லேசான வலிமை
கொடுங்கனவில்
விழித்தது முதன்முறையல்ல
படுக்கையில் முளைத்தன
பதாகைகள்
தமிழில் பிற மொழியில்
கோஷம் கோரிக்கை
விளம்பரம்
அறிவுரை எச்சரிக்கை
அறைகூவல்
வியர்த்து விழித்தேன் பல இரவுகள்
காற்றில் அசைந்து பறந்தும்
போகும் லேசான
அவை
மானுடத்தின்
பரிமாற்றங்கள்
உரையாடல்கள்
தோழமைகள் வாளுரசல்கள்
வாணிகம் தியாகம்
உறவுகள் சுரண்டல்கள்
எதையும் நிர்ணயிக்கும்
மாவல்லமை கொண்டவை
பதாகைகள் ஒரு
அமைப்பின்
கொடுங்கனவாகா
அமைப்பின் நிறுவனத்தின்
அதிகார அடுக்குகள்
வளாகத்து அறைகளின்’
கதவுகள் மீது
பெயர்ப் பலகைகளாய்
பதாகையை
எதிர்கொள்ளும்
பதாகைகளைப் பயன்படுத்த
நீர்க்கடிக்க
விளிம்புக்குள் அடைக்க
பெயர்ப் பலகைகள்
மாட்சிமை கொண்டவை
அப்படி ஒரு பலகையும்
புழுதிமண்டிக் கிடந்ததைக்
கண்டேன்
பழையன சேகரித்து
விற்கும் கடையில்
(3.4.2016 திண்ணை இதழில் வெளியானது)
(image courtesy:youtube)