திருமால்பூர் எக்ஸ்பிரஸ்


download

திருமால்பூர் எக்ஸ்பிரஸ்

 

சத்யானந்தன்

 

 

மலர்விழி அந்த அலமாரியின் வெவ்வேறு தட்டுக்கள், இழுப்பறைகளைத் துழாவியது பத்துப் பதினைந்து பக்கமான தாட்களுக்காகத் தான். சென்ற வருடம் கூடுவாஞ்சேரி ஊரப்பாக்கம் பெருங்களத்தூர் மூன்று ஊர்களில் தங்கள் வீட்டில் புடவைகளை வைத்து விற்க அனுமதித்த பெண்களின் பட்டியல் கைபேசி எண்கள் ஒரு ‘ஃபோல்டரில்’ போட்டு வைத்திருந்தாள். எதைத் தேடுகிறோமோ அது தான் கிடைக்காது. அதைத் தவிர எல்லாம் கையில் மாட்டும். கண்ணில் படும்.

 

மாலை மணி ஆறை நெருங்கிக் கொண்டது. திருமால்பூர் போகும் வண்டி 630 மணிக்குப் போய் விடும். அதன் பிறகு 730 வண்டி தான். “இம்சை புடிச்ச இந்த மூணு ஊரும் உனக்குத் தான் வருமின்னு நீயா ஏன் மலரு நெனச்சுக்கறே?” என்று செல்வி அருகே வந்தபோது,  “அக்கப்போரு புடிச்ச எல்லா ஊரையும் மல்லிகா அக்கா எனக்குத்தான் அலாட்,” பண்ணுவாங்க என்று திரும்பிப் பார்க்காமலேயே பதில் சொன்னாள். செல்விக்கு அரக்கோணத்தில் வீடு. கிளம்பி விட்டாள்.

 

‘மீட்டிங்’ முடிந்து இன்னும் யாரும் வெளியே வரவில்லை. கூட்டத்துக்குள் போகும் போதே மல்லிகா அக்கா, “போன வருஷம் ரெண்டாயிரம் ரூபாக்கி மேலே புடவை வாங்கின லிஸ்ட் இருந்தா ரொம்ப நல்லது. வெள்ளத்துல மரபீரோ, கட்டில், டிவி , சோபா தான் மெயினாப் போயிருக்கு. தவணையில வாங்கிக்கலாம்னு ஒவ்வொரு ‘பிராடக்ட்டா’, ‘ரீபேமெண்டை’ வெச்சுத்தான் கொடுப்போம்னு சொல்லணும்,” என்றாள்.

 

மல்லிகா எப்படியும் குறுஞ்செய்திதான் அனுப்புவாள். அந்த ஃபோல்டர் கிடைத்து விட்டால் போதும். சென்ற முறை போல வீடு வீடாக ஏறி இறங்க வேண்டாம். அவரவர்க்கு அவரவர் அவசரம். வெள்ளம் வந்தபோது கீழ்த் தளத்தில் இருந்து கோப்புக்களை அள்ளி வந்தவர்கள் அவளுடைய காகிதங்களை மற்றவரதுடன் கலந்து வைத்து விட்டார்கள். இல்லாவிட்டால் மலருக்குத் தன் பொறுப்பிலுள்ள காகிதங்களைத் தேட இந்த அளவு நேரம் பிடிக்காது. தன் சம்பந்தப்பட்டவற்றை எப்போதும்  சரியாகவே வைத்திருப்பாள்.  எல்லோரும் எலாவற்றிலும் கை வைத்தால் இதான் கதி.

 

கைபேசி ஒலித்தது. “அப்பா… திரும்பி மெட்ராஸ் டியூட்டி போட்டாச்சா?” என்றாள் ஒரு கையில் பிடித்துக் கொண்டு இன்னொரு கையால் காகிதங்களைத் தேடியபடி.

 

“இல்லம்மா… விழுப்புரம் தான் இப்போதிக்கி.” அப்பாவின் மூச்சு புஸ்புஸென்று கேட்டது. அப்பா பிபி செக் பண்ணினீங்களா என்று கேட்கத் தோன்றியது, ஆனால் உரையாடல் நீளும் என்று அஞ்சி அதை அவள் கேட்கவில்லை.

 

“நேரமாச்சுப்பா…. ஆறரை டிரெயினப் பிடிக்கணும் தாம்பரம் சப்வே தாண்டி மாடி ஏறி இறங்கவே பத்து நிமிஷம் ஆவுது,”

 

அவள் அவசரம் புரியாமல் அப்பா மெதுவாக, “என்னோட சித்தி திண்டுக்கல்ல நினைவிருக்கா… காவேரி ஆயா போயிட்டாங்கம்மா.”

