AIRLIFT – இந்தியன் என்னும் அடையாளம் மையமான திரைப்படம்
சமீபத்தில் ராஜா கிருஷ்ண மேனன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் AIRLIFT திரைப்படத்தின் சில உரையாடல்கள் கீழே:
“இங்கே நமக்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது இந்தியாவில் ஆட்சியிலிருப்பவர்களுக்குத் தெரியுமா?
“அவர்களுக்கு என்ன் தெரியும்? நாம் கொண்டு வரும் டினார்கள் மேல் மட்டுமே அவர்களுக்கு அக்கறை”
——————————————————————
“இந்தியாவில் உள்ள யாரும் நம் மீது அக்கறையே காட்டவில்லையே?”
“அதுவும் ஒருவிதத்தில் சரிதான். பத்து நாட்கள் முன்பு வரை இங்கே உள்ள இந்தியர்கள் தம்மை குவைத்காரன் என்று தானே சொல்லிக் கொண்டு திருந்தார்கள்”
——————————————————————-
1990ம் வருடம் குவைத்துக்கும் ஈராக்குக்குமான பல பிரச்சனைகள் குவைத்தின் மீது ஈராக் போர் தொடுக்கும் அளவு மோசமாகி ஈராக் குவைத்தை ஆக்கிரமித்தது. சதாம் ஹூசைன் காலகட்டம் அது. அந்தப் போரின் போது அங்கே வேலை தேடிச் சென்றவர்களுக்கு உதவ இந்தியாவில் புகழ்பெற்ற வலிமையான அரசு ஒன்று இல்லை. ஆறு மாதங்கள் தான் அந்த ஆக்கிரமிப்பு இருந்தது என்றாலும் அந்த கால கட்டம் அங்கே வேலை தேடிச் சென்று பணி புரிந்த இந்தியர் உட்பட பல வெளிநாட்டினருக்கு மிகவும் சோதனையான காலம்.
அப்போது மாத்யூஸ் மற்றும் வேதி என்னும் இரு தொழிலதிபர்கள் மிகவும் பொறுப்புடனும் சவால்களை சந்திக்கும் இரும்பு நெஞ்சத்தோடும் ஒன்றரை லட்சம் இந்தியர்களுக்கு உணவு உறைவிடம் ஏற்பாடு செய்து அவர்களுக்கு திரும்பச் செல்ல விமானப் பயணத்துக்கு இந்திய அரசிடம் மன்றாடி வழி வகை செய்தார்கள். இவர்களுக்கு இணையாக கோஹ்லி என்னும் பெயருள்ள அதிகாரி இந்திய வெளியுறவுத் துறையில் காட்டப் படுகிறார். அவரின் மூலமாக நாம் அரசு இயந்திரத்தின் உள்ளார்ந்த தடைகள் மற்றும் தாமதங்களைத் தாண்டி ஒரு மிகப்பெரிய சாதனையை ஒரு கீழ் நிலை அதிகாரி நிகழ்த்திக் காட்டுகிறார். அது என்ன சாதனை? உலக வரலாற்றில் கிட்டத்தட்ட 480 விமானப் பறத்தல்கள் போர்க்காலத்தின் ஆபத்துக்கு நடுவே நிகழ்ந்து 1.75 லட்சம் மக்களுக்கு மேல் நாடு கொண்டு வரப்பட்டதே அந்த சாதனை.
இந்த உண்மை நிகழ்வை மையமாகக் கொண்டு திரைப்படமாக உருவாகி இருப்பதே AIRLIFT.
வெளி நாடு வாழ் இந்தியர்கள் அனேகமாக பரிதாபத்துக்கு உரியவர்கள். அவர்கள் பற்றிய அவர்கள் எதிர் கொள்ளும் சவால்கள் பற்றிய சரியான புரிதல் இங்கே இருப்போருக்கு அரிதாகவே நிகழ்கிறது. அங்கேயே நிரந்தரமாகத் தங்கி வாழ்பவருக்கு பண்பாட்டு ரீதியான மற்றும் பூர்வீகம் எது என்னும் கேள்வி சார்ந்த பிரச்சனைகள் என்றும் உண்டு. தற்காலிகமாக அங்கே வேலை செய்வோருக்கு போர் என்பது மிகப் பெரிய சவால். சிரியாவில் சமீபத்தில் இதை நாம் பார்த்தோம்.
