எஸ்.ராமகிருஷ்ணனின் ஐந்து குறுங்கதைகள்
நவீனத்துவத்தில் உள்ளடக்கமே உருவத்தைத் தீர்மானிக்கிறது. சிறுகதைகள் பல மிகவும் சிரிய வடிவத்தில் ஏற்கனவே வந்திருக்கின்றன. பிரதி எப்போதுமே சொற்சிக்கனத்துடன் தான் பேசுகிறது. ஆனால் கதையின் பின்புலம், நிகழும் சூழல் குறுகி விடும் போது கதையின் நீளம் அதை ஒட்டி நீளம் குறைவானதாகி விடுகிறது.
சரி வாசகன் நீளம் குறைந்த கதைகளை அதிகம் பார்த்திருக்கிறாரா என்றால் அதுவும் கிடையாது. இத்தனைக்கும் நவீனத்துவ கதைகள் ;இடம் அதிகமில்லாத சிறுபத்திரிக்கைகளில் வந்தவை. நவீன நாவலை விட சிறுகதை படைப்பாளிக்கு சவாலானதே. அதை விடச் சவாலானது குறுங்கதை.
உயிர்மை டிசம்பர் 2015 இதழில் எஸ்.ராமகிருஷ்ணனின் ஐந்து குறுங்கதைகளை வாசித்த போது குறுங்கதைகள் பெரிதும் நடப்பு காலச் சூழல் அல்லது வழக்கமாக நாம் சாதாரண சிறுகதைகளில் காணும் சித்தரிப்பில் எதிர்பார்த்தேன். ஆனால் குறுங்கதைகளுக்கென அவர் ஒரு தனி சரடை உருவாக்கியிருக்கிறார்.
எல்லாக் கதைகளும் மனித இயல்பை அதன் புதிர்களை வியந்து நோக்குபவை.
துப்பாக்கி கதை முதல் கதை மட்டுமல்ல மிகவும் நேரடியான கதை. அரசே துப்பாக்கி ஒவ்வொருவருக்கும் ஒன்று தருகிறேன் என்று அறிவிக்கிறது. பின்னர் அந்த திட்டம் கைவிடப்படுகிறது. ஆனால் சுடப்படவேண்டியவர் பட்டியலும் சுட்டுவிடும் சூழல்கள் பட்டியலும் ஒவ்வொருவர் கையிலும் நீள அனைவரும் தன் செலவிலேயே துப்பாக்கி வாங்க முடிவெடுக்கின்றனர்.
ஒரு கவிதை என்பது என்ன? ஒரு கவிதை எங்கே இருந்தாலும் நாம் தேடி வாசிப்போமா? கவிதை உருவாகும் தருணமும் அதன் உள்ளடக்கமும் மர்மமானவையா? இல்லை நாம் கவிதையிலிருந்து ஒளிந்து கொண்டோமா? கவிதையுடன் பொருத்திக் கொள்ள முடியாத இயந்திரமயமாகி விட்டோமா? பாஷோ என்னும் கவிஞர் தவளையைப்பற்றிக் கவிதை எழுதிய உடன் ஒரு தவளை அவரிடம் உரையாடிக் கவிதை பற்றிய புரிதலை எட்டுகிறது. ஆனால் அதன் கவிதை பிற தவளைகளின் சத்தத்தில் இருந்து பிரித்தறியப்படவில்லை.
நூறு நீலக் குருவிகள் பழங்குடிக் கதைகள் போன்றது. ஒரு வேசியின் வீட்டில் இரவு முழுவதும் உறங்காமல் இருக்கும் ஆண் மட்டுமே அதே வடிவில் வெளிவருவான். உறங்கி விடுகிறவன் நீலக்குருவியாகி விடுவான். அபூர்வமாக ஒருவன் அப்படி விழித்திருக்க அவள் பூனையாகி விடுகிறாள்.
ஒரு ஊரில் பெண்கள் அனைவரும் உருவம் சிறிதாகி, சிறிதாகிக் கொண்டே போகிறார்கள். அதற்கு ஒரே ஒரு சொல்லே காரணம் என் கிறாள் தாய். கடவுளிடம் அதை எப்படிக் கேட்டு அறிவது?
ஒருவன் வாழ்க்கையின் கதவுகள் எல்லாமே மூடப் பட்ட போது ஒரு பல்பு அவனுடன் பேசி அவனுக்கு நம்பிக்கை அளிக்கிறது. அதை தான் வளமாகும் காலங்களில் அந்த பல்பு மௌனமாகி விடுகிறது. அவன் நம்பிக்கை இழந்து அதை உடைக்கும் போது “உன் காலில் குத்தி விடப்போகிறது” என்று மீண்டும் பேசுகிறது.
மூன்று கதைகள் மாய யதார்த்தமானவை. இரண்டு கற்பனையின் உச்சமானவை.
நூறு நீலக் குருவிகளில் ஆண்பெண் உலகம் வெவ்வேறானது என்பது பெற்ற அழுத்தமும், தனிமை வெளிச்சம் கதையில் பல்பு பேசுவதன் பின்னணி எதிர்பார்ப்பு மிகுந்த மனத்துக்குப் புரியாமற் போவதின் நுட்பமும் மற்ற மூன்று கதைகளில் இல்லை.
நவீன கதை சொல்லுதல் புதிய தடங்களில் நமக்குக் கிடைத்திருக்கிறது.
(image courtesy:sramakrishnan.com)