ஜெயமோகனுக்கு ஒரு கடிதம் – ஓர் எதிர்வினை
ஜெயமோகனுக்கு சிங்கப்பூரில் வசிக்கும் ஒரு தீவிர வாசகி உமாஸ்ரீ எழுதிய கடிதத்தை (அவருடைய இணைய தளத்தில் உள்ளபடி) கீழே தருகிறேன்:
பெருமதிப்பிற்குரிய எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு
அன்பான வணக்கம்.
வெண்முரசின் பல்லாயிரக்கணக்கான எளிய வாசகர்களுள் ஒருத்தி நான். அது குறித்துதான் முதன்முதலில் உங்களுக்கு மிக நீண்டதொரு கடிதம் எழுதுவேன் என்று எண்ணியிருந்தேன். குறிப்பாக மழைப்பாடல், நீலம், சொல்வளர்காடு ஆகிய நூல்களில் குறிப்புகள் எடுத்து வைத்திருக்கிறேன். உள்ளூர், வெளியூர் படைப்பாளிகளுடைய ஆக்கங்களையும் காலச்சுவடு, உயிர் எழுத்து, கணையாழி, உயிர்மை போன்ற இதழ்களில் பிரசுரமாகும் தீவிர எழுத்துக்களையும் விடாமல் பல்லாண்டுகளாக வாசித்து வருகிறேன். உங்களுடைய சிங்கப்பூர் இலக்கியக்கூட்டங்களுக்கு வர மிக ஆசையுடன் திட்டமிட்டிருந்தேன். என் துரதிருஷ்டம், மாமனார் திடீரென்று இயற்கை எய்தியதால் மதுரை செல்லும்படியானது. சிங்கப்பூர் திரும்பியதும் இக்கடிதத்தை எழுதுகிறேன். சிங்கப்பூரில் பதினாறு ஆண்டுகளாக வசிக்கிறேன். கணினி தொழில்நுட்பத் துறையில் பணியாற்றுகிறார் என் கணவர். நானும் அதே துறை. எங்களுக்கு ஐந்து வயது மகள் இருக்கிறாள்.
சிங்கப்பூர் தமிழிலக்கியத்தின் மரபும் செல்திசையும் என்ற உங்களுடைய பதிவினை வாசித்தேன். மிக விரிவான மிகவும் அவசியமான பதிவு. முல்லைவாணன் கரையிலிருந்து மூட்டைகளை தோளில் தூக்கிக் கொண்டு பலகை வழியாக நடந்து சென்று படகுகளில் ஏற்றும் பணியைச் செய்து வந்ததைக் குறித்து அறிந்தபோது எனக்கு சி.சு.செல்லப்பா நினைவுக்கு வந்தார். சிற்றிதழை நடத்துவதற்காக பொம்மைகள் செய்து கூடையில் வைத்துக் கொண்டு தெருவெங்கும் திரிந்து விற்ற கதைகள் கேட்டு மிக வேதனை அடைந்ததுண்டு. பதிவு குறித்து எனக்குச் சொல்ல நிறைய உண்டு. அது ஒருபுறமிருக்க, காதால் கேட்டதை மட்டும் மேம்போக்காகக் கோர்த்து விமர்சனம் என்ற பெயரில் அரைவேக்காட்டுத் தனமாக உள்ளூரில் எழுதப்படுபவற்றை ஒப்பிடும்போது உங்களுடைய அலசல் விரிவானதாக சிறப்பாகவே இருக்கிறது என்று நினைக்கிறேன். மகிழ்ச்சி.
