ஒரு கொலை, ஒரு தற்கொலை எழுப்பும் கேள்விகள்- சாருநிவேதிதா கட்டுரை
30.3.2016 தினமலர் கட்டுரையில் சாருநிவேதிதா எழுப்பும் இந்த கேள்வி மிக முக்கியமானது:
“இன்னொரு விஷயமும் விவாதிக்கப்பட வேண்டும். இப்படி பெண்கள் மீதான குற்றம் செய்பவர்கள் அனைவரும் நரகத்திலிருந்தா அனுப்பப் படுகின்றனர்? அவர்கள் வேறு; நாம் வேறா! அவர்கள் அனைவருமே நம் வீட்டில்தான் இருக்கின்றனர். சிறு குழந்தையிலிருந்தே நாம், ஆணையும், பெண்ணையும் சமமாக வளர்ப்பதில்லை. வீட்டிலேயே பெண்களை பணிப்பெண்களைப் போல் தான் நடத்துகிறோம். இதற்கு பெண் குலமும் கொஞ்சம் பொறுப்பேற்கத்தான் வேண்டும். ஒரே பையன் என்று ஊட்டி ஊட்டி வளர்க்கப்படும் இளைஞர்கள், பெண்கள் மீது எந்த மரியாதையையும் இன்றிப் பொலிகாளைகளைப் போல் திரிகிறார்கள். பெண் குலம் மட்டுமல்ல; தகப்பனார்களும் இதற்குப் பொறுப்பு ஏற்க வேண்டும். சிறு வயதிலிருந்தே பெண்களை மதிக்கக் கற்றுக் கொடுக்காததால் தான், நம் இளைஞர்கள் பெண்களை வேட்டையாடிக் கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் ஒரு ஆய்வு மாணவி சொன்ன சம்பவம் இது. அவருடைய பல்கலைக்கழகத்தில் சக மாணவியை ஒருத்தன் பின் தொடர்ந்து வருகிறான். அவளிடம் தன் காதலைத் தெரிவிக்கிறான். வெறும் காதல் அல்ல; திருமணமும் செய்து கொள்கிறேன் என்கிறான்.
தொல்லை தாங்க முடியாமல் அந்தப் பெண் தந்தையிடம் சொல்ல, அவர் அவளுடன் துணைக்கு வருகிறார். பையன் அவரிடமும், தன் விருப்பத்தைச் சொல்கிறான். அவர் அவனைக் கண்டித்து அனுப்புகிறார். ‘என்னை விட நல்ல பையன் உன் பெண்ணுக்குக் கிடைத்து விடுவானா பார்க்கிறேன்’ என்று மிரட்டுகிறான்.
இப்போதும் அவன் அந்தப் பெண்ணைப் பின் தொடர்வதை நிறுத்தவில்லை. அந்தப் பெண்ணின் நிலையை நினைத்துப் பாருங்கள். அடுத்தவர் சுதந்திரத்தில் தலையிட்டு அத்துமீறுகிறோம் என்பதை, ஒவ்வொரு இந்தியனும் உணர்ந்தால் தான் இந்தியா மனிதர்கள் வாழத் தகுந்த பூமியாக மாறும்.”
மிக முக்கியமான பதிவு இது. நாம் நம் ஆண் பிள் ளைகளுக்குப் பெண்களை மதிக்கக் கற்றுக் கொடுப்பதே இல் லை. ஜாதித் தலைவர்கள், மதத் தலைவர்கள், சினிமா நடிகர்கள் என இளைஞர்களின் மனதை ஆக்கிரமிக்கும் எந்த ஆணும் இதைச் செய்வதே இல்லை.
மறுபக்கம் சாரு மரண தண்டனை பற்றிக் குறிப்பிடுகிறார். நான் பல பதிவுகளில் குறிப்பிட்டது போல “தனிமைச் சிறை – சாகும் வரை நிச்சயம் விடுதலை கிடையாது ” என்பதே மாற்று. மரண தண்டனை யாருக்கு அளிக்கப் பட்டாலும் மனிதகுல மாண்புகளுக்கு முரணானதே.
சாருநிவேதிதாவின் முழுக்கட்டுரைக்கான இணைப்பு —- இது.