அதிக காணிக்கை செலுத்தி ஆண்டவனை வாங்க முடியுமா?
மத நம்பிக்கை வழிபாடு இவை ஆன்மீகத்தின் அடிப்படையான நிலையின்மை, அகம் அழித்தல் ஆகியவற்றின் அக்கம்பக்கம் கூடப் போவதில்லை. இன்று வழிபாடு ஒரு வணிகம் போல காணிக்கை வழிக் கடவுளையே வாங்கி விடலாம் என்னுமளவு தடம் மாறி இருக்கிறது. இது நமக்கு சகஜமே. பழ கருப்பையா இதற்கு நாத்திகமே தேவலாம். என்று சாடுகிறார் தினமணி கட்டுரையில். அதன் முக்கியமான பகுதி :
————————————————————-
“காவல்துறை அதிகாரியை விலைக்கு வாங்குவது போல, நீதிபதியை விலைக்கு வாங்குவது போல, கடவுளையும் வாங்க முடியும் என்னும் கருத்து இன்றையத் தமிழ்நாட்டில் பரந்து விரிந்து வளர்வதுதான் தமிழ்நாட்டின் குளறுபடிகளுக்கும், வீழ்ச்சிக்கும் காரணம்.
திருடன் தன்னுடைய திருட்டில் ஒரு பங்கை உண்டியலில் செலுத்துகிறான்; கலப்படம் செய்பவன் தன்னுடைய இலாபத்தில் ஒரு பகுதியையும், அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் தாங்கள் பெற்ற இலஞ்சத்தில் ஒரு பகுதியையும் உண்டியலில் சேர்க்கிறார்கள். தரும கருத்தாக்களும், அறநிலையத் துறையினரும் அந்த உண்டியலின் ஒரு பகுதியை தங்களுக்குரியதாகக் கொள்கிறார்கள். இந்த உண்டியலால் கடவுள் பெற்ற பயனென்ன?
விருப்பு வெறுப்பற்ற இறைவனை, தேவைகளற்ற இறைவனை, பெரிய காரில் வருகின்ற பெரிய முதலாளியாகப் பாவித்துக் கொள்வதுதானே, அவனைத் தங்கத் தேரில் ஏற்றுவதற்குக் காரணம். யாகம் செய்தால் எதிரியை அழிக்கலாம் என்பது வரை நம் நம்பிக்கைகள் நீண்டு, கடவுளை அடியான் நிலைக்குக் கூட இறக்கி விட்டோம்.
உலகில் எல்லாவற்றையும் நுணுகி நோக்கி, ஓர் இறைவன் இருந்தே ஆக வேண்டும் என்று உய்த்துணர்ந்து, அவனை மையமாக வைத்துச் சமயங்களை உருவாக்கி, அவற்றின் மூலம் உயர் மனிதனை உருவாக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோற்றுக் கொண்டு வருகிறதோ என்று தோன்றுகிறது.
இதற்கு நாம் நாத்திகர்களாகவே இருந்து விட்டுப் போகலாம்.”
———————————————
கண்மூடித் தனமான பக்தி, வழிபாட்டு எதிர்பார்புக்கள், சடங்குகள், வேண்டுதல்கள் இன்று வாழ்க்கை முறையான நிலையில் சிந்தனையைத் தூண்டும் கட்டுரை. தினமணி 16.12.2015 கட்டுரைக்கான இணைப்பு —- இது.
(image courtesy: hosuronline.com)