புத்தகக் கண்காட்சி பற்றிய சாருநிவேதிதாவின் விமர்சனத்துக்கு என் எதிர்வினை
“இது என்ன புத்தகக் கண்காட்சி சமையல் குறிப்பு, காமிக்ஸ் இத்யாதியே 90%” என்பதான சாருநிவேதிதாவின் விமர்சனத்துக்கான இணைப்பு —– இது.
புன்னகையை வரவழைக்கும் விஷயம் சாரு உட்பட எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன் இவர்கள் ஒரு திருமண விழாவுக்கு இணையாக புத்தக வெளியீட்டை நடத்துபவர்கள். (உனக்கென்ன பொறாமை?- பொறாமையில்லை. மேலே படிக்கும் போது பிடிபடும்).
சினிமா இசைத் தட்டு வெளியீடுக்கும் புத்தக வெளியீட்டுக்கும் பெரிய வித்தியாசமே இல்லை. சில சமயங்களில் இங்கும் சினிமா ஆட்களே மேடையில். (அப்பிடிப் போடு). போகட்டும். மறுபக்கம் மூன்று பேரில் இருவருக்கு நல்ல சினிமா என்றால் பயங்கர ஈர்ப்பு. ஜெயமோகன் நல்ல சினிமாவை உருவாக்கும் குழுக்களில் இருப்பார். அதாவது வாசிப்பின் எதிரிக்கு மூம்மூர்த்திகளே துணை. புத்தக வாசிப்பின் மிகப்பெரிய எதிரி காட்சி ஊடகம். புத்தக வாசிப்புக்கு பெரிய குழி தோண்டியது காட்சி ஊடகமே. இதில் ஐயமே இல்லை. காட்சி ஊடகத்தின் மீது உனக்கென்ன எரிச்சல்? எரிச்சல் இல்லை ஐயா. காட்சி ஊடகம் கையாலாகாதது. எழுத்தின் மீது கட்டமைக்கப்படும்போது ஓரளவு எடுபடுவது. எளிய உதாரணம் ஒன்று தருகிறேன். சத்யஜித் ரேயின் ‘சத்கதி” என்னும் படத்தை எடுத்துக் கொள்வோம். அது முன்ஷி ப்ரேம் சந்த் அவர்களின் சிறுகதையின் திரை வடிவம். இது சத்ய ஜித் ரே கையில் எடுத்த காட்சி ஊடகத்தின் இயாலமைகளைத் தாண்டி ஒரு திரைப்படத்தைத் தூக்கி நிறுத்தியது. அதாவது படைப்பாளியின் தீவிரம் அவரது புனைவின் வீச்சு எழுத்தை விட மட்டமான கையாலாகாத காட்சி ஊடகத்தைத் தூக்கி விடுகிறது.
அது என்ன கையாலாகாத தன்மை? கற்பனையின் வீச்சுக்களுக்கு சினிமாவில் இடமே இல்லை. அசரீரியாகச் சொன்னால் தான் உண்டு. ஒருவர் சிந்தனையில் ஆழ்ந்து பல பிரச்சனைகளை ஒரே நேரத்தில் தலை மீது ஓட விட்டுக் குழப்பிக் கொள்ளும் ஒரு காட்சியை ஒரு எழுத்தாளன் ஒரு பத்தியில் நிதர்சனமாக்குவதை ஒரு மணி நேரம் பல கோடி செலவு செய்து திரையில் ஓட விட்டாலும் திரைப்படத்தால் அதே வீச்சு அந்த அசல் கனல் ,தீவிரத்துடன் ஒருக்காலும் பார்வையாளனிடம் சேர்க்க ஏலாது. ஏனெனில் அந்த ஊடகத்தின் உள்ளார்ந்த நிவர்த்தி செய்ய முடியாத குறை அது. இன்று அந்த ஊடகம் ஓங்கி உலகளப்பதால் அசடு வழிகிறார்கள் தமிழ் எழுத்தின் மும்மூர்த்திகளும். போகட்டும். அது அவர்கள் சுதந்திரம்.
நம் கேள்வி இது தான். ஐயா சாரு நீரே தூக்கிப் பிடிக்கும் காட்சி ஊடகம் காவு வாங்கிய வாசிப்புப் போனதென்று நீரே வருந்துகிறீரே? நகை முரணாக இல்லை?
