பாலியல் குற்றத்துக்கு ஆண்மை நீக்கம் – தீர்ப்புக்கு நீதிபதி சந்துருவின் எதிர்வினை
பாலியல் குற்றத்துக்கு ஆண்மை நீக்கம் என்பது தண்டனைகளில் ஒன்றாக இருக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தந்துள்ள தீர்ப்பை ஓய்வு பெற்ற நீதிபதி சந்துருவிமர்சித்திருக்கிறார். “கண்ணுக்குக் கண்”, “பல்லுக்குப் பல்” என்னும் அடிப்படையில் தண்டனைகள் இருக்க முடியாது என்றும் மேலும் இப்படிப்பட்ட பரிந்துரைகள் நிர்வாகத்தில் நீதித்துறையின் தலையீடாகும் இது உச்சநீதிமன்றத்துக்கே ஏற்புடையதல்ல என்று எடுத்துக்காட்டி அவர் தமிழ் ஹிந்துவில் எழுதிய கட்டுரைக்கான இணைப்பு —> இது.
நீதிமன்றங்கள் மற்றும் நீதித்துறை சமீபகாலமாக ஊடகங்களின் கவனத்தைப் பெற்று வருகின்றன. ஒன்று நீதிபதிகள் தங்களைத் தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாமா என்னும் கேள்வி. அடுத்தது நிர்வாகத்துக்கு நீதிமன்றம் தலையிட்டு யோசனைகள் மற்றும் திருத்தங்கள் சொல்லலாமா என்று மற்றொரு கேள்வி.
நீதித்துறையின் மாண்பு மற்றும் தேவை இரண்டுமே என்றுமே குறைத்து மதிப்பிட முடியாதவை. பல சந்தர்ப்பங்களில் மத்திய மாநில அரசுகள் செய்யத் தவறியவற்றை நீதிமன்றங்களில் பொது நல மனுக்களே தட்டிக் கேட்டன. அந்த மனுவின் முக்கியத்துவம் அதாவது மக்களுக்கு அந்த மனுவால் கிடைக்கும் பலனின் அடிப்படையில் பல தீர்ப்புக்கள் வழங்கப் பட்டிருக்கின்றன. நீதிமன்றங்களுக்கும் நிர்வாகத்துக்குமான எல்லைக்கோடு என்ன என்பது இப்போது விவாதத்துக்கு உள்ளாகி இருக்கிறது. இது நிபுணர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் மற்றும் நிர்வாகம் மூன்று தரப்பினராலும் மேலும் விவாதிக்கப் பட்டு அவரவர் இடம் இது தான் என்று ஒரு ‘லட்சுமணக் கோடு’ ஒன்றை வரைந்து கொள்ள வேண்டும்.
உரிமைகள் மறுக்கப்படும் போது ஒரே புகலிடம் நீதிமன்றம் தான். நீதித்துறையின் தற்போதைய காலகட்டம் ஒரு திருப்பு முனையாக மாற வேண்டும். வழக்கறிஞர்கள் நீதித்துறையின் ஆரோக்கியம் மட்டுமே தமக்கு நல்லது என்பதைப் புரிந்து கொண்டு நடத்தையைத் திருத்திக் கொள்ள வேண்டும்.