தலித் ஏனையர் இடைவெளியைத் தாண்டிய நட்பு – இமையத்தின் சிறுகதை
நவம்பர் 2015 உயிர்மையில் இமையம் “ஈசனருள்” என்னும் நெடுங்கதையுடன் பன்முகமான அவரது ஆளுமையை வெளிப்படுத்தி இருக்கிறார். தமிழ் இலக்கிய உலகம் இலக்கியவாதிகளின் படைப்புக்களை ஜாதி அடிப்படையில் பரிசீலிப்பதான ஒரு பிரமை இப்போது இருக்கிறது. அந்த பிரமையை இமையம் உடைத்து விட்டார். பல அடிப்படைகளில் இந்த சிறுகதை தமிழ் இலக்கியத்தில் ஒரு மைல் கல்லாக இருக்கும்.
இந்தக் கதை பற்றி நிறையவே அறிமுகம் பின்னரே விமர்சனம் என்னும் தேவை இருக்கிறது.
ரிஷிமூலம் என்னும் நாவல் ஏறத்தாழ 50 வருடங்கள் முன்பு வெளியானது. அப்போது நிலவிய சூழல் சுதந்திரத்துக்குப் பின்னான இந்தியா, தலித் எழுச்சி, தமிழ்நாட்டில் நாத்திக விவாதங்கள், ஆரிய திராவிட விவாதங்கள், ஹிந்தி எதிர்ப்பு என பல விஷயங்கள் முன்னுரிமையும் மையமும் பெற்றிருந்தன. ரிஷிமூலம் படிக்காதவருக்காக – தமது அத்தை போல உறவு உள்ளவரிடம் ஒரு பதின்வயதுச் சிறுவனுக்கு பாலியல் ஈர்ப்பு ஏற்பட அவன் சிறிய ஒரு மீறலுக்குப் பின் குற்ற உணவிலேயே மீதிக்காலத்தைக் கழிக்கிறான்.
அப்போது ஒரு பெரிய விவாதம் எழுந்தது. இன்றைய காலகட்டத்தில் இந்தக் கதை தேவையா? “எழுதுவதற்கு எதைத் தேர்ந்தெடுப்பது என்று எனக்கு யாரும் சொல்லத் தேவையில்லை” என்று ஜெயகாந்தன் தமக்கே இயல்பான தன்னம்பிக்கையும் ஆளுமையின் கம்பீரமும் மிகுந்த பதிலை அளித்தார்.
சமகாலத்தில் புது எழுத்தாளர் அல்லது இமையம் போல மூத்த எழுத்தாளர் இவர்கள் படைப்புக்கள் உள்வாங்ககப்பட்டு விவாதிக்கப் பட வேண்டிய தேவை முன்னெப்போதையும் விட இருக்கிறது. இன்று அச்சிலும் இணையத்திலும் தமிழ்ப்படைப்புக்கள் இலக்கியத்தை முன்னகர்த்திச் செல்லும் கால கட்டம். நாம் இமையத்தின் தெளிவான ஒரு செய்தியை இந்தக் கதையில் காண்கிறோம்.
இமையம் தலித் மீதான மேல்ஜாதியினரின் ஒருக்குமுறையை ஏற்காதவர் தான். ஆனால் இருசாராருக்கும் இடையே வெறுப்பும் அவநம்பிக்கையும் இல்லாத ஒரு காலகட்டம் இருந்தது. விதிவிலக்கான சில அரிய மனித உறவுகள் இருந்தன என்று நிறுவும் கதை இது. மறுபக்கம் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்த ஒரு தனித்துவம் மிக்க பெண்ணை, இசைக்கலைக்கு தம்மை அர்ப்பணிக்க முயன்ற ஒரு பெண்ணை லட்சிய கதாபாத்திரமாக படைத்திருக்கிறார். நவீனத்துவத்தின் ஆகச்சிறந்த காலகட்டத்தில் ஏன் இப்படி ஒரு லட்சிய கதாபாத்திரம் என்று நம்மால் வியக்காமல் இருக்க முடியவில்லை. என் விமர்சனக்கண்ணோட்டத்தில் இவ்வளவு ஆதரிசமான மையக் கதாபாத்திரம் நவீனத்துவமில்லாததாகக் கதையை நீர்க்க அடிக்கிறது என்றே சொல்கிறது.
இப்படிப்பட்ட விமர்சனங்கள் வரும் என்று தெரியாதவரோ தமது படைப்பை ஆகச் சிறந்ததாக உருவாக்கும் திறனற்றவரோ இல்லை இமையம். சமகாலத்தில் மிகுந்த ஆற்றலும் கற்பனையும் உள்ள மூத்த படைப்பாளி.
