என் இடம்
சத்யானந்தன்
ஒரு வளாகத்தின்
ஒரு பகுதிக்கான
வாடகை
ஒப்பந்தம் இவை
விவாதத்துக்கு அப்பாற்பட்டவை
எந்தக் கதவுகள்
யாருக்காகத் திறக்கின்றன
எந்த சாளரங்கள்
எப்படி மூடப்பட்டன
என்பவை தொடங்கி
வளாகத்தின் எந்தப் பகுதி
பயன்படுகிறது அல்லது
பயன்படுவதில்லை
இவை என்
கேள்விகளுக்கு உட்பட்டவையே
ஒரு வளாகத்தின்
உடல் மொழி
அதன் உள்ளார்ந்த
சொல்லாடல்களால் அல்ல
மௌனங்களாலேயே தீர்மானிக்கப்படும்
எல்லா இருப்பிடங்களும்
தற்காலிகமே
என்போரே
நான் தரவல்ல
அழுத்தங்களை
நீர்க்கடித்து விடுகிறார்கள்
உறைவிடம் மையமாவதும்
நான் உறைவது மையமாவதும்
வித்தியாசப்படும் புள்ளி
என் இடத்தை நிர்ணயிக்கிறது
(14.12.2015 திண்ணை இதழில் வெளியானது)