நாம் இந்தியர்கள் என்று எப்போதாவது உணர்ந்திருக்கிறோமா? நமக்கு சக இந்தியர்கள் மற்றும் வெளி நாடு வாழ் இந்தியர்கள் எதிர்கொல்லூம் சவாலில் அவர்கள் நிகழ்த்தும் போராட்டங்களில் மனதளவிலான உணர்வளவிலான ஒன்றுபடும் பிணைப்பு உண்டா? இந்தக் கேள்வியை மிகவும் ஆழமாகவும் நுட்பமாகவும் கையாண்டிருப்பதே இந்தப் படத்தின் வலிமை. வசதியான தொழிலதிபர் ஒருவருக்கு முதலில் தன்னிடம் வேலை செய்யும் ஆட்களை மட்டுமே காப்பாற்றும் எண்ணம் இருக்கிறது. ஆனால் வீடு உடமை அடையாளமான பாஸ்போர்ட் எதுவுமே இல்லாமல் பல எளிய கூலித் தொழிலாளிகள் அங்கே வந்து அடைக்கலம் தேடும் போது மட்டுமே அவருக்குத் தாம் ஒரு பெரிய பணியை ஏற்க வேண்டிய சந்தர்ப்பம் இது என்பது புரிகிறாது. தமது செல்வாக்கு, புத்தி கூர்மை, வியாபாரத் தந்திரம் அனைத்தையும் இதில் செலுத்துகிறார்.
அவருடைய குடும்பம் எப்படி எதிர்கொள்கிறது இதை மற்றும் பயன்பெறும் இந்தியர் ஒருவரே எவ்வளவு விமர்சனங்கள் செய்கிறார் என்பதெல்லாம் நல்ல திரக்கதை மற்றும் வசனங்கள் வழியே இந்தத் திரைப்படம் சித்தரிப்பது பெரிய வெற்றி.
இந்தியாவுக்குள்ளேயே தன்னைப் பெரிய போராளியாக அறச்சீற்றம் உள்ளவராகக் காட்டிக் கொள்ள தேச ஒருமைப் பாட்டை புறந்தள்ளும் அடாவடித்தனம் செய்யும் அறிவுஜீவிகளை நாம் நிறையவே பார்க்கிறோம். வெளி நாட்டில் நாம் செல்லும் போது நம் நாட்டின் குடிமகனாக இருக்கும் ஒரே பலம், நம் நாடும் அரசும் நம்மைக் காக்கும் என்னும் ஒரே ஆயுதம் மட்டுமே நம்மிடம் உண்டு. இந்தியாவின் அறுபத்து ஒன்பது ஆண்டு சுதந்திர வரலாற்றில் எத்தனையோ யுத்தங்கள் அண்டை நாடுகளுடன் நடந்தன இல்லையா? ஆனால் ஈராக் படையினர் குவைத் பெண்களிடமும் குவைத் மக்களிடமும் இழிவக நடந்து கொண்டது போன்ற மீறல்கள் நடந்த யுத்தங்களின் பரிமாணத்தை வைத்துப் பார்க்கும் போது நாம் வெட்கப்படும்படி இல்லை. யுத்தத்தின் சூழலை சித்தரிப்பதில் இந்தப் படம் அரிதான சாதனையை நிகழ்த்தி இருக்கிறது.
சண்டை, நடனம் மற்றும் குவைத் பெண்ணை இந்தியர்கள் என்ன விலை கொடுத்தும் காப்பாற்றுவது என்னும் சினிமாத்தனங்கள் உண்டு இந்தப் படத்தில்.
இருந்தாலும், மூவர்ணக் கொடியும் இந்தியன் என்னும் அடையாளமும் நமக்கு இந்த மண் தந்த மாபெரும் பலம் என்பதை அழுத்தமாக மனதில் பதிய வைக்கும் இந்தப் படம் நான் பார்த்த இந்தியப் படங்களில் சிறந்தவற்றில் ஒன்று. இதைப் பரிந்துரை செய்த உறவினருக்கும் அழைத்துச் சென்ற என் மகனுக்கும் மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.
(image courtesy: Times of India)