தகழியின் மூன்று சிறுகதைகள்
ஜனவரி 2016 ‘இனிய உதயம்’ இதழில் தகழியின் மூன்று சிறுகதைகளை சுரா மொழிபெயர்த்திருக்கிறார். மூன்றில் இரண்டு வறுமை மனிதர்களை என்னவெல்லாம் ஆக்க முடியும் என்பது. மூன்றாவது கதை நிலத்தின் மீது மனிதன் காட்டும் பற்று மையமானது.
‘பொன்னம்மாவின் புடவை’ ஒரு ஏழைப் பெண் நல்ல புடவைக்கு ஆசையே பட முடியாது என்கிறது. பொன்னமாள் பரம ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவள். அவளுடைய அப்பாவால் அவளுக்கு ஒரு நல்ல புடவையை வாங்கித் தர முடியவில்லை. அவள் விரும்பியது பட்டுப் புடவையா என்பது கதையில் தெளிவாக இல்லை. ஆனால் அது விலையுயர்ந்த புடவை தான். அவளுக்கு வரும் கணவன் ஒரு சமையற்காரர். அவனால் திருவனந்தபுரத்தில் விலை கொடுத்து புதிய புடவை வாங்க முடியாடததால் அவளது தீவிர விருப்பத்துக்காக ஒரு சலவைக்காரரிடமிருந்து பழைய விலைமதிப்பான புடவையைத் திருடி வந்து விடுகிறான். அவள் மகிழத்துவங்கிய சில மணி நேரத்தில் காவல் துறை அவனைப்பின் தொடர்ந்து வருகிறது. அவர்களுக்கு லஞ்சமாக அவளுடைய அப்பா பெரிய தொகையைக் கொடுக்கிறார். ஏழ்மை எந்த அளவு கொடியது , விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கை எவ்வளவு வெறுமை மிகுந்தது என்பதை தகழி நம் முன் கொண்டு வந்து நிறுத்துகிறார். பொன்னமாவின் கனவு நமக்கு விபரீதமானதாகப் படவில்லை. அது மறுக்கப்பட்டிருக்கும் கட்டமைப்பு நம்மை வருத்தம் கொள்ள வைக்கிறது. இது தகழியின் வெற்றி.
“வாழ்க்கைப் போட்டி” என்னும் கதை வித்தியாசமானது. மூத்தவள் மகள் பின்னர் ஒரு மகன் பின்னர் இரண்டு மகள்களான குடும்பத் தலைவி விதவையுமாவார். தம் சேமிப்பு எல்லாவற்றையும் வைத்து ஒரு முதல் மகளைத் திருமணம் செய்து அனுப்புகிறாள். வரதட்சணையை வைத்து மாப்பிள்ளை நிலம் வீடு என வாங்கினாலும் சிறிய வேலைகளில் மட்டுமே வருமானம். ஆரம்பத்தில் கொஞ்ச வருமானம் வர அதை அந்த மகள் தனது பிறந்த வீட்டுடன் பகிர்ந்து கொள்கிறாள். ஆனால் காலப் போக்கில் வேலை வாய்ப்பில்லாமல் அவள் குடும்பம் குழந்தைகள் சாப்பாடுக்கே கஷ்டப்படும் நிலை. மாறாக இந்தப்பக்கம் அவளது தம்பி வேலைக்குப் போய் குடும்பம் மிகவும் வளமாகி உயர்நிலைக்குப் போய் விடுகிறது. அவளையும் அவளது குழந்தைகளையும் ஒன்றாகத் தங்க வைத்துக் கொண்டால் அவர்களுக்கு நாகரிகமும் நாசூக்கும் இல்லை என்னுமளவு. மூத்த தங்கைகுத் திருமணம் செய்யும் போது இவர்களால் தமது அந்தஸ்து குலையும் என்று அவள் இறந்ததாக யூகிக்க விட்டு விடுகிறார்கள். அந்தப் பெண் வறுமையிற் செம்மையாய் கணவனுடன் வாழுகிறாள்.
இரண்டு கதைகளுமே நீண்ட காலத்தை சிறுகதையில் தருபவை. வறுமை என்பது எந்த அளவு முடக்கி ஒடுக்குவது என்பதை நமக்குத் துல்லியமாக உணர்த்துபவை.
மூன்றாவது கதை ‘மரணத்திற்குப் பிறகு’ மிகவும் சிறியது. ஒரு தம்பதி இருவர் மட்டும் இருக்கும் வீட்டின் கணவர் காலமாக பக்கத்து வீட்டுக்காரர் அவர்கள் வீட்டு மாமரத்தை வெட்டி அந்த விறகை தகனத்துக்குக் கொடுத்து அது இருந்த நிலத்தை அபகரிக்க முயல்கிறார். வழக்கு நீதிமன்றம் செல்கிறது. சிறிய நிலம் கூட மனிதனுக்கு எந்த அளவு பித்தானது என்பதை கதை முன்னிறுத்துகிறது.
தகழியின் காலத்தில் இந்தக் கதைகள் அந்தக் காலப் படைப்புக்களிலிருந்து முன் சென்றவை. மானுட வாழ்க்கையின் ஆழ்ந்த தரிசனம் உள்ளவை. .