உமாமகேஸ்வரியின் சிறுகதை ‘குளவி’
காலச்சுவடு ஆகஸ்ட் 2016 இதழில் சற்றே நீளம் குறைவான சிறுகதை உமாமகேஸ்வரியின் ‘குளவி’
ஒரு குளவியின் கூட்டை நாம் சேதப்படுத்தினால் அது பாவ காரியம் என்னும் நம்பிக்கையில் நாம் ஊறியவர்கள். அந்த நம்பிக்கையிலிருந்து விலகி இருப்பவர்கள் குறைவு விதிவிலக்காக.
ஒரு குளவி தன் இருப்பிடத்தை எளிதில் மாற்றி அமைத்துக் கொள்ளும் ஈரக்களிமண் வைத்து அது உருவாக்கும். காய்ந்த உடன் கூடு தயார். குளவிக்கு அந்த எளிய உறைவிடம் இன்றியமையாததும் தான்.
பெண்ணுக்கு தனது ஆண் தன்னை விரும்புவதும் சேர்ந்ததான ஒரு குடும்ப வாழ்க்கை அதற்கு இணையான முக்கியத்துவம் வாய்ந்ததே. குளவிக்கூடு பத்திரத்தின் ஒரு படிமமாக வரும் சிறுகதை ‘குளவி’
கதை ஒரே வரியில் வந்து விடும். ஒரு நடுவயதுப் பெண் புற்று நோயிலிருந்து பிழைத்துத் தனது மார்பகங்களை இழக்கிறாள். அவள் கணவனுடனான தாம்பத்தியக் கூடல் அதனால் பறி போகிறது. கதையின் முன் பகுதியில் குளவிக் கூட்டை அழித்த குற்ற உணர்வை அவள் வெளிப்படுத்துவதுடன் யாரென்று இனங்காண முடியாத அறிந்ததாய்த் தோன்றும் ஒரு முகத்துக்குரியவர் புதை மணலில் மாட்டி அழிந்து போவதாய் அவளுக்கு வரும் கனவும் பதிவாகிறது.
வாழ்வின் நிச்சயமின்மை யாருக்கும் போதுவே. ஆனால் அந்த நிச்சயமின்மைக்குள்ளிருக்கும் இழப்பின் தாக்கம் பெண்ணுக்கு முற்றிலுமாய் வேறு. பெண்கள் மன அழுத்தத்துக்கும் பதட்டத்துக்கும் ஆணை ஒப்பிட எளிதாய் ஆளாவதன் பின்னணி இதுவே. புற்றுநோய்க்கான மருத்துவத்தில் அவள் படிப்படியாகத் தன் உருவை இழக்கும் போது நமக்கு அது கிட்டத்தட்ட திரும்பமுடியாப் பெரும் பள்ளமெனத் தெளிவாகிறது.
மரணத்தை விட மரண பயம் கொடுமையானது. அவள் இறுதியில் அவனால் விரும்பப் பட முடியாதவளாய்ப் போனதை விடவும் அந்த பயம் கொடுமையானது. புதைமணல் கனவு அதை நுட்பமாய் உணர்த்துவதாய் நாம் கொள்ளலாம்.
சில கட்டாயத் தகுதிகளும் உத்திரவாதங்களும் தர இயலாத நிலை ஏற்படும் மறுகணம் குடும்பமே ஒரு பெண்ணுக்குப் புதைமணலாகிறது.
கவிஞர் உமாமகேஸ்வரிக்கு இந்தக் கதையில் கருவிலும் வடிவிலும் வார்ப்பிலும் நவீனத்துவத்தின் பல வீச்சுக்களுக்கான வாய்ப்பு கட்டாயம் இருந்தது. அவர் பயன்படுத்தவில்லை. இருந்தாலும் பெண்ணின் உலகிலிருந்து ஒரு அழுத்தமான பதிவே இந்தக் கதை.
(image courtesy: madhuram.org)