எனினும், இக்கடிதத்தின் நோக்கம் வேறொன்று. நேற்றைக்கு ஒரு சிறுகதை எழுதமுயற்சி செய்து மகிழ்ந்த உமாவாகிய என்னை பெரிய போற்றுதற்கு உரிய எழுத்தாளர் ஜெயமோகனுடன் பட்டியலில் சேர்த்தால் எத்தனை அபத்தம், இல்லையா? புனைவு, அபுனைவு, மொழிபெயர்ப்பு, சிறார் இலக்கியம் என்று அமைதியாக 22 ஆண்டுகளாக தொடர்ந்து பங்களித்து வரும் ஜெயந்தி சங்கரை நீங்கள் இவ்வாறு போகிற போக்கில் குறிப்பிடுவதோ அல்லது தொடக்க நிலையில் எழுதிக் கொண்டிருக்கும், எழுதுவதாக வெறும் டம்பம் அடித்துக் கொண்டிருக்கும், வாயாலேயே வடை சுட்டுக் கொண்டிருக்கும், சுய அட்சதை போட்டுக்கொண்டிருக்கும், எழுத முயற்சித்துக் கொண்டிருக்கும் பலருடன் சேர்த்து அவர் பெயரை எழுதியது அவருடைய நெடுநாள் வாசகி என்ற அளவில் என்னை மிகவும் துணுக்குறச் செய்தது. இது அவருக்கு மட்டும் அநியாயம் இல்லை அவரது பெரும்பங்களிப்புக்கும் அவமதிப்பு. மட்டுமல்லாது, உங்களுடைய மேன்மைக்கும்கூட இது பங்கமாகும். Sweeping/name dropping statement. இந்தக் கடிதம்தே வையா என்றுதான் முதலில் எண்ணினேன். என்னால் சொன்னாமல் இருக்க முடியவில்லை. இது ஒரு தவறான பிம்பத்தை எடுத்து இயம்பும். உயிரோடு இருந்து கொண்டு தொடர்ச்சியாகஇயங்கி வரும் ஒரு படைப்பாளியின் அருமை தெரியக் கூடாதோ!? மண்டையைப் போட்டால்தான் அவருடைய சிறப்பு எல்லோர் கண்ணுக்குமே தெரியும் போல. சாபக்கேடுதான். மிகுந்த வருத்தமடைந்தேன். அவருடைய சமீபத்தைய சிறுகதைத் தொகுப்பான ‘நகரெங்கும் சிதறிய சுழிகள்’ வாசித்தவர் எத்தனை பேர்? மின்னஞ்சலில் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு சிறுகதை குறித்து அவரோடு பேசியதுண்டு. ஆனால் சந்தித்ததில்லை. ஓரிரு மாதங்களில்நாங்கள் அமெரிக்காவுக்கு குடிபெயர்வதற்கு முன்னர் வாய்ப்பு அமையும் என்று நம்புகிறேன்.
நன்றி. தாழ்மையுடன்,
உமாஸ்ரீ பஞ்சு
அவரது கடிதத்திற்கான பின்னணி ———– இதோ
கடந்த சில ஆண்டுகளாகவே தீவிரமாக எழுதி வரும் சமகாலப் படைப்பாளிகளை வாசிப்பதும் அவற்றைக் குறித்து என்னுடைய இந்த இணையத் தளத்தில் விமர்சனத்துடன் பகிர்வதுமாக சமகால எழுத்தாளர்களை, படைப்பாளிகளை அறிமுகப்படுத்துவதும் அவர்களையும் அவர்களுடைய ஆக்கங்களையும் கவனப்படுத்தும் பணியைச் செய்து வந்திருக்கிறேன். இது விமர்சகனாகவும் ஓர் இலக்கியவாதியாகவும் என்னுடைய பங்களிப்பு.
கடந்த ஈராண்டுகளாக ஜெயந்தி சங்கருடைய படைப்புகளை நான் தீராநதி மூலமாக வாசிக்க இயன்றது. http://jeyanthisankar.com/ அப்போது நான் எழுதிய விமர்சனங்களை இங்கே பகிர்கிறேன். http://solvanam.com/?p=5868
தீராநதி தவிர்த்து அவரது பழைய படைப்பு ஒன்றும் வாசிக்கக் கிடைத்தது. அதற்கான இணைப்பையும் கீழே நீங்கள் காணலாம்.
http://jeyanthisankar.blogspot.sg/
கடந்த ஜனவரி மாதம் ஜெயந்தி சங்கரின் ‘பறந்து மறையும் கடல்நாகம்’ நூல் வெளியீடு திருவான்மியூர் பனுவல் அரங்கில் புத்தாண்டன்று எளிமையாக நடந்தேறியது. சீனப் பண்பாடு, கலாசாரத்தை 15 ஆண்டுகாலக் கடும் உழைப்பில் உருவான அரிய நூலை மதிப்பீடு செய்து பேசும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அந்த நூலின் தாக்கம் என் மீது மிகவும் இருந்தது.
அபுனைவில் ஒரு பெண் எழுத்தாளர் காட்டியுள்ள ஈடுபாடு, கடுமையான உழைப்பு, அதன் மூலம் தமிழுக்குக் கிடைத்துள்ள செறிவுள்ள ஒரு தொகுப்பு இவை என் மனதில் இப்பொழுதும் நிற்கின்றன.
இவர் புலம்பெயர் எழுத்தாளர் என்ற அடையாளத்துக்குள்ளோ பெண் எழுத்தாளர் என்ற அடையாளத்துக்குள்ளோ கண்டிப்பாக அடங்காதவர். அவரது படைப்புகள் கால ஓட்டத்தில் அவர் துவங்கிய புள்ளியிலிருந்து வரும் பொழுது முதிர்ச்சி, ஆழம், பன்முகம் கொண்டவையாக உருவாகி வந்துள்ளதை நாம் காண முடியும். இவரை வணிக எழுத்து, எழுத்து முயற்சி என்ற அளவில் எழுதிக் கொண்டிருப்பவர்களுக்கு இணையாக ஜெயமோகன் பட்டியல் இட்டிருப்பதற்கு தான் உமாஸ்ரீ பஞ்சு எதிர்வினையாற்றியுள்ளார். அதனைத் தொடர்ந்து என்னுடைய ஓர் எதிர்வினையாக இவற்றை இங்கே பதிவு செய்கிறேன்.
