அஞ்சலி – சோ ராமசாமி
இந்தியாவில் நெருக்கடி நிலை அமல் படுத்தப் பட்ட போது (1976 ) நான் உயர்நிலைப்பள்ளி மாணவன் .அப்போது ஒரு சின்னஞ்சிறிய பத்திரிக்கை துக்ளக். மிகுந்த நேர்மையும் தைரியமும் கொண்ட ஊடகமாக அது நெருக்கடி நிலையை எதிர்த்து நின்றது. சோ மீது எனக்கு உள்ள மரியாதை அந்த நெஞ்சுரத்துக்குத்தான். பத்திரிக்கை நின்றும் போனது. அவர் இதழியலில் ஆற்றிய பணி அத்துடன் நிறைவுற்றிக்க வேண்டும். அரசியல் திருப்பங்களால் ஊடக சுதந்திரம் இந்தியாவில் 77 ஆட்சிக்கு வந்த ஜனதா ஆட்சியில் தான் துவங்கியது. அவர் பணியும் தொடர்ந்தது. அவரால் இந்தியாவுக்கு எல்லா விதத்திலும் முன்மாதிரியான ஒரு பத்திரிக்கையை நடத்தி இருக்க முடியும். ஆனால் அரசியல் சார்பில் நடுநிலையை இழந்தார். அரசியலில் நேரடி ஈடுபாட்டால் அவரது நம்பகத்தன்மை போனது. அவர் வழியில் நக்கீரன் கோபாலும் போனதால் தமிழில் நடுநிலை மற்றும் முதுகெலும்புள்ள பத்திரிக்கை இப்போது இல்லை. மிகப்பெரிய சகாப்தம் சோவுக்கு சாத்தியம் ஆகி இருக்க வேண்டும். ஆனால் நிகழாமல் போனது சோகம்.
தமது உதவி ஆசிரியர்களை நடத்தும் விதத்தில் மரியாதை மற்றும் ஆசிரியர் குழு விவாதங்களில் வெளிப்படைத்தன்மையும் சுதந்திரமும் இருந்தது என, பல பதிவுகள் அவரது உதவியாளர்களிடமிருந்து வந்துள்ளன.
முதலாளித்துவம் சார்ந்து சிந்திப்பது எளிது . உழைப்பாளிகளுக்கு இன்றும் நம்பிக்கை தருவது கம்யுனிசமே. ஆனால் அவர்கள் அரசியல்வாதிகள் மட்டுமே என இப்போது அவநம்பிக்கை தருவதும், கருத்து சுதந்திரம் தேவையில்லை என்று தேங்குவதும் கம்யூனிசம் பின்னடையக் காரணம். சோ நகர-மேல்தட்டுப் பின்புலத்தில் சிந்தித்தவர்.
இருந்தாலும் ஊடக நேர்மை மற்றும் முதுகெலும்பு தமிழில் அவராலேயே அறிமுகமாயின. ஊடக நாகரிகம் மற்றும் தமது கருத்தை சொல்ல உயிரையும் பணையம் வைக்கும் நெஞ்சுரம் அவருக்கு இணையாக யாரிடமும் காணப்படாதவை. அவருக்கு என் அஞ்சலி.
(image courtesy: wiki)