 

“ஸாரிப்பா… நீ அங்க போறியா?”

 

“ஆமா.. உன் அம்மாவும் என் கூட வர்றா. அவ நேரா விழுப்புரம் வந்துருவா. அங்கே இருந்து போயிருவோம்,” என்றார் அப்பா.

 

“நான் பத்திரமாப் பூட்டிக்கறேன்ப்பா,” என்று அவள் முற்றுப்புள்ளி வைக்க நினைத்தாள்.

 

ஆனால், அப்பா அவளுடைய நிலமை புரியாமல், “பூட்டிக்க. அதோட நாளைக்கி ரேஷன் கடையிலே வேட்டி சேலை கரும்பு கொடுக்கறாங்க… நீ வாங்கி வெச்சிடுமா,” என்று முக்காற்புள்ளியாக இழுத்தார் அப்பா. இணைப்பைத் துண்டிக்க மாட்டாரா என்று மனதுக்குள் சலித்துக் கொண்டாள்.

 

மறுநாள் காலை சீக்கிரமே பெருங்களத்தூரில் ஆரம்பித்தால் தான் மாலைக்குள் ஊரப்பாக்கத்தில் பாதியாவது பார்க்கலாம். மீதியும் கூடுவாஞ்சேரியும் அடுத்த நாளைக்குத் தான். ரேஷன் கடைக்கு வேறா. தம்பி சுதாகர் ஊர் சுற்றவே பிறந்தவனா என்றார். அவள் பதில் சொல்லத் துவங்கும் முன்,  “கண்டக்டர் பஸ்ஸுல ஏறிட்டாரு.. அப்புறம் கூப்புடறேன்,” என்று நல்லவேளை அத்தோடு நிறுத்தினார்.

 

கைபேசியை அலமாரிக்கு அருகே தரையில் வைத்து விட்டு காகித வேட்டையை விட்ட இடத்தில் மீண்டும் துவங்கினாள். ‘ஃபோல்டர்’ என்று பொதுவாகத் தேடாமல் தனிக் காகிதங்களில் தேடினால் என்ன என்ற யோசனை தோன்றியது. அந்த அணுகுமுறை கொஞ்சம் உதவியது. முதலில் ஓர் ஒற்றைக் காகிதம் அவளது கையெழுத்தில் கிடைத்தது. உதிரியாக யார் இவற்றை உருவினார்கள்? அலுப்பாக வந்தது. எல்லாவற்றையும் அப்படியே போட்டது போட்டபடி போட்டுவிட்டு எங்கேயாவது கண்காணாமல் ஓடிவிட மாட்டோமா என்று ஒரு கணம் தோன்றியது. போகும் இடத்தில் கைபேசியே வைத்துக் கொள்ளக்கூடாது. புதிய இடத்தில் புதிய பெயரில் புதிய வாழ்க்கையைத் தொடங்க முடிந்தால்? தலையைக் குலுக்கிக் கொண்டாள்.

 

கைபேசி குறுஞ்செய்திக்கான சிணுங்கலை ஒலித்தது. குமார் தான். “தாம்பரம் டிக்கெட் கவுண்டரில் சந்திப்போம். 730 மணி ரயில் வரும் வரை பேசலாம்.” என்ன செய்வதென்றே தெரியவில்லை. நாளை காலை முதல் ஆளாக அல்லது முதல் பத்து பேரில் ஒருவராக ரேஷன் கடையில் வேட்டி சேலை வாங்க வேண்டுமென்றால் விடியற்காலை 5 மணிக்குக் கிளம்பி ஆறுமணிக்குள் வரிசையில் நிற்க வேண்டும். இரவு தம்பிக்கு உணவு கொடுத்து சமையலறையைச் சரி செய்து பத்து மணிக்குள்ளாவது படுத்தால் தானே அது சாத்தியம். மற்ற நாட்களை விட்டுவிட்டு குமார் இன்றைய தினத்தை ஏன் தேர்ந்தெடுத்தான்? பக்கத்தில் இருந்தால் குமாரை இழுத்து ஓர் அறை விடும் என்ற அளவுக்கு கோபம் கொப்பளித்தது. எல்லாம் அவனைப் பார்க்கும் வரை தான். அவன் முகத்தைப் பார்த்ததுமே கோபத்தை முற்றிலும் மறந்து விடுவாள் என்று அவளுக்கே தெரியும். இயலாமையில் ஏதேதோ தோன்றினாலும் அதையெல்லாம் செய்துவிடவா முடிகிறது?

