இலவசங்கள் என்கிற மனநோய்! – தினமணி கட்டுரை
சற்றே கடுமையான தலைப்பு. கட்டுரைக்கான இணைப்பு —- இது.
கட்டுரையின் மையக் கருத்து இந்தப் பத்தியில் இருக்கிறது:
————————–
வாக்கு வங்கிக்காக அரசுகள் வழங்கும் விலையில்லாப் பொருள்களால் விரயமாகும் மக்கள் வரிப் பணம் ஒருபுறம்; இலவசங்களை அறிவிக்கச் செய்து மக்கள் மனங்களைக் கெடுத்து, இலவசங்களை எதிர்நோக்கிக் கையேந்திக் காத்திருக்கும் அவல மனநிலையை ஏற்படுத்திய ஆட்சியாளர்கள் ஒருபுறம் என நாடு எங்கு சென்று கொண்டிருக்கிறது?
——————-
இந்தக் கட்டுரை தேர்தலில் வாக்குறுதிகளே இலவசங்களை மையமாகக் கொண்டிருப்பதை ஒட்டியது. இது தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களிலும் இருப்பதே.
கட்டுரை வீட்டு உபயோகப் பொருட்கள் பற்றிப் பேசுவதை ஏற்க முடிகிறது. ஆனால் மாணவர் விஷயத்தில் அதை நாம் வேறு கண்ணோட்டத்தில் தான் பார்க்க வேண்டும்.
காமராஜர் கொண்டு வந்த மதிய உணவு பின்னாளில் எம் ஜி ஆரால் விரிவாக்கப்பட்டது. ஊட்டச்சத்து இல்லாத பிள்ளைகளுக்கு இதனால் கிடைத் த நன்மைகள் பல ஆய்வுகளில் வெளி வந்தன. மறுபக்கம் ஒரு மாணவியை எடுத்துக் கொள்வோம். தன்னம்பிக்கை, தற்சார்பு என்ற இரண்டும் ஒரு சைக்கிளால் அவளுக்குக் கிடைக்கும். என்னைப் போல வசதியான ஒரு ஆளுக்கு இது புரியாது. கிராமப் புறங்களில் 100 ரூபாய் இன்றும் பெரிய தொகைதான்.
ஒரு பெண் குழந்தையின் பிரச்சனைகள் அவளின் கல்வி இவை கிராமப் புறங்களிலும் வறிய குடும்பங்களிலும் முன்னுரிமை பெறுவதே இல்லை. எனவே மாணவர்களுக்கு பள்ளிக்கூடம் சைக்கிள், மடிக்கணினி தருவதோடு நிற்காமல் தம் திறன்களை மேம்படுத்திக் கொள்ளும் பயிற்சிகளையும் தர வேண்டும். விளையாட்டில் தம்மை உயர்த்திக் கொள்ளவும் உதவ வேண்டும்.
பொது மக்களைப் பொருத்த அளவில் பெண்களுக்கு சத்துமாவு, முட்டை போன்றவை வழங்கி குழந்தைகள் பெண்கள் ஆரோக்கியத்தை நாம் பேணினால் பெரிய அளவில் நம் மனித வளம் மேம்படும்.
(image courtesy: blog.childfund.org)