திகார் பெண் கைதிகளின் கவிதைகள் – காலச்சுவடு
காலச்சுவடு நவம்பர் 2015 இதழில் திகார் சிறைவாசமிருக்கும் பெண் கைதிகள் சிலரின் கவிதைகளின் மொழிபெயர்ப்பு வெளியாகி இருக்கின்றன. சிறைகள் அனேகமாக நல்லவிதமான மனமாற்றம் அல்லது புரிதலைக் கைதிகளுக்குத் தரும் சாத்தியங்கள் அற்றவையாக, குரூரமும் பொறுப்பின்மையுமாயுமே இருக்கின்றன. திகாரில் கிரண் பேடி அம்மையார் சில மாற்றங்களைக் கொண்டு வந்தார். பெண் கவிஞர்கள் அங்கே முளை விடுவது அந்த முயற்சி இப்போது அதே அர்ப்பணிப்புடன் தொடர்வதையே காட்டுகிறது. கவிதைகளுள் என்னைக் கவர்ந்த சில பகுதிகள்:
எரிந்தெரிந்து
தானே அணையும் விதி எனது
நிச்சயம் நான் அணைந்துபோவேன்
ஆனால்
விடியலைக் கொணர்ந்தபின்பே
—————————
அழுதபடி இன்று என்னுடன் துக்கம் அனுஷ்டிக்கும்
எவரும்
நான் உயிருடன் இருந்தபோது
என்னைப் பற்றி விசாரிக்கக் கூட இல்லை.
இன்று என்மீது கோடித் துணி போர்த்துகிறவர்கள்
யாரும்
நேற்றுவரை எனக்கு ஒரு கைக்குட்டையைக் கூட
தரவில்லை.
———————–
காலச்சுவடு கவிதைகளின் தொகுப்பையும் வெளியிட இருக்கிறது. பெண் எழுத்துக்களை சம்பிரதாயமாகக் கூட ஊக்குவிக்க முன்வரும் ஊடகங்கள் இன்றைய சூழலிலும் குறைவே. கைதிகளான பெண்கள் படைப்பாளிகளாகப் பரிணமிப்பது வரவேற்புக்கும் நம் வாசிப்புக்கும் உரியது.