தாரை தப்பட்டை – தமிழ் சினிமாவின் சதுரம்
பொங்கல் அன்று மாலை என் வேண்டுகோளை ஏற்று என் மகன் முன்பதிவு செய்து தாரை தப்பட்டை படத்துக்கு அம்மாவையும் சேர்த்து அழைத்துக் கொண்டு போனான். இன்று காலை (16.1.2016) அன்று காலை எட்டு மணி அளவில் கலைஞர் தொலைக்காட்சியில் ‘கிராமப்புறக் கலைகள்’ என்னும் நிகழ்ச்சியை ரசித்துக் கொண்டிருந்தேன். “இதைத்தான் நேத்திக்கி நீ எதிர்பாத்தியா?” என்று சிரித்தான் என் மகன்.
கலைஞர் தொலைக்காட்சியில் இருந்த கிராமியக் கலைகள் எவ்வளவு இயல்பாகவும் நமக்கு நல்ல புரிதலும் தருவதாக இருந்தன என்பதற்காக மாதிரியாக, அத்துடன் இந்த விமர்சனத்தின் தொனி விளங்கவென்றும் சில புகைப்படங்களை மட்டும் கீழே தருகிறேன். யூ டியூபில் இருந்தால் கண்டிப்பாகப் பார்க்கலாம். கரகாட்டம், காவடி, மயிலாட்டம், ஒயிலாட்டம் அனைத்தையும் மிக அருமையாக எடுத்துக் காட்சிப்படுத்தி இருந்தார்கள்.
சரி இப்போது திரைப்படம் பக்கம் போகலாம். தாரை தப்பட்டை மற்றும் நாயனம் (நாதஸ்வரம் அல்ல) வாசிப்பில் திறமை பெற்ற ஓர் இளைஞன் ஒரு குழுவை நடத்துகிறான். அவர்கள் அனைவரும் நல்ல கலைஞர்கள். ஆனால் தாரை தப்பட்டைக்கு நடனமாடும் பெண்களை உலகம் உடல் அடிப்படையில் பார்க்கிறது. அந்தப் பெண்களை படுக்கைக்கு அழைக்கும் வசதி மிகுந்த ஆண் கூட்டம் ஒன்று உண்டு. அவர்களின் இச்சைக்கு அடிபணியாமல் வறுமையிலேயே அந்தப் பெண்கள் உழல்கிறார்கள். தங்களது பாரம்பரியக் கலையை அவர்கள் மேலெடுத்துச் செல்கிறார்கள். மறுபக்கம் இரண்டு கையலகத் துணிதான் அந்தப் பாரம்பரியக் கலையின் உடை.
குழுவின் முக்கிய ஆட்டக்காரியான கதாநாயகி இந்தக் கதாநாயகன் மீது உயிரையே வைத்திருந்தாலும் அவளுடைய தாய் இந்த வறுமை, ஆட்டக்காரி என இழிவாகப் பார்க்கப்படும் நிலையை விட்டு நடுத்தர வீட்டின் குடும்பப் பெண்ணாக வாழும் வாய்ப்பு அவளுக்குக் கிடைக்க வேண்டும் என நினைக்கிறாள். சொல்லி வைத்த மாதிரி ஒரு பசுந்தோல் போர்த்திய புலி வந்து அவளை ஏமாற்றி மணக்கிறான். அந்த வில்லன் பல பெண்களை வைத்து விபசாரம், வாடகைத் தாயாக கருசுமக்கச் செய்தல் போன்றவற்றைத் தொழிலாகக் கொண்டவன். கஞ்சாவுக்கு அடிமையானவன். சோகமுடிவை விவரமாகக் கூறக் கூடாது இல்லையா? படம் பார்க்கும் பாக்கியம் இருப்பவர்களுக்கு முடிவு ரகசியமாக இருக்க வேண்டுமில்லையா? எனவே இத்தோடு விட்டுவிடுவோம்.
இணையான இரண்டு சரடுகளைக் காண்போம். முதலாவது சரடு என்ன? கதாநாயகன் தாரை தப்பட்டை ஆளே அல்ல. தமிழ் நாட்டின் தலை சிறந்த பாடகரின் மகன். அவர் கலைகளைப் புறக்கணிக்கும் தமிழ்ச்சமூகத்தால் காயப்பட்டு குடியிலேயே இருப்பவர். ஆனால் அவரது சீடனான மகன் இந்தத் தாரைத்தப்பட்டைக் கலைஞர்கள் மீது பரிதாபப்பட்டு அவர்கள் தொழிலுக்கு ஏற்றது போலத் தன்னை மாற்றிக் கொண்டவன்.
இரண்டாவது இணைச் சரடு என்ன? மூன்று கலைகள் உண்டு. மேடையில் அமர்ந்து தேவாரம் திருவாசகம் மற்றும் சொந்தப் பாடல்களைப் பாடுவது. அது மிகவும் உயர்ந்த கலை. முதல் இடம் அதற்கு. அடுத்தபடியானது உள்ளாடைகள், அதன் மேல் கச்சைகள் அணிந்து தாரைதப்பட்டையுடன் ஆடுவது. அதில் விரசமே இல்லை. அது கலை. அதற்கு இரண்டாம் இடம். மூன்றாவது விரசமான கலை. அதே உடையில் ஓர் ஆண் இரட்டை அர்த்தம் பேச, பெண் அதை விட மோசமாகப் பேசி அவனுடன் ஆடுவது.
தமிழ் சினிமா ஒரு சதுரத்துக்குள் எப்போதுமே மாட்டிக் கொண்டிருக்கிறது. கதைக்களன் மாறுபடலாம். ஆனால் ஆபாசம், வன்முறை, பழிவாங்குதல், மிகையான பாத்திரப்ப்டைப்புகள், மிகையான, செயற்கையான சூழ்நிலைகள் இத்யாதி இத்யாதி. பரதேசி படம் பாலாவின் படங்களில் இந்த சதுரத்தில் இருந்து சற்று வெளியே வந்தது. அதை நம்பி இந்தப் படத்தை நான் குடும்பத்தையும் இழுத்துக் கொண்டு திரை அரங்கம் சென்று பார்த்தது தவறுதான்.
மனதுக்கு மிகவும் ஆறுதலாக, மாட்டுப் பொங்கல் அன்று கலைஞர் தொலைக்காட்சியில் கிராமியக் கலைகளின் ஒரு சிறிய அறிமுகமான நிகழ்ச்சியை ஒளிபரப்பினார்கள்.
விமர்சனத்தை முடிக்கும் முன் ஒரு கேள்வி வாசகர் மனத்தில் எழலாம். உனக்கு இவ்வளவு எதிர்மறை உணர்வு இருந்தால் ஏன் விமர்சனத்துக்கு இதை எடுத்துக் கொண்டாய்? பதில் இதுதான். தமிழ் நாட்டில் அறிவு ஜீவி = சினிமா இயக்குனர். எனவே பாலா என்னும் ஆகச்சிறந்த அறிவுஜீவியின் கையில் சிக்கி கிராமியக் கலை என்ன கதிக்கு ஆளானது என்பது மக்களுக்குத் தெரிந்தால் நல்லதே.
(image courtesy: kalaingar tv)
நேர்த்தியான விமர்சனம் தோழர்