எனவே நாம் ஆதரிசமான ஒரு கதாபாத்திரமாக மையக் கதாபாத்திரம் அமைந்திருப்பதற்கு இமையத்தின் கண்ணோட்டத்திலிருந்து ஒரு காரணத்தைக் கண்டறிய வேண்டும். அதற்கான ஒரே காரணம். வயது மற்றும் வர்ணாசிரமம் தாண்டி நட்பான இரண்டு பெண் கதாபாத்திரங்களில் மூத்தவரான தலித் மூலமாக இந்தக் கதை சொல்லப் படுகிறது.
அடுத்து மற்றொரு காரணமும் உண்டு. இந்தக் கதையில் மூன்று மீறல்கள் உள்ளன. இந்தக் கதை நிகழும் கால கட்டத்தில் நடக்கவே முடியாத மூன்று மீறல்கள். முதலாவது ஒரு பெண் நிலமும் நீச்சும் உயர்ஜாதிப் பின்னணியும் உள்ள பெண் திருமணமே செய்யாதிருக்க சுதந்திர முடிவெடுத்து அதை நிலை நாட்டுவது. இரண்டாவது ஏற்கனவே குறிப்பிட்டதே ஒரு மேல் ஜாதி இளம் பெண் தன் தாய் வயதுள்ள கீழ்ஜாதிப் பெண்ணை உயிராக நேசித்துத் தோழமை பூணுவது. மூன்றாவது மீறல் தன் மகள் வயது பெண்ணின் அரிய இசைத் திறமையைக் கண்டு ஒருவர் அவள் மீது காதல் கொள்வது. அதை அவள் மானசீகமாக ஏற்பது.
மீறல்கள் என்னும் போதே அவை தலித்துக்கு சாத்தியமானவை அல்ல என்பது தெளிவு. மேல்ஜாதியில் அப்பழுக்கற்றவராக அறியப்பட்ட ஒருவரே இதையெல்லாம் செய்ய முடியும்.
சரி தலித் இலக்கியமாக இது காணப்பட முடியுமா இல்லையா? தலித் இலக்கியம் என்பது பிறப்பால் தலித் ஆனவர் எழுதுவது என்று குறுக்கப் பட முடிவது அல்ல. ஆனால் தலித்தின் கையறு நிலையை வலியைப் பதிவு செய்யாத எதுவுமே தலித் இலக்கியமில்லை. ஈசனருள் நீள்கதையில் தலித்தின் வலி கதையில் ஆழமாகப் பதிவாகி இருக்கிறது. நல்ல பண்புகள் நிறைந்த முதலாளி வீட்டிலும் அவர்களுக்குத் தரப்படும் இடம் அதையே வரமாக ஏற்றுப் பிழைக்க வேண்டிய அவர்களது நிலை கூர்மையாகவே சித்தரிக்கப்பட்டிருக்கிறது.
20 மைல் மேல்ஜாதிப்பெண் மாட்டு வண்டியில் போனால் கீழ்ஜாதித் தோழி பின்னாடியே நடந்து தானே போகிறாள்.
மையப்பாத்திரமான சந்திரவதனம் மேல்ஜாதி வீட்டுப் பெண். அவளது அம்மா மரகதத்துக்கே கலியம்மாள் வேலைக்காரி. வயல் வேலையும் இவர்கள் வீட்டு வேலை இரண்டும் செய்தவர். இப்போது அவருக்கு 70க்கும் மேல் சந்திரவதனத்துக்கோ 50க்கு அருகே. ஆனால் புற்று நோய் கர்ப்பப் பையில் தொடங்கி உடல் முழுதும் பரவி விட்டது சந்திரவதனம் சாகப் போகிறாள். சந்திரவதனம் தன் தாயை இழந்த பிறகு அப்பாவின் அரவணைப்பில் இருப்பவள். அப்பா அவளுக்கு முறையே ஒரு ஓதுவாரிடம் பாட்டுச் சொல்லிக் கொடுக்கிறார். ரேடியோவில் தொடங்கி டேப் ரிக்கார்டரில் தொடர்ந்து இசை ஆர்வம் மிகவும் அதிகமாகும் சந்திரவதனத்துக்கு திரைப்படப்பாடல்களின் வரிகள் மற்றும் இசையும் ஈர்ப்பானதே. ஊருக்கே சினிமாப்பாட்டுப் புத்தகம் மட்டும் பாடல்களைக் கன்னாப்பின்னா என்று அறிமுகம் செய்து கெடுத்துக் குட்டிச்சுவராக்கிவிட்டாள் என்னும் அவப்பெயர் வந்தும் அவளும் ஊர்ப்பெண்களும் அவற்றை நிறுத்தவே