சூடாமணி பற்றி பிரபஞ்சன் – தமிழ் ஹிந்து பத்தி
தமிழ் ஹிந்துவில் ‘கதாநதி’ என்னும் பத்தியைத் துவங்கி இருக்கிறார். முதல் பகுதியில் எழுத்தாளர் சூடாமணியைப் பற்றி எழுதியிருக்கிறார். அதற்கான இணைப்பு ——- இது.
பெண் எழுத்தாளர்களின் மொழி மற்றும் படைப்புக்கள் தனித்த படைப்பு முறையாகக் ( unique female genre) காணப் பட வேண்டும் என்று நான் நேர்காணல், கட்டுரைகள், இலக்கிய அமர்வுகள் எனப் பல இடங்களிலும் திரும்பத் திரும்பக் கூறி வந்திருக்கிறேன்.
விமர்சகர்கள் அல்லது சக எழுத்தாளர்கள் பெரிதும் பெண் படைப்பாளிகளின் படைப்புக்களின் உருவம் அல்லது உள்ளடக்கம் இந்த இடத்தில் சோடை போனது என்னும் விமர்சனத்தை முன் வைத்து அனேகமாக அவர்களை எழுதுவதை நிறுத்தி விடும் இடத்துக்கு இட்டுச் செல்வார்கள். அதையும் தாண்டி தாக்குப் பிடிப்போர் மிகக் குறைவு. ஆண் படைப்பாளிகள் கண்ணில் என்ன படுவதே இல்லை என்றால் பெண் படைப்பாளிகளின் நுட்பமான பெண் மனமும் உணர்தலும் மட்டுமே செய்யக் கூடிய பதிவுகள் என்றுமே அவர்களுக்கு சாத்தியமே இல்லாதவை. ஏனெனில் பெண்ணின் உலகம் ஆணுக்கு என்றுமே அன்னியமானது. பெண் எழுத்தின் மட்டுமே இலக்கியம் பெறக் கூடிய பல கவிதைகள் படைப்புக்களை நாம் காண்கிறோம். ஆண் படைப்பாளிகள் மன நிலையோ பெண் படைப்பாளிகளைக் கறாராக விமர்சனம் செய்து அவர்களுக்கு இலக்கிய உலகில் ஒரு இடமே இல்லாமற் செய்வதிலேயே கவனமாயிருக்கிறது.
இவர்களில் விதிவிலக்கு பிரபஞ்சன். ஜெயகாந்தனையும் சூடாமணியையும் ஒப்பிடும் இந்தப் பத்தியின் பகுதி கீழே:
______________________________________________________________________________
இது பால் தொடர்பான கதை இல்லை. வேதாந்தமாக விரித்துப் பொருள் உரைக்கலாம். இது வேதாந்தமும் இல்லை. ஜெயகாந்தனின் ‘அக்கினிப் பிரவேசம்’ சிறுகதையுடன் இக்கதையை பேசுகிறார்கள். அக்கதை, அக்காலத்தில் பெரிய உரையாடலை ஏற்படுத்தியது. இக்கதை, அக்காலத்தில் பெரிய விவாதங்களை எழுப்பியது. எனினும், கலை, நுணுக்கம், சமூக அவதானம், இலக்கியத் தரம் என்ற வகையில் ‘நான்காம் ஆசிரமம்’ கதை தமிழில் நிலைத்திருக்கும். ஜெயகாந்தன் கதை உடம்பின் பிரச்சினை பற்றிப் பேசுகிறது. சூடாமணியின் கதையோ, உடம்பைக் கடப்பதைப் பேசுகிறது.
———————————————————————————————————————
பெண் எழுத்தாளர்கள் பற்றிய மனத்தடையின்றி அவர்களது படைப்பை வாசிக்கவும் அடுத்த தலைமுறைப் பெண் படைப்பாளிகளை ஊக்குவிக்கவும் பிரபஞ்சன் செய்துள்ளது நல்ல துவக்கம்.
(image courtesy:the hindu)