நவீன தமிழ் இலக்கியம் – ஜெயந்தி சங்கரின் உரை
நவீனத்துவம் நவீன இலக்கியம் இவை சாதாரண வாசகனின் வாசிப்பு, புரிதல் மற்றும் ரசனைக்கு அப்பாற்பட்டவை என்னும் ஒரு பிரமையை நிறைய வாசகர்கள் கொண்டுள்ளனர். நவீனத்துவ எழுத்து என்பது வாசகரது கற்பனை, ஆழ்ந்த வாசிப்பு அடிப்படையாய் அமைய , விடை தெரியாக் கேள்விகளை வாசகரும் படைப்பாளியும் ஒன்றாகக் கடந்து செல்லும் புனைவு மற்றும் வாசிப்பு முறை ஆகும். படைப்பாளி தமது குரல் ஓங்கி ஒலிக்கப் பேசும் போது கலைத் தன்மையின்றி பிரசாரமும் அறிவிப்புமான தொனி வந்து விடுகிறது. நவீனத்துவத்தில் படைப்பாளி மறைந்து வாசகரும் படைப்பும் ஒரே புள்ளியில் முன்னகர்கின்றனர்.
நவீனப் படைப்பாளிகளில் ஜெயந்தி சங்கர் ஆழ்ந்த பங்களிப்பு செய்து வரும் தீவிர படைப்பாளி. 2009ல் அவர் சிங்கப்பூரில் நிகழ்த்திய உரையில் நவீனத்துவத்தை இப்படி அடையாளம் காட்டுகிறார்:
——————————-
குரலை உயர்த்தாமலே உருக்கமாக எழுதப்பட்டிருக்கும்.
நவீன இலக்கியப் புனைவுகளுக்கு பண்பட்ட உரைநடை மொழி, பல்வேறு உத்திகள், பாத்திர வார்ப்புகள், சொல்லாதப்படாத சொற்கள், குறியீடுகள், விவரிக்கும் காட்சிகள், படிமங்கள் என்று நிறைய விஷயங்கள் உதவினாலும் கூட பேசுபொருள் காலத்துக்கு காலம் மாறியபடியே தான் இருந்து வந்துள்ளது. சமூக மாற்றங்கள் மற்றும் அரசியல் மாற்றங்கள் இந்தப் பேசுபொருளைத் தீர்மானித்து வந்துள்ளன. நவீன இலக்கிய மொழி தன் குரலை உயர்த்துவதில்லை. உணர்ச்சிவசப் படுவதுமில்லை என்பது என் சொந்தக் கணிப்பு. எழுத்தாள வாசகக் கூட்டணியில் இயங்க வேண்டியதாக இருக்கிறது நவீன இலக்கியம். இதைப்புரிந்த வாசகன் புரியாம எழுதறார் என்று சொல்லமாட்டான். வாசிப்பில் தனக்கான வேலையை உணராதவனோ அதைச் சொல்வான். சொல்வதுடன் விலகியும் பின்னோக்கியும் போவான் என்பது என் அனுமானம். கிளீஷேக்களாகக் கருதப்படும் கண்கள் பனித்தன, கண்ணைக்கட்டி காட்டில் விட்டது போல, நகமும் சதையும் போல என்பவை பண்பட்ட நவீன புனைகள் தவிர்த்துவிடும். புதுவித originalityயுடனான உவமைகளை ஏற்கும்.
——————————
சமகால எழுத்தாளர்களின் நம் கவனத்துக்கும் வாசிப்புக்கும் உரிய படைப்புக்களைப் பகிர்கிறார் ஜெயந்தி. அவரது முழு உரைக்கான இணைப்பு —————- இது.