பெயரில்லாதவள்
– சத்யானந்தன்
“உன் பேரு ராணியா கலாவா?” ஓர் ஆள் நகராவிட்டால் இன்னோர் ஆள் ஓர் அங்குலம் கூட நகர முடியாது. வழி மறிப்பவள் போல ராணியை விட உயரமாயிருந்த பெண் குறுக்கே நின்றிருந்தாள். மூன்றடி உயரமான வரவேற்பு முகப்பு. அசல், நகல்களை ஒழுங்கு செய்யும் மேசையும் அது தான். மேசைக்குப் பின்னே ஆளுயர தடுப்பு இருந்தது அதன்பின்னால் நான்கு நகலெடுக்கும் இயந்திரங்கள் சுறுசுறுப்பாயிருந்தன. இரண்டு கருப்புவெள்ளை வேலைக்கானவை. இரண்டு வண்ணநகலெடுப்பவை.
“ராணிகலா”
“உன்னைப் பாத்தா இதுக்கு முன்னாடி எங்கேயும் வேலைக்கிப் போன மாதிரியே தெரியலியே”. ராணிக்கு வியப்பாயிருந்தது.
“எப்பிடிக்கா கண்டுபிடிச்சீங்க?”
“கன்னம் வாடாம கும்முனு இருக்கு, மொகத்துல வாட்டமே இல்லாம சினிமாவுக்குப் போற மாதிரி ஜிலுஜிலுன்னு வந்திருக்கே”
சில நாட்கள் திருமணம் ஆகும்வரை வேலைக்கு போகிற பெண் என்று காட்டிக் கொள்ளத் தான் இப்படி வந்திருக்கிறேன் என்பதையும் அந்த அக்கா சேர்த்துக் கொண்டிருக்கலாம்.
“கவிதா… அங்கே என்ன பேச்சு சத்தம்?” உள்ளேயிருந்து ஆண் குரல் கேட்டது.
“ஒரு கஸ்டமரு ஸார்…”
“ஆர்டர் வாங்காம என்னம்மா பேச்சு?”
‘உள்ளே போ,’ என்பது போல கவிதா ராணிக்கு வழி விட்டாள் அவளுக்கே அருகே இன்னும் இரண்டு அக்காக்கள் காகிதங்களை அடுக்கிக் கொண்டிருந்தார்கள். வாய் பேசாமல் விலகி வழி விட்டார்கள்.
“ஆர்டர் வாங்காம என்னம்மா பேச்சு?” ‘உள்ளே போ,’ என்பது போல கவிதா ராணிக்கு வழி விட்டாள் அவளுக்கே அருகே இன்னும் இரண்டு அக்காக்கள் காகிதங்களை அடுக்கிக் கொண்டிருந்தார்கள். வாய் பேசாமல் விலகி வழி விட்டார்கள்.
“உனக்கு வீடு எங்கே?” சூப்பர்வைஸர் நிமிராமலேயே கேட்டார். அவர் ஒரு இயந்திரத்தின் அடிப்பகுதியை கழற்றி எதையோ சரி செய்து கொண்டிருந்தார். “ஊரப்பாக்கம் ஸார்.”
“நல்லதுதான். எக்மோர்லேயிருந்து வர்றது சுலபம்.”
வேலையக் கத்துக்கறியா?” கைப்பையைத் தோளிலிருந்து கழற்றியவள் எங்கே வைப்பது என்று துழாவியபோது, “முன்னாடி கவுண்டருக்குக் கீழே இடமிருக்கு” என்றார்.
வெளியே வந்ததும் கவிதாக்கா “வேலை எப்பவுமே அவரு தான் கத்துக் கொடுப்பாரு.. பாத்து… கொஞ்சமாக் கத்துக்க,” என்று பையை வைக்கக் குனிந்தபோது காதுக்கு அருகிலே சொன்னாள்.