 

மணி ஆறு பத்து. வேகமாகத் தாட்களை அலசினாள் ஒவ்வொன்றாக பத்து பன்னிரண்டு தாட்கள் கிடைத்து விட்டன. அப்பாடா என்று சிறிய ஆசுவாசம் ஏற்பட்டது. இவை போதுமே. ஓரளவு சமாளித்து விடலாம். காகிதங்களை நாலாக மடித்துப் பையில் திணித்து வசதியறைக்குப் போய் திரும்பினால் மீண்டும் ஒரு குறுஞ்செய்தி. “ஏன் பதிலில்லை?” ஒரு கணம் பதில் போட நினைத்து பின்னர் மனதை மாற்றிக் கொண்டு சடாரென்று கைபேசியை அடைத்துப் பையைத் தோளில் மாட்டியபடி கிளம்பும் போது மல்லிகா கூட்டம் நடந்த எம்டி அறையிலிருந்து வெளியே வந்து விட்டாள். “ஏய் மலர் நில்லு.”

 

“அக்கா ஆறரை ட்ரெயின் மிஸ்ஸாயிடும். எஸ்எம்எஸ் பண்ணுங்க ப்ளீஸ்.” வேகமாகப் படியிறங்கினாள். முடிச்சூர் சாலையைக் கடப்பதற்குள் திணறி விட்டாள். அவ்வளவு வாகனங்கள். அன்றாடச் செலவுக்கு சம்பாதிப்பதற்குள் நாக்குத் தள்ளுகிறது. எங்கிருந்து இவர்களுக்கெல்லாம் கார் வாங்கவும் பெட்ரோல் போட்டு ஓட்டவும் காசு கொட்டுகிறதோ என்று தோன்றியது.

 

‘சப்வே’ யும் மிகவும் நெரிந்தது. தாண்டும் போது 6.25.  துணிந்து மாடி ஏறினாள். மாடியை ஒட்டிய முதல் ‘டிக்கெட் கவுண்டர்’ அருகே இருந்த குமார் இவளைப் பார்த்ததும் தொடர்ந்து வருவதை ஓரக்கண்ணால் பார்த்தவள் பார்க்காதது போல் படியேறிக் கூட்டத்தில் இடித்துப் புகுந்து ஏழாவது நடைமேடை படிகளில் இறங்கும் போது நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்.

 

ரயில் இன்னும் வரவில்லை. நிறைய பெண்கள் இருக்கும் பகுதியில் அவர்களுடன் ஒன்றாக நின்றாள். முகத்தை எட்டாவது நடைமேடைப் பக்கம் திருப்பினாள். அவன் தன்னை தாமதப்படுத்துவது பிரச்சனை இல்லை. செல்வி முன்னொரு முறை குமார் பற்றிப் பேச்சு வரும் போது ” எஸ் நோ எதுவுமே சொல்ல அவசரப்படாதே. பசங்களப் பத்தி உடனடியா முடிவுக்கு வர முடியாது.”

 

இப்படி ஒளிவதும் சரியா தவறா என்று தெரியவில்லை. தடதடவென ஷூ ஒலி கடந்தது. மெதுவாக ஓரக்கண்ணால் பார்த்தாள். அவன் அவளைத் தேடியபடியே போய்க் கொண்டிருந்தான். எதிர் திசையில் சென்று அடுத்து நிற்கும் பெண்கள் கும்பலில் இணைந்தாள். வேர்வையும் படபடப்பும் அடங்கிய பாடில்லை. கடவுள் வடிவில் ரயில் வந்தது. ஏறும் போது தான் அவன் அந்த பெட்டியை நோக்கி ஓடி வருவது தெரிந்தது. ஆனால் அவன் ஏற வாய்ப்பில்லை.

 

பூகம்பம் வந்து அவன் இருந்த இடம் தவிர எல்லாமே பிளந்து அனைவரும் உள்ளே போய் விட்டார்கள். நகரும் ரயிலை விட்டுவிட்டு குமார் குனிந்து அதைப் பார்த்தான். ரயில் நகர நகர அவன் எதிர்திசையில் அதே வேக வீச்சில் பறவை இறகுகள் போலக் கைகளை விரித்து அந்தரத்தில் பறந்து கொண்டிருந்தான் குமார். எதற்கும் இருக்கட்டும் என்று “ஸாரி” என்று ஒரு குறுஞ்செய்தி அனுப்பினாள்.

(ஜூலை 2016 தமிழ் ஃபெமினா இதழில் வெளியானது)

(image courtesy: roofandfloor.com)

About Writer P.Muralidharan

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in சிறுகதை and tagged . Bookmark the permalink.

1 Response to திருமால்பூர் எக்ஸ்பிரஸ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s