சைக்கிள் கமலத்தின் தங்கை – எஸ்.ராமகிருஷ்ணன் சிறுகதை
உயிர்மை அக்டோபர் 2016 இதழில் எஸ்.ராமகிருஷ்ணனின் ‘சைக்கிள் கமத்தின் தங்கை” என்னும் சிறுகதை வெளியாகி இருக்கிறது.
நவீன சிறுகதையின் காலம் தொடங்கி 50 வருடங்களுக்கு மேலும் ஆகி விட்டது. புதுமைப் பித்தன், மௌனி காலங்களில் அது நமக்கு அறிமுகமானது. இப்போது நவீனச் சிறுகதையின் சாத்தியங்கள் என்ன என்பதை – அதன் வீச்சின் நீள்வெளியில் எந்தப் புதிய தடங்களை நாம் கண்டடைகிறோம் என்பதும் ஒவ்வொரு படைப்பாளியின் கற்பனை மற்றும் புனைவின் எழுச்சியில் தீர்மானமாகிறது. புதுமைப்பித்தன் கதாபாத்திரமாய் ஏற்கனவே ராமகிருஷ்ணன் ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார். எனவே முன்னோடிகள் அல்லது இலக்கியச் சிற்பிகள் கதாபாத்திரமாக அவர் எழுதுவது இது முதல் முறை அல்ல. கவிஞர் ஞானக்கூத்தன் ‘சைக்கிள் கமலத்தின் தங்கை’ கதையில் ஒரு கதாபாத்திரமாகிறார். முதலில் ‘சைக்கிள் கமலம்’ (1971) ஊடாக மட்டுமே நாம் இந்தக் கதைக்குள் போக முடியும். கவிதையை வாசிப்போம்:
சைக்கிள் கமலம்
அப்பா மாதிரி ஒருத்தன் உதவினான்
மைதானத்தில் சுற்றிச் சுற்றி
எங்கள் ஊர்க் கமலம் சைக்கிள் பழகினாள்
தம்பியைக் கொண்டு போய்ப்
பள்ளியில் சேர்ப்பாள்
திரும்பும் பொழுது கடைக்குப் போவாள்
கடுகுக்காக ஒரு தரம்
மிளகுக்காக மறு தரம்
கூடுதல் விலைக்குச் சண்டை பிடிக்க
மீண்டும் ஒரு தரம் காற்றாய்ப் பறப்பாள்
வழியில் மாடுகள் எதிர்ப்பட்டாலும்
வழியில் குழந்தைகள் எதிர்ப்பட்டாலும்
இறங்கிக் கொள்வாள் உடனடியாக
குழந்தையும் மாடும் எதிர்ப்படா வழிகள்
எனக்குத் தெரிந்து ஊரிலே இல்லை
எங்கள் ஊர்க்கமலம் சைக்கிள் விடுகிறாள்
என்மேல் ஒருமுறை விட்டாள்
மற்றப் படிக்குத் தெருவில் விட்டாள்
ஞானக்கூத்தனின் பல கவிதைகள் இந்த இணைப்பில் நாம் வாசிக்கக் கிடைக்கின்றன. இணைப்பு— இது.
எழுபதுகளில் வெளியான இந்தக் கவிதையில் ‘அப்பா மாதிரி ஒருத்தன்’ என்பது நிறையவே நமக்குச் சொல்கிறது. குடும்பப் பொறுப்பு பகுதியாகவோ முழுவதுமாகவோ தலையில் விழுந்த அப்பா இல்லாத பெண் குழந்தை அவள். மறைமுகமாக அந்தக் காலக் கட்டத்தில் அப்பாக்கள் பெண் குழந்தைகளைப் பொத்திப் பொத்தி சைக்கிள் கூட கற்றுத் தராமல் வளர்ப்பார்கள் என்பதையும் சுட்டுகிறது. சைக்கிள் ஒரு படிமமாகப் பெண்ணின் தற்சார்பை நமது சிந்தனைக்கு – ஒரு தலைமுறை மாறி புதிய தலைமுறைச் சிந்தனைகள் தொடங்கிய காலத்தில் – முன் வைக்கிறது.
எஸ்.ராமகிருஷ்ணனுக்கு எழுபதுகளின் சமுதாய மாற்றங்கள் இன்றும் கவனப்படுகின்றன. முக்கியமாகத் தென்பட அவர் கதையின் பொறியை அதிலிருந்து எடுத்துக் கொண்டார்.
எஸ்.ராமகிருஷ்ணனின் இந்தக் கதையின் நகர்வு மிகவும் குறுகிய காலகட்டத்துக்குள் அமைவது. 21 வயது இளைஞன் மருந்துக் கடையில் எளிய ஊதியம் பெறுபவன். அறை நண்பன் வழி சிறுபத்திரிக்கைகள் வாசித்து ஞானக்கூத்தனை நேரில் சந்தித்து அளவளாவுகிறான். அவ்வளவே.
கதையின் ஆழமும் நுட்பமும் வெற்றியும் நாம் இந்தக் கதை, கதை சொல்லி, கதாபாத்திரங்கள், கதையின் பிரதி இவற்றைக் கடந்து விடுகிறோம். கவிதை, கவித்துவம் பற்றிய உரையாடல் வழி நாம் கவிதை ரசனை, கவிதை வாசிப்பு பற்றிய புதிய சாளரங்களை நமக்குள் திறக்கிறோம். கவிதை என்னும் வடிவம், படைப்பு அல்லது வாசிப்பு என்னும் நிலையை நாம் கடக்கிறோம். கவிஞனின் தரிசனம் நம்மிடமிருந்து அன்னியமாயில்லை. அவரது படைப்பு ஒரு பகிர்தலாகவோ உரையாடலாகவோ இல்லை. நாம் மல்லிகையை அறைக்குள் வைத்தபின் வைத்தவர் மற்றவர் அனைவரும் உணரும் மணம் போலக் கவித்துவ அனுபவம் பெறுகிறோம். பிரதியைக் கடந்து செல்வது பின்னவீனத்துவத்தின் முக்கிய அம்சம். அது எஸ்.ராவுக்கு சரள நடையில் சாத்தியாமாகி இருப்பது புனைவில் அவருக்கு இருக்கும் அழுத்தமான பிடிமானத்தின் அடையாளம். அரிதான படைப்பு இது.
திருவல்லிக்கேணியில் தான் நானும் சென்னை வாழ்க்கையைத் துவங்கினேன். திருவல்லிக்கேணியை எஸ்.ரா அழகாகச் சித்தரித்திருக்கிறார். தமிழ் இலக்கியம் நவீனத்துவக்காலத்தில் முன்னகர்வதன் அடையாளமான கதை இது.