“இந்த மெஷினோட மூடியத் தூக்கு,” என்று ஒரு நகல் எந்திரத்தைக் காட்டினார். அந்த மூடி சற்றே கனமாக இருந்தது. தூக்கிக் கொண்டே வந்ததும் தானே ஒரு இடத்தில் நின்றது. இந்த ‘ஒரிஜின’லை மெஷின்ல வை’ வண்ணமயமான ஒரு அடுக்குமாடிக்குடியிருப்பு, சுற்றுத் தோட்டத்தின் படம். அதை வைத்தாள்.
“ஒரு நிமிஷம் பேப்பர் அங்கயே இருக்கட்டும்.” மெஷின் அருகே வந்தார். மட்டமான வாசனைத் திரவியத்தின் வாடை. “எப்பிடி வெச்சிருக்க பாரு. மெஷின் மேலேயே ஏ4, ஏ3 அப்பிடின்னு கோடு இருக்கும். அதுக்குள்ளே பொருத்தி வெக்கணும்.” மிகவும் அருகில் அவர் வந்ததால் பதட்டமாக இருந்தது. “எங்க இருக்கு ஏ4?” பாத்தியா?” அவளுக்கு எதுவுமே புரியவில்லை.
“கையக் கொண்டா” அவளது வலது கரத்தைப் பற்றி அசல் காகிதத்தைத் திருப்பினார். அதன் இருபக்க ஓரத்திலும் ஏ4 என ஆங்கிலத்தில் எழுதப் பட்டிருந்தது. வெடுக்கெனக் கையை விடுவித்துக் கொண்டாள். சற்றே தள்ளி நின்றாள். “இப்போ காப்பி சரியா வருமா?” என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தலையை ஆட்டினாள். “அப்பிடியா அப்போ பட்டனை அழுத்து.”
பச்சை, சிவப்பு தவிர வேறு சில பொத்தான்களும் இருந்தன. எதை அழுத்துவது என்றே தெரியவில்லை. இந்த முறை உரிமையுடன் கையைப் பிடித்து பச்சைப் போத்தானை அழுத்தினார். இயந்திரத்தின் வலது புறத்தில் நீட்டிக் கொண்டிருந்த பிளாஸ்டிக் தட்டின் மீது விழுந்தது. அதைக் குனிந்து அவர் எடுத்தபோது அவர் தலை அவள் தோளில் உரசி எழுந்தது. அவர் எடுத்த காகிதத்தில் அசலின் நகல் அச்சாகி இருக்கவில்லை. “ஏன் இப்பிடியாச்சுன்னு தெரியுமா?” தெரியாது என்று தலையாட்டினாள்.
“ஜெராக்ஸ்ல எப்பவுமே நாம காப்பி எடுக்கறது நம்ம கண்ணுல படக் கூடாது.”
ராணி இன்னும் பின்னே தள்ளிச் சென்றாள். “இப்போ சரியா வை, வா,” என்றார்.
“பரவாயில்ல நீங்களே வையிங்க. நா கத்துக்கறேன்,”
இந்த முறை அவரே வைத்து ஒரு நகல் வண்ணமயமாக வெளியே வந்தது. ஒரு புத்தகத்தை எடுத்துக் காட்டி, “இதையெல்லாம் எடுக்கறது வேற மாதிரி,” என்று அவர் துவங்கியபோது ராணிக்கு பகீரென்றது.
நல்ல வேளை ஒரு அக்கா உள்ளே வந்தாள். “நான் இந்த புக்கை ரெண்டு காப்பி போடணும் அண்ணா,”
“அக்காவுக்கு ஒத்தாசையா இருந்து கத்துக்கறேன் அண்ணே,” என்றாள் ராணி. அவர் பழுது பார்த்துக் கொண்டிருந்த இயந்திரம் பக்கம் நகர்ந்தார்.
