காக்கைக்குப் பிடிபட்டது
சத்யானந்தன்
தடிமனான புத்தகங்களில் தான்
இருக்கின்றன
எல்லாத் தத்துவங்களும்
கோட்பாடுகளும்
அவற்றைப் படித்தவர்கள்
அனேகமாய் எனக்கு
அது பிடிபடாது
என்பதாகவே காட்டினார்கள்
வெகு சிலர் கருணையுடன்
சில சரடுகளை இவை எளியவை
என்றும் தந்தார்கள் ஆனால்
அவை சங்கிலிகளாய்
ஒரு கண்ணியில் நுழைந்து
சிக்கினேன்
அடுத்தது என்னை
நுழையவே விடவில்லை
லேசாயிருப்பது தினசரி
‘நாட்காட்டித் தாட்கள் மட்டுமே
தத்துவப் புத்தகங்களைப் பகடி செய்வதாய்
என்னையும்
லேசாய் சில முன்னேற்ற
நூல்களுண்டு அவை
எதையும் விளையாட்டாய்
எண்ணி மேற்செல் என்பதாய்
மரப்பாச்சி தொடங்கி
கனமில்லா நுட்பமதிக
பிளாஸ்டிக் பொம்மை தாண்டி
மின்னணு வடிவில் விளையாட்டுகள்
எந்த விளையாட்டை எந்த
நாள் செய்வது
எந்த நாளை எப்படிக்
கடந்து செல்வது
எந்தக் குழந்தையோ
எப்போது விட்டுச் சென்றதோ
ஆரஞ்சு வண்ணப் பிளாஸ்டிக் பந்தை
அயராமல் கொத்துகிறதே காக்கை
விளையாட்டா?
(image courtesy:uphere.ca)
(14.2.2016 திண்ணை இதழில் வெளியானது)