திரை அரங்குகளில் தேசிய கீதம் – நீதிமன்றத் தீர்ப்பும் தனி மனித உரிமையும்
‘ஒரு குடிமகன் மீது தேச பக்தி – கொடி மற்றும் தேசிய கீதம் மீது மரியாதை இவை திணிக்கப் படலாமா ?’ என்னும் கேள்வியும் விவாதமும் ஊடகங்களில் தொடரும் போது எளிய பதிலே தென்படுகிறது. திணிப்பதும் கட்டாயப் படுத்துவதும் எந்த நோக்கமோ அதற்கே கெடுதி செய்யும் என்பதே என் கருத்து.
கண்டிக்கிறாயா என்று கேட்டால் இல்லை என்பதே என் தெளிவான பதில்.
என் கண்டிக்கவில்லை? சுதந்திர சிந்தனை என்பதும் கருத்துச் சுதந்திரம் என்பதும் நமக்கு அந்நியமானவை.
வணிக சங்கம் தொழிற் சங்கம் ஜாதி சங்கம் கட்சிகள் மத அமைப்புகள் குடும்பம் என எந்த அமைப்புக்குள்ளும் தனி மனித உரிமைக்கோ சுதந்திர சிந்தனைக்கோ இடமே கிடையாது. இவை யாவற்றிலும் அதிகாரம் மிக்க உச்ச நீதிமன்றம் தமது தீர்ப்பில் தேசம் மதிக்கப்படுவதே முன்னுரிமை என ஒரு உத்தரவு பிறப்பித்திருப்பதை இந்தக் கோணத்தில் மட்டுமே நான் பார்க்கிறேன். அதாவது சுதந்திர சிந்தனை , விவாதம் மற்றும் கருத்துச் சுதந்திரம் இல்லாத ஒரு சூழல் ஒருக்காலும் தேச கீதம் மற்றும் கொடியின் அருமையைத் தானே இளைய தலைமுறை உணரும் வாய்ப்பை அளிக்காது என நீதிமன்றம் கருதுவதாகவே தோன்றுகிறது.
தொழிற்சங்கத்தில் வருட வருடம் செயலர் மற்றும் குழு உறுப்பினர் தேர்தல் எப்படி நடக்கும் என்பதை எத்தனை உறுப்பினர் கவனித்தாரோ நான் நிறையவே பார்த்திருக்கிறேன். ஒரு பட்டியலை ஒரு குழு தயார் செய்து அதை நிலை நாட்டும். பல பேரங்கள், அதிகாரக் குழுக்களுக்கிடையான புரிந்துணர்வு அனைத்தும் பூடகமாக இருக்கும். தேர்தல் என்று ஒரு நகைச்சுவை நடந்து முடியும். அனைத்து உறுப்பினர் கூடும் கூட்டங்களில் நெறியாளர் அல்லது அவைத்தலைவர் யார் பேசக்கூடாது என்பதில் தெளிவாயிருப்பார். எதை எதை எழுப்பக் கூடாது என்பதிலும். உலகின் பெரும்பான்மையினரான உழைக்கும் வர்க்கம் தன்னை கம்யூனிசத்துடன் அடையாளப்படுத்திக் கொள்ள இயலாமற்போனதற்கு ஜனநாயகத்தை கம்யூனிசத்துடன் சகிக்க முடியாத கம்யூனிஸ்டுகள் மட்டுமே காரணம். தொழிற்சங்கம் கம்யூனிசம் இரண்டுமே இன்றும் அமைப்பிலிருக்கும் அமைப்பிலில்லாத தொழிலாளிகளுக்கு நம்பிக்கை தருபவை. ஆனால் முதலாளித்துவத்தின் பாவனையான ஜனநாயக வழிமுறைகள் கூட கம்யூனிஸ்டுகள் என்று தன்னை சொல்லிக் கொள்வோருக்கு இருப்பதே இல்லை.
இன்று ஊடகங்களில் மற்றும் அமைப்புகளில் பெரிய அரசியல் வணிகக் குழுக்களின் ஆதிக்கம் இருப்பது வெளிப்படை.
சுதந்திரம், அரசியலமைப்புச் சட்டம் இவை நமக்குத் தந்திருக்கும் எல்லா உரிமைகளும் தேசிய கீதம் மற்றும் தேசக் கொடி இந்த இரண்டின் பாதுகாப்பில் தான் . சிரியா தொடங்கி நேபாளம் வரை நிலையான அரசும் அரசியலமைப்பும் இல்லாத நாடுகள் என்ன கதி ஆகின்றன என்பது தெளிவு.
மறுபக்கம் சுதந்திரத்தின் பெருமையை கருத்துச் சுதந்திரத்தின் அருமையை , விவாதம் வழி நம் நாட்டுக்கு நாம் சேர்க்க இயலும் பெருமை பற்றிய அறிவை ஆழ இளம் நெஞ்சங்களில் விதைக்க எந்த வாய்ப்பும் இல்லை. தேசத்தை துண்டாடுவது பற்றி பேசுவதில் உள்ள வறட்டு ஆண்மையும் வீரமும் நம் நாடு என்னும் பெரிய சொத்து நம் மண் என்னும் பெரிய அடையாளம் எவ்வளவு மதிப்பானது என்பது குறித்த விவாதத்துக்குக் கூடத் தயாரில்லாதவர்.
எந்த விவாதமும் நடக்க முடியாத அளவு சகிப்பில்லாத வெறி பிடித்த கும்பல்கள் அரசியலில் ஊடகத்தில் மத நிறுவனங்களில் ஆட்சி செய்கின்றன.
உச்ச நீதி மன்றம் இளைய தலைமுறைக்குத் தான் இந்தியன் என்னும் அடையாளம் ஆழப் பதிய வேண்டும் என்று இந்தத் தீர்ப்பின் வழி தெளிவு படுத்தி இருக்கிறது. கல்வி நிறுவனங்களில் மற்றும் ஊடகங்களில் நம் சுதந்திரத்தின் அரசியல் சட்டத்தின் அருமைகளை விவாதிக்கும் சூழல் உருவானால் மட்டுமே அந்த நோக்கம் நிறைவேறும்.