ராணி வீட்டில் ‘இன்வர்ட்டர்’ உண்டு. அவளுக்கு மின்சாரத் தடை இருந்தாலும் மின்விசிறி சுற்றும். ஆனால் அந்த நகலெடுக்கும் கடையில் முன்னே வரவேற்பை ஒட்டி ஒரு பெரிய ராட்சத மின் விசிறி நின்றுகொண்டிருந்தது. அது வாடிக்கையாளர்களுக்கானது. அக்காக்கள் காகிதம் அடுக்காமல் சும்மா நிற்கும்போது அதனருகில் சென்று காற்று வாங்குவார்கள். உள்ளே நகலெடுக்கும் இயந்திரங்களிடமிருந்து ஒருபக்கம் வெப்பம் வெளிப்பட்டது. தலைக்கும் கூரைக்கும் அதிக இடைவெளி இருக்கவில்லை. வியர்த்துக் கொட்டியது ராணிக்கு. கையின் ஈரம் நகல், அசல்காகிதங்களின் மீது படாமலிருக்க அங்கே அவ்வப்போது கையைத் துடைக்க வாட்டமாக சிறிய துணிகள் இருந்தன.
மதியம் ஒன்றரைக்குப் பிறகு ‘உணவு இடைவேளை’ என்ற அட்டையை கவிதா வரவேற்பு மேசை மீது வைத்து குறுகலான மாடிப்படியில் ஏறினாள். மூன்று பேரும் அவளைத் தொடர்ந்து ஏறினர்.
முதல் மாடியில் ஒளிப்பதிவுக் கருவிகளை சரிசெய்யும் கடை இருந்தது. இரண்டாவது மாடிப்படிகளின் முடிவில் மருந்து நிறுவனம் ஒன்றின் கிட்டங்கி. அடுத்த மாடிப்படிகள் ஏறும் போது ராணிக்கு கடுமையாக மூச்சு வாங்கியது. அந்தப் படிகளின் முடிவில் முதல் முறையாக நல்ல வெளிச்சம் தெரிந்தது. மொட்டை மாடிக்குத் திறக்கும் கதவை ஒட்டி இருந்த சிறிய சதுர நடையில் அவர்கள் நால்வரும் அமர்ந்தார்கள்.
சந்திரிகா, மல்லிகா இருவரும் மௌனமாகவே இருந்தனர். தனது மதிய உணவைப் பிறருடன் பகிர வேண்டும் என்று ராணிக்கு தெரியவில்லை. அவள் தான் கொண்டு வந்த இட்டிலியில் கையை வைக்கும்போது கவிதா இரு என்று கையமர்த்தி அவர்களின் உணவுப் பாத்திர மூடியில் அடுத்தவரின் உணவின் ஒரு பகுதியை வைத்தாள். இப்படியாகப் பங்கீடு முடிந்ததும் நால்வரும் சாப்பிடத் துவங்கினார்கள்.
மல்லிகாவின் கைபேசியைத் தரையிலிருந்து கவிதா எடுத்ததும் அவள், “அதுல பாலன்ஸ் இல்ல கவி,” என்றாள். சந்திரிகா புன்னகையுடன், “நான் கீழேயே வெச்சிட்டு வந்திட்டேன்,” என்றாள்.
“நீ தா. ராணி,” என்று உரிமையுடன் அதை எடுத்து ஓர் எண்ணை அழைக்க முயன்றாள். வெகுநேரம் அது அழைத்தது. பதிலில்லை. மறுபடி மறுபடி முயன்று பிறகு குறுஞ்செய்தி அனுப்பினாள்.
மல்லிகாவின் கைபேசியைத் தரையிலிருந்து கவிதா எடுத்ததும் அவள் “அதுல பாலன்ஸ் இல்ல கவி,” என்றாள். சந்திரிகா புன்னகையுடன், “நான் கீழேயே வெச்சிட்டு வந்திட்டேன்,” என்றாள்.
“நீ தா. ராணி” என்று உரிமையுடன் அதை எடுத்து ஓர் எண்ணை அழைக்க முயன்றாள். வெகுநேரம் அது அழைத்தது. பதிலில்லை. மறுபடி மறுபடி முயன்று பிறகு குறுஞ்செய்தி அனுப்பினாள்.
