அஞ்சலி கவிஞர் குமரகுருபரன்
அகாலமாக இளம் வயதில் கவிஞர் குமரகுருபரன் மரணமடைந்தார். சமகாலத்துப் படைப்புக்களை வாசித்து வருபவன் விமர்சித்து வருபவன் என்றாலும் அவர் தொகுதி எதையும் தனிக் கவிதை எதையும் வாசிக்கக் கிடைக்கவில் லை. அவருக்காக ஜெயமோகன் மற்றும் சாரு நிவேதிதா இருவருமே மனம் நெகிழ்ந்து தந்த அஞ்சலிக்கான இணைப்புக்கள் இவை:
சாருவின் அஞ்சலிப் பதிவில் குமரகுருபரனின் மூன்று கவிதைகள் வாசிக்கக் கிடைக்கின்றன:
*************************
மழை இருக்கும் ஓரிரவு
எதையெதையோ விளைவிக்க
அதன் துளியொன்றைப் பிடித்து
வானேறும் மனம் கீழே வர மறுக்கிறது
இவ்வாறே, புறாக்கள் அமரும் மாடம் ஒன்றில்
மழை பெய்ததைப் பார்த்தேன்
அங்கே நெருப்பாக இருந்தது மழை
இட்லிப் பூக்களின் ரோஸ் வண்ணத்தில்
மழை வான்கோ வாக இருந்தது
எல்லாமே இருக்கிறபடிதான் இருக்கின்றன
மழை யாவற்றையும் அசைய வைக்கிறது
என்பதைச் சொல்ல யாரும் தேவையில்லை.
இறந்த பிறகு சாம்பல் நனைக்கும்
மழை ஒன்றை எனக்குப் பிறகு
நீங்கள் யாரெனும் பாடுங்கள்.
தவிர, இறந்தபின்னும் தனியே இருக்க
நாயும் விரும்புவதில்லை
ஆமென்.
குமரகுருபரனின் இன்னொரு கவிதையிலிருந்து:
உருப்படாது என்று நாம்
எட்டி உதைக்கிற கல்லில் இருக்கிறது
ஒரு மலை.
ரசனை என்பது உன் மார்புகளை
கையேந்தி முத்தமிடும்போது
வளர்கிறது தாயே.
இன்னொரு கவிதை:
சொல் புதைந்த மண்ணின் கொடி
கொடி படர் இடம் பூரா பெருவேர் மரம்
வேர்த் திளைப்பில் ஞாலம்
ஞாலப்பறவையில் வான்
வான் தூய்த்தலில் நட்சத்திரம்
நட்சத்திரக்கருவில் ஒளிக்குழந்தை
குழந்தைக் கேள்வியில் ஞானம்
ஞானத் தேடலில் பதில்
பதில் மெனக்கெட்டுப் பொதிரும் மண் சொல் மரம் கொடி
பறவை ஒளி வான் கரு குழந்தை ஞால வாழ்வும்
சொல் எனப் புதையும் இறுதி,பின்
உயிர்க்கும் மற்றொரு சொல்.
***************************
முதல் கவிதையில் ‘சாம்பல் நனைக்கும் மழை’ என்னும் படிமப் பதிவுக்குப் பொருள் அஞ்சலி. கவித்துவ காட்சிப்படுத்துதல் மற்றும் ஆன்மீக தரிசனம் வெளிப்படும் இடம் இது. இரண்டாவது கவிதையில் ‘கல்லில் இருக்கிறது ஒரு மலை’ என்னும் பதிவு நம் பார்வை குறுகியது எனக் கூர்மையாகச் சொல்கிறது. மூன்றாவது கவிதை எத்தனை முறை சொற்களால் ஞானத்தை அல்லது ஆன்மீகத் தேடலை விளக்க விளங்கிக் கொள்ள முயன்றாலும் அந்த முயற்சி பெரிய தேடலின் முதல் அடியாகவே நின்று விடும் என்று நுட்பமாகப் பதிவு செய்வது.
தீவிரமான படைப்பாளி திசை தெரிந்த கவித்துவம் மிகுந்த குமரகுருபரனின் அகால மரணம் இலக்கியத்துக்குப் பேரிழப்பு. அவருக்கு என் அஞ்சலி.
(image courtesy: jeyamohan.in)
வேதனை