இல்லை. ஊர்ப்பெண்களுக்கு சினிமாப்பாட்டு கோயில்களில் தேவாரம் திருவாசகம் என்று பாடித் திரியும் குயிலாக இருப்பவளுக்கு ஒரேதுணை கலியம்மாள் தான். அல்லும் பகலும் அவள் வீட்டுத் திண்ணையில் ஒரு மூலையில் அமர்ந்து (அவளைத் தீண்டாமல்) அவளுடனே பேசியபடியே இருப்பாள். ஒரு நிலைப்படி இருவருக்கும் இடையே எப்போதும் இடைவெளியாக இருக்கும். ஆரம்பத்தில் ஊக்கம் கொடுத்த அப்பா பின்னர் ஓதுவார் இருவருமே இசையாலேயே திருமண ஆசை போனதோ என்று பயந்து வற்புறுத்தியும் சந்திரவதனம் இறுதிவரை திருமணமே செய்து கொள்ளவில்லை. விஸ்வநாதன் என்று ஒருவர் அவள் புகழின் உச்சியில் இருக்கும் போது அவளைப் பெண் கேட்டு வருகிறார். அப்போது அவளுக்கு வயது பின் 30கள். அவருக்கு வயது 50. அவளது தந்தை அவரை அடிக்காத குறையாக விரட்டி விடுகிறார். விஸ்வநாதன் அவள் கச்சேரிகள் எல்லாவற்றுக்கும் போகும் பரம ரசிகர். அவளிடம் நேராக ஒரு முறை கூட நெருங்காதவர். சந்திரவதனத்தின் அப்பா மறுத்து விரட்டிய பின் சன்னியாசியாக எங்கேயோ காணாமற் போய்விடுகிறார். உண்மையில் அவர் பெண் கேட்கும் முன் கலியம்மாள் ஒரு கச்சேரியில் அவரை மடக்கி வாங்கு வாங்கு என்று வாங்கி இனி கச்சேரிக்கு வந்து சீட்டுக் கொடுத்து அந்தச் சின்னப் பெண்ணின் மனதைக் கலைக்காதீர் என்று எச்சரித்து விடுகிறார். இதனாலேயே அவர் பெண் கேட்டாரோ என்று காலமெல்லாம் குற்ற உணர்வு கலியம்மாளுக்கு. அவர் சன்னியாசி ஆன செய்தி சந்திரவதனத்தை மிகவும் பாதிக்கிறது. படிப்படியாக அந்த சோகம் அவளது பாட்டை நிறுத்துகிறது. படுத்தபடுக்கையான பின் புற்றுநோய் என்று அறியப்பட்டு அவள் உயிர் நீக்கிறாள். அவளது வீட்டுக்குள் அவளது பிணத்தைப்பார்ப்பதற்கு மட்டுமே முதன் முதலாக சில நொடிகள் கலியம்மாள் அனுமதிக்கப் படுகிறாள். அவள் சவக்குழியில் மண்ணிடவும். இந்த உயர்ந்த மனித உறவை மதிக்கும் விதமாகவே இந்த இரண்டு சலுகைகளும் தரப்பட்டதாக நாம் கொள்ளலாம்.
சிறந்த மனித உறவுகளுக்கு ஜாதி பேதமும் ஏற்றத் தாழ்வும் தடையாகவே முடியாது என்னும் செய்தி இந்தக் கதையின் பெரிய பலம். மிகவும் நுட்பமான கதை. 1960கள் முதல் 1980கள் வரை சந்திரவதனம் இசையில் இயங்கிய காலகட்டம் என்பதை ரேடியோ வந்த காலம் முதல் ஜானி சினிமாவின் “காற்றில் எந்தன் கீதம்” என்னும் பாட்டு வந்த காலம் வரை என்று நுட்பமாக உணர்த்துகிறார். கதையில் மற்றொரு நுட்பம் என நான் கண்டது கலை, இசை, கவிதை என நம் ஊர்ப் பெண்களுக்கு ஆர்வம் வந்தாலும் அதிக பட்சம் அந்தக்காலத்தில் சினிமாப்பாட்டும் அதன் பாட்டுப் புத்தகமும் தான் என்னும் அழுத்தமான பதிவு.
பெண்களின் தலித்துகளின் அடிமை நிலையை மையமாகக் கொண்டு வந்த கதைகளில் ஈசனருளுக்கு முக்கிய இடம் உண்டு. மனித உறவுகளின் மாண்பு பற்றிய சமகாலத்தின் சிறந்த பதிவுகளில் ஒன்று இது.
(image courtesy:googleplus)