சாப்பிட்டதும் கையோடு கொண்டு வந்திருந்த தண்ணீர்க் குப்பிகளில் இருந்து மற்ற மூவரும் உணவுப் பாத்திரத்திலேயே கை கழுவினார்கள். “பாத்ரூம்ல கழுவ முடியாதா?” என்றாள் ராணி. “இந்தத் தண் ணிய மொட்டை மாடி கிரில் கேட்டுக்கு உள்ளே கைய உட்டு ஊத் திட்டுப் போவேண்டியதுதான். பாத்ரூம் பக்கத்து பில்டிங்கில இருக்கு. வாட்ச் மேன் கிட்டே சாவி வாங்கிக்கிட்டுப் போகணும். அவரு சில சமயம் எக்குத் தப்பான கேள்வியெல்லாம் கேப்பாரு. கொஞ்சம் பொறு. ஓட்டலைக் காட்டுறத்துக்காகக் கூட்டிப் போவேன். அங்கேயே யூஸ் பண்ணிக்க”
திரும்ப கடைக்கு வந்ததும் “அண்ணா, லாயர் ஆஃபீஸை ராணிக்கிக் காட்டிட்டு வரேன்,” என்றபடி கிளம்பினாள்.
“என்ன அவசரம்?” என்ற சூபர்வைஸரிடம், “பிறகு கஸ்டமர் நிறைய வந்துடுவாங்க,” என்றபடி படிகளில் இறங்கினாள். அண்ணாசாலை சுரங்க நடைபாதைக்கு அருகே, “நேராப் பாத்து நட,” என்றபடி கவிதா விரைந்தாள். ஓரக்கண்ணால் பார்த்தாள் ராணி. மதுபானக் கடையிலிருந்து வெளிவருவோர் தென்பட்டனர்.
சாந்தி திரையரங்கம் தாண்டி ஒரு சிறிய வளாகப் படிகளில் ஏறியவள் முதல் மாடியில் ஓர் அலுவலகத்தை அடைந்தாள். அங்கே இருந்த பெண்ணிடம், “இவ பேரு ராணி. இனிமே இவ எங்க கடையில வேலை செய்வா” என்று பதிலை எதிர்பார்க்காமல் படியிறங்கினாள். நேரே கடைக்குச் செல்லாமல் சாந்தி திரையரங்கின் உள்ளே அவள் நுழைய இவள் பின் தொடர்ந்தாள். வாகன நிறுத்துமிடத்தை ஒட்டி இருந்த உணவகத்தின் வாசலில் ஓரமாக நின்றாள் கவிதா. எடை பார்க்கும் இயந்திரம்,பல்வேறு வடிவங்களில் வாகனங்கள் தென்பட்டன. வசதியானவர்கள் பலரும் உள்ளே சென்று வந்தபடி இருந்தார்கள். உணவகத்துக்கு வெளியே திரையரங்கின் சீட்டு வழங்கும் வரிசைக்கு அருகே ஒரு இடத்தைக் காட்டினாள் கவிதா. அங்கே ஆண் பெண் படம் போட்ட கழிப்பறை இருந்தது. ராணி திரும்ப வந்த பின்பும் அவள் என்ன அவசரம் என்பது போல நின்றபடி இருந்தாள். இப்படியாகவே 15 நிமிடத்துக்கு மேல் ஆகியிருக்கும்.
“உள்ளே போவோம்,” என்றபடி முன் சென்றவள் பின் சென்றாள் ராணி. நுழைந்த உடன் பணம் பெறும் மேசை இருந்தது வலது பக்கம் வட்டவடிவ மேசைகளில் பலர் நின்றபடி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அதை ஒட்டி பழரசம் செய்து தரும் மேடை, உணவு சமைக்கும் பிரிவுகள் இருந்தன. இடது பக்கம் பெரிய உணவுக்கூடம். உள்ளே கூட்டம் நிரம்பி வழிந்தது. பலர் இடம் கிடைக்காமல் காத்திருந்தனர். எல்லா மேசைகளையும் நோட்டம் விட்ட கவிதா, “வா போலாம்,” என விரைந்து வெளியே வந்தாள். மதியம் மூன்று மணிவரை அவள் வரவேற்பிலேயே இருந்தாள்.
