பிளாஸ்டிக் – எச்சரிக்கைக் கட்டுரை தினமணியில்
பிளாஸ்டிக் பற்றிய மற்றுமொரு எச்சரிக்கை தினமணியில் வந்துள் ளது. அதற்கான இணைப்பு —————இது.
நாம் கவனிக்காமல் வளர்த்து வரும் பேராபத்து இது. எனது பதிவிலும் நான் கவலைப்பட்டிருக்கிறேன். அது கீழே:
பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தடுக்கவே முடியாதா?
உச்சநீதிமன்றம் “நாம் ஒரு பிளாஸ்டிக் டைம் பாம்” மீது அமர்ந்திருக்கிறோம் என்று பிளாஸ்டிக் மாசு பற்றிய பொது நல வழக்கை விசாரிக்கும் போது கருத்துத் தெரிவித்திருக்கிறது. டன் கணக்கில் நமது மாநகரங்களின் பிளாஸ்டிக் கழிவு நிலவரம்- நாளொன்றுக்கு டெல்லி- 690, சென்னை- 429, கொல்கத்தா- 426, மும்பை- 408. ஏறத்தாழ 40% மட்டுமே இவற்றில் மறு சுழற்சி ஆகின்றன. மீதி 60%/ அப்படியே மண்ணில் மக்காமல் குவிந்து வருகிறது. தினமும் இப்படி அழிக்கப்படாத பிளாஸ்டிக் குப்பை தினசரி அதிகரிக்கும் விவரம்: டெல்லி- 275, சென்னை- 172, கொல்கத்தா- 170, மும்பை- 163. இது நிலத்தடி நீரை இரண்டுவிதமாக பாதிக்கிறது. ஒன்று மழை நீர் மண்ணுக்குள் இறங்காமல் தடுத்து விடுகிறது. மற்றது ரசாயன மாசை நிலத்தடி நீரில் அதிகப் படுத்துகிறது. மெல்லிய பிளாஸ்டிக் பைகளை மாடுகள் தின்று நோய்வாய்ப்பட்டு இறக்கின்றன. நதிகள், மலைகள் என்னும் இயற்கை எழில் மாசு படுகிறது. மலைகளில் தாவரம் வளர்வது விரிவது பாதிக்கப் படுகிறது. நகரங்களில் சாக்கடை நீர் அடைபட்டு, கொசு உற்பத்தி ஆவதும், கழிவு நீர் அடிக்கடி தெருவெங்கும் ஓடுவதும் பெரிதும் பிளாஸ்டிக் கழிவுகளாலேயே. மழை நாட்களில், ஜல தாரைகள் அடைத்துக் கொண்டு, வெள்ளம் நகர்பகுதிகளில் பெருக்கெடுத்து ஓடுவதற்கும் பிளாஸ்டிக் குப்பைகளே காரணம்.
சென்னையிலும் பல தமிழ் நாட்டு சிறு நகரங்களிலும் ஒரு பிளாஸ்டிக் பைக்கு இவ்வளவு என்று கடைக்காரர்கள் விலை வைப்பதால் அனேகமாக பொருள் வாங்கச் செல்லும் மக்கள் கையில் ஒரு துணிப்பையை எடுத்துச் செல்கிறார்கள். 4000 ரூபாய்க்குப் பொருள் வாங்குபவர் கூட நான்கு ரூபாய் பிளாஸ்டிக் பைக்குத் தரத் தயங்குகிறார். இதை எல்லாக் கடைகளிலும் கட்டாயமாக்க வேண்டும். இதற்கு அடுத்த கட்டமாக கடைகளில் காகித, சணல் அல்லது துணிப்பைகளை விலைக்கு வைத்து அதில் பொருட்களை எடுத்துச் செல்லும் படி ஒரு முறையைக் கொண்டு வர வேண்டும். படிப்படியாக பிளாஸ்டிக் பையை விலக்கப் போகிறோம் என்று உறுதியாக அறிவிக்க வேண்டும்.
ஒரு கேள்வி எழுகிறது. பலமுறை இது அரசுகளின் கவனத்தைப் பெற்று அரசுகள் கட்டுப்பாடு கொண்டு வந்த விஷயம் தானே? அப்படி இருக்கும் போது ஏன் இது முறைப்படுத்தப் பட்டு தடைப்படுத்தப் படும் நிலைக்கு வரவேயில்லை? பிளாஸ்டிக் தயாரிப்பாளர்கள் ஒரு மானியம் பெற்று அதைக் கொண்டு துணிப்பை, சணல் பை, காகிதப் பை தயாரிப்பாளர்களாக ஏன் மாறக்கூடாது? இதற்குத் தரும் மானியத்துக்காக ஒரு தனி வரியை வருமான வரித்துறை வசூலித்து அரசாங்கத்திடம் தரலாமே?
வருங்கால சந்ததிக்கு மாசுபட்ட நாட்டை, உலகத்தையா நாம் விட்டு விட்டுப் போக வேண்டும்?