார். அவளை பழி வாங்க ஆட்களை வைத்து அவளை அடித்து அவள் தலை முடியை வெட்டி அவள் மீது சாணியை ஊற்றி அவமானம் செய்கிறார் ஜெமீந்தார். ஊரே செவானிக்கு நன்றிக்கடன் படுகிறது. 40 ஆடுகளை மேல்ஜாதி விவசாயிகள் அவளுக்குப் பரிசளிக்கின்றனர்,
கெடையை மறிப்பது என்பது பஞ்சாயத்தில் புகார் கொடுக்கும் ஒரு வழக்கம். நாம் முதலில் பார்த்த விதவைப் பெண் கிடையை மறிக்கிறேன் என்று தான் துவங்குகிறாள். எல்லப்பனுக்குத் திருமண நாள் நெருங்கும் போது செவானி கிடையை மறிக்கிறாள். ஆண் பெண் தொடர்பான பிரச்சனைகளுக்கு கிடையை மறிக்கும் வழக்கம் இல்லை என்றாலும் கிதாரி அதை பஞ்சாயத்தில் எடுத்துக் கொள்ள ஒப்புகிறார். ஆனால் பஞ்சாயத்து முழு அளவில் கூடாமல் சிலரின் ரகசிய சந்திப்பாகவே நிகழ்கிறது. அதில் செவானி எல்லப்பன் திருமணம் தனக்குப் பெரிய தலைகுனிவைத் தரும் என அவனது அப்பா கருதுகிறார். அதிக பட்சம் அவர்கள் இருவரும் வேறு ஊரில் சென்று மணம் முடிக்கலாம் என்பதாக முடிவாகிறது. செவானிக்கு இது ஏற்புடையதில்லை. தனது மண்ணை விட்டு நீங்க அவள் ஒப்பவில்லை. அவள் இதுவரை உதாசீனம் செய்த அவளது உறவுக்காரப் பையன் அவளை நெருங்க முயலும் இடத்தில் படம் நிறைவுறுகியது.
ஒரு காட்சியில் வெள்ளைக்காரருக்கு ஆடுகளுக்கு உள்ள பெயர்களை செவானி விளக்கும் போது கி.ரா.வின் நாவல் இது என்று உணர்கிறோம். மற்றொரு காட்சியில் தலித் விவசாயியைப் பார்த்து மேல்சாதி விவசாயி ” இது உங்கள் இடம். நீங்கள் ஏன் போக வேண்டும்? நாங்கள் வந்தவர்கள். நாங்கள் தான் போக வேண்டும்” என்கிறார். நம்புவது கடினமாக இருக்கிறது. தலித்துக்களை பிற கிராமங்களில் உள்ளது போல அடித்து உதைக்கக்க் கூடாது – நிலம் சொந்தமில்லாமல் ஜெமீநதார் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்தவர்கள் தாமே நாம் என்கிறார் ஒரு மேல்ஜாதிக்காரர். இப்படி ஒரு சூழல் இருந்திருந்தால் அந்தக் காலத்தில் அது பெரியவிஷயமே.
டிடி பாரதி தொலைக்காட்சியில் 25.10.2015 அன்று காலை 10.30க்கு ஒளிபரப்பானது. பாண்டிச்சேரி அரசு விருதும் உலக சினிமா விழா ஒன்றில் திரையிடப்பட்டதும் இது பெற்ற அங்கீகரிப்புகள். அம்ஷன் குமார் கண்டிப்பாக இன்னும் பல நல்ல படங்களைத் தமிழுக்குத் தர முடியும். வாழ்த்துக்கள்.