“குற்றம் கடிதல்” – செய்தியை உள்வாங்காதவர் தினமணியில் கட்டுரை
அ.கோவிந்தராஜூ “வகுப்பறை வன்முறைகள்” என்று தினமணியில் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார். அதற்கான இணைப்பு —–இது.
நான் ஆசிரியர்களின் வன்முறை பற்றிய கட்டுரை என்று வாசிக்க ஆரம்பித்தால் “குரு பிரம்மா… குரு விஷ்ணு… குரு தேவோ மகேஷ்வரஹா…..” என்று பின்னி எடுத்து விட்டார்.
சமூகத்தில் குடும்பத்தில் தீராத பிரச்சனைகள் எல்லாவற்றிற்கும் காரணம் ஒரு அந்தஸ்தே. என்ன அந்தஸ்து அது? “இந்த ஆளை யாரும் கேள்வியே கேட்க முடியாது” என்னும் அதிகாரம். பெண்கள் குழந்தைகள் இவர்கள் குடும்பத்திலும், தலித், நலிந்தவர் சமூகத்திலும் பாதிக்கப்படுவது கேள்வி கேட்க முடியாதவர் செய்யும் மீறல்களால்தான். குரு கும்பிடுகிறேன் நீதான் தெய்வம் என்பதெல்லாம் சுயசிந்தனை வேண்டாம் என்றும் கேள்வி கேட்பதே தவறு என்றும் நம்பிய பிற்போக்கான காலத்தில் உருவான கருத்துக்கள்.
சரி கட்டுரைக்கு வருவோம். கட்டுரை ஒரு தலைப் பட்சமாக ஒன்பதாவது வகுப்பு மாணவனால் ஆசிரியை கொல்லப்பட்டது, ஒரு கல்லூரியில் ஆசிரியர் மீது அமிலம் வீசப் பட்டது இப்படியாக அடுக்கிக் கொண்டே போகிறார்.
சிறுவர்கள், குழந்தைகள், பதின்வயது சிறுவர்கள் இவர்களே பள்ளி கல்லூரி மாணவர்கள். அவர்களுக்கு சரியான செய்திப் பரிமாற்றத்துக்கு உதாரணம் போல அந்தக் குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோருடன் கல்லூரி பள்ளி நிர்வாகங்கள், மற்றும் ஆசிரியர்கள் தொடர்பில் இருப்பதே இல்லை.
ஒரு தலைமுறையை இரண்டு முக்கிய குணங்களுடன் நாம் வளர்க்க விரும்புகிறோம். ஒன்று சுதந்திர சிந்தனை. மற்றது சமூகப் பொறுப்பு. இவற்றை நாம் குழந்தை மற்றும் பதின்பருவத்தில் உள்ள சிறுவர் சிறுமியருக்கு நட்புக் கரம் நீட்டி அவர்களின் எதிர்காலம் குறித்த அக்கறையோடு செய்ய வேண்டும்.
சரியான முறையில் பள்ளி கல்லூரி நிறுவனங்கள் ஆசிரியர் மற்றும் பெற்றோரின் ஒரு கூட்டமைப்பை உருவாக்கி மாணவர் நலம் குறித்து விவாதிக்கும் சூழலும் அவர்கள் ஒன்று சேர்ந்து மாணவருக்காக உழைக்கும் சூழலுமே தேவை. குருபிரம்மா… என்னும் நம் பாரம்பரியத்தின் மிகப் பெரிய பலவீனம் அல்ல.
அன்புடன் நட்புக் கரம் நீட்டும் ஆசிரியரைப் பெற்றோரைப் பிள்ளைகள் ஒருக்காலும் மீற மாட்டார்கள்.
சொல்லக் கூடாது கண்டிக்கக் கூடாது என்று யாரும் கூறவில்லை. எந்த முறையில் என்பதே கேள்வி. குற்றம் கடிதல் திரைப்படம் அதனால் தான் மனதில் நிற்கிறது.
(image courtesy:stage3.in)