குற்றமே தண்டனை திரைப்படம் – ஆழமில்லாத அழுத்தம்
குற்றமே தண்டனையின் பலம் பாத்திரப்படைப்பில், திரைக்கதையில் செலுத்தி இருக்கும் கவனம். எடுத்துக் கொண்ட கருவைக் கையாளுவதில் நேர்த்தி எல்லாமே இருக்கிறது. இந்தத் திரைப்படத்தின் ஆகச் சிறந்த வெற்றியாக நான் கருதுவது நுட்பமாகச் சொல்லப்பட்ட விஷயங்கள். ஒரு இளம் பெண்ணின் மரணம் அவள் சம்பந்தப் பட்ட மூன்று ஆண்களுக்குள் பெரிய பாதிப்பு எதையும் ஏற்படுத்தவே இல்லை. கதையின் இந்த பலத்தையே படத்தின் மையமாக ஆக்கி இருக்கலாம். அடுத்த நுட்பமான விஷயம் ஒரு தனியார் நிறுவனத்தில் ஒரு பெண்ணின் வேலை எவ்வளவு எளிதாகப் பறி போக முடியும் என்பது. மூன்றாவதாக நான் பார்த்தது தனிமை பற்றியது – தன்னிடம் பணம் வசூலிக்கப் பேசும் பெண்ணைத் தவிர்த்து வேறு பெண்ணுடன் பேச வழியில்லாத ஆண். நாசர் தன் ஒரே மகனின் உதாசீனத்தால் தனித்து இருப்பவர். அவருக்கும் அவரிடம் பணம் வசூல் செய்ய வரும் இளைஞனுக்கும் இடைப்பட்ட நட்பு தனிமையின் அடிப்படையில் ஏற்படுவது. நாசர் மறுபக்கம் மனசாட்சி நல்லது கெட்டது பார்க்கும் பார்வையாளனின் பிரதிநிதியாகவும் வருகிறார். அவர் “இனிமேல் இங்கே வராதே” என்று கூறும் போது இயக்குனர் பார்வையாளனை நோக்கி “மனத்தடை இன்றி மேலே படத்தைப் பார்” என்று நுட்பமாகக் கூறுகிறார். கூண்டுக்குள் இருக்கும் கிளிகள் படிமமாகக் காட்டப் படுகின்றன. அந்தக் கிளிகள் பராமரிப்பவரின் காலத்துடன் காலாவதியாகி இறந்தே தீர வேண்டும். அது தனிமைப்படுத்தப் பட்ட எந்த ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் பொருந்தும்.
மணிகண்டனின் ‘காக்கா முட்டை’ உலகமயமாக்கத்தின் தாக்கத்தைத் தொடுமளவு ஆழ்ந்த சித்தரிப்புக் கொண்ட படம். குற்றமே தண்டனை திரைப்படம் இறுதியில் கொலை செய்தவர் தமது மனசாட்சியின் அழுத்தத்தால் தவிப்பதை இன்னும் ஆழமாகக் காட்டி இருக்க வேண்டும். அது குற்றம் செய்த மறு நாள் முதலே தொடர்வது. ஒரு குறிப்பிட்ட கால கட்டத்துக்குப் பின் திடீரென வந்து உட்காருவது அல்ல.
நல்ல முயற்சி. நிறைய சாதிக்கும் திறனுள்ளவர் மணிகண்டன்.
இந்த இடத்தில் அரவிந்தனின் மலையாளத் திரைப்படம் “சிதம்பரம்” கண்டிப்பாக நினைவுக்கு வருகிறது. சுமார் முப்பது ஆண்டுகள் முன்பு வெளியான இந்தப் படம் மனசாட்சியுடன் போராடும் குற்ற உணர்வு மிக்க ஒருவனை மிகவும் நுட்பமாகச் சித்தரித்த படம். குற்ற உணர்வின் மனப்பாங்கை ஆய்ந்தால், சமூகம் மற்றும் மானுடம் பற்றிய ஆழ்ந்த புரிதலுக்கு அது வழி வகுக்கும்.
அரவிந்தனின் சிதம்பரம் திரைப்படத்துக்கான இணைப்பு———————- இது.
(image courtesy: behindwoods.coin)