இங்கிதம் கிலோ என்ன விலை? – 1
நாகரிகமான நடவடிக்கைகள் அல்லது பண்பட்ட செயல்கள் என்பவை சிக்கலான செயற்பாடுகள் அல்லது சமூக இயக்கமானவை. அதாவது சமூகத்துக்கு சமூகம் மாறுபவை. மேலை நாடுகளில் பெண்ணானாலும் கைகுலுக்கி அணைப்பது நட்பு முறையானது. இங்கே கைகுலுக்குவதே அவ்வளவு உகந்ததல்ல.
இங்கிதம் என்பது பொதுவானது. மற்றவர் சொரணைகளை மதித்து நடப்பதும் மற்றும் மற்றவரை தர்மசங்கடப் படுத்தாமல் இருப்பதும் இங்கிதத்தின் இரு பக்கங்கள். ஆனால் அப்படி ஒன்று நம்மிடையே இல்லை. இங்கிதம் என்பது குடும்பம் பணியிடம் சமூகம் எங்குமே இல்லை என்பதே உண்மை.
ஏன் இல்லை என்பதற்கான விடை எளியது. நேரடியாகவோ அல்லது குறுகிய காலத்திலோ பயன் தராதது இங்கிதம். எனவே ‘பைசாவுக்குப் பிரயோஜனமில்லாதது ‘ என்று எல்லோருமே அதை விட்டு விட்டார்கள். ஆனால் பல மனக்கசப்புகள், பிரிவுகள், முறிவுகள் மற்றும் காயங்கள் இங்கிதக் குறைவான நடவடிக்கைகளில் துவங்குகின்றன. குறை நிறைகள் , பலம் பலவீனங்கள் இவை எந்த ஒரு மனிதனுக்குள்ளும் இருப்பவை. குறைகள், தவறுகள், பலவீனமான தடுமாற்றங்கள் இவை மிகவும் நாசூக்காக அணுகப் பட வேண்டியவை. குறிப்பாக பதின் பருவக் குழந்தைகள் மற்றும் இளவயதினருக்கு நிறைய தூரம் போய்த் தெரிந்து கொள்ள வேண்டியவை உண்டு. அவற்றை நாம் அவர்கள் மனம் நொறுங்காமல் சொல்லி சுயபரிசீலனை செய்ய அவகாசம் தரத்தான் வேண்டும்.
பல சந்தர்ப்பங்களில் நாம் அவர்களை பலர் முன் மிகவும் பொறுமையின்றி கண்டிப்பதைப் பழக்கமாக வைத்திருக்கிறோம்.
பணியிடம் அல்லது குடும்பம் இவற்றுள் வரும் பிரச்சனைகள் எல்லாமே ஒருவரது கவனக் குறைவு அல்லது நினைவின்மையால் வருபவையே. அவை பிழைகள் தான். மறுபடி வராது தவிர்க்கப்பட்டால் நல்லதே. ஆனால் நாம் மிகப்பெரிய பிரளயம் போல் பெரிது படுத்தி அதை அவர்கள் ‘என்ன இப்போ. இனிமே இப்பிடித்தான் ‘ என்று நிலை நாட்டுமளவு செய்து விடுகிறோம்.
மற்றவர்கள் சறுக்குவது அல்லது தவறுவதை சுட்டிக் காட்டி தன்னை மேம்படுத்திக் கொள்வதில் வரும் அவசர ஆர்வம் இல்லாத ஆள் அபூர்வம்.
அதிகம் அறிமுகமில்லாதவர்கள் , பொது இடங்களில் நம்முடன் பயணிப்பவர் நடுவே நாம் எப்படி நடந்து கொள்கிறோம் என்பது அன்றாட இயங்குதலின் கீழ் வருவது. நாம் செய்யக்கூடாதவற்றை செய்வதில் அநேக முறை இங்கிதம் தவறுகிறோம்.
இங்கிதக் குறைவான சில நடவடிக்கைகளை முன்வைத்து அடுத்த பகுதியில் நாம் என்ன வழிகளில் இங்கிதம் தவறுகிறோம் என அலசுவோம்.
(image courtesy: shutterstock.com)