இணைய எழுத்து மற்றும் பெண் கவிஞர்கள் -தமிழவனின் மனத்தடை
அபுனைவு, விமர்சனம் இவற்றால் என்னை மிகவும் கவந்தவர் தமிழவன். சமகால இலக்கியம் பற்றிய, நவீனத்துவம் பின்னவீனத்துவம் பற்றிய மேம்பட்ட புரிதலுக்கு அவருடைய நூல்கள் எனக்குத் துணை நின்றிருக்கின்றன. தீராநதி ஏப்ரல் 2016 இதழில் ‘புதிய ஊடகத்தில் தமிழிலக்கியம்’ என்னும் கட்டுரையில் மாறாக இணையத்தில் வெளியாகும் இலக்கியம் பற்றிய மேலோட்டமான புரிதலும் பெண் கவிஞர்கள் பற்றிய தவறான புரிதலுமே அவரிடமிருந்து வெளிப்பட்டிருக்கின்றன. இணைய இலக்கியம் முகநூல் மற்றும் இணையங்களில் வெளிவருபவை வெகுஜனமாக வாசிக்கப்படுவது இலக்கியத்தின் மீதும் வாசிப்பின் மீதும் கண்டிப்பாக தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது அவர் கருத்து.
தமிழவனைத் தவிர்த்தும் ஜெயமோகன் உட்பட பல மூத்த எழுத்தாளர்களிடம் இணையத்தில் வெளியாகும் இலக்கியம் பற்றி நிறையவே மனத்தடைகள் இருக்கின்றன. மறுபக்கம் அனேகமாக தீவிர எழுத்தில் உள்ள சிறிய பெரிய புதிய மூத்த எந்த எழுத்தாளருமே தனது இணையதளத்தை ஒரு ஊடகமாக பயன்படுத்தாமலிருப்பதில்லை. இருமை என்பது என்பதே பொருத்தமாக இருக்கும்.
வாசிப்புக்கு சிறு பத்திரிக்கைகள் நவீன மற்றும் தீவிர இலக்கியத்துக்கு இடம் தந்து அவற்றை முன்னெடுத்த போதே இடப்பற்றாகுறை முதல் காரணமாக அமைந்தது. இரண்டாவது குழு சார்ந்த ஆளுமை சார்ந்த கோட்பாடு சார்ந்த படைப்புத் தேர்வும் வெளியீடும்.
இணையம் கண்டிப்பாக இந்த இரண்டு தடைகளை உடைத்தெறிகிறது. இணையம் வாயிலாக ஒருவர் தமது பதிவை வெளியிடுகிறார். அது ஆழமோ தீவிரமோ இல்லாதது என்பதால் அது போல் பலரும் எழுதுகிறார்கள் என்பதால் என்ன நீர்த்துவிடும்? ஏன் தரமான இலக்கியம் பற்றிய புரிதல் இல்லாமலே போய் விடும்?
இவற்றிற்கான வாய்ப்பு எதுவும் இல்லை. உண்மையில் இதே இணையத்தை தீவிர இலக்கியம் பற்றிய அறிமுகம் மற்றும் வெகுஜன அல்லது ஆழமற்ற நகலான படைப்புக்கள் பற்றிய விமர்சனத்துக்குப் பயன்படுத்த முடியும்.
அது நம்மால் முடியாது என்பதே தடை. ஆளுமை சார்ந்த வாசிப்பு, வாசிப்பவற்றை விமர்சிக்க மனத்தடை இவையே காரணம். இணைய இலக்கியம் நல்ல நவீன இலக்கியத்தை ஓரங்கட்டிவிடும் என்னும் பிரமைக்கு இந்த மனத்தடைகளே காரணம்.
பெண் கவிஞர்கள் பற்றித் தமது கட்டுரையின் முடிவில் தமிழவன் குறிப்பிடுவதைக் கீழே காண்போம்:
“சமூகம் பெண்களை அடிமைப்படுத்துவதற்குக் காரணம் தந்தைமைச் சமூகம் என்று கூறியிருக்க வேண்டும். தந்தைமை (Patriarchy) என்ற தத்துவ வயப்பட்ட புரிதலுக்குப் பதில் இளமைத்துடிப்பு என்ற கொச்சைப்படுத்துதல் பார்வை தான் நம் பெண் கவிஞர்களின் சில கவித்துவக் கூறுகளைத் தூண்டியது. தத்துவமும் கோட்பாடுகள் பற்றிய விரிவான பார்வையும் இருந்திருந்தால் தமிழ்ப் பெண்கவிஞர்களின் இயக்கம் பிரம்மாண்டமான ஒரு தற்கால தமிழிலக்கியப் புரட்சியைச் செய்திருக்கும். இப்போது அது முற்றுப் பெற்றுள்ள முறையில் முற்றுப் பெற்றிருக்காது”
பெண் கவிஞர்களின் கவிதைப் பாதையைப் பற்றிய இதை விடத் தவறான புரிதல் இருக்கவே முடியாது. அவர்களின் பயணம் முற்றுப் பெறவில்லை. அவர்கள் கவிதைகள் வாசிக்கபடவில்ல, விமர்சித்து விவாதித்து மெலெடுத்துச் செல்லப்படவில்லை என்பதே உண்மை. பெண்கவிஞர்கள் கவிதையில் வெளிப்படும் வலியும் சுதந்திர தாகமும் தனித்தன்மை கொண்டவை. கொச்சைப்படுத்துபவை அல்ல.
இணைய இலக்கியம் மற்றும் பெண் படைப்பாளிகள் பற்றிய எனது விரிவான நேர்காணலே இதற்கு பதில். அதற்கான இணைப்பு —————- இது.
(image courtesy: youtube)