தகவல் தொழில் நுட்ப ஊழியர்கள் தொழிலாளிகள் – நீதிமன்றத் தீர்ப்பு
தகவல் தொழில் நுட்ப ஊழியர்கள் பணிச்சுமை, பணி நிரந்தரமின்மை, உரிய ஊதியமின்மை என மிகுந்த அழுத்தத்தில் எப்போதும் பணி செய்பவர்கள். அவர்களுக்கு எந்த உரிமையுமில்லை என்பதே இது வரை நிலை. அவர்கள் தொழிலாளிகள் என ‘பணியாளர் நீதிமன்றம்’ (Labour Court ) ஒரு வழக்கில் தீர்ப்பளித்துள்ளது. இது ஒரு பெரிய திருப்பம். நல்ல திருப்பம். ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு நம்பிக்கை தரும் தீர்ப்பு.
தீர்ப்பு பற்றிய இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்திக்கான இணைப்பு இது.
தொழிற்சங்கங்கள் யாருமே தகவல் தொழில் நுட்பப் பணியாளர்களின் பரிதாபத்துக்குரிய வேலைச் சூழலை முன்னெடுக்கவே இல்லை. இது தொழிற்சங்கங்கள் அரசியல் கட்சிகளின் கீழ் அரசியல் மட்டுமே செய்யும் அமைப்புக்களானதன் பாதிப்பே. எந்த ஒரு தனியார் அல்லது அரசு நிறுவனத்திலும் பெரிய சலசலப்பு, பரபரப்பு உண்டு பண்ணும் பிரச்சனையைக் கையில் எடுக்க ஆர்வம் காட்டும் தொழிற்சங்கங்கள் ஊழியருக்கு நடக்கும் நேர்முக மறைமுக சிறு பெரு அநீதிகளைக் கண்டு கொள்வதில்லை. ஜாதி அடிப்படையில் இயங்கும் மையக் குழு எல்லாத் தொழிற்சங்கத் திலும் உண்டு. நிறுவன சட்டதிட்டங்கள், தொழிலாளர் நலச் சட்டங்கள் பற்றித் தெளிவுள்ள தலைவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். ஊழியருக்கு அவரது உரிமைகள் பற்றி அறிவை ஏற்படுத்தும் பொறுப்பை தொழிற்சங்கங்கள் தனது என்று எடுத்துக் கொள்ளவே இல்லை. சந்தாப் பணத்தில் எல்லா உல்லாசமும் செய்து பந்தா பண்ணும் கும்பலை எந்த நிறுவனத்திலும் காணலாம்.
திரும்ப இந்தத் தீர்ப்புக்கு வருவோம். இதைப் பற்றி வல்லுனர்களது கட்டுரைகள் பலவற்றை நாம் எதிர்பார்க்கலாம். எனக்கு எட்டியவரை தமிழ் நாட்டில் வெளியாகி உள்ள இந்தத் தீர்ப்பின் வீச்சைப் பார்க்கலாம்:
1. தனியார் நிறுவனங்கள் தமது பணியாளருக்கு வேலை தரும் போது ஏற்படுத்திக் கொள்ளும் ஒப்பந்த ஷரத் துக்களில் பெரிய மாற்றம் வராது. ஆனால் தொழிலாளர் நலச் சட்டத்துக்கு முரணான எந்த ஷரத்தும் அதில் இனி இடம் பெற முடியாது.
2.பெண் ஊழியருக்கு பேறுகால விடுமுறை மற்றும் எல்லா ஊழியருக்கும் சிகிச்சையோடு கூடிய அல்லது சாதாராண விடுப்பு அதன் போது சம்பளம் இவை தொழிலாளர் சட்டப்படி அமையும்.
3.பணி நீக்கத்தைக் காரணமின்றித் தன்னிச்சையாகச் செய்வது எளிதாயிராது.
4.ஊதியம் தொடர்பான பிரச்சனைகளில் தொழிலாளர் சட்டம் கண்டிப்பாகத் தலையிட முடியும்.
5.பணி இடப் பாதுகாப்பு மற்றும் வேலை வாங்கும் கால அளவு எல்லாமே இனி சட்டத்தின் அடிப்படையில் கேள்விக்குள்ளாக முடியும்.
தகவல் தொழில் நுட்பத் துறையின் முழு மூலதனமும் மனித வளமே. அங்கே தற்கொலைகள் அதிகம். காரணம் அதிகத் திறமையை உழைப்பை குறைந்த ஊதியத்தில் பெறுவதற்காகவே ஊதிய உயர்வே தராமல் தானாகவே ராஜினாமா செய்து வேறு நிறுவனம் போகும் அளவு செய்வது அங்கே தொழில் ரகசியம். பட்டப் படிப்புப் படித்த இளைஞர் அங்கே மரியாதையாகவோ மனித நேயத்தோடோ நடத்தப் படுவதே கிடையாது. அங்கு பணிபுரியும் காலத்தில் தம் திறனை வளர்த்துக் கொள்ள அவர்கள் ஊக்குவிக்கப் படுவதே இல்லை. மன அழுத்தமும் தூக்கமின்மையும் இந்தத் துறை இளைஞரைத் துரத்தும்.
இனியாவது இந்த இளைஞருக்கு விடிவுகாலம் பிறக்க வேண்டும்.