ராணி எதாவது ஓர் அக்காவுடன் அவர்களுக்கு உதவி செய்வதாக ஒட்டிக் கொண்டாள். வெப்பம் தாங்க முடியாதபடி உயர்ந்து கொண்டிருந்தது. மூன்றரை மணிக்கு, “காப்பி வாங்கப் போறேன் அண்ணா,” என்று கிளம்பிய கவிதா, “வா ராணி” என்றாள். “காபி வாங்க எதுக்கு ரெண்டு பேரு?” என்றவரிடம், “அவ புதுசு,. எல்லாம் பளகட்டும்,” என்று ஒரு கையில் ஃபிளாஸ்க் இருக்க மறுகையில் ராணியைப் பிடித்து இழுத்துச் சென்றாள்.
மீண்டும் சாந்தி திரையரங்க உணவகத்தில் நுழைந்தவள் பணம் செலுத்துமிடத்தில் ரசீதை வாங்கிக் கொண்டு ‘ப்ளாஸ்க்கை’யும் ரசீதையும் காபி போடும் இடத்தில் கொடுத்து விட்டு, “இங்கயே இரு,” எனச் சைகை செய்து விட்டு மீண்டும் உணவுக்கூடத்துக்குள் சென்றாள். காப்பி தயாராகி ‘ஃபிளாஸ்க்’ நிறைந்தபின்னும் அவள் வரவில்லை.
சற்று நேரத்தில் அவள் பரபரப்பாக வந்து இவள் கையைப் பற்றி, “வா போலாம்,” என்று நகர்ந்தாள். வாசலில் ‘ஸபாரி சூட்’ அணிந்த உயரமான ஓர் ஆள் வழிமறித்தார்.
“யாரு நீ ? மத்தியானத்திலே இருந்து இங்கேயே சுத்துற?” அவரைக் கண்டுகொள்ளாமல் நகர்ந்தவள் முன்னே அவர் மறுபடி வந்து, “எங்கே வேலே பாக்குற?” என்றார். “காப்பி வாங்க வந்தோம்,” என்றாள் கவிதா. “உன் பேரென்ன?” என்றவர் கண்களை உற்றுப் பார்த்து, “எனக்குப் பேரே கிடையாது,” என்று சொல்லிவிட்டு அவருக்குப் பக்கவாட்டில் நகர்ந்து விரைந்தாள்.
மாலையில் வாடிக்கையாளர்கள் நிறைந்தனர். ஏழு மணி ஆனதே தெரியவில்லை. பெண்கள் மூவரும் கிளம்ப ராணியும் கிளம்பினாள். பேருந்து நிறுத்தத்தில் கவிதாவுக்கு முதலில் பேருந்து கிடைத்தது. அது வரை அவள் ராணியின் கைபேசியை சோதித்துக் கொண்டே இருந்தாள். ஓரிருவரை அழைக்கவும் செய்தாள். ஆனால் அழைத்தவர் பேசவில்லை. பேருந்தில் ஏறும் முன், “காலைல பதினோரு மணிக்கு முன்ன வராத,” என்று அழுத்தமாக கூறி விட்டுப் பேருந்தினுள் ஏறினாள்.
அன்று இரவு ஒரு குறுஞ்செய்தி ராணியின் கைபேசியில் வந்தது. அது ஆங்கிலத்தில் இருந்தது. அண்ணன் அல்லது அண்ணியிடம் காட்டிப் படிக்கச் சொல்லலாமென்ற எண்ணத்தை முளையிலேயே கிள்ளினாள். அது கவிதாவுக்குத்தான் வந்தருக்க வேண்டும். நீண்ட குறுஞ்செய்தியில் “அவுட் ஆஃப் சென்னை” என்னும் மூன்று வார்த்தைகள் மட்டுமே அவளுக்குப் புரிந்தன.
(image courtesy:ulhasnagaronline.com)
(இனிய நந்தவனம்- திருச்சியின் இலக்கிய இதழ் அக்டோபர் 2016ல் வெளியானது)