காந்தியடிகள் அம்பேத்கர் வேறுபட்ட புள்ளி- சமஸ் கட்டுரை
கட்டுரைக்கான இணைப்பு ————– இது.
காந்தி துணையின்றி சமூக விடுதலை சாத்தியமா? என்ற சமஸ் கட்டுரை, சமூகநீதியில் காந்தியடிகள் மற்றும் டாக்டர் அம்பேத்கர் இருவருடைய அணுகுமுறை எந்தப் புள்ளியில் மாறுபட்டது என்பதை விவாதிக்கிறது. இந்த விவாதம் சிறு பத்திரிக்கைகள் மற்றும் இணைய தளங்களில் விரிவாக வந்தவையே. புனா ஒப்பந்தம் எனப்படும் ‘தலித்துகள் மட்டுமே ஓட்டளிக்கும் தனி பிரதிநித்துவ முறை’ அம்பேத்கரால் முன்வைக்கப்பட்டு காந்தியடிகளால் ஏற்றுக் கொள்ளப் படாத புள்ளி ஒன்றையே மையமாக வைத்து ‘காந்தி தலித் விரோதி’ என முத்திரை குத்தும் முயற்சிகள் பல நடந்தன. கட்டுரையின் பின் வரும் பகுதி அந்தச் சூழலை விவரிக்கிறது.
————————————————-
கொடிக்கால் ஐயா சொல்வார், “ஆங்கிலேயர் கொடுக்க முன்வந்த அந்த இரட்டை வாக்குரிமை தலித்துகள் எல்லோருக்குமானது அல்ல. படித்தவர்களுக்கும் நிலவுடைமை உடையவர்களுக்கும் மட்டுமானது. ஆகையால், அது எப்படிப்பட்ட விளைவுகளை உண்டாக்கியிருக்கும் என்பதை இன்றைக்கு உத்தரவாதமாகப் பேச முடியாது. தவிர, அன்றைக்கு அம்பேத்கர் கோரியபடி தலித்துகள் மட்டுமே ஓட்டுப் போட்டு தங்களுடைய பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்கும்படி வந்திருந்தால், ஒரு பெரும் இனப்படுகொலையையும் இந்தியா சந்தித்திருக்கும். வயது வந்தோர் அனைவருக்குமான வாக்குரிமையின் கீழ், தலித்துகளுக்கு என்று தனித் தொகுதிகளில், இன்றைக்கு இருப்பதுபோல எல்லா மக்களும் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுக்கும் முறைப்படி தலித் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவதே, சமூகங்கள் தமக்குள் நெகிழ்ந்து வரவும் ஊடாடவும் வழிவகுக்கும். ஒரு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்புவரைகூட நம்முடைய கிராமங்கள் எவ்வளவு கொந்தளிப்பாக இருந்தன என்பது இன்றைய தலைமுறையினருக்குத் தெரியாது. அரைப்படி நெல் அதிகம் கேட்டுப் போராடினார்கள் என்பதற்காக கூட்டமாக வைத்து 44 பேர் கொளுத்தப்பட்டார்களய்யா, இதே தமிழ்நாட்டில்..” இதைச் சொல்லும்போதெல்லாம் கொடிக்கால் ஐயா கண்ணீர் வடிப்பார்.
காந்தியம், அம்பேத்கரியம் இரண்டையும் சரிவிகிதத்தில் ஏற்றுக்கொண்டவர் கொடிக்கால். அம்பேத்கர் வழியைப் பின்பற்றியே கொடிக்கால் செல்லப்பாவாக இருந்தவர் கொடிக்கால் ஷேக் அப்துல்லாவாக மாறினார். அவரே இன்றைக்கு, “பொதுச் சமூகத்துடனான உறவாடலிலேயே எந்த ஒரு சமூகத்தின் முன்னேற்றமும் இருக்கிறது” என்பதைச் சொல்பவராகவும் இருக்கிறார்.
பூனா ஒப்பந்தத்தை ஆதரித்து நடைபெற்ற பம்பாய் மாநாட்டில் அம்பேத்கர் பேசியது இது: “சமரசப் பேச்சுவார்த்தைகள் மகாத்மா காந்தியால்தான் வெற்றி பெற்றன… வட்ட மேஜை மாநாட்டில் எனக்கு எதிரான நிலையெடுத்தவர் இங்கே என் உதவிக்கு வந்தார்; மாற்றுத் தரப்புக்கு அல்ல. தாழ்த்தப்பட்ட பிரிவினர் எல்லோரும் இந்த உடன்பாட்டை ஆதரிக்கிறார்களா என்ற கேள்வியைப் பத்திரிகைகள் எழுப்புகின்றன. என்னைப் பொறுத்தவரை, என் தலைமையிலுள்ள கட்சியைப் பொறுத்தவரை நாங்கள் இந்த ஒப்பந்தத்தை ஆதரிக்கிறோம். இங்கு வந்திருக்கும் என் நண்பர்கள் ஒவ்வொருவர் சார்பிலும் ஒப்பந்தத்துக்கான ஆதரவை அறிவிக்கிறேன்.”
————————————————–
காந்தியடிகள் அம்பேத்கர் இருவருமே உயரிய சமூகப் பொறுப்புணர்வு மற்றும் அரசியல் நாகரிகத்துடன் செயல் பட்டவர்கள். சமூக நீதியை அரசியல் முன்னேற்றத் துக்கான படிக்கல்லாய்ப் பயன்படுத்தாதவர்கள். இன்று நிலை தலைகீழ். தொடர் விவாதங்கள் மூலமே அந்த மாபெரும் தலைவர்களின் மகத்தான கனவுகள் தலைமுறைகள் பலருக்கும் சென்று சேரும்.
(image courtesy:Bhavans.info)