‘ஜங்கள் புக்’ திரைப்படம் – விலங்குகளின் விந்தை மிகு உலகம்
120 வருடங்களுக்கு முன்பே ரட்யார்டு கிப்லிங் குழந்தைகளுக்கான நீதிக்கதைகள் கொண்ட தொகுதி. இதன் திரை வடிவம் பல முறை வந்தது தான். 90களில் இது தொலைகாட்சித் தொடராகவும் வந்ததே. விலங்குகளின் உலகை அந்த விலங்குகள் காடு என்னும் நாட்டில் தமது சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு வாழ்வதான சித்தரிப்பைத் தரும் அவரது கற்பனை மிகவும் வியக்க வைப்பது.
சமீபத்தில் டிஸ்னி நிறுவனம் வரைகலைத் தொழில் நுட்பத்தில் விலங்குகளும் மோக்லி என்னும் சிறுவன் நிஜமானவனாகவும் திரைப்படவடிவில் அவரது மூலக் கதையின் மற்றுமொரு திரைவடிவமாக ‘ஜங்கள் புக்’ திரைப்படத்தைத் தந்துள்ளது.
மோக்லி சிறு குழந்தையாக இருக்கும் போது பெற்றோரைப் பிரிந்து காட்டில் மாட்டிக் கொள்கிறான். கருஞ்சிறுத்தையால் காப்பாற்றப்பட்டு நல்மனம் கொண்ட தாயும் தந்தையுமிருக்கும் ஓநாய் குழுவிடம் அந்த சிறுத்தையால் ஒப்படைக்கவும் படுகிறான் அவன். ஒரு தாய் ஓநாய் தனது குட்டிகளுடன் சேர்த்து அவனை வளர்க்கிறது. எல்லா விலங்குகளும் அவனை ‘மனிதக் குட்டி’ என்றே அழைக்கின்றன.
திரைப்படத்தின் துவக்கத்தில் வரும் ‘அமைதிப் பாறை’ என்னும் சிறிய குளத்தின் காட்சி மனதைத் தொடுவது. விலங்குகள் தண்ணீர் அரிதான கோடைக்காலத்தில் வேட்டையாடும் விலங்குகளும் இரையாகும் விலங்குகளும் ஒரே குளத்தில் நீர் அருந்தும். போரில்லாத உடன்பாடு இருக்கிறது. இது காட்டின் விதிகளில் ஒன்று. மோக்லி ஒரு கொடியைக் கயிராகப் பயன்படுத்தி நீரை ஒரு சிரட்டையில் சேந்திக் குடிக்க முற்படும்போது ‘மனிதர் செய்யும் வித்தை எதையும் செய்யாதே’என்று தாய் ஓநாய் எச்சரிக்கிறது. ‘ஷேர்கான்’ என்னும் ஆண்புலி மோக்லியை மிகுந்த வெறுப்புடன் பார்க்கிறது. ‘மனித இனத்தினருக்கு இங்கே இடமில்லை’ என்று எச்சரிக்கிறது. தனது முகத்தில் உள்ள நெருப்புடத் தழும்புகளைக் காட்டி மனித இனம் இதைத்தான் நமக்குத் தரும் என்று வெறுப்பை உமிழ்கிறது. ‘அவனை என்னிடம் ஒப்படையுங்கள்’ என்று அழுத்தமாகக் கூறிச் செல்கிறது. கைக்குழந்தையான மோக்லியைக் காப்பாற்ற அவனது தந்தை நெருப்புப் பந்தத்தால் புலியை அடித்து விரட்டிய போது வந்த காயத் தழும்புகள் அவை.
திரைக்கதை குழப்பமே இல்லாமல் சரளமாக நகர்கிறது. சிறுத்தை ஓநாய் இனத்தை எச்சரிக்கிறது. ‘மோக்லி கிளம்பி மனித இனத்துடன் வாழ்வதே அவனுக்குப் பாதுகாப்பு’ என விளக்குகிறது. சிறுத்தையால் காட்டின் எல்லையில் விடப்பட்ட மோக்லி காட்டை விட்டுப் பிரிய மனமின்றி ஒரு கரடியுடன் தங்குகிறான். தனக்குத் தேன் எடுத்துத்தர அவனை நைச்சியமாகப் பயன்படுத்திக் கொள்கிறது. ஒரு யானைக் கூட்டத்தின் சிறு குட்டியை அவன் பள்ளத்திலிருந்து காப்பாற்றி விடுகிறான். குரங்குகளின் சாம்ராஜ்ஜியமான ஒரு பழைய கட்டிடத்தில் ராஜா குரங்கு அவனை ‘சிவப்புப் பூ’வைக் கொண்டு வரச் சொல்கிறது. நெருப்புக்கு விலங்குகளின் உலகில் சிவப்பு பூ என்று பெயர்.
அவனை அது வலுக்கட்டாயப் படுத்துகிறது. ஆயிரக்கணக்கான குரங்குகள் நடுவே பெரிய உருவமுள்ள ராஜா குரங்கிடம் ‘தனக்கு நெருப்பு பற்றி ஒன்றுமே தெரியாது’ என்னும் உண்மையை எடுத்துரைக்கிறான். ஆனால் அந்தக் குரங்கு அதை ஏற்கத் தயாராக இல்லை. இறுதியில் கரடி சபைக்குள் புகுந்து நகைச்சுவை செய்கிறது. அதில் அவன் தப்பிக்க சிறுத்தையும் கரடியும் போராடி அவனைக் காப்பாற்றி விடுகின்றன. அப்போது தான் தன்னைத் தந்தையாக இருந்து காப்பாற்றிய அகேலா ஓநாயை ஷேர்கான் கொன்றான் என்பது மோக்லிக்குத் தெரிய வருகிறது. அவன் மனிதர் வாழும் பகுதியில் நுழைந்து ஒரு தீப்பந்தத்தை மட்டும் எடுத்துக் கொண்டு புலியைத் தாக்கத் திட்டமிடுகிறான். மரங்களில் எது முறிந்து விழக்கூடியது என்பது அவனுக்கு சிறுத்தை வழி தெரிந்தது. காடே ஷேர்கானை எதிர்த்தாலும் அந்தப் புலி மோக்லியைக் கொல்ல விரைகிறது. சிறுத்தை “ஒரு ஓநாயாக அல்ல. மனிதனாகப் போராடு’ என்று சொல்லித் தர அவன் கிளைகள் பலமில்லாத மரங்களில் தாவுகிறான். ஒரு நேரத்தில் புலி மரம் முறிந்து இவன் தீப்பந்தத்தில் இருந்து சிதறிய நெருப்பில் உண்டான காட்டுத்தீக்குள் விழுந்து மடிகிறது.
கரடியாக வரைகலையில் கொண்டுவரப் பட்டுள்ள வடிவம் தரும் முகபாவங்கள் அயர வைப்பவை. விலங்குகளின் உலகைக் குழந்தைகளுக்கு சுவாரசியமாகவும் அதன் வழி மனித உலகில் உள்ள முரண்களை அங்கதமாக நாம் புரிந்து கொள்கிற மாதிரியும் சித்தரித்திருப்பது மிகவும் பாராட்டுக்குரியது.
காடுகள் மற்றும் பிற உயிரினங்களை நம்மைப் போலவே காண இந்தப் படம் குழந்தைகளை ஊக்குவிக்கும்.
(image courtesy:wiki)