அ.ரோஸ்லின் கவிதை ‘ஓராயிரம் பறவைகள்’
காலச்சுவடு ஜூலை 2016 இதழில் அ.ரோஸ்லின் இரண்டு கவிதைகள் தந்திருக்கிறார். அதில் முதல் கவிதை ‘தொடர்தலின் பிரியம்’ மிகவும் எளிமையான கவிதை. அது அதிகம் நம்மைத் தூண்டாதது. இரண்டாவது கவிதை மாறாக ஒரு முரணை அழகாய் வடிக்கிறது. முதலில் கவிதையை வாசிப்போம்:
ஓராயிரம் பறவைகள்
தற்போதெல்லாம்
என் காமத்தை
ஒரு இறகென
உன் கரங்களில் ஒப்புவிக்கப் பழகியிருக்கிறேன்,
அது ஒரு மீட்சியென,
ஒரு துளிர்த்தலென,
ஒரு நகர்த்துதலென,
ஒரு கரைதலென
உன்னுள் வளர்ந்து மினுங்குகிறது,
நம் அன்பின் உவர்ப்புக்கு
ஏதுவானதாக
நம் காமத்தைத் தேக்கி வைத்திருக்கும்
உன் நிலத்திற்கு
ஓராயிரம் பறவைகள் திரும்புகின்றன.
அன்புக்கு சுவை என்ன? எந்த அன்பு ? சரி. கவிதைப் படி நாயகன் நாயகி அன்பு. மிகவும் பொதுமைப்படுத்தப் பட்டு, நீர்க்கடிக்கப்பட்டு, பலவாறு பொருள் தரும் சொல் அன்பு. நவீன கவிதை இது. ஆகையால் அன்பு என்பதை இகலோகக் கூறுகளுடன் -ஆன்மீகமாகவெல்லாம் பார்க்காமல்- அவதானிப்போம். அன்பு என்றால் என்ன? நாயகன் நாயகிக்கிடையே உடமைப் பற்றும் ஆதிக்கமும் இல்லாமல் அன்பு உண்டா? எனவே அது இகலோக போக சோகங்கள் என்னும் உணவில் உப்பாக ஒரு சிட்டிகை மட்டுமே இருந்து சுவை தரக் கூடியது. உவர்ப்பானது. அளவு மிகுந்தால் இகலோக வாழ்க்கையை அருசி ஆக்கி விடக் கூடியது. ஆனால் காமமோ, அது உச்சமாகியே தீரவேண்டிய தருணங்களோ ஒரு சிட்டிகை அளவாக இருக்க முடியாது. குறுகிய காலம் முழுதும் ஆக்கிரமிக்கும் பெரிய நிலம் நீரால் நீர்ப்பரப்பாய் ஆகி விடுவது போல். நீர்ப்பரப்பு என்றாலே ஓராயிரம் பறவைகள். காமம் என்னும் தற்காலிகம் தரும் உத்திரவாதமும் பிடிமானமும் உவர்ப்பான அன்பின் மறுபக்கம். ஆயிரம் வருங்காலக் கனவுகளை அது உள்ளடக்கியது.
உத் திரவாதம், பிடிமானம் இவை யாவும் ஒரு நம்பிக்கையின் மீது தான் கட்டமைய இயலும். அந்த நம்பிக்கை கவிதையின் தொடக்கத்தில் வெளிப்படுகிறது. பறவைகள் திரும்புகின்றன என்னும் பதிவு உறவுக்குள் நம்பிக்கை வேரூன்றிய பின் உருவாகும் பிணைப்பை அதை ஒட்டிய நூறு கனவுகளை உருவகிக்கிறது.
முரண் காமமும் அன்புமான பிணைப்பு காலப் போக்கில் இரண்டுமே நீர்க்கும்போது அதன் தாக்கம் பல முந்தைய தலைமுறையில் இருந்து தொற்றும் போது ஏற்படும் வெறுமை. இந்தக் கவிதையே தற்காலிகமாக அந்த வெறுமையைக் கடப்பது பற்றியதே.
ரோஸ்லின் நம்பிக்கை தரும் கவிஞர்.
(image courtesy: 123rf.com)