சொல்வது
சத்யானந்தன்
கோடிகளில்
மொழிந்தேன்
லட்சக்கணக்கில்
எழுதினேன்
சொற்கள்
சொற்கள் வழி
சிந்திப்பதில்
எத்தனை கர்வம்
எனக்கு
பதில்களாய்
கேள்வியின் எதிரொலியாய்
எல்லாச் சொல்லும்
பதிலாகச் சொல்லப் படாத
அசலான சொல்லை நான்
எப்படி அறிவேன்?
எதிர்வினையாகாததாய்
சுய சிந்தனை இதுவென்று
எப்படி இனம் காண்பேன்?
அசலாயொரு தேடல்
மௌனமாய்த் தொடர்வதையே
காண்கிறேன்
தேடலில் வழிப்பட்ட
சொற்கள் விடுதலையை
சொற்களின் வழிப்பட்ட
தேடல் தளைகளைப்
பொருளாய்க் கொண்டிருக்க
மெளனமும்
ஒலித்தலும் தன்
பொருட்டல்ல
என்றிருக்கும்
வழிபாட்டுத் தலத்து மணியின்
நாவு
(6.3.2016 திண்ணை இதழில் வெளியானது)