கவிஞர்கள், கவிதைகள், பெண் எழுத்தாளர்கள் ஆகிய மூன்று பற்றியும் அனைத்து ஆண் எழுத்தாளர்களுக்கும், ஜெயமோகன் உட்பட ஒரு பெரிய மனத்தடை உண்டு. இதற்கு ஒரே விதிவிலக்காக நான் கருதுபவர் எழுத்தாளர் பிரபஞ்சன் ஒருவர் மட்டுமே. அவருக்கு அடுத்தபடியான நான் என்னைச் சொல்வேன். அந்த மனத்தடையைக் கடந்து செல்ல முடியாத ஜெயமோகன் மிகுந்த உள்நோக்கத்துடன் ஜெயந்தி சங்கரை அவர்களுடன் பட்டியலிடுவதன் மூலம் ஒரு சமகாலப் படைப்பாளியை ஓரம் கட்டும் தன் நோக்கத்தை சாதித்தவராகிறார்.
ஜெயமோகனுடைய சாதனைகள் இரு வகைப்பட்டவை. ஒன்று இலக்கிய சாதனைகள். மற்றது எதிர்மறையான சாதனைகள். இரண்டையும் அவர் மிகச் சிறப்பாகவே செய்திருக்கிறார்.
ஆளுமைகள் வழியாக இலக்கியத்தை அடைவதை ஜெயமோகன் மிக விரும்பிச் செய்வார். அவ்வாறு ஆளுமைகளைத் தாக்கி நொறுக்கும் பொழுது அந்த ஆளுமையின் படைப்புகளையும் சேர்த்துத் தகர்த்து நொறுக்கி விடலாம். அவர் இப்போது மட்டும் அவ்வாறு செய்யவில்லை. அடிக்கடி செய்து வருகிறார். அது குறித்து நான் தனியாகவே விரிவாக எழுத முடியும். இதை ஏன் அவர் தொடர்ந்து செய்ய வேண்டும் என்பது நுட்பமாக ஆய்ந்து புரிந்து கொள்ள வேண்டியது. அவர் முன்னே வைக்கும் ஒவ்வொரு அடியும் திட்டமிட்ட, திசை தெரிந்த நுட்பமான முன்னகர்வுகள். அவரை ஒரு ஆளுமையாக விமர்சிக்க எனக்கு ஆர்வமில்லை. ஆனால் அவரது எதிர்மறைச் செய்கைகள் கவனப் படுத்தப் பட வேண்டியவையே.
இலக்கிய, எழுத்துலகில் எனக்கு யார் மீதும் வெறுப்போ காழ்ப்போ கிடையாது. இன்னும் சொல்லப்போனால், ஜெயமோகன் மீது மிகுந்த மரியாதை கொண்டவன் நான். அவருடைய சில படைப்புகள் காலத்தைக் கடந்து நிற்பவை. அசலானவை. இன்னும் அவர் நிறைய எழுதுவார் என்ற நம்பிக்கை உண்டு. இதிகாசத்தைச் சுற்றிச் சுற்றி முடித்த பிறகு அவர் எழுதுவார் என்றே நம்புகிறேன்.
அதே சமயம் அதிகம் அறியப்படாத, வாயைத் திறக்காமல் தொடந்து எழுதி வரும் ஒரு படைப்பாளிக்கு அவர் செய்யும் இருட்டடிப்பு கண்டிப்பாகப் பொருந்தாதது, கண்டிக்கத்தக்கது. அந்த விதத்தில் மறுப்பையும் வருத்தத்தையும் இங்கே பதிவு செய்கிறேன்.
ஜெயமோகனுக்கும் எனக்கு நட்பு முறையான தொடர்பு இருந்தது; இருக்கிறது. பிரேம் ரமேஷில் ரமேஷை அவர் தொண்டாகப் பாதுகாக்கிறார்; மதிக்கிறேன். நானும் அதில் சிறு பங்களிக்கிறேன். இந்த இடத்தில் ஒரு சர்ச்சையை உருவாக்க நான் விரும்பவில்லை. அதே சமயம், ஒரு மிகப் பெரிய ஆளுமை மிக நாசுக்காக ஓர் எதிர்மறை வேலையைச் செய்யும்போது அதற்கு எதிர்ப்பைத் தெரிவிப்பது என் கடமை எனக்கருதுகிறேன்.