பீப் பாடல் சர்ச்சையின் சமூக உளவியல் – சுரேஷ் கண்ணன் கட்டுரை
கட்டுரைகள் எழுதும் வேலையில் காலியிடங்கள் அதிகம் தான். சதாரணமாக ஒரு கட்டுரையைத் துவங்கி விட்டு எதை எதையோ தொட்டு விட்டு கட்டுரை எதற்காக எழுதினார் என் கிற கேள்வியை மட்டும் நம்மிடம் தெளிவாக விட்டு முடிப்பவர்கள் எண்ணிக்கை அதிகம்.
உயிர்மை பிப்ரவரி 2016 கட்டுரையில் சுரேஷ் கண்ணன் “பீப் பாடல் சர்ச்சை பாசாங்கு எதிர்ப்பின் உளவியல் என்னும் கட்டுரையில் ஆபாசம், பெண்கள் பற்றிய நமது ஆணாதிக்க அணுகுமுறை இவை எல்லாவற்றையுமே அந்த சர்ச்சையின் பின்னணியில் அலசுகிறார். அந்த சர்ச்சையின் வெவ்வேறு பரிமாணங்கள் வழி நம் சமூக உளவியல் பற்றிய புதிய அவதானிப்புக்களைக் கொள்கிறோம்.
சிம்பு தரப்பு வாதங்கள் மற்றும் விளக்கங்களை நாம் கண்ணை மூடிக் கொண்டு புறந்தள்ளக்கூடாது என வாதிடும் சுரேஷ் இப்படி ஒரு பாடலை தனது தனிப் பட்ட ஒன்றாக சிம்பு வைத்திருந்ததாக அவர் கூறுவதை ஏற்றாலும்., அது ஒரு சமகால இளைஞனின் ஆணாதிக்க நோக்கிலிருந்து வேறுபடுவதே இல்லை என்பதைச் சுட்டுகிறார். இந்த ஆணாதிக்க மன்ப்பான்மை இப்போது வணிகமாகிறது. விடலைகளும் இளைஞர்களுமே திரைப்படம் வெளியானது பார்த்துவிடத் துடிப்பவர்கள். எனவே இவர்களைக் குறி வைத்தே படங்கள் எடுக்கப் படுகின்றன. மேலை நாடுகள் போல வெவ்வேறு வயதினருக்கான படங்கள் எடுக்கபடுவதில்லை தமிழில். இருபாலார், அவர்களில் வெவ்வேறு வயது ரசிகர்கள் என அவர்களுக்குப் பிடித்தமான காட்சிகள் சேர்க்கப்படுகின்றன. விளைவு ஆபாசமான ஒன்று அரங்கேறி விடுகிறது. இந்த வணிகம் எளிதானதாய் இருக்கவில்லை பாலின் அடிப்படையில் உள்ள ஏற்றத் தாழ்வுகளை நிலையாக இருத்தி வைத்திருப்பதாக இருக்கின்றன. பாலின் அடிப்படையிலான பாரபட்சமான பார்வையை அணுகுமுறையை மாற்றும் ஆக்க பூர்வமான விவாதங்கள் தமிழில் இப்போது நிகழவே இல்லை.
எனவே நிகழ்ந்தெல்லாம் தர்ம அடிவாங்கும் ஒரு சிறிய திருடன் போல சிம்பு மேல் விழுந்தவை. பெரிய வணிக ஊடகங்கள் மற்றும் ஜாதி மத வெறி அமைப்புக்கள் ஆகிய பெரிய திருடர்கள் என்ன செய்கிறார்கள், அது பெண்களுக்கு எவ்வளவு எதிரான வேலை என்பவை விவாதத்திற்கே வருவதில்லை. காலகாலமாக ஊன்றிய ஊறிய ஆணாதிக்க மனப்பாங்கைத் தாண்டி சமூகம் செல்லும் சிந்தனைத் தடம் எதுவுமே இல்லை.
செறிவான கட்டுரையில் சுரேஷ் நாம் சிந்திக்க வற்புறுத்துகிறார்.