அடுத்தது புத்தகங்கள் விற்பதில்லை இதற்கு வருவோம். புத்தகம் மின்வடிவில் வரக்கூடாது என்று எழுதாத விதி எதற்கு? இணையத்தில் எழுதப்படுவது எல்லாமே மலினமானது இளப்பமானது என்னும் மனத்தடை எதற்கு? ஆங்கிலத்தில் உள்ள பெரிய செவ்விலக்கியம் முதல் பல முக்கியப்படைப்புக்களை அமேசான் இணைய விற்பனையில் ‘கிண்டில்’ என்னும் ‘டேப்லட்’ வடிவில் கொண்டு வந்து விட்டது. இன்று ஜெயமோகன் அச்சில் எழுதியவை அனைத்தையும் ஒருவர் வாங்கினால் அதற்காக வீட்டில் ஒரு தளம் மேலே எழுப்பி அடுக்கி தூசி தட்டி அதன் பிறகு அங்கேயே நின்ற படி ஆயுள் முழுவதும் வாசிக்கலாம். இது தேவையா? ஏன் இது மின்னூலாக வரக்கூடாது? ஏன் மின்னூல் என்னும் கையடக்கமான வாசிக்க வசதியான ஒரு துணையை நாம் ஏற்கக் கூடாது? எழுத்தில் மட்டும் எல்லா மாற்றங்களைப் பற்றியும் பேசும் எழுத்தாளர்கள் இந்த சிறிய தொழில் நுட்பத்தை ஒரு கையடக்கக் கருவியை ஏன் ஏற்க மறுக்கிறார்கள்? மானாவாரியாக வாருகிறேன் என்று நினைப்பவர்கள் தயவு செய்து சமகால மின்னூல் தளங்களில் போய்ப் பாருங்கள் ஜாம்பவான்கள் அல்லது அதிகம் வாசிக்கப்படாதவர்கள் இருவர் மட்டுமே அங்கே இருப்பார்கள். மூம்மூர்த்திகளோ அவர்கள் அடியொட்டி நடப்பவர்களோ இருக்கவே மாட்டார்கள். இந்த முரண் அசட்டுத்தனம் கண்மூடித்தனம்.
மற்றொரு முக்கியமான காரணத்தைச் சொல்லியே கட்டுரையை முடிக்க வேண்டும். சமகால எழுத்தை எத்தனை மூத்த எழுத்தாளர்கள் வாசிக்கிறார்கள் விமர்சிக்கிறார்கள். ‘உம் எழுத்தைப் பற்றிப் பேசாமல் அதிகம் அறியப்படாத சமகால எழுத்தாளர்களின் படைப்புக்களைப் பற்றிப் பேச வருகிறீர்களா?” என்று ஒருவர் அழைத்தால் எத்தனை பேரால் வர முடியும்? வாசித்தால் தானே விமர்சிக்க? ” இவர்கள் வளர்ந்த போது எந்த அமர்வுகள் இவர்களுக்கு உதவினவோ அவை அருகி வருவதை இவர்கள் வளர்ந்த பின் கண்டுகொள்ளவே இல்லை.
என் வாசகர் வட்டத்தில் நான் சிஷ்ய கோடிகளுக்கு உபதேசிப்பது போதாதா என்பதே சுருக்கமான செய்தி.
இப்படி நாமே நம் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டு முதலைக் கண்ணீர் வடிப்பதில் என்ன ஐயா பிரயோசனம்?
வாசிப்பு விமர்சிப்பு வளரும் எழுத்தாளனை ஊக்குவிக்கும் அமர்வு இவை பெரிய எழுத்தாளர்களால் முன்னெடுக்கப்படும் போது மட்டுமே வாசிப்பு புத்துயிர் பெறும். பெரிய பூனைகள் கண்ணை மூடிக் கொண்டதனால் தான் தமிழ் இலக்கிய உலகம் இருண்டது போல ஆகாது. உண்மையில் இலக்கிய வாசிப்பில் தீவிரம் உள்ளோர் அதை செல்லப்பா காலம் முதல் சல்மா காலம் வரை காப்பாற்றிக் கொண்டுதான் வருகிறார்கள். பெரிய தலைகளின் மனத்தடை இவர்களின் குறைபாடு.