பிம்ப உறவு
சத்யானந்தன்
மிகவும்
அழகிய முகவடிவம்
அவளுடையது
நிலைக் கண்ணாடி
அதை அப்படியே
இறுத்திக் கொண்டது
அழியாத பிம்பத்துடன்
அதை எனக்குப்
பரிசளித்தாள்
நான் திரும்பும்
திசையில் அந்த
விழிகள்
தானும் என்னைத்
தொடர்ந்தன
வேறு
அறையில்
அதை மாற்றி வைத்தேன்
ஆனால்
அந்த அழகு
முகம் தன்னை நோக்கி
ஈர்க்க தினமும்
பலமுறை சென்று
ரசித்தேன்
ஒரு நாள்
அவளைப் பார்க்கப்
போன அன்று
அறைக்கே போகவில்லை
அடுத்த நாள்
கண்ணாடி கேட்டது
“நேற்று நீ ஏன் வரவில்லை?”
“நிஜத்தைப் பார்க்கும் நாளில்
நீ எதற்கு?”
“அவள் பிம்பமாக இல்லை
என்று நீயாகவே
எப்படி முடிவு செய்தாய்?”
(image courtesy:gettyimages.in)
(1.5.2016 திண்ணை இதழில் வெளியானது)