ஜல்லிக் கட்டு மஞ்சு விரட்டு -அரசியல் அதற்கு அப்பால்
ஜல்லிக் கட்டு, மஞ்சு விரட்டு இவற்றை முன் வைத்த அரசியல் பற்றிய தினமணி கட்டுரைக்கான இணைப்பு——– இது.
ஆனால் கட்டுரை இந்த விளையாட்டுக்கள் பற்றி எந்தக் கருத் தும் கூறவில்லை. இது பற்றி ஏற்கனவே பதிவு செய்த என் கருத்துக்கள்:
மஞ்சு விரட்டு வீரமா?
மஞ்சு விரட்டு என்னும் பாரம்பரியம் நமக்குப் புரிவதே. அதில் வீரம் என்று என்ன இருக்கிறது என்னும் கேள்வி தமிழ்ச் சூழலில் எழுப்பப் படாமலேயே போய்க் கொண்டிருக்கிறது.
இளவட்டக் கல்லைக் தூக்குதல், காளையை அடக்குதல், வாட்போர் , மற்போர் இவைகள் ஒரு காலத்தில் வீரத்தின் அடையாளமாகவும் இவற்றிற்கான பயிற்சி தன்னம்பிக்கை மற்றும் உடல் ரீதியாகப் பகைவரை எதிர் கொள்ளும் வல்லமை தந்தவைகள்.
சரி வீரம் என்பதைப் பற்றிய அடிப்படை கருத்துக்களை வைத்துக் கொண்டு மேற்செல்வோம்.
வெற்றி அல்லது வீர மரணம் பெற்றவனே வீரனாகக் கருதப் படுகிறான் இல்லையா? அதாவது புறமுதுகிடாத ஒருவனே வீரன்.
ஆங்கிலேயரை எதிர்த்த காந்தியடிகள் அறவழியில் போரிட்ட வீரர். ஏனென்றால் அவர் புறமுதுகிடாமல் அராஜகமான அன்னிய ஆட்சியை எதிர்த்து நின்றார். அவர்களது அடக்கு முறையை எதிர்த்து நின்றார்.
சமூக தளத்தில் இது மனம் தளராத போராட்டத்தைக் குறிக்கும். இல்லையா? அன்னா ஹசாரே ஊழலை ஒழிக்கும் போரில் மூன்று வருடங்கள் மனம் தளரவே இல்லை. அவர் ஊடகங்கள் ஒரு நிலையில் இவருக்குப் பின்னடைவு என்றெல்லாம் எழுதிய போதும் இவர் தமது லட்சியத்தைக் கைவிடவே இல்லை.
இன்னும் சற்று ஆழமாகப் போவோம். காந்தியடிகள் அன்னிய ஆதிக்கத்தை எதிர் கொண்டார். அப்போது அவரைத் தவிர வேறு யாருக்குமே அத்தகைய சொரணை அல்லது போரிடும் எண்ணம் இல்லாமலா இருந்தது?
அன்னா ஹஸாரேக்கு இணையாக ஊழல் எதிர்ப்பு சிந்தனை யாருக்குமே தோன்றாமலா இருந்தது?
கண்டிப்பாக காந்தியடிகளுக்கு இணையாக அன்னா ஹஸாரேக்கு இணையாக சிந்தித்தவர்கள் இருந்தார்கள். ஆனால்….. ஆனால்….
ஆனால் அவர்கள் செயல்வீரர்களாகக் களத்தில் இறங்கவில்லை. ஏனெனில் அவர்களுக்கு சமாதானமாகவும் சகித்துக் கொண்டும் போவதில் உள்ள வசதிகள் புரிந்தன.
எனவே வீரத்தின் மற்றொரு முக்கிய அம்சம், சமாதானம் செய்து கொள்ளாமல் தன் உரிமைகளுக்காகப் போராடுவது – அந்தப் போராட்டத்தில் புறமுதுகிடாமல் நிற்பது.
இத்தகைய விடாப்பிடியான நெஞ்சுரமான போருக்கு மஞ்சு விரட்டில் என்ன இருக்கிறது?
ஒரு மாடு கூட்டத்தைக் கண்டு மிரண்டு இங்கும் அங்கும் ஓடுகிறது. அது கூட்டத்தின் கூச்சலால் பாதிக்கப் பட்டிருகிறதே ஒழிய, அது யாரையும் பாதிக்கவில்லை. அது தப்பி ஓடிக் கொண்டிருக்கிறது. அதன் வழியில் குறுக்கே புகுந்து அதனால் மிதி படுவதோ அல்லது அதை சமாளித்து அதன் கழுத்தில் உள்ள துண்டை அவிழ்ப்பதோ எந்த விதத்தில் சமூகப் மாற்றத்துக்கான விடாப்பிடியான போரைக் கொள்ளும் வீரத்துக்கு வழி வகுக்கும்.
பாரம்பரியம் என்ற அளவில் சிறியதொரு நிகழ்ச்சியாக இதை நடத்தினால் போதும் இல்லையா? நாடி நரம்பெல்லாம் முறுக்கேற இது வீர விளையாட்டு என்று சொல்லுவது மிகவும் செயற்கையானது இல்லையா?
(image courtesy: wiki)