பாரா ஒலிம்பிக் வீரர்கள் சாதனையைப் பாராட்ட ஏன் மனத்தடை? – தினமணி தலையங்கம்
சிந்து, சாட்சி ஆகிய நல்ல உடலமைப்பு உள்ள வீரர்கள் நமக்குத் தந்த பெருமை போற்றுதற்குரியது. மாற்றுச் சிந்தனை ஏதுமில்லை. அடுத்து வந்த ‘பாரா’ ஒலிம்பிக்கில் வென்றுள்ள மாரியப்பன் உட்பட்ட வீரர்கள் பற்றிய தினமணியின் இந்தப் பத்தி சிந்தனைக்குரியது:
——————————-
தங்கவேலு மாரியப்பன் தனது ஐந்தாவது வயதில் பேருந்து விபத்தில் வலது முழங்காலை இழந்தவர். தீபா மாலிக், தனது தண்டுவடத்தில் வந்த கட்டியால் இடுப்புக்கு கீழ் பகுதிசெயல்பட முடியாதநிலைக்குத் தள்ளப்பட்டவர். தேவேந்திர ஜஜாரியா ஒரு விபத்தில் சிறுவயதிலேயே கைகளை அகற்ற வேண்டிய நிலைக்கு ஆளானவர். வருண் சிங் பதி போலியோ நோயால் ஒரு காலின் செயல்
குன்றிப் போனவர். ஆனால் இவர்கள் அனைவருமே மனம் தளராமல் தங்களை ஏதாவது ஒருவகையில் சாதனையாளராக நிலை
நிறுத்திக்கொள்ள வேண்டும் என்ற வெறியுடன் போராடியவர்கள். இவர்களுக்குக் கிடைத்துள்ள வெற்றி வெறும் விளையாட்டுக்கு கிடைத்த வெற்றி மட்டுமல்ல. தளராத மன உறுதிக்கும், விடாமுயற்சிக்கும் கிடைத்த வெற்றி. இவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்குமுன்மாதிரிகள். ஒலிம்பிக் வீரர்களுக்கு இணையாக இவர்களுக்கும் பாராட்டும் பரிசு மழையும் குவிய வேண்டும்.
———————————-
சமுதாயத்தில் இரண்டு தீவிரமான இரு துருவ மனப்பான்மை இருக்கிறது. ஒரு பக்கம் மாற்றுத் திறனாளிகளை சாதாரணமான யாரும் (குடும்பத்தினர் உட்பட) சரிசமமாக நடத்தி மதிப்பதில்லை. திருமண பந்தத்தில் இது குரூரமாக வெளிப்படும். மறுபக்கம் அவர்கள் மீது இரக்கம் மட்டுமே காட்டும் மனப்பாங்கு.
மாற்றுத் திறனாளிகள் மிகுந்த போர்க்குணமும் தன்னம்பிக்கையும் உள்ளவர்கள். பலரும் கடுமையான உடல் வலியைத் தாண்டி தினசரி பணிக்குச் செல்வதை நாம் காண்கிறோம். உலக அளவில் போட்டியிட மாரியப்பன் உட்பட்ட வீரர்கள் கொண்ட மனத்திண்மையும் போர்க்குணமும் போற்றுதற்குரியது. இளைஞருக்கு நல்ல உதாரணமாவது.
அரசுகளும் நிறுவனங்களும் இவர்களை ‘சிந்து, சாட்சி’ ஆகிய சாதாரண உடல்திறன் கொண்ட வீரர்களுக்கு இணையாக வைத்து விருதுகள் மற்றும் சன்மானங்கள் தந்து சிறப்பித்திருக்க வேண்டும்.
மாற்றுத் திறனாளிகள் வேண்டுவதெல்லாம் இரக்கம் அல்ல. பிறருக்கு சரிசமமாக நடத்தப்படும் மரியாதையும் அங்கீகரிப்புமே.
தினமணியின் தலையங்கத்துக்கான இணைப்பு ————– இது.